பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறை
1. திருமாளிகைத் தேவர்
2. சேந்தனார்
3. கருவூர்த் தேவர்
4. பூந்துருத்திநம்பி காடநம்பி
5. கண்டராதித்தர்
6. வேணாட்டடிகள்
7. திருவாலியமுதர்
8. புருடோத்தமர்
9. சேதிராயர்
ஆகியோரால் பாடப்பட்டது. திருமாளிகைத் தேவர் முதல் சேதிராயர் வரை ஒன்பது பேரும் திருவாய் மலர்ந்தருளிய இருபத்தெட்டுத் திருப்பதிகங்களைத் திருவிசைப்பா என்றும், சேந்தனார் பாடிய பல்லாண்டிசையினைத்
திருப்பல்லாண்டு என்றும் வழங்குதல் மரபு. இவற்றைத் திருவிசைப்பா மாலை என்று கூறுவர். திருவிசைப்பாவில் அமைந்த பண்கள் காந்தாரம், புறநீர்மை, சாளரபாணி, நட்டராகம், இந்தளம், பஞ்சமம் என்ற ஆறு பண்களே.
இவற்றுள் சாளர பாணி யொழிந்த ஐந்தும் தேவாரத் திருப்பதிகங்களில் பயின்ற பண்களே. இந்நூலில் மழலைச் சிலம்பு, நீறணி பவளக் குன்றம், மொழுப்பு, பேழ்கணித்தல் முதலிய அருஞ் சொற்றொடர்களும் அருஞ்சொற்களும்
பயின்று வந்துள்ளன. திருப்பல்லாண்டு கடல் கடந்த நாடுகளிலும் செல்வாக்குப் பெற்றிருந்தது. இந்தோனேசியாவில் தொல்குடிச் செல்வர் வீடுகளில் திருமணக் கோலத்தில் இத் திருப்பல்லாண்டு ஓதப் பெறுகிறது என்பர்.
ஒன்பதாம் திருமுறையில் இருபத்தொன்பது திருப்பதிகங்கள் உள்ளன. தேவாரத் திருப்பதிகங்களைப் போன்று இசை நலம் வாய்ந்தவை. இத்திருமுறையின் இறுதியிலுள்ள இருபத்தொன்பதாம் திருப்பதிகம், எங்கும் நீக்கமறக்
கலந்து விளங்கும் எல்லாம் வல்ல இறைவனுக்குப் பல்லாண்டிசை கூறி வாழ்த்துவதாகலின் திருப்பல்லாண்டு என்னும் சிறப்புப் பெயரைப் பெறுவதாயிற்று. இவ் ஒன்பதாம் திருமுறை முன்னூற்றொரு பாடல்களை உடையதாய், அளவிற்
சிறியதாயினும் திருக்கோயில் வழிபாட்டில் பஞ்ச புராணமென ஓதப் பெறும் திருமுறைப் பாடல்கள் ஐந்தனுள் திருவிசைப்பாவில் ஒன்றும் திருப்பல்லாண்டில் ஒன்றுமாக இரண்டு திருப்பாடல்களை இத் திருமுறையிலிருந்து ஓதி
வருகின்றனர். இவ்வழக்கம் இத் திருமுறையில் மக்களுக்குள்ள ஈடுபாட்டினை நன்கு புலப்படுத்துவதாகும்.
திருவிசைப்பா திருப்பல்லாண்டு என்னும் இத்திருப்பதிகங்களைப் பாடிய ஆசிரியப் பெருமக்கள் வாழ்ந்த காலம், முதல் ஆதித்த சோழன் முதல் கங்கை கொண்ட சோழன் இறுதியாகவுள்ள சோழ மன்னர்களின் ஆட்சிக்
காலமாகும். அதாவது கி.பி. 9,10,11 ஆம் நூற்றாண்டுகளாகும். திருவிசைப்பா பெற்ற திருத்தலங்கள் தில்லைச் சிற்றம்பலம், திருவீழிமிழலை. திருவாவடுதுறை, திருவிடைக்கழி, திருக்களந்தை யாதித்தேச்சரம், திருக்கீழ்க்
கோட்டூர் மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கை கொண்ட சோழேச்சரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை இராசராசேச்சரம், திருவிடைமருதூர், திருவாரூர் எனப் பதினான்கு தலங்களாகும்.
இவற்றுள் தில்லைச் சிற்றம்பலத்திற்கு மட்டும் பதினாறு திருப்பதிகங்கள் அமைந்துள்ளன. ஏனைய பதின்மூன்று திருத்தலங்களும் ஒவ்வொரு திருப்பதிகமே பெற்றுள்ளன.
1. திருமாளிகைத் தேவர்
இவர் சுத்த சைவ வேளாளர் மரபில் தோன்றியவர். இவர் ஆதிசைவ (சிவப்பிராமண) குலத்தில் தோன்றியவர் என்றும் கூறுவர். இவர்தம் முன்னோர்கள் வாழ்ந்த மடம் மாளிகை மடம் (பெரிய மடம்) எனப் பெயர் பெறும்.
அம்மடத்தின் சார்பால் இவர் திருமாளிகைத்தேவர் என்ற பெயரைப் பெற்றார் என்பர். திரு அடைமொழி. இவர் துறவு பூண்டு திருவாவடுதுறையை அடைந்து சிலகாலம் தவம் புரிந்தார். பின்பு இவர் திருவாவடுதுறையில்
சிவாலயத்திற்கு அருகே தென்திசையில் தமக்கென ஒரு மடாலயம் அமைத்துக் கொண்டு இறை வழிபாட்டில் நின்றார். அப்போது அங்குச் சிவயோகத்தில் அமர்ந்திருந்த சித்தரான போகநாதரிடம் ஞானோபதேசம் பெற்றார். தம் தவத்தின்
பயனாக அழகிய ஒளிவீசும் உடலைப் பெற்றுத் திகழ்ந்தார். அப்போது இவர் பல சித்திகளைச் செய்தார் என்பர். சைவ சமயத்தை நன்கு வளர்த்துப் போற்றினார். இவர் தில்லைக் கூத்தப் பெருமானை வழிபட்டு, திருவிசைப்பா
திருப்பதிகங்கள் நான்கைப் பாடியுள்ளார். இவர் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு எனலாம்.
2. சேந்தனார்
திருவெண்காட்டிற்கு அருகில் உள்ள நாங்கூர் என்ற ஊரில் தோன்றியவர் சேந்தனார். இவர் பட்டினத்து அடிகளின் தலைமைக் கணக்கராக விளங்கினார். சேந்தனார் செப்புறை என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்றும், திருவீழிமிழலை
என்னும் ஊரில் தோன்றியவர் என்றும் கூறுவாரும் உளர். திருவிசைப்பா பாடிய சேந்தனார் திருவீழிமிழலையைச் சேர்ந்தவர் எனவும், திருப்பல்லாண்டு பாடிய சேந்தனார் நாங்கூரைச் சேர்ந்தவர் எனவும் துடிசைக்கிழார் கூறுவர். இச்
சேந்தனாரேயன்றித் திவாகரம் செய்வித்த சேந்தனார் என்ற பெயரினர் ஒருவர் உண்டு. இதனால் சேந்தன் என்ற பெயருடையார் பலர் இருந்துள்ளனர் என்று தெரிகிறது. இந்தத் திருவிசைப்பா ஆசிரியர் அற்புதங்கள் பலவற்றை
நிகழ்த்தியவர். ஒரு சமயம் சேந்தனார் தில்லைப்பதியில் இருக்கும் பொழுது மார்கழித் திருவாதிரைத் திருவிழாவில், ஓடாது தடைப்பட்டு நின்ற திருத்தேரைத் திருப்பல்லாண்டு பாடித் தானே ஓடி நிலையினை அடையுமாறு செய்தார்.
சேந்தனார் இறுதியில் திருவிடைக்கழி என்ற தலத்தை அடைந்து, முருகக் கடவுளை வழிபட்டுக் கொண்டு அங்கேயே ஒரு திருமடம் அமைத்து வசிக்கலானார் என்றும், தைப்பூச நன்னாளில் சேந்தனார் சிவபெருமான் திருவடி
நீழலை அடைந்தார் என்றும் திருவிடைக்கழிப் புராணம் கூறுகிறது. இவருடைய காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இறுதியும் கி.பி.10ஆம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகும். சேந்தனார் திருவீழிமிழலை, திருவாவடுதுறை,
திருவிடைக்கழி ஆகிய முத்தலங்களுக்கும் மூன்று திருவிசைப்பாப் பதிகங்களையும், தில்லையம்பதிக்குத் திருப்பல்லாண்டு என்ற திருப்பதிகத்தையும் அருளிச் செய்துள்ளார்.
3. கருவூர்த் தேவர்
கருவூர்த் தேவர் கொங்கு நாட்டில் உள்ள கருவூரில் பிறந்தவர். இவர் அந்தணர் குலத்தில் தோன்றியவர். வேதாகமங்கள் பலவற்றையும் கற்றுத் தெளிந்தவர். மிகப் பெரிய யோக சித்தர். போக முனிவரிடம் உபதேசம் பெற்று, ஞான
நூல்கள் பலவற்றையும் ஆராய்ந்து சிவயோக முதிர்வு பெற்று காயகல்பம் உண்டவர். சித்திகள் பலவும் கைவரப் பெற்றவர். உலக வாழ்வில் பற்றற்று வாழ்ந்தவர். இவர் செய்த அற்புதங்கள் பலவாகும். இவரது செயல்கள் இவரைப்
பித்தர் என்று கருதும்படி செய்தன. இவர் தமிழ் நாட்டிலுள்ள பல தலங்களைத் தரிசித்தவர். தென்பாண்டி நாட்டுத் திருவிடைமருதூரில் இறைவனிடம் திருவடிதீட்சை பெற்றார். கருவூர்த் தேவரின் திருவுருவச்சிலை கருவூர்
பசுபதீஸ்வரர் கோயிலிலும், தஞ்சைப் பெரிய கோயிலிலும் விளங்குகிறது. இந்நூலில் இவர் பாடிய திருப்பதிகங்கள் பத்து உள்ளன. இவர் கி.பி. 10ஆம் நூற்றாண்டின் கடைப் பகுதியிலும் 11ஆம் நுற்றாண்டின் முற்பகுதியிலும்
வாழ்ந்தவர் எனலாம்.
4. பூந்துருத்திநம்பி காடநம்பி
பூந்துருத்தி என்பது சோழநாட்டுக் காவிரியின் தென்கரையில் உள்ள ஒரு சிவத்தலம். நம்பி காட நம்பி இத்தலத்தில் அந்தணர் குலத்தில் தோன்றினார். இவர் முதிர்ந்த சிவ பக்தர். இறைவனிடம் இடையறாத அன்பு கொண்டவர்.
சிவத்தலங்கள் தோறும் சென்று, சிவபெருமானை வழிபடுவதிலும், மூவர் பாடலாகிய தேவாரங்களை இடைவிடாது ஓதுவதிலும் காலங் கழித்தார். இவர் சாளரபாணி என்ற புதிய பண்ணில் கோயிற் பதிகம் பாடியுள்ளார். இவர்
கி.பி. 10ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது கி.பி. 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். இவரது இயற்பெயர் காடன் என்பது. ஆடவரில் சிறந்தோன் என்னும் பொருளைத் தரும் நம்பி என்ற சொல் இவரது
இயற்பெயரின் முன்னும் பின்னும் இணைத்து வழங்கப் பெறுதலால் இவர்பால் அமைத்த பெருஞ்சிறப்பு இனிது புலனாகும்.
5. கண்டராதித்தர்
இவர் சோழர் குடியிற் பிறந்து முடி வேந்தராய் ஆட்சி புரிந்தவர். கண்டர் என்பது சோழ மன்னர்களுக்குரிய பொதுப்பெயர். ஆதித்தன் என்பது இவரது இயற்பெயராகும். இவர் இராசகேசரி என்ற பட்டத்துடன் கி.பி. 950 முதல்
957 வரை சோழ நாட்டை ஆட்சி புரிந்துள்ளார். கண்டராதித்தர் தில்லைக் கூத்தப் பிரானிடத்து நிறைந்த பேரன்புடையவர். செந்தமிழ்ப் புலமை வாய்ந்தவர். இவர் கி.பி. 957இல் இறைவன் திருவடி நீழல் எய்தினார்.
இவர் செந்தமிழ்ப் புலமை வாய்ந்தவர். பல சிவாலயத் திருப்பணிகளைப் புரிந்தவர். புறச் சமயத்தினரையும் நன்கு மதித்து அவர்கள்பால் அன்புடன் ஒழுகியவர். இவரைச் சிவஞான கண்டராதித்தர் எனக் கல்வெட்டுக் கூறுகிறது.
இவர் தில்லைச் சிற்றம்பலத்திற்குப் பொன்வேய்ந்து புதுப்பித்த முதற் பராந்தக சோழன் (கி.பி 907 953) என்பவனின் இரண்டாவது திருமகனாவார்.
6. வேணாட்டடிகள்
வேணாடு என்பது சேர நாட்டிற்கும் தென் பாண்டி நாட்டிற்கும் நடுவே உள்ளது. வேணாட்டில் தோன்றிய இவரை வேணாட்டடிகள் என்றே எல்லாரும் வழங்கினர். அதனால் இவரது இயற் பெயர் தெரிந்திலது. இவர் அந்நாட்டு அரசர்
குலத்தில் தோன்றி துறவு மேற்கொண்டவர். இவர் சிவபெருமானிடத்துக் கொண்ட அளவற்ற பக்திப் பெருக்கால் பல சிவத்தலங்களுக்கும் சென்று சிவபெருமானைப் பாடி வழிபட்டார். வேணாட்டடிகள் பாடிய திருவிசைப்பா பதிகம்
ஒன்றே உள்ளது. அது கோயில் என்னும் சிதம் பரத்தைப் பற்றியது. இவர் உலக அனுபவம் மிகுதியும் உடையவர் என்பது இவரது பாடல்களால் அறியக்கிடக்கின்றது. இவரைப் பற்றிய பிற செய்தி, காலம் முதலியன
அறிதற்கில்லை. வேணாடு என்பது தென்திருவிதாங்கூர்ப் பகுதிக்குரிய பழம் பெயராகும்.
7. திருவாலியமுதனார்
இவர் திருமயிலையில் வைணவ அந்தணர் குலத்தில் தோன்றியவர். சோழநாட்டில் சீகாழிப்பதிக்கு அருகில் உள்ளது திருவாலிநாடு. அதன் தலைநகர் திருவாலி. இந்நகரில் எழுந்தருளியிருக்கும் திருமாலுக்குரிய பெயர் அமுதன்
என்பது. இவர்தம் பெற்றோர்கள் திருவாலி அமுதனாரிடத்து அளவிறந்த பக்தி பூண்டிருந்த காரணத்தால் தம் திருமகனார்க்குத் திருவாலி அமுதன் என்று பெயரிட்டு அழைத்தனர். வைணவர் குடியில் தோன்றிய திருவாலி அமுதனார்,
சிவபிரானிடத்துப் பேரன்பு செலுத்தி அருள் நலம் பெற்றுச் சிவனடியாராகத் திகழ்ந்தார். தில்லை நடராசப் பெருமானையே தம் குல தெய்வமாகக் கொண்டு சிவபக்தியில் சிறந்து விளங்கினார். பெருமான் எழுந்தருளியுள்ள தலங்கள்
தோறும் திருப்பதிகம் பாடிப் பரவி வந்தார். பெரும்பாலும் இவர் சிதம்பரத்திலேயே வசித்து வந்தார். இங்கு மயிலை என்பது மயிலாடுதுறையேயாதல் வேண்டும் என்பர். திருவாலியமுதர் பாடிய திருவிசைப்பாப் பதிகங்கள் நான்கு
ஆகும். அவை அனைத்தும் கோயில் என்னும் சிதம்பரத்தைப் பற்றியனவேயாகும். இவரது காலம், முதல் இராசராச சோழனுடைய கி.பி. 935 1014ஆம் காலத்திற்கு முற்பட்டது எனலாம்.
8. புருடோத்தம நம்பி
புருடோத்தமன் என்ற பெயர் திருமால் பெயர்களுள் ஒன்று. இவர் தம்மை மாசிலா மறைபல ஓது நாவன் வண்புருடோத்தவன் என்று கூறிக் கொள்வதால், இவர் வைணவ அந்தணர் குலத்தில் தோன்றியவர் என அறியலாம். வைணவ
குலத்தில் தோன்றிச் சிவபெருமானிடத்துப் பக்திபூண்டு சிவனடியாராக விளங்கியவர் இவர். நம்பி என்பது இவரது சிறப்புப் பெயர். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியவர். தில்லையில் எழுந்தருளியுள்ள நடராசப்
பெருமானையே வழிபட்டுக் கொண்டு சிதம்பரத்திலேயே வாழ்ந்து வந்தவர். இவரது காலம் முதலிய பிற செய்தி அறிவதற்கு ஒன்றும் இல்லை. எனினும் இவர் கி.பி. 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரெனக் கொள்ளுதல்
பொருத்தமுடையதாகும்.
9. சேதிராயர்
திருவிசைப்பாவை அருளிச் செய்த ஆசிரியர்களில் ஒன்பதாமவராகத் திகழ்வர் சேதிராயர். இவர் சேதி நாட்டை ஆண்ட குறுநில மன்னர். சேதி நாடு, தென்னார்க்காடு மாவட்டத்தின் வடமேற்கில் உள்ள நடுநாட்டில் ஒரு சிறு பகுதி.
சேதிநாடு மலையமான் நாடு எனவும் வழங்கப் பெறும். சேதி நாட்டின் தலைநகரம் திருக்கோவலூர், கிளியூர் என்பன. கிளியூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டவரே சேதிராயர் ஆவர். சேதிராயர் தம் முன்னோர்களைப்
போலவே சிவபக்தி, அடியார் பக்திகளில் சிறந்து விளங்கினார். பல சிவ தலங்களுக்கும் சென்று வழிபட்டார். இவர் பாடியருளிய திருவிசைப்பாப் பதிகம் ஒன்றே ஆகும். இப்பதிகம் கோயில் என்னும் சிதம்பரத்தைப் பற்றியது.
இவர் முதற் குலோத்துங்கன் கி.பி. 1070 1120 காலத்தவராக அல்லது பிற்பட்ட காலத்தவராக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
01. திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா (1-45)
1. கோயில் - ஒளி வளர் விளக்க
பண் : திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
1.
ஒளிவளர் விளக்கே உவப்பிலா ஒன்றே ! உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே !
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே ! சித்தத்துள் தித்திக்கும் தேனே !
அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே ! அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே.
மேல்
2.
இடர்கெடுத்(து) என்னை ஆண்டுகொண்(டு) என்னுள் இருட்பிழம்பு அறஎறிந்(து) எழுந்த
சுடர்மணி விளக்கின் உள்ளளி விளங்கும் தூயநற் சோதியுள் சோதீ !
அடல்விடைப் பாகா ! அம்பலக் கூத்தா ! அயனொடு மாலறி யாமைப்
படரொளிப் பரப்பிப் பரந்துநின் றாயைத் தொண்டனேன் பணியுமா பணியே.
மேல்
3.
தற்பொருள் பொருளே ! சசிகண்ட ! சிகண்டா ! சாமகண்டா ! அண்ட வாணா !
நற்பெரும் பொருளாய் உரைகலந்து உன்னை என்னுடை நாவினால் நவில்வான்
அற்பன்என் உள்ளத்து அளவிலா உன்னைத் தந்தபொன் அம்பலத்து ஆடி !
கற்பமாய் உலகாய் அல்லையா னையைத் தொண்டனேன் கருதுமா கருதே.
மேல்
4.
பெருமையிற் சிறுமை பெண்ணொடுஆ ணாய்என் பிறப்புஇறப்பு அறுத்தபே ரொளியே !
கருமையின் வெளியே கயற்கணாள் இமவான் மகள்உமை யவள்களை கண்ணே !
அருமையின் மறைநான் கோலமிட் டாற்றும் அப்பனே அம்பலத்து அமுதே
ஒருமையிற் பலபுக்கு உருவிநின் றாயைத் தொண்டனேன் உரைக்குமாறு உரையே.
மேல்
5.
கோலமே மேலை வானவர் கோவே ! குணங்குறி இறந்ததோர் குணமே !
காலமே கங்கை நாயகா எங்கள் காலகா லா! காம நாசா !
ஆலமே அமுதுண்டு அம்பலம் செம்பொன் கோயில்கொண்டு ஆடவல் லானே !
ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத் தொண்டனேன் நணுகுமா நணுகே.
மேல்
6.
நீறணி பவளக் குன்றமே ! நின்ற நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே !
வேறணி புவன போகமே யோக வெள்ளமே மேருவில் வீரா !
ஆறணி சடையெம் அற்புதக் கூத்தா அம்பொன்செய் அம்பலத் தரசே !
ஏறணி கொடியெம் ஈசனே, உன்னைத் தொண்டனேன் இசையுமாறு இசையே.
மேல்
7.
தனதன்நல் தோழா சங்கரா ! சூல பாணியே! தாணுவே சிவனே !
கனகநல் தூணே! கற்பகக் கொழுந்தே கண்கள்மூன் றுடையதோர் கரும்பே !
அனகனே குமர விநாயக சனக அம்பலத்து அமரசே கரனே !
உன்கழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத் தொண்டனேன் நுகருமா நுகரே.
மேல்
8.
திறம்பிய பிறவிச் சிவதெய்வ நெறிக்கே திகைக்கின்றேன் தனத்திகை யாமே
நிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ் நிகழ்வித்த நிகரிலா மணியே !
அறம்பல திறங்கொண்டு அருந்தவர்க்கு அரசாய் ஆலின்கீழ் இருந்தஅம் பலவா !
புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண் டாயைத் தொண்டனேன் புணருமா புணரே.
மேல்
9.
தக்கன்நல் தலையும் எச்சன்வன் தலையும் தாமரை நான்முகன் தலையும்
ஒக்கவிண்(டு) உருள ஒண்திருப் புருவம் நெறித்தரு ளியவுருத் திரனே !
அக்கணி புலித்தோல் ஆடைமேல் ஆட ஆடம்பொன் னம்பலத்து ஆடும்
சொக்கனே ! எவர்க்கும் தொடர்வரி யாயைத் தொண்டனேன் தொடருமா தொடரே.
மேல்
10.
மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்கு அருள்புரி வள்ளலே ! மருளார்
இடங்கொள்முப் புரம்வெந்து அவியவை திகத்தேர் ஏறிய ஏறுசே வகனே !
அடங்கவல் அரக்கன் அருள்திரு வரைக்கீழ் அடர்த்தபொன் னம்பலத் தரசே !
விடங்கொள்கண் டத்துஎம் விடங்கனே ! உன்னைத் தொண்டனேன் விரும்புமா விரும்பே.
மேல்
11.
மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது அயன்திரு மாலொடு மயங்கி
முறைமுறை முறையிட்(டு) ஓர்வரி யாயை மூர்க்கனேன் மொழிந்தபுன் மொழிகள்
அறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச் சிறுமையில் பொறுக்கும்அம் பலத்துள்
நிறைதரு கருணா நிலயமே ! உன்னைத் தொண்டனேன் நினையுமா நினையே.
மேல்
---திருச்சிற்றம்பலம்---
பதிக எண்: 2 .கோயில் - உயர் கொடியாடை
பண் : திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
1.
உயர்கொடி யாடை மிடைபட லத்தின் ஓமதூ மப்பட லத்தின்
பெயர்நெடு மாடத்(து) அகிற்புகைப் படலம் பெருகிய பெரும்பற்றப் புலியூர்ச்
சியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம் நிறைந்தசிற் றம்பலக் கூத்தா !
மயர்வறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்சே வடிகள்என் மனத்துவைத் தருளே.
மேல்
2.
கருவளர் மேகத் தகடுதோய் மகுடக் கனகமா ளிகைகலந் தெங்கும்
பெருவளர் முத்தீ நான்மறைத் தொழில்சால் எழில்மிகு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் தெய்வப் பதிவிதி நிதியம் திரண்டசிற் றம்பலக் கூத்தா !
உருவளர் இன்பச் சிலம்பொலி அலம்பும் உன்னடிக் கீழ(து)என் னுயிரே.
மேல்
3.
வரம்பிரி வாளை மிளர்மிடுக் கமலம் கரும்பொடு மாந்துமே திகள்சேர்
பரம்பிரி செந்நெல் கழனிச் செங்கழுநீர்ப் பழனம்சூழ் பெரும்பற்றப் புலியூர்ச்
சிரம்புணர் முடிவா னவர்அடி முறையால் இறைஞ்சுசிற் றம்பலக் கூத்தா
நிரந்தரம் முனிவர் நினைதிருக் கணைக்கால் நினைந்துநின்(று) ஒழிந்ததென் நெஞ்சே.
மேல்
4.
தேர்மலி விழவில் குழவொலி தெருவில் கூத்தொலி ஏத்தொலி ஒத்தின்
பேரொலி பரந்து கடலொலி மலியப் பொலிதரு பெரும்பற்றப் புலியூர்ச்
சீர்நில(வு) இலயத் திருநடத் தியல்பில் திழந்தசிற் றம்பலக் கூத்தா !
வார்மலி முலையாள் வருடிய திரள்மா மணிக்குறங்(கு) அடைந்ததென் மதியே.
மேல்
5.
நிறைதழை வாழை நிழற்கொடி நெடுந்தெங்(கு) இளங்கமுகு உளங்கொள்நீள் பலமாப்
பிறைதவழ் பொழில்சூழ் கிடங்கிடைப் பதனம் முதுமதிற் பெரும்பற்றப் புலியூர்ச்
சிறைகொள்நீர்த் தரளத் திரள்கொள்நித் திலத்த செம்பொற் சிற்றம்பலக் கூத்த !
பொறை யணி நிதம்பப் புலியதள் ஆடைக் கச்சுநூல் புகுந்ததென் புகலே.
மேல்
6.
அதுமதி இதுவென்(று) அலந்தலை நூல்கற்(று) அழைப்பொழிந்(து) அருமறை அறிந்து
பிதுமதி வழிநின்(று) ஒழிவிலா வேள்விப் பெரியவர் பெரும்பற்றப் புலியூர்ச்
செதுமதிச் சமணும் தேரரும் சேராச் செல்வச் சிற்றம்பலக் கூத்த !
மதுமதி வெள்ளத் திருவயிற்(று) உந்தி வளைப்புண்(டு)என் னுள்மகிழ்ந் ததுவே.
மேல்
7.
பொருவரைப் புயத்தின் மீமிசைப் புலித்தோல் பொடியணி பூணநூல் அகலம்
பெருவரை புரைதிண் தோளுடன் காணப் பெற்றவர் பெரும்பற்றப் புலியூர்த்
திருமரு(வு) உதரத் தார்திசை மிடைப்ப நடஞ்செய்சிற் றம்பலக் கூத்த !
உருமரு(வு) உதரத் தனிவடம் தொடர்ந்து கிடந்த(து)என் உணர்வுணர்ந்(து) உணர்ந்தே.
மேல்
8.
கணியெரி விசிறு கரம்துடி விடவாய்க் கங்கணம் செங்கைமற் றபயம்
பிணிகெட இவைகண்(டு) அரன்பெரு நடத்திற் பிரிவிலார் பெரும்பற்றப் புலியூர்த்
திணிமணி நீல கண்டத்(து)என் அமுதே ! சீர்கொள்சிற் றம்பலக் கூத்த !
அணிமணி முறுவல் பவளவாய்ச் செய்ய சோதியுள் அடங்கிற்(று)என் அறிவே.
மேல்
9.
திருநெடு மால்இந் திரன்அயன் வானோர் திருக்கடைக் காவலின் நெருக்கிப்
பெருமுடி மோதி உருமணி முன்றில் பிறங்கிய பெரும்பற்றுப் புலியூர்ச்
செருநெடு மேரு வில்லன்முப் புரம்தீ விரித்தசிற் றம்பலக் கூத்த !
கருவடி குழைக்கா(து) அமலச்செங் கமல மலர்முகம் கலந்த(து)என் கருத்தே.
மேல்
10.
ஏர்கொள்கற் பகம்ஒத்(து) இருசிலைப் புருவம் பெருந்தடங் கண்கள்மூன் றுடையான்
பேர்கள்ஆ யிரம்நூராயிரம் பிதற்றும் பெற்றியோர் பெரும்பற்றுப் புலியூர்ச்
சீர்கொள் கொக் கிறகும் கொன்றையும் துன்று சென்னிச் சிற்றம்பலக் கூத்த !
நீர்கொள்செஞ் சடைவாழ் மதிபுது மத்தம் நிகழ்ந்தஎன் சிந்தையுள் நிறைந்தே.
மேல்
11.
காமனைக் காலன் தக்கன்மிக் கெச்சென் படக்கடைக் கணித்தவன் அல்லாப்
பேய்மனம் பிறிந்த தவப்பெருந் தொண்டர் தொண்டனேன் பெரும்பற்றிப் புலியூர்ச்
சேமநற் றில்லை வட்டங்கொண்(டு) ஆண்ட செல்வச்சிற் றம்பலக் கூத்த !
பூமலர் அடிக்கீழ்ப் புராணபூ தங்கள் பொறுப்பர்என் புன்சொலின் பொருளே.
மேல்
---திருச்சிற்றம்பலம்---
பதிக எண்: 3.கோயில் - உறவாகிய யோகம்
பண் : திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
1.
உறவா கியய கமும்போ கமுமாய் உயிரொளி என்னும்என் பொன்னொருநாள்
கிறவா தவர்புரஞ் செற்ற கொற்றச் சிலைகொண்டு பன்றிப்பின் சென்றுநின்ற
மறவா என்னும் மணிநீர் அருவி மகேந்திர மாமலைமேல் உறையும்
குறவா என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
மேல்
2.
காடாடு பல்கணம் குழக் கேழற் கடும்பின் நெடும்பகற் கான்நடந்த
வேடா ! மகேந்திர வெற்பா ! என்னும் வினையேன் மடந்தைவிம் மாவெருவும்
சேடா என்னும் செல்வர்மூ வாயிரம் செழுஞ்சொதி அந்தணர் செங்கைதொழும்
கோடா என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
மேல்
3.
கானே வருமுரண் எனம் எய்த களியார் புளினநற்கா ளாய்என்னும்
வானே தடவும் நெடுங் குடுமி மகேந்திர மாமலை மேலிருந்த
தேனே என்னும் தெய்வவாய் மொழியார் திருவாளர்மூ வாயிரவர் தெய்வக்
கோனே என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
மேல்
4.
வெளியேறு பன்றிப் பின்சென்(று) ஒருநாள் விசயற்(கு) அருள்செய்த வேந்தே ! என்னும்
மறியேறு சாரல் மகேந் திரமா மலைமேல் இருந்தமரும் தே! என்னும்
நெறியே! என்னும் நெறிநின்ற வர்கள் நினைக்கின்ற நீதி வேதாந்த நிலைக்
குறியே ! என்னும் குணக்குன்றே ! என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
மேல்
5.
செழுந்தென்றல் அன்றில்இத் திங்கள் கங்குல் திரைவீரை தீங்குழல் சேவின்மணி
எழுந்தின்று என்மேல் பகையாட வாடும் எனைநீ நலிவதென் னேஎன்னும்
அழுந்தா மகேந்திரத்(து) அந்த ரப்புட்(கு) அரசுக் கரசே ! அமரர்தனிக்
கொழுந்தே என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
மேல்
6.
வண்டார் குழலுமை நங்கை முன்னே மகேந்திரச் சாரல் வராகத் தின்பின்
கண்டார் கவல வில்லாடி வேடர் கடிநா யுடன்கை வளைந்தாய் ! என்னும்
பண்டாய மலரயன் தக்கன் எச்சன் பகலோன் தலைபல் பசுங்கண்
கொண்டாய் என்னும் குணக்குன்றே ! என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
மேல்
7.
கடுப்பாய்ப் பறைகறங்கக் கடுவெஞ் சிலையும் கணையும் கவணும் கைக்கொண்(டு)
உடுப்பாய் தோல்செருப்புச் சுரிகை வராக முன்னோடி விளியுளைப்ப
நடப்பாய் ! மகேந்திர நாத ! நா தாந்தத்(து) அரையா என்பார்க்கு நாதாந்தபதம்
கொடுப்பாய் என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
மேல்
8.
சேவேந்து வெல்கொடி யானே ! என்னும் சிவனே ! என் சேமத்துணையே என்னும்
மாவேந்து சாரல் மகேந்தி ரத்தில் வளர்நா யகா ! இங்கே வாராய் என்னும்
பூவேந்தி மூவா யிரவர் தொழப் புகழேந்து மன்று பொலிய நின்ற
கோவே ! என்னும் குணக்குன்றே ! என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
மேல்
9.
தரவார் புனம்சுனை தாழ்அருவித் தடம்கல் லுறையும் மடங்கல் அமர்
மரவார் பொழில்எழில் வேங்கை எங்கும் மழைசூழ் மகேந்திர மாமலைமேல்
கரவா ! என்னும் சுடல்நீள் முடிமால்அயன் இந்திரன் முதல்தே வர்க்கெல்லாம்
குரவா என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
மேல்
10.
திருநீ றிடாவுருத் தீண்டேன் என்னும் திருநீறு மெய்த்திரு முண்டத்திட்டுப்
பெருநீல கண்டன் திறங்கொண்(டு) இவள் பிதற்றிப் பெருந்தெரு வேதிரியும்
வருநீர் அருவி மகேந்திரப்பொன் மலையின் மலைமக ளுக்கருளும்
குருநீ என்னும் குணக்குன்றே ! என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
மேல்
11.
உற்றாய் என்னும் உன்னையன்றி மற்றொன்(று) உணரேன் என்னும் உணர்வுகள் கலக்கப்
பெற்றாய ஐந்தெழுத்தும் பிதற்றிப் பிணிதீர வெண்ணீறிடப் பெற்றேன் என்னும்
சுற்றாய சோதி மகேந்திரம் சூழ மனத்திருள் வாங்கிச் சூழாத நெஞ்சில்
குற்றாய் ! என்னும் குணக்குன்றே ! என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
மேல்
12.
வேறாக உள்ளத்(து) உவகை விளைத்(து) அவனிச் சிவலோக வேதவென்றி
மாறாத மூவாயிர வரையும் எனையும் மகிழ்ந்தாள வல்லாய் ! என்னும்
ஆறார் சிகர மகேந்திரத்(து) உன் அடியார் பிழைபொறுப்பாய் மாதோர்
கூறாய் என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
மேல்
---திருச்சிற்றம்பலம்---
பதிக எண்: 4 .கோயில் - இணங்கிலா ஈசன்
பண் : திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
1.
இணங்கிலா ஈசன் நேசத்(து) இருந்தசித் தத்தி னேற்கு
மணங்கொள்சீர்த் தில்லை வாணன் மணஅடி யார்கள் வண்மைக்
குணங்களைக் கூறா வீறில் கோறைவாய்ப் பீறற் பிண்டப்
பிணங்களைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே.
மேல்
2.
எட்டுரு விரவி என்னை ஆண்டவன் ஈண்டு சோதி
விட்டிலங்(கு) அலங்கல் தில்லை வேந்தனைச் சேர்ந்தி லாத
துட்டரைத் தூர்த்த வார்த்தைத் தொழும்பரைப் பிழம்பு பேசும்
பிட்டரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே.
மேல்
3.
அருள்திரள் செம்பொன் சோதி அம்பலத் தாடுகின்ற
இருள்திரள் கண்டத் தெம்மான் இன்பருக்(கு) அன்பு செய்யா
அரட்டரை அரட்டுப் பேசும் அழுக்கரைக் கழுக்க ளாய
பிரட்டரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே.
மேல்
4.
துணுக்கென அயனும் மாலும் தொடர்வரும் சுடராய் இப்பால்
அணுக்கருக்(கு) அணிய செம்பொன் அம்பலத் தாடிக்(கு) அல்லாச்
சிணுக்கரைச் செத்தற் கொத்தைச் சிதம்பரைத் சீத்தை ஊத்தைப்
பிணுக்கரைக் காணா கண்வாய் பேசா(து) அப்பேய்க ளோடே.
மேல்
5.
திசைக்குமிக் குலவு சீர்த்தித் தில்லைக் கூத்(து) உகந்து தீய
நசிக்கவெண் ணீற(து) ஆடும் நமர்களை நணுகா நாய்கள்
அசிக்கஆ ரியங்கள் ஓதும் ஆதரைப் பேத வாதப்
பிசக்கரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே.
மேல்
6.
ஆடர(வு) ஆட ஆடும் அம்பலத்(து) அமிர்தே என்னும்
சேடர்சே வடிகள் சூடத் திருவிலா உருவி னாரைச்
சாடரைச் சாட்கை மோடச் சழக்கரைப் பிழக்கப் பிட்கப்
பேடரைக் காணா கண்வாய் பேசாது அப் பேய்க ளோடே.
மேல்
7.
உருக்கிஎன் உள்ளத் துள்ளே ஊறலந் தேறல் மாறாத்
திருக்குறிப்(பு) அருளும் தில்லைச் செல்வன்பாற் செல்லும் செல்வில்
அருக்கரை அள்ளல் வாய கள்ளரை அவியாப் பாவப்
பெருக்கரைக் காணா கண்வாய் பேசா(து)அப் பேய்க ளோடே.
மேல்
8.
செக்கர்ஒத்(து) இரவி நூறா யிரத்திரள் ஒப்பாம் தில்லைச்
சொக்கர்அம் பலவர் என்னும் கருதியைக் கருத மாட்டா
எக்கரைக் குண்ட மிண்ட எத்தரைப் புத்த ராதிப்
பொக்கரைக் காணா கண்வாய் பேசாது அப் பேய்க ளோடே.
மேல்
9.
எச்சனைத் தலையாக் கொண்டு செண்டடித்(து) இடபம் ஏறி
அச்சங்கொண்(டு) அமரர் ஓட நின்றஅம் பலவற்(கு) அல்லாக்
கச்சரைக் கல்லாப் பொல்லாக் கயவரைப் பசுநூல் கற்கும்
பிச்சரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே.
மேல்
10.
விண்ணவர் மகுட கோடி மிடைந்தொளிர் மணிகள் வீசும்
அண்ணல்அம் பலவன் கொற்ற அரசனுக்(கு) ஆசை உள்ளத்து
தெண்ணரைத் தெருளா உள்ளத்(து) இருளரைத் திட்டை முட்டைப்
பெண்ணரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே.
மேல்
11.
சிறப்புடை அடியார் தில்லைச் செம்பொன்அம் பலவற்(கு) ஆளாம்
உறைப்புடை யடியார் கீழ்க்கீழ் உறைப்பர்சே வடிநீ(று) ஆடார்
இறப்பொடு பிறப்பி னுக்கே இனியராய் மீண்டும் மீண்டும்
பிறப்பரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே.
மேல்
---திருச்சிற்றம்பலம்---
02.சேந்தனார் அருளிய திருவிசைப்பா (46 -79)
பதிக எண்: 5 திருவீழிமிழலை
பண் : சேந்தனார் அருளிய திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
1.
ஏக நாயகனை இமையவர்க்(கு) அரசை என்னுயிர்க்(கு) அமுதினை எதிரில்
போக நாயகனைப் புயல்வணற்(கு) அருளிப் பொன்னெடுஞ் சிவிகையா வூர்ந்த
மேக நாயகனை மிகுதிரு வீழி மிழலைவிண் ணிழிசெழுங் கோயில்
யோக நாயகனை அன்றிமற் றொன்றும் உண்டென உணர்கிலேன் யானே.
மேல்
2.
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனைத் திருவீழி மிழலைவீற் றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டுகண்(டு) உள்ளம் குளிரஎன் கண்குளிர்ந் தனவே.
மேல்
3.
மண்டலத்து ஒளியை விலக்கியான் நுகர்ந்த மருந்தைஎன் மாறிலா மணியைப்
பண்டவர் அயன்மாற்(கு) அரிதுமாய் அடியார்க்(கு) எளியதோர் பவளமால் வரையை
விண்டவர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ் திருவீழி மிழலையூர் ஆளும்
கொண்டலங் கண்டத்(து) எம்குரு மணியைக் குருகவல் வினைகுறு காவே.
மேல்
4.
தன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த சசிகுவா மவுலியைத் தானே
என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி எழுஞ்செழுஞ் சுடரினை அருள்சேர்
மின்னெடுங் கடலுள் வெள்ளத்தை வீழி மிழலையுள் விளங்குவெண் பளிங்கின்
பொன்னடிக்(கு) அடிமை புக்கினப் போக விடுவனோ பூண்டுகொண் டேனே.
மேல்
5.
இத்தெய்வ நெறிநன் றென்(று)இருள் மாயப் பிறப்பா இந்திர சாலப்
பொய்த்தெய்வ நெறிநான் புகாவகை புரிந்த புராணசிந்தா மணி வைத்த
மெய்த் தெய்வ நெறிநான் மறையவர் வீழிமிழலைவிண் ணிழிசெழுங் கோயில்
அத்தெய்வ நெறியிற் சிவமலா(து) அவமும் அறிவரோ அறிவுடை யோரே.
மேல்
6.
அக்கனா அனைய செல்வமே சிந்தித்து ஐவரோ(டு) அழுந்தியான் அவமே
புக்கிடா வண்ணம் காத்தெனை ஆண்ட புனிதனை வனிதைபா கனைஎன்
திக்கெலாம் குலவும் புகழ்த்திரு வீழி மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்குநிற் பவர்தம் பொன்னடிக் கமலப் பொடியணிந்(து) அடிமைபூண் டேனே.
மேல்
7.
கங்கைநீர் அரிசிற் கரையிரு மருங்கும் கமழ்பொழில் தழுவிய கழனித்
திங்கள்நேர் தீண்ட நீண்டமா ளிகைசூழ் மாடநீ டுயர்திரு வீழித்
தங்குசீர்ச் செல்வத் தெய்வத்தான் தோன்றி நம்பியைத் தன்பெருஞ் சோதி
மங்கையோர் பாகத்(து) என்னரு மருந்தை வருந்திநான் மறப்பனோ? இனியே.
மேல்
8.
ஆயிரம் கமலம் ஞாயி(று)ஆ யிரம்முக் கண்முக கரசர ணத்தோன்
பாயிருங் கங்கை பனிநிலாக் கரந்த படர்சடை மின்னுபொன் முடியோன்
வேயிருந் தோளி உமைமண வாளன் விரும்பிய மிழலைசூழ் பொழிலைப்
போயிருந் தேயும் போற்றுவார் கழல்கள் போற்றுவார் புரந்தரா திகளே.
மேல்
9.
எண்ணில்பல் கோடி சேவடி முடிகள் எண்ணில்பல் கோடிதிண் தோள்கள்
எண்ணில்பல் கோடி திருவுரு நாமம் ஏர்கொள்முக் கண்முகம் இயல்பும்
எண்ணில்பல் கோடி எல்லைக்(கு)அப் பாலாய் நின்(று)ஐஞ்ஞாற்(று) அந்தணர் ஏத்தும்
எண்ணில்பல் கோடி குணத்தர்ஏர் வீழி இவர்நம்மை ஆளுடை யாரே.
மேல்
10.
தக்கன்வெங் கதிரோன் சலந்தரன் பிரமன் சந்திரன் இந்திரன் எச்சன்
மிக்கநெஞ்(சு) அரக்கன் புரம்கரி கருடன் மறலிவேள் இவர்மிகை செகுத்தோன்
திக்கெலாம் நிறைந்த புகழ்த்திரு வீழி மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்கிருந் தவர்தம் பொன்னடிக் கமலப் பொடியணிந்(து) அடிமைபூண் டேனே.
மேல்
11.
உளங்கொள மதுரக் கதிர்விரித்(து) உயிர்மேல் அருள்சொரி தரும்உமா பதியை
வளங்கிளர் நதியும் மதியமும் சூடி மழவிடை மேல்வரு வானை
விளங்கொளி வீழி மழலைவேந் தேயென்(று) ஆந்தனைச் சேந்தன்தா தையையான்
களங்கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன் கைக்கொண்ட கனககற் பகமே.
மேல்
12.
பாடலங் காரப் பரிசில்கா(சு) அருளிப் பழுத்தசெந் தமிழ்மலர் சூடி
நீடலங் காரத்து எம்பெரு மக்கள் நெஞ்சினுள் நிறைந்துநின் றானை
வேடலங் காரக் கோலத்தின் அமுதைத் திருவீழி மிழலையூர் ஆளும்
கேடிலங் கீர்த்திக் கனககற் பகத்தைக் கெழுமுதற்(கு) எவ்விடத் தேனே.
மேல்
---திருச்சிற்றம்பலம்---
பதிக எண்: 6 திருவாவடுதுறை
பண் : சேந்தனார் அருளிய திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
1.
பொய்யாத வேதியர் சாந்தைமெய்ப் புகழாளர் ஆயிரம் பூசுரர்
மெய்யே திருப்பணி செய்சீர் மிகுகா விரிக்கரை மேய
ஐயா ! திருவா வடுதுறை அமுதே ! என்றுன்னை அழைத்தக்கால்
மையார் தடங்கண் மடந்தைக்(கு)ஒன்(று) அருளாது ஒழிவது மாதிமையே.
மேல்
2.
மாதி மணங்கம ழும்பொழில் மணிமாட மாளிகை வீதிசூழ்
சோதி மதிலணி சாந்தைமெய்ச் சுருதி விதிவழி யோர்தொழும்
ஆதி அமரர் புராணனாம் அணிஆ வடுதுறை நம்பிநின்ற
நீதி அறிகிலன் பொன்நெடும் திண்தோள் புணர நினைக்குமே.
மேல்
3.
நினைக்கும் நிரந்தர னே !என்னும் நிலாக்கோலச் செஞ்சடைக் கங்கைநீர்
நனைக்கும் நலங்கிளர் கொன்றைமேல் நயம்பேசும் நன்னுதல் நங்கைமீர் !
மனக்கின்ப வெள்ளம் மலைமகள் மணவாள நம்பிவண் சாந்தையூர்
தனக்கின்பன் ஆவடு தண்துறைத் தருணேந்து சேகரன் என்னுமே.
மேல்
4.
தருணேந்து சேகர னே !எனும் தடம்பொன்னித் தென்கரைச் சாந்தையூர்ப்
பொருள்நேர்ந்த சிந்தை அவர்தொழப் புகழ்செல்வம் மல்குபொற் கோயிலுள்
அருள்நேர்ந்(து) அமர் திருவாவடு துறையாண்ட ஆண்டகை அம்மானே
தெருள்நேர்ந்த சித்தம் வலியவா திலக நுதலி திறத்திலே.
மேல்
5.
திலக நுதல்உமை நங்கைக்கும் திருவா வடுதுறை நம்பிக்கும்
குலக அடியவர்க்(கு) என்னையாட் கொடுத்தாண்டு கொண்ட குணக்கடல்
அவதொன்(று) அறிகின்றி வேம்எனும் அணியும்வெண் ணீ(று)அஞ் செழுத்தலால்
வலதொன் றிலள்இதற்(கு) என்செய்கேன்? வயலந்தண் சாந்தையர் வேந்தனே !
மேல்
6.
வேந்தன் வளைத்தது மேருவில் அரவுநாண் வெங்கணை செங்கண்மால்
போந்த மதிலணி முப்புரம் பொடியாட வேதப் புரவித்தேர்
சாந்தை முதல் !அயன் சாரதி கதியருள் என்னும் இத் தையவை
ஆந்தண் திருவா வடுதுறையான் செய்கை யாரறி கிற்பாரே?
மேல்
7.
கிற்போம் எனத்தக்கன் வேள்விபுக்(கு) எழுந்தோ டிக்கெட்ட அத்தேவர்கள்
சொற்போலும் மெய்ப்பயன் பாவிகாள்என் சொல்லிச் சொல்லும் இத் தூமொழி
கற்போல் மனம்கனி வித்த எங்கருணாலயா வந்திடாய் என்றால்
பொற்போ பெருந்திரு வாவடு துறையாளி பேசா(து) ஒழிவதே.
மேல்
8.
ஒழிவொன்றி லாவுண்மை வண்ணமும் உவப்பிலள் ஊறின்ப வெள்ளமும்
ஒழிவொன்றி லாப்பொன்னித் தீர்த்தமும் முனிகோடி கோடியா மூர்த்தியும்
அழிவொன்றி லாச்செல்வச் சாந்தையூர் அணி ஆவடுதுறை ஆடினாள்
இழிவொன்றி லாவகை எய்திநின்(று) இறுமாக்கும் என்னிள மானனே.
மேல்
9.
மானேர் கலைவளையும் கவர்ந்துளம் கொள்ளை கொள்ளவழக்(கு) உண்டே !
தேனே ! அமுதே !என் சித்தமே ! சிவலோக நாயகச் செல்வமே !
ஆனேஅ லம்புனற் பொன்னி அணி ஆவடுதுறை அன்பர்தம்
கோனே !நின் மெய்யடி யார்மனக் கருத்தை முடித்திடுங் குன்றமே !
மேல்
10.
குன்றேந்தி கோகன கத்(து)அயன் அறியா நெறிஎன்னைக் கூட்டினாய்
என்றேங்கி ஏங்கி அழைக்கின்றாள் இளவல்லி எல்லை கடந்தனள்
அன்றோ லம்புபு னற்பொன்னி அணி ஆவடுதுறை ஆடினாள்
நன்றே இவள்தம் பரமல்லள் நவலோக நாயகன் பாலளே.
மேல்
11.
பாலும் அமுதமும் தேனுமாய் ஆனந்தம் தந்துள்ளே பாலிப்பான்
போலும்என் ஆருயிர்ப் போகமாம் புரகால காமபு ராந்தகன்
சேலும் கயலும் திளைக்குநீர்த் திருவா வடுதுறை வேந்தனோ(டு)
ஆலும் அதற்கே முதலுமாம் அறிந்தோம் அரிவைபொய் யாததே.
மேல்
---திருச்சிற்றம்பலம்---
பதிக எண்: 7 திருவிடைக்கழி
பண் : சேந்தனார் அருளிய திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
1.
மாலுமா மனம்தந்(து) என்கையில் சங்கம் வல்வினான் மலைமகள் மதலை
வேலுலாந் தேவர் குலமுழு தாளும் குமரவேள் வள்ளிதன் மணாளன்
சேலுலாங் கழனித் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற
வேலுலாந் தடக்கை வேந்தன்என் சேந்தன் என்னும் என் மெல்லியல் இவளே.
மேல்
2.
இவளைவா ரிளமென் கொங்கையீர் பொங்க எழில் கவர்ந் தான்இளங் காளை
கவளமா கரிமேல் கவரிசூழ் குடைக்கீழ்க் கனகக்குன் றெனவரும் கள்வன்
திவளமா ளிகைசூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற
குவளைமா மலர்க்கண் நங்கையானைக்கும் குழகன்நல் அழகன்நங் கோவே.
மேல்
3.
கோவினைப் பவளக் குழமணக் கோலக் குழாங்கள் சூழ்கோழிவெல் கொடியோன்
காவல்நற் சேனையென் னக்காப் பவன்என் பொன்னை மேகலை கவர்வானே?
தேவின்நற் றலைவன் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற
தூவிநற் பீலி மாமயில் ஊரும் சுப்பிர மண்ணியன் தானே.
மேல்
4.
தானவர் பொருது வானவர் சேனை மடியச்சூர் மார்பினைத் தடிந்தோன்
மானமர் தடக்கை வள்ளல்தன் பிள்ளை மறைநிறை சட்டறம் வளரத்
தேனமர் பொழில்சூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற
கோனமர் கூத்தன் குலவிளங் களிறென் கொடிக்கிடர் பயப்பதுங் குணமே !
மேல்
5.
குணமணிக் குருளைக் கொவ்வைவாய் மடந்தை படுமிடர் குறிக்கொளா(து) அழகோ?
மணமணி மறையோர் வானவர் வையம் உய்யமற்(று) அடியனேன் வாழத்
திணமணி மாடத் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற
கணமணி பொருநீர்க் கங்கைதன் சிறுவன் கணபதி பின்னிளங் கிளையே.
மேல்
6.
கிளையிளங் சேயக் கிரிதனை கீண்ட ஆண்டகை கேடில்வேற் செல்வன்
வளையிளம் பிறைச்செஞ் சடைஅரன் மதலை கார்நிற மால்திரு மருகன்
திளையிளம் பொழில்சூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற
முளையிளங் களி(று)என் மொய்குழற் சிறுமிக்(கு) அருளுங்கொல் முருகவேள் பரிந்தே.
மேல்
7.
பரிந்தசெஞ் சுடரோ பரிதியோ மின்னோ பவளத்தின் குழவியோ பசும்பொன்
சொரிந்தசிந் துரமோ தூமணித் திரளோ சுந்தரத்(து) அரசிது என்னத்
தெரிந்தவை திகர்வாழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற
வரிந்தவெஞ் சிலைக்கை மைந்தனை அஞ்சொல்மையல்கொண்(டு) ஐயறும் வகையே.
மேல்
8.
வகைமிகும் அசுரர் மாளவந்(து) உழிஞை வானமர் விளைத்ததா ளாளன்
புகைமிகும் அனலிற் பரம்பொடி படுத்த பொன்மாலை வில்லிதன் புதல்வன்
திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற
தொகைமிகு நாமத் தவன்திரு வடிக்(கு)என் துடியிடை மடல்தொடங் கினளே.
மேல்
9.
தொடங்கினள் மடவென்(று) அணிமுடித் தொங்கல் புறஇதழ் ஆகிலும் அருளான்
இடங்கொளக் குறத்தி திறத்திலும் இறைவன் மறத்தொழில் வார்த்தையும் உடையன்
திடங்கொள்வை திகர்வாழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற
மடங்கலை மலரும் பன்னிரு நயனத்(து) அறுமுகத்(து) அமுதினை மருண்டே.
மேல்
10.
மருண்டுறை கோயில் மல்குநன் குன்றப் பொழில்வளர் மகிழ்திருப் பிடவூர்
வெருண்டமான் விழியார்க்(கு) அருள்செயா விடுமே விடலையே எவர்க்கும் மெய் அன்பர்
தெருண்டவை திகர்வாழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற
குருண்டபூங் குஞ்சிப் பிறைச்சடை முடிமுக் கண்ணுடைக் கோமளக் கொழுந்தே.
மேல்
11.
கொழுந்திரள் வாயார் தாய்மொழி யாகத் தூய்மொழி அமரர்கோ மகனைச்
செழுந்திரள் சோதிச் செப்புறைச் சேந்தன் வாய்ந்தசொல் இவைசுவா மியையே
செழுந்திடம் பொழில்சூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற
எழுங்கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார் இடர்கெடும் மாலுலா மனமே.
மேல்
---திருச்சிற்றம்பலம்---
03. கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பா (80 - 182 )
பதிக எண்: 8 கோயில் - கணம் விரி
பண் : கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
1.
கணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக் கறையணல் கட்செவிப் பகுவாய்ப்
பணம்விரி துத்திப் பொறிகொள்வெள் ளெயிற்றுப் பாம்பணி பரமர்தம் கோயில்
மணம்விரி தருதே மாம்பொழில் மொழுப்பில் மழைதவழ் வளரிளம் கமுகம்
திணர்நிரை அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
மேல்
2.
இவ்வரும் பிறவிப் பெளவநீர் நீந்தும் ஏழையேற்(கு) என்னுடன் பிறந்த
ஐவரும் பகையே யார்துணை என்றால் அஞ்சல்என் றருள்செய்வான் கோயில்
கைவரும் பழனம் குழைத்தசெஞ் சாலிக் கடைசியர் களைதரு நீலம்
செய்வரம்(பு) அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
மேல்
3.
தாயின்நேர் இரங்கும் தலைவஓ என்றும் தமியனேன் துணைவஓ என்றும்
நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி நலம்புரி பரமர்தம் கோயில்
வாயில்நேர் அரும்பு மணிமுருக்(கு) அலர வளரிளம் சோலைமாந் தளிர்செந்
தீயின்நேர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
மேல்
4.
துந்துபி குழல்யாழ் மொந்தைவான் இயம்பத் தொடர்ந்(து)இரு டியர்கணம் துதிப்ப
நந்திகை முழவம் முகிலென முழங்க நடம்புரி பரமர்தம் கோயில்
அந்தியின் மறைநான்கு ஆரணம் பொதிந்த அரும்பெறல் மறைப்பொருள் மறையோர்
சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
மேல்
5.
கண்பனி அரும்பக் கைகள் மொட்டித்(து)என் களைகணே! ஓலம்என்(று) ஓலிட்டு
என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்(து) என்னையும் புணர்ப்பவன் கோயில்
பண்பல தெளிதென் பாடிநின் றாடப் பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பில்
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
மேல்
6.
நெஞ்சிடர் அகல அகம்புகுந்(து) ஒடுங்கும் நிலைமையோ(டு) இருள்கிழித்(து) எழுந்த
வெஞ்சுடர் சுடர்வ போன்(று)ஒளி துளும்பும் விரிசடை அடிகள்தங் கோயில்
அஞ்சுடர் புரிசை ஆழிசூழ் வட்டத்(து) அகம்படி மணிநிரை பரந்த
செஞ்சுடர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
மேல்
7.
பூத்திரள் உருவம் செங்கதிர் விரியாப் புந்தியில் வந்தமால் விடையோன்
தூத்திரள் பளிங்கில் தோன்றிய தோற்றம் தோன்றநின் றவன்வளர் கோயில்
நாத்திரள் மறையோர்ந்(து) ஓம குண்டத்து நறுநெயால் மறையவர் வளர்த்த
தீத்திரள் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
மேல்
8.
சீர்த்ததிண் புவனம் முழுவதும் ஏனைத் திசைகளோ(டு) அண்டங்கள் அனைத்தும்
போர்த்ததம் பெருமை சிறுமைபுக்(கு) ஒடுங்கும் புணர்ப்படை அடிகள்தம் கோயில்
ஆர்த்துவந்(து) அமரித்(து) அமரரும் பிறரும் அலைகடல் இடுதிரைப் புனிதத்
தீர்த்தநீர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
மேல்
9.
பின்னுசெஞ் சடையும் பிறைதவழ் மொழுப்பும் பெரியதங் கருணையும் காட்டி
அன்னைதேன் கலந்(து)இன் அமு(து)உகந்(து) அளித்தாங்(கு) அருள்புரி பரமர்தம் கோயில்
புன்னைதேன் சொரியும் பொழிலகம் குடைந்து பொறிவரி வண்டினம் பாடும்
தென்னதேன் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
மேல்
10.
உம்பர்நா(டு) இம்பர் விளங்கியாங்(கு) எங்கும் ஒளிவளர் திருமணிச் சுடர்கான்(று)
எம்பிரான் நடஞ்செய் சூழல்அங் கெல்லாம் இருட் பிழம்(பு) அறஎறி கோயில்
வம்புலாம் கோயில் கோபுரம் கூடம் வளர்நிலை மாடமா ளிகைகள்
செம்பொனால் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
மேல்
11.
இருந்திரைத் தரளப் பரவைசூழ் அகலத்(து) எண்ணிலங் கண்ணில்புன் மாக்கள்
திருந்துயிர்ப் பருவத்(து) அறிவுறு கருவூர்த் துறைவளர் தீந்தமிழ் மாலை
பொருந்தருங் கருணைப் பரமர்தம் கோயில் பொழிலகங் குடைந்துவண்(டு) உறங்கச்
செருந்திநின்(று) அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே.
மேல்
---திருச்சிற்றம்பலம்---
பதிக எண்: 9 திருக்களந்தை ஆதித்தேச்சரம்
பண் : கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
1.
கலைகள்தம் பொருளும் அறிவுமாய் என்னைக் கற்பினிற் பெற்றெடுத்(து) எனக்கே
முலைகள்தந்(து) அருளும் தாயினும் நல்ல முக்கணான் உறைவிடம் போலும்
மலைகுடைந் தனைய நெடுநிலை மாட மருங்கெலாம் மறையவர் முறையோத்(து)
அலைகடல் முழங்கும் அந்தணீர்க் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
மேல்
2.
சந்தன களபம் துதைந்தநன் மேனித் தவளவெண் பொடிமுழு தாடும்
செந்தழல் உருவில் பொலிந்துநோக் குடைய திருநுதல் அவர்க்கிடம் போலும்
இந்தன விலங்கல் எறிபுனந் தீப்பட்(டு) எரிவதொத்(து) எழுநிலை மாடம்
அந்தணர் அழலோம்(பு) அலைபுனற் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
மேல்
3.
கரியரே இடந்தான் செய்யரே ஒருபால் கழுத்திலோர் தனிவடஞ் சேர்த்தி
முரிவரே முனிவர் தம்மொ(டு)ஆல் நிழற்கீழ் முறைதெரிந்(து) ஓருடம் பினராம்
இருவரே முக்கண் நாற்பெருந் தடந்தோள் இறைவரே மறைகளும் தேட
அரியரே யாகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
மேல்
4.
பழையராம் தொண்டர்க்(கு) எளியரே மிண்டர்க்(கு) அரியரே பாவியேன் செய்யும்
பிழையெலாம் பொறுத்தென் பிணிபொறுந் தருளாப் பிச்சரே நச்சரா மிளிரும்
குழையராய் வந்தெந் குடிமுழு தாளும் குழகரே ஒழுகுநீர்க் கங்கை
அழகரே யாகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
மேல்
5.
பவளமே மகுடம் பவளமே திருவாய் பவளமே திருவுடம்(பு) அதனில்
தவளமே களபம் தவளமே புரிநூல் தவளமே முறுவல்ஆ டரவம்
துவளுமே கலையும் துகிலுமே ஒருபால் துடியிடை இடமருங்(கு) ஒருத்தி
அவளுமே ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
மேல்
6.
நீலமே கண்டம் பவளமே திருவாய் நித்திலம் கிரைத்திலங் கினவே
போலுமே முறுவல் நிறையஆ னந்தம் பொழியுமே திருமுகம் ஒருவர்
கோலமே அச்சோ அழகிதே என்று குழைவரே கண்டவர் உண்டது
ஆலமே ஆகில் அவரிடங் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே !
மேல்
7.
திக்கடா நினைந்து நெஞ்சிடிந் துருகும் திறத்தவர் புறத்திருந்(து) அலச
மைக்கடா அனைய என்னையாள் விரும்பி மற்றொரு பிறவியிற் பிறந்து
பொய்க்கடா வண்ணம் காத்தெனக்(கு) அருளே புரியவம் வல்லரே எல்லே
அக்கடா ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
மேல்
8.
மெய்யரே மெய்யர்க்கு இடுதிரு வான விளக்கரே எழுதுகோல் வளையாண்
மையரே வையம் பலிதிரிந்(து) உறையும் மயானரே உளங்கலந் திருந்தும்
யய்யரே பொய்யர்க்(கு) அடுத்தவான் பளிங்கின் பொருள்வழி இருள்கிழித் தெழுந்த
ஐயரே யாகில் அவரிடங் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
மேல்
9.
குமுதமே திருவாய் குவளையே களமும் குழையதே இருசெவி ஒருபால்
விமலமே கலையும் உடையரே சடைமேல் மிளிருமே பொறிவரி நாகம்
கமலமே வதனம் கமலமே நயனம் கனகமே திருவடி நிலைநீர்
அமலமே ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
மேல்
10.
நீரணங்(கு) அகம்பு கழனிசூழ் களந்தை நிறைபுகழ் ஆதித்தேச் சரத்து
நாரணன் பரவும் திருவடி நிலைமேல் நலமலி கலைபயில் கருவூர்
ஆரணம் மொழிந்த பவளவாய் கரந்த அமுதம்ஊ றியதமிழ் மாலை
ஏரணங்(கு) இருநான்(கு) இரண்டிவை வல்லோர் இருள்கிழிந்(து) எழுந்தசிந் தையரே.
---திருச்சிற்றம்பலம்---
பதிக எண்: 10.திருக்கீழ்க் கோட்டுர் மணியம்பலம்
பண் : கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
1.
தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்(பு) அலம்பச் சடைவிரித்(து) அலையெறி கங்கைத்
தெளிரொளி மணிநீர்த் திவலைமுத்(து) அரும்பித் திருமுகம் மலர்ந்துசொட்(டு) அட்டக்
கிளரொளி மணிவண்(டு) அறைபொழிற் பழனம் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டுர்
வளரொளி மணியம் பலத்துள்நின்றாடும் மைந்தன்என் மனங்கலந் தானே.
மேல்
2.
துண்டவெண் பிறையும் படர்சடை மொழுப்பும் கழியமும் சூலமும் நீல
கண்டமும் குழையும் பவளவாய் இதழும் கண்ணுதல் திலகமும் காட்டிக்
கெண்டையும் கயலும் உகளுநீர்ப் பழனம் கெழுகவும் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வண்டறை மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தன்என் மனங்கலந் தானே.
மேல்
3.
திருநுதல் விழியும் பவளவாய் இதழும் திலகமும் உடையவன் சடைமேல்
புரிதரு மலரின் தாதுநின்(று) ஊதப் போய்வருந் தும்பிகாள் ! இங்கே
கிரிதவழ் முகலின் கீழ்த்தவழ் மாடம் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வருதிறல் மணியம் பலவளைக் கண்(டு)என் மனத்தையும் கொண்டுபோ துமினே.
மேல்
4.
தெள்ளுநீ றவன்நீ(று) என்னுடல் விரும்பும் செவியவன் அறிவுநூல் கேட்கும்
மெள்ளவே அவன்பேர் விளம்புவாய் கண்கள் விமானமேநோக்கி வெவ் வுயிர்க்கும்
கிள்ளைபூம் பொதும்பிற் கொஞ்சிமாம் பொழிற்கே கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வள்ளலே மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தனே !என்னும்என் மனனே.
மேல்
5.
தோழி !யாம்செய்த தொழில்என்? எம் பெருமான் துணைமலர்ச் சேவடி காண்பான்
ஊழிதோ றூழி உணர்ந்துளங் கசிந்து நெக்குநைந்(து) உளங்கரைந்(து) உருகும்
கேழலும் புள்ளும் ஆகிநின்றி ருவர் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வாழிய மணியம் பலவனைக் காண்பான் மயங்கவும் மாலொழி யோமே.
மேல்
6.
என்செய்கோம் தோழி ! தோழிநீ துணையாய் இரவுபோம் பகல்வரு மாகில்
அஞ்சலோ என்னான் ஆழியும் திரையும் அலமரு மாறுகண்(டு) அயர்வன்
கிஞ்சுக மணிவாய் அரிவையர் தெருவில் கெழுகவும் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மஞ்சணி மணியம் பலவஓ என்று மயங்குவன் மாலையம் பொழுதே.
மேல்
7.
தழைதவழ் மொழுப்பும் தவளநீற்(று) ஒளியும் சங்கமும் சகடையின் முழக்கும்
குழைதவழ் செவியும் குளிர்சடைத் தெண்டும் குண்டையும் குழாங்கொடு தோன்றும்
கிழைதவழ் கனகம் பொழியநீர்ப் பழனம் கெழுகவும் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மழைதவழ் மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தர்தம் வாழ்வுபோன் றனவே.
மேல்
8.
தன்னக மழலைச் சிலம்பொடு சதங்கை தமருகம் திருவடி திருநீறு
இன்னகை மழலை கங்கைகோங்(கு) இதழி இளம்பிறை குழைவளர் இளமான்
கின்னரம் முழவம் மழலையாழ் வீணை கெழுகவும் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மன்னவன் மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தன்என் மனத்துள்வைத் தனனே.
மேல்
9.
யாதுநீ நினைவ(து)? எவரையாம் உடையது? எவர்களும் யாவையும் தானாய்ப்
பாதுகை மழலைச் சிலம்பொடு புகுந்தென் பனிமலர்க் கண்ணுள்நின் றகலான்
கேதகை நிழலைக் குருகென மருவிக் கெண்டைகள் வெருவுகீழ்க் கோட்டூர்
மாதவன் மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தன்என் மனம்புகுந் தனனே.
மேல்
10.
அந்திபோல் உருவும் அந்தியிற் பிறைசேர் அழகிய சடையும்வெண் ணீறும்
சிந்தையால் நினையிற் சிந்தையும் காணேன்; செய்வதென்? தெளிபுனல் அலங்கல்
கெந்தியா வுகளும் கொண்டைபுண் டரீகம் கிழிக்கும்தண் பணைசெய்கீழ்க் கோட்டூர்
வந்தநாள் மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தனே அறியும்என் மனமே.
மேல்
11.
கித்திநின் றாடும் அரிவையர் தெருவில் கெழுகவும் பலைசெய்க்கீழ்க் கோட்டூர்
மத்தனை மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தனை ஆரணம் பிதற்றும்
பித்தனேன் மொழிந்த மணிநெடு மாலை பெரியவர்க்(கு) அகலிரு விசும்பில்
முத்தியாம் என்றே உலகர்ஏத்து வரேல் முகமலர்ந்(து) எதிர்கொளும் திருவே.
மேல்
---திருச்சிற்றம்பலம்---
பதிக எண்: 11.திருமுகத் தலை
பண் : கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
1.
புவனநா யகனே ! அகவுயிர்க்(கு) அமுதே பூரணா ! ஆரணம் பொழியும்
பவளவாய் மணியே ! பணிசெய்வார்க்(கு) இரங்கும் பசுபதீ ! பன்னகா பரணா !
அவனிஞா யிறுபோன்(று) அருள்புரிந்(து) அடியேன் அகத்திலும் முகத்தலை மூதூர்த்
தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய் தனியனேன் தனிமைநீங் குதற்கே.
மேல்
2.
புழுங்குதீ வினையேன் விடைகெடப் புகுந்து புணர்பொருள் உணர்வுநூல் வகையால்
வழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண் வளரொளி மணிநெடுங் குன்றே
முழங்குதீம் புனல்பாய்ந்(து) இளவரால் உகளும் முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்
விழுங்குதீம் கனியாய் இனியஆ னந்த வெள்ளமாய் உள்ளமா யினையே.
மேல்
3.
கன்னெகா உள்ளக் கள்வனேன் நின்கண் கசிவிலேன் கண்ணில்நீர் சொரியேன்
முன்னகா ஒழியேன் ஆயினும் செழுநீர் முகத்தலை அகத்தமர்ந்(து) உறையும்
பன்னகா பரணா பவளவாய் மணியே ! பாவியேன் ஆவியுள் புகுந்த(து)
என்னகா ரணம்? நீ ஏழைநாய் அடியேற்கு எளிமையோ பெருமையா வதுவே.
மேல்
4.
கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழுநீர்க் கிடையனா ருடையஎன் நெஞ்சில்
பாடிலா மணியே மணியுமிழ்ந்(து) ஒளிரும் பரமனே ! பன்னகா பரணா !
மேடெலாம் செந்நெல் பசுங்கதிர் விளைந்து மிகத்திகழ் முகத்தலை விளைந்து
நீடினாய் எனினும் உட்புகுந்(து) அடியேன் நெஞ்செலாம் நிறைந்துநின் றாயே !
மேல்
5.
அக்கனா அனைய செல்வமே சிந்தித்(து) ஐவரோ(டு) என்னொடும் விளைந்த
இக்கலாம் முழுதும் ஒழியவந்(து) உள்புக்(கு) என்னைஆள் ஆண்டநாய கனே !
முக்கண்நா யகனே முழுதுல(கு) இறைஞ்ச முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்
பக்கல்ஆ னந்தம் இடையறா வண்ணம் பண்ணினாய் பவளவாய் மொழிந்தே.
மேல்
6.
புனல்பட உருகி மண்டழல் வெதும்பிப் பூம்புனல் பொதிந்துயிர் அளிக்கும்
வினைபடு நிறைபோல் நிறைந்தவே தகத்தென் மனம்நெக மகிழ்ந்தபே ரொளியே
முனைபடு மதில்மூன்(று) எரித்தநா யகனே ! முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்
வினைபடும் உடல்நீ புகுந்துநின் றமையால் விழுமிய விமானமா யினதே.
மேல்
7.
விரியநீர் ஆலக் கருமையும் சாந்தின் வெண்மையும் செந்நிறத் தொளியும்
கரியும் நீறாடும் கனலும் ஒத் தொளிரும் கழுத்திலோர் தனிவடங் கட்டி
முரியுமா றெல்லாம் முரிந்தழ கியையாய் முகத்தலை அகத்தமர்ந் தாயைப்
பிரியுமா றுளதே பேய்களாம் செய்த பிழைபொறுத்(து) ஆண்டபே ரொளியே.
மேல்
8.
என்னையுன் பாத பங்கயம் பணிவித்(து) என்பெலாம் உருகநீ எளிவந்(து)
உன்னைஎன் பால்வைத்(து) எங்கும்எஞ் ஞான்றும் ஒழிவற நிறைந்தஒண் சுடரே !
முன்னைஎன் பாசம் முழுவதும் அகல முகத்தலை அகத்தமர்ந்(து) எனக்கே
கன்னலும் பாலும் தேனும்ஆ ரமுதும் கனியுமாய் இனிமையாய் இனையே.
மேல்
9.
அம்பரா அனலா; அனிலமே புவிநீ அம்புவே இந்துவே இரவி
உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய் ஒழிவற நிறைந்தஒண் சுடரே
மொய்ம்பராய் நலஞ்சொல் மூதறி வாளர் முகத்தலை அகத்தமர்ந்(து) எனக்கே
எம்பிரானாகி ஆண்டநீ மீண்டே எந்தையும் தாயுமா யினையே.
மேல்
10.
மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய் முகத்தவை அகத்தமர்ந்(து) இனிய
பாலுமாய், அமுதாப் பன்னகா பரணன் பனிமலர்த் திருவடி இணைமேல்
ஆலயம் பாகின் அனையசொற் கருவூர் அமுதுறழ் தீந்தமிழ் மாலை
சீலமாப் பாடும் அடியவர் எல்லாம் சிவபதம் குறுகிநின் றாரே.
மேல்
---திருச்சிற்றம்பலம்---
பதிக எண்: 12. திரைலோக்கிய சுந்தரம்
பண் : கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
1.
நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாந் தன்மையன்றே
ஆரோங்கி முகமலர்ந்தாங்(கு) அருவினையேன் திறம்மறந்தின்(று)
ஊரோங்கும் பழிபாரா(து) உன்பாலே விழுந்தொழிந்தேன்
சீரோங்கும் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே !
மேல்
2.
நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவே
ஐயா !நீ உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை
கையாரத் தொழுதுஅருவி கண்ணாரச் சொரிந்தாலும்
செய்யாயோ? அருள்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே !
மேல்
3.
அம்பளிங்கு பகலோன்போல் அடைப்பற்றாய் இவள்மனத்தில்
முன்பளிந்த காதலும்நின் முகத்தோன்ற விளங்கிற்றால்
வம்பளிந்த கனியே !என் மருந்தே ! நல் வளர்முக்கண்
செம்பளிங்கே ! பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே !
மேல்
4.
மைஞ்ஞின்ற குழலாள்தன் மனந்தரவும் வளைதாராது
இஞ்ஞின்ற கோவணவன் இவன்செய்தது யார்செய்தார்?
மெய்ஞ்ஞின்ற தமர்க்கெல்லாம் மெய்ஞ்ஞிற்கும் பண்பினறு
செய்ஞ்ஞன்றி யிலன்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
மேல்
5.
நீவாரா(து) ஒழிந்தாலும் நின்பாலே விழுந்தேழை
கோவாத மணிமுத்தும் குவளைமலர் சொரிந்தனவால்;
ஆவா !என்று அருள் புரியாய் அமரர்கணம் தொழுதேத்தும்
தேவா !தென் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
மேல்
6.
முழுவதும்நீ ஆயினும் இம் மொய்குழலாள் மெய்ம்முழுதும்
பழுதெனவே நினைந்தோராள் பயில்வதும்நின் ஒரு நாமம்
அழுவதும்நின் திறம்நினைந்தே அதுவன்றோ பெறும்பேறு
செழுமதில்சூழ் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
மேல்
7.
தன்சோதி எழுமேனித் தபனியப்பூஞ் சாய்க்காட்டாய்
உன்சோதி எழில்காண்பான் ஒலிடவும் உருக்காட்டாய்
துஞ்சாகண் இவளுடைய துயர்தீரு மாறுரையாய்
செஞ்சாலி வயற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
மேல்
8.
அரும்பேதைக்(கு) அருள்புரியா(து) ஒழிந்தாய்நின் அவிர்சடைமேல்
நிரம்பாத பிறைதூவும் நெருப்பொடுநின் கையிலியாழ்
நரம்பாலும் உயிர்ஈர்ந்தாய் நளிர்புரிசைக் குளிர்வனம்பா
திரம்போது சொரிகோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
மேல்
9.
ஆறாத பேரன்பின் அவருள்ளம் குடிகொண்டு
வேறாகப் பலர்சூழ வீற்றிருத்தி அதுகொண்டு
வீறாடி இவள்உன்னைப் பொதுநீப்பான் விரைந்தின்னம்
தேறாள்தென் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
மேல்
10.
சரிந்ததுகில் தளர்ந்தஇடை அவிழ்ந்தகுழல் இளந்தெரிவை
இருந்தபரி(சு) ஒருநாள்கண்(டு) இரங்காஎம் பெருமானே !
முரிந்தநடை மடந்தையர் தம் முழங்கொலியும் வழங்கொலியும்
திருந்துவிழ(வு) அணிகோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
மேல்
11.
ஆரணத்தேன் பருகிஅருந் தமிழ்மாலை கமழவரும்
காரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ்மாலை
பூரணத்தால் ஈரைந்தும் போற்றிசைப்பார் காந்தாரம்
சீரணைத்த பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
மேல்
---திருச்சிற்றம்பலம்---
பதிக எண்: 13 கங்கைகொண்ட சோளேச்சரம்
பண் : கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
1.
அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட அங்ஙனே பெரியநீ சிறிய
என்னையாள் விரும்பி என்மனம் புகுந்த எளிமையை என்றும்நான் மறக்கேன்
முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா முக்கணா நாற்பெருந் தடந்தோள்
கன்னலே தேனே அமுதமே கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே.
மேல்
2.
உண்ணெகிழ்ந்(து) உடலம் நெக்குமுக் கண்ணா ! ஓலமென்(று) ஓலமிட்(டு) ஒருநாள்
மண்ணினின்று அலறேன் வழிமொழி மாலை மழலையஞ் சிலம்படி முடிமேல்
பண்ணிநின்(று) உருகேன் பணிசெயேன் எனினும் பாவியேன் ஆவியுள் புகுந்தென்
கண்ணினின்று அகலான் என்கொலோ கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே.
மேல்
3.
அற்புதத்தெய்வம் இதனின்மற் றுண்டே அன்பொடு தன்னைஅஞ் செழுத்தின்
சொற்பதத் துள்வைத்(து) உள்ளம்அள் ளூறும் தொண்டருக்(கு) எண்டிசைக் கனகம்
பற்பதக் குவையும் பைம்பொன்மா ளிகையும் பவளவா யவர்பணை முலையும்
கற்பகப் பொழிலும் முழுதுமாம் கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே.
மேல்
4.
ஐயபொட் டிட்ட அழகுவாள் நுதலும் அழகிய விழியும்வெண்ணீறும்
சைவம்விட் டிட்ட சடைகளும் சடைமேல் தரங்கமும் சதங்கையும் சிலம்பும்
மொய்கொள்எண் திக்கும் கண்டநின் தொண்டர் முகமலர்ந்து இருகணீர் அரும்பக்
கைகள்மொட் டிக்கும் என்கொலோ கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே !
மேல்
5.
கருதிவா னவனாம் திருநெடு மாலாம் சுந்தர விசும்பின்இந் திரனாம்
பருதிவா னவனாம் படர்சடை முக்கண் பகவனாம் அகஉயிர்க்கு அமுதாம்
எருதுவா கனனாம் எயில்கள் மூன்(று) எரித்த ஏறுசே வகனுமாம் பின்னும்
கருதுவார் கருதும் உருவமாம் கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே.
மேல்
6.
அண்டமோர் அணுவாம் பெருமைகொண்(டு) அணுவோர் அண்டமாம் சிறுமைகொண்(டு) அடியேன்
உண்டவூண் உனக்காம் வகைஎன துள்ளம் உள்கலந்(து) ஏழுபரஞ் சோதி
கொண்டநாண் பாம்பாம் பெருவரை வில்லில் குறுகலர் புரங்கள் மூன்(று) எரித்த
கண்டனே ! நீல கண்டனே ! கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே !
மேல்
7.
மோதலைப் பட்ட கடல்வயி(று) உதித்த முழுமணித் திரள்அமு(து) ஆங்கே
தாய்தலைப் பட்டங்(கு) உருகிஒன் றாய தன்மையில் என்னைமுன் ஈன்ற
நீதலைப் பட்டால் யானும் அவ்வகையே நிசிசரர் இருவரோடு ஒருவர்
காதலிற் பட்ட கருணையாய் கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே.
மேல்
8.
தத்தையங் கனையார் தங்கள்மேல் வைத்த தயாவைநூ றாயிரங் கூறிட்(டு)
அத்திலங்(கு) ஒருகூ(று) உன்கண்வைத் தவருக்(கு) அமலரு(கு) அளிக்கும்நின் பெருமை
பித்தனென்(று) ஒருகால் பேசுவ ரேனும் பிழைத்தவை பொறுத்தருள் செய்யும்
கைத்தலம் அடியேன் சென்னிவைத்த கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே.
மேல்
9.
பண்ணிய தழல்காய் பாலளா நீர்போல் பாவமுன் பறைந்துபா லனைய
புண்ணியம் பின்சென்(று) அறிவினுக்(கு) அறியப் புகுந்ததோர் யோகினில் பொலிந்து
நுண்ணியை எனினும் நம்பநின் பெருமை நுன்னிடை ஒடுங்கநீ வந்தென்
கண்ணினுள் மணியிற் கலந்தனை கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே.
மேல்
10.
அங்கைகொண்(டு) அமரர் மலர்மழை பொழிய அடிச்சிலம்பு அலம்பவந்(து) ஒருநாள்
உங்கைகொண் டடியேன் சென்னிவைத் தென்னை உய்யக்கொண் டருளினை மருங்கில்
கொங்கைகொண்(டு) அனுங்கும் கொடியிடை காணில் கொடியள்என்(று) அவிர்சடை முடிமேல்
கங்கைகொண் டிருந்த கடவுளே ! கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே.
மேல்
11.
மங்கையோ டிருந்த யோகுசெய் வானை வளர்இளந் திங்களை முடிமேல்
கங்கையோ(டு) அணியும் கடவுளைக் கங்கை கொண்டசோ ளேச்சரத் தானை
அங்கையோ டேந்திப் பலிதிரி கருவூர் அறைந்தசொல் மாலையால் ஆழிச்
செங்கையோ(டு) உலகில் அரசுவீற் றிருந்து திளைப்பதும் சிவனருட் கடலே.
மேல்
---திருச்சிற்றம்பலம்---
பதிக எண்: 14. திருப்பூவணம்
பண் : கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
1.
திருவருள் புரிந்தாள் ஆண்டுகொண் டிங்ஙன் சிறியனுக்(கு) இனியது காட்டிப்
பெரிதருள் புரிந்தா னந்தமே தரும்¢ன் பெருமையிற் பெரியதொன் றுளதே
மருதர சிருங்கோங்கு அகில்மரம் சாடி வரைவளங் கவர்ந்திழி வைகைப்
பொருதிரை மருங்கோங்(கு) ஆவண வீதிப் பூவணங் கோயில்கொண் டாயே.
மேல்
2.
பாம்பணைத் துயின்றோன் அயன்முதல் தேவர் பன்னெடுங் காலம்நிற் காண்பான்
ஏம்பலித் திருக்க என்னுளம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன்
தேம்புனற் பொய்கை வாளைவாய் மடுப்பத் தெளிதரு தேறல்பாய்ந் தொழுகும்
பூம்பணைச் சோலை ஆவண வீதிப் பூவணங் கோயில்கொண் டாயே.
மேல்
3.
கரைகடல் ஒலியில் தமருகத்(து) அரையில் கையினிற் கட்டிய கயிற்றால்
இருதலை ஒருநா இயங்கவந்(து) ஒருநாள் இருந்திடாய் எங்கள்கண் முகப்பே;
விரிதிகழ் விழவின் பின்செல்வோர் பாடல் வேட்கையின் வீழ்ந்தபோது அவிழ்ந்த
புரிசடை துகுக்கும் ஆவண வீதிப் பூவணங் கோயில்கொண் டாயே.
மேல்
4.
கண்ணியல் மணியின் குழல்புக்(கு) அங்கே கலந்துபுக்(கு) ஒடுங்கினேற்(கு) அங்ஙன்
நுண்ணியை எனினும் நம்பநின் பெருமை நுண்ணிமை இறந்தமை அறிவன்
மண்ணியன் மரபில் தங்கிருள் மொழுப்பின் வண்டினம் பாடநின் றாடும்
புண்ணிய மகளிர் ஆவண வீதிப்பூவணங் கோயில்கொண் டாயே.
மேல்
5.
கடுவினைப் பாசக் கடல்கடந்து ஐவர் கள்ளரை மெள்ளவே துரந்துன்
அடியினை இரண்டும் அடையுமா(று) அடைந்தேன் அருள் செய்வாய் அருள்செயா தொழிவாய்
நெடுநிலை மாடத்(து) இரவிருள் கிழிக்க நிலைவிளக்(கு) அலகில்சா லேகம்
புடைகிடந்(து) இலங்கும் ஆவண வீதிப் பூவணங் கோயில் கொண் டாயே.
மேல்
6.
செம்மனக் கிழவோர் அன்புதா என்றுன் சேவடி பார்த்திருந்(து) அலச
எம்மனம் குடிகொண் டிருப்பதற்(கு) யானார் என்னுடை அடிமைதான் யாதே?
அம்மனம் குளிர்நாட் பலிக்கெழுந் தருள அரிவையர் அவிழ்குழல் கரும்பு
பொம்மென முரலும் ஆவண வீதிப் பூவணங் கோயில்கொண் டாயே.
மேல்
7.
சொன்னவில் முறைநான்(கு) ஆரணம் உணராச் சூழல்புக்(கு) ஒளித்தநீ இன்று
கன்னவில் மனத்தென் கண்வலைப் படும்இக் கருணையிற் பெரியதொன் றுளதே
மின்னவில் கனக மாளிகை வாய்தல் விளங்கிளம் பிறைதவழ் மாடம்
பொன்னவில் புரிசை ஆவண வீதிப் பூவணங் கோயில்கொண் டாயே.
மேல்
8.
பூவணங் கோயில் கொண்டெனை ஆண்ட புனிதனை வனிதைபா களைவெண்
கோவணங் கொண்டு வெண்டலை ஏந்தும் குழகளை அழகெலாம் நிறைந்த
தீவணன் தன்னைச் செழுமறை தெரியும் திகழ்தரு வூரனேன் உரைத்த
பாவணத் தமிழ்கள் பத்தும் வல் லார்கள் பரமனது உருவமா குவரே.
பதிக எண்: 15 திருச்சாட்டியக்குடி
பண் : கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
1.
பெரியவா கருணை இளநிலா எறிக்கும் பிறைதவழ் சடைமொழுப்பு அவிழ்ந்து
சரியுமா கழியங் குழைமிளிர்ந்து இருபால் தாழ்ந்தவா காதுகள் கண்டம்
கரியவா தாமும் செய்யவாய் முறுவல் காட்டுமா சாட்டியக் குடியார்
இருகைகூம் பினகண்(டு) அலர்ந்தவா முகம்ஏழ் இருக்கையில் இருந்தஈ சனுக்கே.
மேல்
2.
பாந்தள்பூ ணாரம் பரிகலம் கபாலம் பட்டவர்த் தனம்எரு(து) அன்பர்
வார்ந்தகண் அருவி மஞ்சன சாலை மலைமகள் மகிழ்பெரும் தேவி
சாந்தமும் திருநீ(று) அருமறை கீதம் சடைமுடி சாட்டியக் குடியார்
ஏந்தெழில் இதயம் கோயில்மாளிகைஏழ் இருக்கையுள் இருந்தஈ சனுக்கே.
மேல்
3.
தொழுதுபின் செல்வ(து) அயன்முதற் கூட்டம் தொடர்வன மறைகள்நான் கெனினும்
கழுதுறு கரிகா(டு) உறைவிடம் போர்வை கவந்திகை கரியுரி திரிந்தூண்
தழலுமிழ் அரவம் கோவணம் பளிங்கு செபவடம் சாட்டியக் குடியார்
இழுதுநெய் சொரிந்தோம்(பு) அழலொளி விளக்கேழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே.
மேல்
4.
பதிகநான் மறைதும் புருவும்நா ரதரும் பரிவொடு பாடுகாந் தர்ப்பர்
கதியெலாம் அரங்கம் பிணையல் மூவுலகில் கடியிருள் திருநடம் புரியும்
சதியிலார் கதியில் ஒலிசெயும் கையில் தமருகம் சாட்டியக் குடியார்
இதயமாம் கமலம் கமலவர்த் தனைஏழ் இருக்கையில் இருந்தஈ சனுக்கே.
மேல்
5.
திருமகன் முருகன் தேவியேல் உமையாள் திருமகள் மருமகன் தாயாம்
மருமகன் மதனன் மாமனேல் இமவான் மலையுடை அரையர்தம் பாவை
தருமலி வளனாம் சிவபுரன் தோழன் தனபதி சாட்டியக் குடியார்
இருமுகம் கழல்முன்று ஏழுகைத் தலம்ஏழ் இருக்கையில் இருந்தஈ சனுக்கே.
மேல்
6.
அனலமே ! புனலே ! அனிலமே ! புவனி அம்பரா ! அம்பரத்(து) அளிக்கும்
கனகமே ! வெள்ளிக் குன்றமே என்றன் களைகணே, களைகண்மற் றில்லாத்
தனியனேன் உள்ளம் கோயில்கொண் டருளும் சைவனே சாட்டியக் குடியார்க்(கு)
இனியதீங் கனியாய் ஒழிவற நிறைந்துஏழ் இருக்கையில் இருந்தவா(று) இயல்பே.
மேல்
7.
செம்பொனே ! பவளக் குன்றமே ! நின்ற திசைமுகன் மால்முதற் கூட்டத்து
அன்பரா னவர்கள் பருகும்ஆ ரமுதே ! அத்தனே பித்தனே னுடைய
சம்புவே அணுவே தாணுவே சிவனே ! சங்கரா சாட்டியக் குடியார்க்(கு)
இன்பனே ! எங்கும் ஒழிவற நிறைந்தேழ் இருக்கையில் இருந்தவா(று) இயம்பே.
மேல்
8.
செங்கணா போற்றி ! திசைமுகா போற்றி ! சிவபுர நகருள்வீற் றிருந்த
அங்கணா போற்றி ! அமரனே போற்றி ! அமரர்கள் தலைவனே போற்றி !
தங்கள்நான் மறைநூல் சகலமும் கற்றோர் சாட்டியக் குடியிருந் தருளும்
எங்கள்நா யகனே போற்றி ! ஏழ் இருக்கை இறைவனே ! போற்றியே போற்றி !
மேல்
9.
சித்தனே ! அருளாய் ! செங்கணா ! அருளாய் ! சிவபுர நகருள்வீற் றிருந்த
அத்தனே ! அருளாய் ! அமரனே ! அருளாய் ! அமரர்கள் அதிபனே ! அருளாய்
தத்துநீர்ப் படுகர்த் தண்டலைச் சூழல் சாட்டியக் குடியுள்ஏழ் இருக்கை
முத்தனே ! அருளாய் ! முதல்வனே ! அருளாய் ! முன்னவா துயர்கெடுத்(து) எனக்கே.
மேல்
10.
தாட்டரும் பழனப் பைம்பொழிற் படுகர்த் தண்டலைச் சாட்டியக் குடியார்
ஈட்டிய பொருளாய் இருக்கும்ஏழ் இருக்கை இருந்தவன் திருவடி மலர்மேல்
காட்டிய பொருட்கலை பயில்கரு ஊரன் கழறுசொல் மாலைஈர் ஐந்தும்
மாட்டிய சிந்தை மைந்தருக்(கு) அன்றே வளரொளி விளங்குவா னுலகே.
மேல்
---திருச்சிற்றம்பலம்---
பதிக எண்: 16 தஞ்சை இராசராசேச்சரம்
பண் : கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
1.
உலகெலாம் தொழவந்(து) எழுகதிர்ப் பருதி ஒன்றுநூ றாயிர கோடி
அலகெலாம் பொதிந்த திருவுடம்(பு) அச்சோ ! அங்ஙனே அழகிதோ, அரணம்
பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம் பருவரை ஞாங்கர்வெண் திங்கள்
இலைகுலாம் பதணத்(து) இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத்(து) இவர்க்கே.
மேல்
2.
நெற்றியிற் கண்என் கண்ணில்நின் றகலா நெஞ்சினில் அஞ்சிலம்(பு) அலைக்கும்
பொற்றிரு வடிஎன் குடிமுழு தாளப் புகுந்தன போந்தன இல்லை
மற்றெனக்(கு) உறவேன் மறிதிரை வடவாற் றிடுபுனல் மதிகில்வாழ் முதலை
ஏற்றிநீர்க் கிடங்கில் இஞ்சிசூழு தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
மேல்
3.
சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய வெண்ணிலா விரிதரு தரளக்
குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும் குறிப்பெனோ கோங்கிணர் அனைய
குடைகெழு நிருபர் முடியடு முடிதேய்ந்து உக்கசெஞ் சுடர்ப்படு குவையோங்(கு)
இடைகெழு மாடத்து இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
மேல்
4.
வாழியம் போதத்(து) அருகுபாய் விடையம் வரிசையின் விளக்கலின் அடுத்த
சூழலம் பளிங்கின் பாசலர் ஆதிச் சுடர்விடு மண்டலம் பொலியக்
காழகில் கமழும் மாளிகை மகளீர் கங்குல்வாய் அங்குலி கெழும
யாழொலி சிலம்பும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
மேல்
5.
எவரும்மா மறைகள் எவையும் வானவர்கள் ஈட்டமும் தாட்டிருக் கமலத்
தவரும்மா லவனும் அறிவரும் பெருமை அடலழல் உமிழ்தழற் பிழம்பர்
உவரிமா கடலின் ஒலிசெய்மா மறுகில் உறுகளிற்(று) அரசின(து) ஈட்டம்
இவருமால் வரைசெய் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
மேல்
6.
அருளுமா(று) அருளி ஆளுமா(று) ஆள அடிகள்தம் அழகிய விழியும்
குருளும்வார் காதும் காட்டியான் பெற்ற குயிலினை மயல்செய்வ(து) அழகோ
தரளவான் குன்றில் தண்நிலா ஒளியும் தருகுவால் பெருகுவான் தெருவில்
இருளெலாம் கிழியும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
மேல்
7.
தனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின் தளிர்இறப்(பு) இலைஉதிர்(வு) என்றால்
நினைப்பருந் தம்பால்சேறலின் றேனும் நெஞ்சிடிந்(து) உருகுவ(து) என்னே
கனைப்பெருங் கலங்கல் பொய்கையங் கழுநீர்ச் சூழல்மா ளிகைசுடர் வீசும்
எனைப்பெரு மணஞ்செய் இஞ்சிசூழு தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
மேல்
8.
பன்நெடுங் காலம் பணிசெய்து பழையோர் தாம்பலர் ஏம்பலித் திருக்க
என்நெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த எளிமையை என்றும் நான் மறக்கேன்
மின்நெடும் புருவத்(து) இளமயில் அனையார் விலங்கல்செய் நாடக சாலை
இன்நடம் பயிலும் இஞ்சுசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
மேல்
9.
மங்குல்சூழ் போதின் ஒழிவற நிறைந்து வஞ்சகர் நெஞ்சகத்(து) ஒளிப்பார்
அங்கழல் சுடராம் அவர்க்கிள வேனல் அலர்கதிர் அனையவா ழியரோ !
பொங்கழில் திருநீறு அழிபொசி வனப்பில் புனல்துளும்(பு) அவிர்சடை மொழுப்பர்
எங்களுக்(கு) இனியர் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
மேல்
10.
தனியர்ஏத் தனைஓ ராயிர வருமாம் தன்மையர் என்வயத் தினராம்
கனியரத் திருதீங் கரும்பர்வெண் புரிநூற் கட்டியர் அட்டஆர் அமிர்தர்
புனிதர்பொற் கழலர்புரி சடா மகுடர் புண்ணியர் பொய்யிலா மெய்யர்க்(கு)
இனியர்எத் தனையும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே.
மேல்
11.
சரளமந் தார சண்பக வகுள சந்தன நந்தன வனத்தின்
இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழு தஞ்சை இராசரா சேச்சரத் திவரை
அருமருந்து அருந்தி அல்லல்தீர் கருவூர் அறைந்தசொல் மாலைஈ ரைந்தின்
பொருள்மருந்(து) உடையோர் சிவபதம் என்னும் பொன்நெடுங் குன்றுடை யோரே.
மேல்
---திருச்சிற்றம்பலம்---
பதிக எண்: 17 திருவிடைமருதூர்
பண் : கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
1.
வெய்யசெஞ் சோதி மண்டலம் பொலிய வீங்கருள் நடுநல்யா மத்தோர்
பையசெம் பாந்தள் பருமணி உமிழ்ந்து பாவியேன் காதல்செய் காதில்
ஐயசெம் பொற்றோட்(டு) அவிர்சடைமொழுப்பின் அழிவழ கியதிரு நீற்று
மைய செங் கண்டத்(து) அண்டவா னவர்கோன் மருவிடம் திருவிடை மருதே.
மேல்
2.
இந்திர லோக முழுவதும் பணிகேட்(டு) இணையடி தொழுதெழத் தாம்போய்
ஐந்தலை நாகம் மேகலை அரையா அகந்தொறும் பலிதிரி அடிகள்
தந்திரி வீணை கீதமும் பாடச் சாதிகின் னரங்கலந்(து) ஒலிப்ப
மந்திர கீதம் தீங்குழல் எங்கும் மருவிடம் திருவிடை மருதே.
மேல்
3.
பனிபடு மதியம் பயில்கொழுந் தன்ன பல்லவம் வல்லியென்(று) இங்ஙன்
வினைபடு கனகம் போலயா வையுமாய் வீங்குல(கு) ஒழிவற நிறைந்து
துனிபடு கலவி மலைமகள் உடனாய்த் தூக்கிருள் நடுநல்யா மத்தென்
மனனிடை அணுகி நுணிகியுள் கலந்தோன் மருவிடம் திருவிடைமருதே.
மேல்
4.
அணியுமிழ் சோதி மணியுனுள் கலந்தாங்கு அடியனேன் உள்கலந்து அடியேன்
பணிமகிழ்ந் தருளும் அரிவைபா கத்தன் படர்சடை விடம்மிடற்(று) அடிகள்
துணியுமிழ் ஆடை அரையிலோர் ஆடை கடர்உமிழ் தரஅதன் அருகே
மணியுமிழ் நாகம் அணியுமிழ்ந்(து) இமைப்ப மருவிடம் திருவிடைமருதே.
மேல்
5.
பந்தமும் பிரிவும் தெரிபொருட் பனுவல் படிவழி சென்று சென்றேறிச்
சிந்தையும் தானும் கலந்ததோர் கலவி தெரியினும் தெரிவுறா வண்ணம்
எந்தையும் தாயும் யானுமென் றிங்ஙன் எண்ணில்பல் லூழிகள் உடனாய்
வந்தணு காது நுணிகியுள் கலந்தோன் மருவிடம் திருவிடைமருதே.
மேல்
6.
எரிதரு கரிகாட்(டு) இடுபிணம் நிணமுண்(டு) ஏப்பமிட்(டு) இலங்ககெயிற்(று) அழல்வாய்த்
துருகழல் நெடும்பேய்க் கணம்எழுந்தாடும் தூங்கிருள் நடுநல்யா மத்தே
அருள்புரி முறுவல் முகில்நிலா எறிப்ப அந்திபோன்(று) ஒளிர்திரு மேனி
வரியர(வு) ஆட ஆடும்எம் பெருமான் மருவிடம் திருவிடைமருதே.
மேல்
7.
எழிலையாழ் செய்கைப் பசுங்கலன் விசும்பின் இன்துளி படநனைந்(து) உருகி
அழலையாம் புருவம் புனலொடும் கிடந்தாங்கு ஆதனேன் மாதரார் கலவித்
தொழிலையாழ் நெஞ்சம் இடர்படா வண்ணம் தூங்கிருள் நடுநல்யா மத்தோர்
மழலையாழ் சிலம்ப வந்தகம் புகுந்தோன் மருவிடம் திருவிடை மருதே.
மேல்
8.
வையவாம் பெற்றம் பெற்றம்ஏ(று) உடையார் மாதவர் காதல்வைத் தென்னை
வெய்யவாம் செந்தீப் பட்டஇட் டிகைபோல் விழுமியோன் முன்புபின்(பு) என்கோ
நொய்யவா றென்ன வந்துள்வீற் றிருந்த நூறுநூ றாயிர கோடி
மையவாங் கண்டத்(து) அண்டவா னவர்கோன் மருவிடம் திருவிடை மருதே.
மேல்
9.
கலங்கலம் பொய்கைப் புனற்றெளி விடத்துக் கலந்தமண் ணிடைக்கிடந் தாங்கு
நலம் கலந்(து) அடியேன் சிந்தையுட் புகுந்த நம்பனே வம்பனே னுடைய
புலங்கலந் தவனே ! என்று நின்(று) உருகிப் புலம்புவார் அலம்புகார் அருவி
மலங்கலங் கண்ணிற் கண்மணி அனையான் மருவிடம் திருவிடைமருதே.
மேல்
10.
ஒருங்கிருங் கண்ணின் எண்ணில்புன் மாக்கள் உறங்கிருள் நடுநல்யா மத்தோர்
கருங்கண்நின்(று) இமைக்கும் செழுஞ்சுடர் விளக்கம் கலந்தெனக் கலந்துணர் கருவூர்
தருங்கரும் பனைய தீந்தமிழ் மாலை தடம்பொழில் மருதயாழ் உதிப்ப
வருங்கருங் கண்டத்து அண்டவா னவர்கோன் மருவிடம் திருவிடைமருதே.
மேல்
---திருச்சிற்றம்பலம்---
04. பூந்துருத்திநம்பி காடநம்பி அருளிய திருவிசைப்பா (183 - 194)
பதிக எண்: 18.திருவாருர்
பண் : பூந்துருத்திநம்பி காடநம்பி அருளிய திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
1.
கைக்குவான் முத்தின் சரிவளை பெய்து கழுத்திலோர் தனிவடங் கட்டி
முக்கண்நா யகராய்ப் பவனிபோந்(து) இங்ஙன் முரிவதோர் முரிவுமை அளவும்
தக்கசீர்க் கங்கை அளவுமன்(று) என்னோ தம்மொருப் பாடுல கதன்மேல்
மிக்கசீர் ஆருர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம்குலா வினரே.
மேல்
2.
பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப் பருகுதோ(று) அமுதம்ஒத் தவர்க்கே
தித்தியா இருக்கும் தேவர்காள் ! இவர்தம் திருவுரு இருந்தவா பாரீர்
சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த தனிமுழு முதலுமாய் அதற்கோர்
வித்துமாய் ஆருர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம்குலா வினரே.
மேல்
---திருச்சிற்றம்பலம்---
பதிக எண்: 19.கோயில் - முத்து வயிரமணி
பண் : பூந்துருத்திநம்பி காடநம்பி அருளிய திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
1.
முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்மேல்
தொத்து மிளிர்வனபோல் தூண்டு விளக்கேய்ப்ப்
எத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில்தில்லை
அத்தனுக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே.
மேல்
2.
கடியார் கணம்புல்லர் கண்ணப்பர் என்றுன்
அடியார் அமருலகம் ஆளநீ ஆளாதே
முடியாமுத் தீவேள்வி முவாயி ரவரொடும்
குடிவாழ்க்கை கொண்டுநீ குலாவிக் கூத் தாடினையே.
மேல்
3.
அல்லியம் பூம்பழனத்(து) ஆமூர்நா வுக்கரசைச்
செல்ல நெறிவகுத்த சேவகனே ! தென்தில்லைக்
கொல்லை விடையேறி கூத்தா(டு) அரங்காகச்
செல்வம் நிறைந்தசிற் றம்பலமே சேர்ந்தனையே.
மேல்
4.
எம்பந்த வல்வினை நோய் தீர்த்திட்(டு) எமையாளும்
சம்பந்தன் காழியர்கோன் தன்னையும் ஆட் கொண்டருளி
அம்பந்து கண்ணாளும் தானும் அணிதில்லைச்
செம்பொன்செய் அம்பலமே சேர்ந்திருக்கை ஆயிற்றே.
மேல்
5.
களையா உடலோடு சேரமான் ஆருரன்
விளையா மதமாறா வெள்ளானை மேல்கொள்ள
முளையா மதிசூடி மூவா யிரவரொடும்
அளையா விளையாடும் அம்பலம்நின் ஆடரங்கே.
மேல்
6.
அகலோக மெல்லாம் அடியவர்கள் தற்சூழப்
புகலோகம் உண்டென்று புகுமிடம்நீ தேடாதே
புவலோக நெறிபடைத்த புண்ணியங்கள் நண்ணியசீர்க்
சிவலோகம் ஆவதுவும் தில்லைச் சிற் றம்பலமே.
மேல்
7.
களகமணி மாடம் சூளிகைசூழ் மாளிகைமேல்
அளகமதி நுதலார் ஆயிழையார் போற்றிசைப்ப
ஒளிகொண்ட மாமணிகள் ஓங்கிருளை ஆங்ககற்றும்
தெளிகொண்ட தில்லைச் சிற் றம்பலமே சேர்ந்தனையே.
மேல்
8.
பாடகமும் நூபுரமும் பல்சிலம்பும் பேர்ந்தொலிப்பச்
சூடகக்கை நல்லார் தொழுதேத்தத் தொல்லுலகில்
நாடகத்தின் கூத்தை நயிற்றுமலர் நாடோறும்
ஆடகத்தால் மேய்ந்தமைந்த அம்பலம்நின் ஆடரங்கே.
மேல்
9.
உருவத்(து) எரியுருவாய் ஊழிதோ றெத்தனையும்
பரவிக் கிடந்தயனும் மாலும் பணிந்தேத்த
இரவிக்கு நேராகி ஏய்ந்திலங்கு மாளிகைசூழ்ந்(து)
அரவிக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே.
மேல்
10.
சேடர் உறைதில்லைச் சிற்றம் பலத்தான்தன்
ஆடல் அதியசத்தை ஆங்கறித்து பூந்துருத்திக்
காடன் தமிழ் மாலை பத்தும் கருத்தறிந்து
பாடும் இவைவல்லார் பற்றுநிலை பற்றுவரே.
மேல்
---திருச்சிற்றம்பலம்---
05. கண்டராதித்தர் அருளிய திருவிசைப்பா (195 - 204)
பதிக எண்: 20.கோயில் - மின்னார் உருவம்
பண் : கண்டராதித்தர் அருளிய திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
1.
மின்னார் உருவம் மேல்விளங்க வெண்கொடி மாளி கைசூழப்
பொன்னார் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும் என்னாத்
தென்னா என்று வண்டு பாடும் தென்தில்லை அம்ப லத்துள்
என்னார் அமுதை எங்கள் கோவை என்றுகொல் எய்துவதே?
மேல்
2.
ஓவா முத்தீ அஞ்சு வேள்வி ஆறங்க நான்மறையோர்
ஆவே படுப்பார் அந்த ணாளர் ஆகுதி வேட்டுயர் வார்
மூவா யிரவர் தங்க ளோடு முன் அரங்(கு) ஏறிநின்ற
கோவே உன்றன் கூத்துக் காணக் கூடுவ தென்று கொலோ.
மேல்
3.
முத்தீ யாளர் நான் மறையர் மூவா யிர வர்நின்னோ(டு)
ஒத்தே வாழும் தன்மை யாளர் ஓதிய நான்மறையைத்
தெத்தே யென்று வண்டு பாடும் தென்தில்லை அம்பலத்துள்
அத்தா உன்றன் ஆடல் காண அணைவதும் என்றுகொலோ?
மேல்
4.
மானைப் புரையும் மடமென் நோக்கி மாமலை யாளோடும்
ஆனைஞ் சாடும் சென்னி மேலோர் அம்புலி சூடும்அரன்
தேனைப் பாலைத் தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துக்
கோனை ஞானக் கொழுந்து தன்னைக் கூடுவது என்றுகொலோ?
மேல்
5.
களிவான் உலகில் கங்கை நங்கை காதலனே ! அருளென்(று)
ஒளிமால் முன்னே வரங்கி டக்க உன்னடியார்க்(கு) அருளும்
தெளிவார் அமுதே ! தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துள்
ஒளிவான் சுடரே ! உன்னை நாயேன் உறுவதும் என்றுகொலோ?
மேல்
6.
பாரோர் முழுதும் வந்தி றைஞ்சப் பதஞ்சலிக்(கு) ஆட்டுகந்தான்
வாரார் முலையாள் மங்கை பங்கன் மாமறையோர் வணங்கச்
சீரான் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்(து) ஆடுகின்ற
காரார் மிடற்றெங் கண்டனாரைக் காண்பதும் என்றுகொலோ?
மேல்
7.
இலையார் கதிர்வேல் இலங்கைவேந்தன் இருபது தோளும்இற
மலைதான் எடுத்த மற்ற வற்கு வாளடு நாள்கொடுத்தான்
சிலையால் புரமூன்(று) எய்த வில்வி செம்பொனின் அம்பலத்துக்
கலையார் மறிபொன் கையி னானைக் காண்பதும் என்றுகொலோ?
மேல்
8.
வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும் ஈழமும் கொண்டதிறல்
செங்கோற் சோழன் கோழி வேந்தன் செம்பியன் பொன்னணிந்த
அங்கோல் வளையார் பாடி யாடும் அணிதில்லை அம்பலத்துள்
எங்கோன் ஈசன் எம்மி றையை என்றுகொல் எய்துவதே.
மேல்
9.
நெடுயா னோடு நான் முகனும் வானவரும் நெருங்கி
முடியான் முடிகள் மோதி உக்க முழுமணி யின்திரளை
அடியார் அலகி னால்தி ரட்டும் அணிதில்லை அம்பலத்துக்
கடியார் கொன்றை மாலை யானைக் காண்பதும் என்றுகொலோ?
மேல்
10.
சீரான் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத் தாழிதன்னைக்
காரார் சோலைக் கோழி வேந்தன் தஞ்சையர் கோன்கலந்த
ஆரா இன்சொற் கண்டரா தித்தன் அருந்தமிழ் மாலை வல்லார்
பேரா வுலகிற் பெருமை யோடும் பேரின்பம் எய்துவரே.
மேல்
---திருச்சிற்றம்பலம்---
06. வேணாட்டடிகள் அருளிய திருவிசைப்பா (205 - 214)
பதிக எண்: 21. கோயில் - துச்சான
பண் : வேணாட்டடிகள் அருளிய திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
1.
துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே ஆளுகப்பார்
கைச்சாலும் சிறுகதலி இ¨வேம்பும் கறிகொள்வார்
எச்சார்வும் இல்லாமை நீயறிந்தும் எனதுபணி
நச்சாய்காண்; திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே!
மேல்
2.
தம்பானை சாய்ப்பற்றூர் என்னும் முதுசொல்லும்
எம்போல்வார்க்(கு) இல்லாமை என்னளவே அறிந்தொழிந்தேன்
வம்பானார் பணிஉகத்தி வழிபடியேன் தொழிலிறையும்
நம்பாய்காண் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே !
மேல்
3.
பொசியாதோ கீழ்க்கொம்பு நிறைகுளம்என் றதுபோலத்
திசைநோக்கிப் பேழ்கணித்துச் சிவபெருமான் ஓஎனினும்
இசையானால் என்திறத்தும் எ¡னயுடையாள் உரையாடாள்
நசையானேன் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே !
மேல்
4.
ஆயாத சமயங்கள் அவரவர்கள் முன்பென்னை
நோயோடு பிணிநலிய இருக்கின்ற அதனாலே
பேயாவித் தொழும்பனைத்தும் பிரான்இகழும் என்பித்தாய்
நாயேனைத் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
மேல்
5.
நின்றுநினைந்(து) இருந்துகிடந்து எழுந்துதொழும் தொழும்பனேன்
ஒன்றியரு கால்நினையா(து) இருந்தாலும் இருக்கவொட்டாய்
கன்றுபிரி கற்றாப்போல் கதறுவித்தி வரவுநில்லாய்
நன்றிதுவோ? திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
மேல்
6.
படுமதமும் மிடவயிறும் உடையகளி றுடையபிரான்
அடியறிய உணர்த்துவதும் அகத்தியனுக்(கு) ஒத்தன்றே
இடுவதுபுல் ஓர்எருதுக்(கு) ஒன்றினுக்கு வையிடுதல்
நடுஇதுவோ திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
மேல்
7.
மண்ணோடு விண்ணளவும் மனிதரொடு வானவர்க்கும்
கண்ணாவாய் கண்ணாகா(து) ஒழிதலும்நான் மிகக்கலங்கி
அண்ணாவோ என்றண்ணாந்(து) அலமந்து விளித்தாலும்
நண்ணாயால் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
மேல்
8.
வாடாவாய் நாப்பிதற்றி உனைநினைந்து நெஞ்சுருகி
வீடாஞ்செய் குற்றேவல் எற்றேமற் றிதுபொய்யில்
கூடாமே கைவந்து குறுகுமா(று) யான்உன்னை
நாடாயால் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
மேல்
9.
வாளாமால் அயன்வீழ்ந்து காண்பரிய மாண்பிதனைத்
தோளாரக் கையாரத் துணையாரத் தொழுதாலும்
ஆளோநீ உடையதுவும் அடியேன்உன் தாள்சேரும்
நாளேதோ திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
மேல்
10.
பாவார்ந்த தமிழ்மாலை பத்தரடித் தொண்டனெடுத்(து)
ஓவாதே அழைக்கின்றான் என்றருளின் நன்றுமிகத்
தேவேதென் திருத்தில்லைக் கூத்தாடி நாயடியேன்
சாவாயும் நினைக்காண்டல் இனியுனக்கு தடுப்பரிதே.
மேல்
---திருச்சிற்றம்பலம்---
07. திருவாலியமுதனார் அருளிய திருவிசைப்பா (215 - 256)
பதிக எண்: 22 கோயில் - பாதாதி கேசம்
பண் : திருவாலியமுதனார் அருளிய திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
1.
மையல் மாதொரு கூறன் மால்விடை யேறி மான்மறி யேந்தியதடம்
கையன் கார்புரை யும்கறைக் கண்டன் கனல்மழுவான்
ஐயன் ஆரழல் ஆடு வான்அணி நீர்வயல் தில்லை அம்பலத்தான்
செய்ய பாதம் வந்தென் சிந்தை உள்ளிடம் கொண்டனவே.
மேல்
2.
சலம்பொற் றாமரை தாழ்ந்தெ ழுந்த தடமும் தடம்புனல் வாய்மலர் தழீஇ
அலம்பி வண்டறையும் அணி யார்தில்லை அம்பலவன்
புலம்பி வானவர் தானவர் புகழ்ந்(து) ஏத்த ஆடுபொற் கூத்தனார் கழல்
சிலம்பு கிண்கிணி என் சிந்தை உள்ளிடங் கொண்டனவே.
மேல்
3.
குருண்ட வார்குழல் கோதை மார்குயில் போன்மிழற்றிய கோல மாளிகை
திரண்ட தில்லை தன்னுள் திருமல்லு சிற்றம் பலவன்
மருண்டு மாமலை யான்மகள் தொழ ஆடுங் கூத்தன் மணிபுரை தரு
திரண்ட வான்குறங்கென் சிந்தை யுள்ளிடங் கொண்டனவே.
மேல்
4.
போழ்ந்தி யானை தன்னைப் பொருப்பன் மகள்உமை அச்சங் கண்டவன்
தாழ்ந்த தண்புனல்சூழ் தடமில்கு சிற்றம்பலவன்
சூழ்ந்த பாய்ப்புலித் தோல்மிசை தொடுத்து வீக்கும் பொன்நூல் தன்னினொடு
தாழ்ந்த கச்ச தன்றே தமியேனைத் தளிர்வித்ததே.
மேல்
5.
பந்த பாசமெலாம்அறப் பசுபாசம் நீக்கிய பன்முனிவரோ(டு)
அந்தணர் வழங்கும் அணியார் தில்லை அம்பலவன்
செந்தழல் புரைமேனியும் திகழும் திருவயிறும் வயிற்றினுள்
உந்திவான்கழி என்உள்ளத்(து) உள்ளிடங் கொண்டனவே.
மேல்
6.
குதிரை மாவொடு தேர்பல குவிந்(து) ஈண்டு தில்லையுள் கொம்ப னாரொடு
மதுரமாய் மொழியார் மகிழ்ந்தேத்து சிற்றம் பலவன்
அதிர வார்கழல் வீசி நின்றழ காநடம்பயில் கூத்தன் மேல்திகழ்
உதர பந்தனம் என்னுள்ளத்(து) உள்ளிடங் கொண்டனவே.
மேல்
7.
படங்கொள் பாம்பனை யானொடு பிரமன் பரம்பரா! அருளென்று
தடங்கையால் தொழவும் தழலாடுசிற் றம்பலவன்
தடங்கை நான்கும்அத் தோள்களும் தடமார்பினில் பூண்கள் மேற்றிசை
விடங்கொள் கண்ட மன்றே வினையேனை மெலிவித்தவே.
மேல்
8.
செய்ய கோடுடன் கமலமலர் சூழ்தரு தில்லை மாமறை யோர்கள் தாந்தொழ
வையம் உய்யநின்று மகிழ்ந்தாடு சிற்றம் பலவன்
செய்யவாயின் முறுவலும் திகழும் திருக்காதும் காதினின் மாத்திரைகளோ(டு)
ஐய தோடும் அன்றே அடியேனை ஆட்கொண் டனவே.
மேல்
9.
செற்றவன் பரந்தீ எழச்சிலை கோலி ஆரழல் ஊட்டினான் அவன்
எற்றி மாமணிகள் எறிநீர்த் தில்லை அம்பலவன்
மற்றை நாட்டம் இரண்டொடு மலரும் திருமுக மும்முகத்தினும்
நெற்றி நாட்டம் அன்றே நெஞ்சு ளேதிளைக் கின்றனவே.
மேல்
10.
தொறுக்கள் வான்கமல மலர்உழக்கக் கரும்பு நற்சாறு பாய்தர
மறுக்கமாய்க் கயல்கள் மடைபாய் தில்லை அம்பலவன்
முறுக்கு வார்சிகை தன்னொடு முகிழ்த்தஅவ் அகத்து மொட்டொடு மத்தமும்
பிறைக்கொள் சென்னி யன்றே பிரியா(து) என்னுள் நின்றனவே.
மேல்
11.
தூவி நீரொடு பூஅவை தொழு(து) ஏத்து கையின ராகி மிக்கதோர்
ஆவி உள்நிறுத்தி அமர்ந்தூறிய அன்பினராய்த்
தேவர் தாந்தொழ ஆடிய தில்லைக் கூத்தினைத் திருவாலி சொல்லிவை
மேவ வல்லவர்கள் விடையான்அடி மேவுவரே.
மேல்
---திருச்சிற்றம்பலம்---
பதிக எண்: 23 கோயில் - பவளமால்வரை
பண் : திருவாலியமுதனார் அருளிய திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
1.
பவளமால் வரையைப் பனிபடர்ந்(து) அனையதோர் படரொளிதரு திருநீறும்
குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும் துன்றுபொற் குழல்திருச் சடையும்
திவள மாளிகை சூழ்தரு தில்லை யுள்திரு நடம்புரி கின்ற
தவள வண்ணனை நினைதொறும் என்மனம் தழல்மெழு(கு)ஒக் கின்றதே.
மேல்
2.
ஒக்க ஒட்டந்த அந்தியும் மதியமும் அலைகடல் ஒலியோடு
நெக்கு வீழ்தரு நெஞ்சினைப் பாய்தலும் நிறையழிந்(து) இருப்பேனைச்
செக்கர் மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் வகையாலே
பக்கம் ஒட்டந்த மன்மதன் மலர்க்கணை படுந்தொறும் அலைந்தேனே.
மேல்
3.
அலந்து போயினேன் அம்பலக் கூத்தனே அணிதில்லை நகராளீ
சிலந்தியை அரசாள்க என்(று) அருள்செய்த தேவதே வீசனே
உலந்தமார்க் கண்டிக் காகிஅக் காலனை உயிர்செ வுதைகொண்ட
மலர்ந்த பாதங்கள் வனமுலை மேலொற்ற வந்தருள் செய்யாயே.
மேல்
4.
அருள்செய்(து) ஆடுநல் அம்பலக் கூத்தனே ! அணிதில்லை நகராளீ
மருள்செய்(து) என்றனை வனமுலை பொன்பயப் பிப்பது வழக்கமோ?
திரளும் நீள்மணிக் கங்கையைத் திருச்சடைச் சேர்த்திஅச் செய்யாளுக்(கு)
உருவம் பாகமும் ஈந்துநல் அந்தியை ஒண்ணுதல் வைத்தோனே.
மேல்
5.
வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன் முடிதேடி
எய்த்து வந்திழந்(து) இன்னமும் துதிக்கின்றார் எழில்மறை அவற்றாவே
செய்த்தலைக் கமலம் மலர்ந்தோங்கிய தில்லை அம்பலத் தானைப்
பத்தியாற் சென்று கண்டிட என்மனம் பதைபதைப்(பு) ஒழியாதே.
மேல்
6.
தேய்ந்து மெய்வெளுத்(து) அகம் வளைத்து அரவினை அஞ்சித்தான் இருந்தேயும்
காய்ந்து வந்துவந்(து) என்றனை வலிசெய்து கதிர்நிலா எரிதூவும்
ஆய்ந்த நான்மறை அந்தணர் தில்லையுள் அம்பலத்(து) அரன்ஆடல்
வாய்ந்த மாலர்ப் பாதங்கள் காண்பதோர் மனத்தினை உடையேற்கே.
மேல்
7.
உடையும் பாய்புலித் தோலும்நல் அரவமும் உண்பதும் பலிதேர்ந்து
விடைய(து) ஊர்வது மேவிடங் கொடுவரை, ஆகிலும் என்நெஞ்சம்
மடைகொள் வாளைகள் குதிகொளும் வயல்தில்லை அம்பலத்து அனலாடும்
உடைய கோவினை அன்றிமற்று ஆரையும் உள்ளுவது அறியேனே.
மேல்
8.
அறிவும் மிக்கநல் நாணமும் நிறைமையும் ஆசையும் இங்குள்ள
உறவும் பெற்றநற் றாயடு தந்தையும் உடன்பிறந் தவரோடும்
பிறிய விட்டுனை அடைந்தனன் என்றுகொள் பெரும்பற்றப் புலியூரின்
மறைகள் நான்கும்கொண் டந்தணர் ஏத்தநன் மாநடம் மகிழ்வானே.
மேல்
10.
புரியும் பொன்மதில் சூழ்தரு தில்லையுள் பூகரர் பலர்போற்ற
எரிய(து) ஆடும்எம் ஈசனைக் காதலித்(து) இனையவர் மொழியாக
வரைசெய் மாமதில் மயிலையர் மன்னவன் மறைவல திருவாலி
பரவல் பத்திவை வல்லவர் பரமன(து) அடியினை பணிவாரே.
மேல்
---திருச்சிற்றம்பலம்---
பதிக எண்: 24. கோயில் -- அல்லாய்ப் பகலாய்
பண் : திருவாலியமுதனார் அருளிய திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
1.
அல்லாய்ப் பகலாய் அருவாய் உருவாய் ஆரா அமுதமாய்க்
கல்லால் நிழலாய் கயிலை மலையாய் காண அருளென்று
பல்லா யிரம்பேர் பதஞ்சலிகள் பரவ வெளிப்பட்டுச்
செல்வாய் மதில் தில்லைக்(கு) அருளித் தேவன் ஆடுமே
மேல்
2.
அன்ன நடையார் அமுத மொழியார் அவர்கள் பயில்தில்லைத்
தென்னன் தமிழும் இசையும் கலந்த சிற்றம் பலந்தன்னுள்
பொன்னும் மணியும் நிரந்த தலத்துப் புலித்தோல் பியற்கிட்டு
மின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே.
மேல்
3.
இளமென் முலையார் எழில்மைந் தரொடும் ஏரார் அமளிமேல்
திளையும் மாடத்திருவார் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்
வளர்பொன் மலையுள் வயிர மலைபோல் வலக்கை கவித்துநின்(று)
அளவில் பெருமை அமரர் போற்ற அழகன் ஆடுமே.
மேல்
4.
சந்தும் அகிலும் தழைப்பீ லிகளும் சாதி பலவுங்கொண்டு
உந்தி இழியும் நிவவின் கரைமேல் உயர்ந்த மதில்தில்லைச்
சிந்திப் பரிய தெய்வப் பதியுட் சிற்றம் பலந்தன்னுள்
நந்தி முழவங் கொட்ட நட்டம் நாதன் ஆடுமே.
மேல்
5.
ஓமப் புகையும் அகிலின் புகையும் உயர்ந்துமுகில்தோயத்
தீமெய்த் தொழிலார் மறையோர் மல்கு சிற்றம் பலந்தன்னுள்
வாமத்(து) எழிலார் எடுத்த பாதம் மழலைச் சிலம்பார்க்கத்
தீமெய்ச் சடைமேல் திங்கள் சூடித் தேவன் ஆடுமே.
மேல்
6.
குரவம் கோங்கம் குளிர்புன்னை கைதை குவிந்த கரைகள்மேல்
திரைவந் துலவும் தில்லை மல்கு சிற்றம் பலந்தன்னுள்
வரைபோல் மலிந்த மணிமண் பபத்து மறையோர் மகிழ்ந்தேத்த
அரவம் ஆட அனல்கை ஏந்தி அழகன் ஆடுமே.
மேல்
7.
சித்தர் தேவர் இயக்கர் முனிவர் தேனார் பொழில்தில்லை
அத்தா! அருளாய் அணியம் பலவா! என்றென் றவரேத்த
முத்தும் மணியும் நிரந்த தலத்துள் முளைவெண் மதிசூடிக்
கொத்தார் சடைகள் தாழ நட்டம் குழகன் ஆடுமே.
மேல்
8.
அதித்த அரக்கன் நெரிய விரலால் அடர்த்தாய் அரளென்று
துதித்து மறையோர் வணங்கும் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்
உதித்த போழ்தில் இரவிக் கதிர்போல் ஒளிர்மா மணிஎங்கும்
பதித்த தலத்துப் பவள மேனிப் பரமன் ஆடுமே.
மேல்
9.
மாலோ(டு) அயனும் அமரர் பதியும் வந்து வணங்கிநின்(று)
ஆல கண்டா ! அரனே ! அருளாய் என்றென்(று) அவரேத்தச்
சேலா டும்வயல் தில்லை மல்கு சிற்றம் பலந்தன்னுள்
பாலா டுமுடிச் சடைகள் தாழப் பரமன் ஆடுமே.
மேல்
10.
நெடிய சமணும் அறைசாக் கியரும் நிரம்பாப் பல்கோடிச்
செடியும் தவத்தோர் அடையாத் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்
அடிகள் அவரை ஆருர் நம்பி அவர்கள் இசைபாடக்
கொடியும் விடையும் உடைய கோலக் குழகன் ஆடுமே.
மேல்
11.
வானோர் பணிய மண்ணோர் ஏத்த மன்னி நடமாடும்
தேனார் பொழில்சூழ் தில்லை மல்கு சிற்றம்பலத் தானைத்
தூநான் மறையான் அமுத வாலி சொன்ன தமிழ்மாலைப்
பானோர் பாடல் பத்தும் பாடப் பாவ நாசமே.
மேல்
---திருச்சிற்றம்பலம்---
பதிக எண்: 25. கோயில் - கோலமலர்
பண் : திருவாலியமுதனார் அருளிய திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
1.
கோல மலர்நெடுங்கண் கொவ்வை வாய்க்கொடி ஏரிடையீர்
பாலினை இன்னமுதைப் பரமாய பரஞ்சுடரைச்
சேலுக ளும்வயல்சூழ் தில்லை நகர்ச் சிற்றம்பலத்(து)
ஏலவுடை எம்இறையை என்றுகொல் காண்பதுவே.
மேல்
2.
காண்பதி யான் என்றுகோல் கதிர்மாமணி யைக்கனலை
ஆண்பெண் அருவுருவென்(று) அறிதற்கு அரி தாயவனைச்
சேண்பணை மாளிகைசூழ் தில்லைமாநகர்ச் சிற்றம்பலம்
மாண்புடை மாநடஞ்செய் மறையோர் மலர்ப் பாதங்களே.
மேல்
3.
கள்ளவிழ் தாமரைமேல் கண்டயனொடு மால்பணிய
ஒள்ளெரி யின்நடுவே உருவாய்ப்பரந் தோங்கிய சீர்த்
தெள்ளிய தண்பொழில்சூழ் தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்
துள்ளெரி யாடுகின்ற ஒருவனை உணர்வரிதே.
மேல்
4.
அரிவையோர் கூறுகந்தான் அழகன் எழில் மால்கரியின்
உரிவைநல் உத்தரியம் உகந்தான் உம் பரார்தம்பிரான்
புரிபவர்க்(கு) இன்னருள்செய் புலியூர்த்திருச் சிற்றம்பலத்(து)
எரிமகிழ்ந் தாடுகின்ற எம்பிரான்என் இறையவனே.
மேல்
5.
இறையவனை என்கதியை என்னுள்ளே உயிர்ப்பாகி நின்ற
மறைவனை மண்ணும் விண்ணும் மலிவான் சுடராய் மலிந்த
சிறையணி வண்டறையும் தில்லை மாநகர்ச் சிற்றம்பலம்
நிறையணி யாம் இறையை நினைத்தேன் இனிப் போக்குவனே.
மேல்
6.
நினைத்தேன் இனிப்போக்குவனோ? நிமலத் திரளை நினைப்பார்
மனத்தி னுளேயிருந்த மணியைமணி மாணிக்கத்தைக்
கனைத்திழி யுங்கழனிக் கனகங்கதிர் ஒண்பவளம்
சினத்தோடு வந்தெறியும் தில்லைமாநகர்க் கூத்தனையே.
மேல்
7.
கூத்தனை வானவர்தம் கொழுந்தைக் கொழுந்தாய் எழுந்த
மூத்தனை மூவருவின் முதலைமுத லாகிநின்ற
ஆத்தனைத் தான்படுக்கும் அந்தணர் தில்லை அம்பலத்துள்
ஏத்தநின் றாடுகின்ற எம்பிரானடி சேர்வன்கொலோ?
மேல்
8.
சேர்வன்கொலோ அன்னையீர் திகழும்மலர்ப் பாதங்களை
ஆர்வங்கொளத் தழுவி அணிநீ(று) என் முலைக்கணியச்
சீர்வங்கம் வந்தணவும் தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து)
ஏர்வங்கை மான்மறியன் எம்பிரான் என்பால் நேசனையே.
மேல்
9.
நேசமு டையவர்கள் நெஞ்சுளே யிடங்கொண் டிருந்த
காய்சின மால்லிடையூர் கண்ணுதலைக் காமருசீர்த்
தேசமிகு புகழோர் தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து)
ஈசனை எவ்வுயிர்க்கும் எம்மிறைவன்என்(று) ஏத்துவனே.
மேல்
10.
இறைவனை ஏத்துகின்ற இளையாள்மொழி இன்றமிழால்
மறைவல நாவலர்கள் மகிழ்ந்தேத்து சிற்றம்பலத்தை
அறைசெந்நெல் வான்கரும்பின் அணியாலைகள் சூழ்மயிலை
மறைவல ஆலிசொல்லை மகிழ்ந்தேத்துக வானெளிதே.
மேல்
---திருச்சிற்றம்பலம்---
08. புருடோத்தம நம்பி அருளிய திருவிசைப்பா (257 - 278)
பதிக எண்: 26.கோயில் - வாரணி
பண் : புருடோத்தம நம்பி அருளிய திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
1.
வாரணி நறுமலர் வண்டு கிண்டு பஞ்சமம் செண்பக மாலைமாலை
வாரணி வனமுலை மெலியும் வண்ணம் வந்து வந்திலைநம்மை மயக்குமாலோ
சீரணி மணிதிகழ் மாடம் ஓங்கு தில்லையம்பலத்(து) எங்கள் செல்வன் வாரான்
ஆரெனை அருள்புரிந்(து) அஞ்சல் என்பார் ஆவியின் பரம்என்றன் ஆதரவே.
மேல்
2.
ஆவியின் பரம்என்றன் ஆதரவும் அருவினை யேனைவிட்டு அம்மஅம்ம
பாவிவன் மனமிது பையவே போய்ப் பனிமதிச் சடையான் பாலதாலோ
நீவியும் நெகிழ்ச்சியும் நிறையழிவும் நெஞ்சமும் தஞ்சமி லாமையாலே
ஆவியின் வருத்தம் இதாரறிவார் அம்பலத்(து) அருள்நடம் ஆடுவானே.
மேல்
3.
அம்பலத் தருள்நடம் ஆடவேயும் யாதுகொல் விளைவதென்(று) அஞ்சிநெஞ்சம்
உம்பர்கள்வன்பழி யாளர்முன்னே ஊட்டினர் நஞ்சைஎன் றேயும் உய்யேன்
வன்பல படையுடைய பூதஞ்சூழ வானவர் கணங்களை மாற்றியாங்கே
என்பெரும் பயலமை தீரும்வண்ணம் எழுந்தரு ளாய்எங்கள் வீதியூடே !
மேல்
4.
எழுந்தருளாய் எங்கள் வீதியூடே ஏதமில் முனிவரோ(டு) எழுந்தஞானக்
கொழுந்தது வாகிய கூத்தனேநின் குழையணி காதினில் மாத்திரையும்
செழுந்தட மலர்புரை கண்கள் முன்றும் செங்கனி வாயும்என் சிந்தைவெளவ
அழுந்தும்என் ஆருயிர்க்(கு) என்செய் கேனோ? அரும்புனல் அலமரும் சடையினானே !
மேல்
5.
அரும்புனல் அலமரும் சடையி னானை அமரர்கள் அடிபணிந்து அரற்ற அந்நாள்
பெரும்புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை பேசவும் நையும் என் பேதை நெஞ்சில்
கருந்தட மலர்புரை கண்ட வண்டார்காரிகை யார்முன்(பு)என் பெண்மை தோற்றேன்
திருந்திய மலரடி நசையினாலே தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவே.
மேல்
6.
தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவைத் தேறிய அந்தணர் சிந்தை செய்யும்
எல்லைய தாகிய எழில்கொள் சோதி என்னுயிர் காவல்கொண் டிருந்த எந்தாய்
பல்லையார் பகந்தலை யோ(டு) இடறிப்பாதமென் மலரடி நோவ நீபோய்
அல்லினில் அருநடம் ஆடில் எங்கள் ஆருயிர் காவலிங்(கு) அரிது தானே.
மேல்
7.
ஆருயிர் காவலிங்(கு) அருமை யாலே அந்தணர் மதலைநின் அடிபணியக்
கூர்நுனை வேற்படைக்கூற்றம் சாயக் குரைகழல் பணிகொள மலைந்த தென்றால்
ஆரனி அமரர்கள் குறைவி லாதார் அவரவர் படுதுயர் களைய நின்ற
சீருயி ரேஎங்கள் தில்லை வாணா !சேயிழை யார்க்கினி வாழ்வரிதே.
மேல்
8.
சேயிழை யார்க்கினி வாழ்வரிது சிற்றம் பலத்தெங்கள் செல்வ னேநீ
தாயினும் மிகநல்லை என்றடைந்தேன் தனிமையை நினைகிலை சங்க ராவுன்
பாயிரம் புலியதள் இன்னுடையும்பையமேல் எடுத்தபொற் பாத மும்கண்(டு)
ஏயிவல் இழந்தது சங்கம் ஆவா எங்களை ஆளுடை ஈச னேயோ.
மேல்
9.
எங்களை ஆளுடை ஈசனையோ இளமுலை முகம்நெக முயங்கி நின்பொற்
பங்கயம் புரைமுகம் நோக்கி நோக்கிப் பனிமதி நிலவதென் மேற்படரச்
செங்கயல் புரைகண்ணி மார்கள் முன்னே திருச்சிற்றம் பலமுட னேபுகுந்து
அங்குன பணிபல செய்து நாளும் அருள்பெறின் அகலிடத் திருக்கலாமே.
மேல்
10.
அருள்பெறின் அகலிடத்(து) இருக்கலா மென்று அமரர்கள் தலைவனும் அயனும் மாலும்
இருவரும் அறிவுடையாரின் மிக்கார் ஏத்துகின் றார் இன்னம் எங்கள்கூத்தை
மருள்படு மழலைமென் மொழிவுமையாள் கணவனை வல்வினை யாட்டி யேனான்
அருள்பெற அலமரும் நெஞ்சம் ஆவா ஆசையை அளவறுத் தார்இங் காரே?
மேல்
11.
ஆசையை அளவறுத் தார்இங் காரே? அம்பலத்(து) அருநடம் ஆடு வானை
வாசநன் மலரணி குழல்மடவார் வைகலும் கலந்தெழு மாலைப் பூசல்
மாசிலா மறைபல ஓது நாவன் வன்புரு டோத்தமன் கண்டு ரைத்த
வாசக மலர்கள் கொண் டேத்த வல்லார் மலைமகள் கணவனை அணைவர் தாமே.
மேல்
---திருச்சிற்றம்பலம்---
பதிக எண்: 27.கோயில் - வானவர்கள்
>பண் : புருடோத்தம நம்பி அருளிய திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
1.
வானவர்கள் வேண்ட வளர்நஞ்சை உண்டார்தாம்
ஊனமிலா என்கை ஒளிவளைகள் கொள்வாரோ?
தேனல்வரி வண்டறையும் தில்லைசிற்றம்பலவர்
நானமரோ என்னாதே நாடகமே ஆடுவரே.
மேல்
2.
ஆடிவரும் கார்அரவும் ஐம்மதியம் பைங்கொன்றை
சூடிவருமா கண்டேன் தோள்வளைகள் தோற்றாலும்
தேடியிமை யோர்பரவும் தில்லைசிற்றம் பலவர்
ஆடிவரும் போதருகே நிற்கவுமே ஒட்டாரே.
மேல்
3.
ஒட்டா வகைஅவுணர் முப்பரங்கள் ஓர்அம்பால்
பட்டாங்(கு) அழல்விழுங்க எய்துகந்த பண்பினார்
சிட்டார் மறையோவாத் தில்லைசிற்றம் பலவர்
கொட்டா நடமாடக் கோல்வளைகள் கொள்வாரே.
மேல்
4.
ஆரே இவைபடுவார் ஐயங் கொளவந்து
போரேடி என்று புருவம் இடுகின்றார்
தேரார் விழவோவாத் தில்லைசிற் றம்பலவர்
தீராநோய் செய்வாரை ஓக்கின்றார் காணீரே.
மேல்
5.
காணீரே என்னுடைய கைவளைகள் கொண்டார்தாம்
சேணார் மணிமாடத் தில்லைசிற் றம்பலவர்
பூணார் வனமுலைமெல் பூஅம்பால் காமவேன்
ஆணாடு கின்றவா கண்டும் அருளாரே.
மேல்
6.
ஏயிவரே வானவர்க்கும் வானவரே என்பாரால்
தாயிவரே எல்லார்க்கும் தந்தையுமாம் என்பாரால்
தேய்மதியம் சூடிய தில்லைச் சிற்றம் பலவர்
வாயினைக் கேட்டறிவார் வையகத்தார் ஆவாரே.
மேல்
7.
ஆவா ! இவர்தம் திருவடிகொண்டு அந்தகன்தன்
மூவா உடலழியக் கொன்றுகந்த முக்கண்ணர்
தேவா மறைபயிலும் தில்லைச்சிற்றம் பலவர்
கோவா இனவளைகள் கொள்வாரோ என்னையே.
மேல்
8.
என்னை வலிவாரார் என்ற இலங்கையர் கோன்
மன்னும் முடிகள் நெரித்த மணவாளர்
செந்நெல் விளைகழனித் தில்லைச் சிற்றம்பலவர்
முன்னந்தான் கண்டறிவார் ஒவ்வார் இம் முத்தரே.
மேல்
9.
முத்தர் முதுபகலே வந்தென்றன் இல்புகுந்து
பத்தர் பலியிடுக என்றெங்கும் பார்க்கின்றார்
சித்தர் கணம்பயிலும் தில்லைச்சிற்றம் பலவர்
கைத்தலங்கள் வீசிநின் றாடுங்கால் நோக்காரே.
மேல்
10.
நோக்காத தன்மையால் நோக்கிலோம் யாமென்று
மாற்காழி ஈந்து மலரோனை நிந்தித்துச்
சேக்காத லித்தேறும் தில்லைச்சிற்றம்பலவர்
ஊர்க்கேவந்(து) என்வளைகள் கொள்வாரோ ஒண்ணுதலீர்!
மேல்
11.
ஒண்ணுதலி காரணமா உம்பர் தொழுதேத்தும்
கண்ணுதலான் தன்னைப் புருடோத்தமன் சொன்ன
பண்ணுதலைப் பத்தும் பயின்றாடிப் பாடினார்
எண்ணுதலைப் பட்டங்கு இனிதா இருப்பாரே.
மேல்
---திருச்சிற்றம்பலம்---
09. சேதிராயர் அருளிய திருவிசைப்பா (279 - 288)
பதிக எண்: 28 கோயில் - சேலுலாம்
பண் : சேதிராயர் அருளிய திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
1.
சேலு லாம்வயல் தில்லையு ளீர்உமைச்
சால நாள்அயன் சார்வதி னால்இவள்
வேலை யார்விடம் உண்டுகந் தீர்என்று
மால தாகும்என் வாணுதுலே.
மேல்
2.
வாணு தற்கொடி மாலது வாய்மிக
நாணம் அற்றனள் நான்அறி யேன்இனிச்
சேணு தற்பொலி தில்லையு ளீர்உமை
காணில் எய்ப்பிலள் காரிகையே.
மேல்
3.
காரி கைக்(கு)அரு ளீர்கரு மால்கரி
ஈரு ரித்தெழு போர்வையி னீர்மிகு
கீரி யல்தில்லை யாய்சிவ னே என்று
வேரி நற்குழலாள் இவள்விம்முமே.
மேல்
4.
விம்மி விம்மியே வெய்துயிர்த்(து) ஆளெனா
உம்மை யேநினைந்(து) ஏத்துமொன்(று) ஆகிலள்
செம்ம லோர்பயில் தில்லையு ளீர்எங்கள்
அம்மல் ஓதி அயர்வுறுமே.
மேல்
5.
அயர்வுற்(று) அஞ்சலி கூப்பி அந்தோஎனை
உயவுன் கொன்றையுந் தார்அருளாய்எனும்
செயலுற் றூர்மதில் தில்லையு ளீர்இவண்
மயலுற் றாள்என்றன் மாதிவளே.
மேல்
6.
மாதொர் கூறன்வண் டார்கொன்றை மார்பன்என்(று)
ஓதில் உய்வன்ஒண் பைங்கிளி யேஎனும்
சேதித் தீர்சிரம் நான்முக னைத்தில்லை
வாதித் தீர்என்மடக் கொடியையே.
மேல்
7.
கொடியைக் கோமளச் சாதியைக் கொம்பிளம்
பிடியை என்செய்திட் டீர்பகைத் தார்புரம்
இடியச் செஞ்சீலை கால்வளைத் தீர்என்று
முடியும் நீர்செய்த மூச்சறவே.
மேல்
8.
அறவ னேஅன்று பன்றிப் பின்ஏகிய
மறவ னேஎனை வாதைசெய் யேல்எனும்
சிறைவண் டார்பொழில் தில்லையு ளீர்எனும்
பிறைகு லாம்நுதற் பெய்வளையே.
மேல்
9.
அன்ற ருக்கனைப் பல்லிறுத்(து) ஆனையைக்
கொன்று காலனைக் கோளிழைத் தீர்எனும்
தென்ற லார்பொழில் தில்லையு ளீர்இவள்
ஒன்றும் ஆகிலள் உம்பொருட்டே.
மேல்
10.
ஏயு மா(று)எழில் சேதிபர் கோன்தில்லை
நாய னாரை நயந்துரை செய்தன
தூய வாறுரைப் பார்துறக் கத்திடை
ஆய இன்பம்எய் தியிருப்பரே.
மேல்
---திருச்சிற்றம்பலம்---
10. சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு (289 - 301)
பதிக எண்: 29.கோயில் மன்னுக
பண் : சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு
திருச்சிற்றம்பலம்
1.
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
மேல்
2.
மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டுங் கொடுத்தும் குடிகுடி ஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்து
அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே.
மேல்
3.
நிட்டையி லாவுடல் நீத்தென்னை ஆண்ட நிகரிலா வண்ணங்கள்
சிட்டன் சிவனடி யாரைச் சீராட்டும் திறங்களுமே சிந்தித்(து)
அட்ட மூர்த்திக்கென் அகம்நெக ஊறும் அமிர்தினுக்(கு) ஆலநீழற்
பட்டனுக்(கு) என்னைத்தன் பாற்படுத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
மேல்
4.
சொல்லாண் டசுரு திருப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண் டிற்சிறை யும்சில தேவர் சிறுநெறி சேராமே
வில்லாண் டகன கத்திரன் மேரு விடங்கன் விடைப்பாகன்
பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
மேல்
5.
புரந்தரன் மாலயன் பூசலிட்(டு) ஓலமிட்(டு) இன்னம் புகலரிதாய்
இரந்திரந்(து) அழைப்பஎன் னுயிராண்ட கோவினுக்(கு) என்செய வல்லம் என்றும்
கரந்துங் கரவாத கற்பகனாகிக் கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே.
மேல்
6.
சேவிக்க வந்தயன் இந்திரன் செங்கண்மால் எங்கும்திசை திசையென
கூவிக் கவர்ந்து நெருங்கிக் குழாம்குழ மாய் நின்று கூத்தாடும்
ஆவிக்(கு) அமுதைஎன் ஆர்வத்தனத்தினை அப்பனை ஒப்பமார்
பாவிக்கும் பாவகத்(து) அப்புறத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
மேல்
7.
சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றதார் பெறுவார் உலகில்?
ஊரும் உலகும் கழற உளறி உமைமண வாளனுக்(கு)ஆம்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே.
மேல்
8.
சேலுங் கயலும் திளைக்கும் கண்ணார்இளங் கொங்கையில் செங்குங்குமம்
போலும் பொடியணி மார்பிலங் குமென்று புண்ணியர் போற்றிசைப்ப
மாலும் அயனும் அறியா நெறி தந்துவந்தென் மனத்தகத்தே
பாலும் அமுதமு ஒத்துநின் றானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
மேல்
9.
பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள்
ஆவிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
மேல்
10.
தாதையைத் தாளற வீசிய சண்டிக்(கு)இவ் அண்டத்தொடும் உடனே
பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும் போனகமும் அருளிச்
சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும்
பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
மேல்
11.
குழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணளவும் சென்று விம்மி மிகுதிரு ஆருரின்
மழவிடை யாற்கு வழிவழி யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த
பழஅடி யாரொடுங் கூடி எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
மேல்
12.
ஆரார் வந்தார்? அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்
நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.
மேல்
13.
எந்தை எந்தாய் சுற்றும் முற்றும் எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்று
சிந்தை செய்யும் சிவன்சீர் அடியார் அடிநாய் செப்புறை
அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகழ் தாண்டுகொண் டாருயிர்மேல்
பந்தம் பிரியப் பரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே.
மேல்
---திருச்சிற்றம்பலம்---
No comments:
Post a Comment