ஸ்ரீ தாயுமானவர்

ஸ்ரீ தாயுமானவர் அருளிய பாடல்கள்
திரு தாயுமானவர் திருவடிகளில் சமர்ப்பணம்
🌻🌻🌻🌷🌷🌷🌺🌺🌺🌸🌸🌸🌹🌹🌹🪷🪷🪷💐💐💐❤️🙏🏻👣🙇‍♂️🙇🏻‍♂️🙇‍♂️👣🙏🏻❤️💐💐💐🌹💐❤️🙏🪷🪷🪷🌹🌹🌹🌸🌸🌸🌺🌺🌺🌷🌷🌷🌻🌻🌻
தாயுமானவர் பாடல்கள்
56 பிரிவுகளில் 1452 பாடல்கள்

உள்ளடக்கம்
01. திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் ( 1 - 3 )
02. பரிபூரணானந்தம் ( 4 - 13 )
03. பொருள் வணக்கம் ( 14 - 25 )
04. சின்மயானந்தகுரு ( 26 - 36 )
05. மெளனகுரு வணக்கம் ( 37 - 46 )
06. கருணாகரக் கடவுள் ( 47 - 56 )
07. சித்தர் கணம் ( 57 - 66 )
08. ஆனந்தமான பரம் ( 67 - 76 )
09. சுகவாரி ( 77 - 88 )
10. எங்கும் நிறைகின்ற பொருள் ( 89 - 99 )
11. சச்சிதானந்த சிவம் ( 100 - 110 )
12. தேசோமயானந்தம் ( 111 - 121 )
13. சிற்சுகோதய விலாசம் ( 122 - 131 )
14. ஆகாரபுவனம் -சிதம்பர ரகசியம் ( 132 - 164 )
15. தேன் முகம் ( 165 - 174 )
16. பன்மாலை ( 175 - 184 )
17. நினைவு ஒன்று ( 185 - 193 )
18. பொன்னை மாதரை ( 194 - 271 )
19. ஆரணம் ( 272 - 281 )
20. சொல்லற்கு அரிய ( 282 - 291 )
21. வம்பனேன் ( 292 - 301 )
22. சிவன் செயல் ( 302 - 311 )
23. தன்னையொருவர் ( 312 - 321 )
24. ஆசையெனும் ( 322 - 361 )
25. எனக்கெனச் செயல் ( 362 - 389 )
26. மண்டலத்தின் ( 390 - 400 )
27. பாயப் புலி ( 401 - 459 )
28. உடல் பொய்யுறவு ( 460 - 542 )
29. ஏசற்ற அந்நிலை ( 543 - 552 )
30. காடும் கரையும் ( 553 - 555 )
31. எடுத்த தேகம் ( 556 - 557 )
32. முகமெலாம் ( 558 )
33. திடமுறவே ( 569 - 568 )
34. தன்னை ( 569 )
35. ஆக்குவை ( 570 )
36. கற்புறு சிந்தை ( 571 - 577 )
37. மலைவளர் காதலி ( 578 - 585 )
38. அகிலாண்ட நாயகி ( 586 )
39. பெரிய நாயகி ( 587 )
40. தந்தை தாய் ( 588 - 594 )
41. பெற்றவட்கே ( 595 - 605 )
42. கல்லாலின் ( 606 - 635 )
43. பராபரக் கண்ணி ( 636 - 1024 )
44. பைங்கிளிக் கண்ணி ( 1025 - 1082 )
45. எந்நாள் கண்ணி ( 1083 - 1314 )
46. காண்பேனோ என் கண்ணி ( 1315 - 1351 )
47. ஆகாதோ என் கண்ணி ( 1352 - 1372 )
48. இல்லையோ என் கண்ணி ( 1373 - 1378 )
49. வேண்டாவோ என் கண்ணி ( 1379 - 1384 )
50. நல்லறிவே என் கண்ணி ( 1385 - 1388 )
51. பலவகைக் கண்ணி ( 1389 - 1412 )
52. நின்ற நிலை ( 1413 - 1415 )
53. பாடுகின்ற பனுவல் ( 1416 - 1420 )
54. ஆனந்தக் களிப்பு ( 1421 - 1450 )
55. அகவல் ( 1451 )
56. வண்ணம் ( 1452 )

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
தாயுமானவர் பாடல்கள்
மேல்

 

@1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்

#1 அங்கு இங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தி ஆகி அருளொடு நிறைந்தது எது தன் அருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாம் தங்கும்படிக்கு இச்சைவைத்து உயிர்க்குயிராய்த் தழைத்தது எது மன வாக்கினில் தட்டாமல் நின்றது எது சமயகோடிகள் எலாம் தம் தெய்வம் எம் தெய்வம் என்று எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கிடவும் நின்றது எது எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்ல ஒரு சித்தாகி இன்பமாய் என்றைக்கும் உள்ளது எது அது கங்குல் பகல அற நின்ற எல்லை உளது எது அது கருத்திற்கு இசைந்தது அதுவே கண்டன எலாம் மோன உரு வெளியதாகவும் கருதி அஞ்சலிசெய்குவாம் #2 ஊர் அனந்தம் பெற்ற பேர்_அனந்தம் சுற்றும் உறவு அனந்தம் வினையினால் உடல் அனந்தம் செயும் வினை அனந்தம் கருத்தோ அனந்தம் பெற்ற பேர் சீர் அனந்தம் சொர்க்க நரகமும் அனந்தம் நல் தெய்வமும் அனந்த பேதம் திகழ்கின்ற சமயமும் அனந்தம் அதனால் ஞான சிற்சத்தியால் உணர்ந்து கார் அனந்தம் கோடி வருஷித்தது என அன்பர் கண்ணும் விண்ணும் தேக்கவே கருது அரிய ஆனந்த_மழை பொழியும் முகிலை நம் கடவுளைத் துரிய வடிவைப் பேர்_அனந்தம் பேசி மறை அனந்தம் சொலும் பெரிய மெளனத்தின் வைப்பைப் பேசு அரும் அனந்த பத ஞான ஆனந்தமாம் பெரிய பொருளைப் பணிகுவாம் #3 அத்துவித வத்துவைச் சொப்ரகாசத் தனியை அரு மறைகள் முரசு அறையவே அறிவினுக்கு அறிவு ஆகி ஆனந்த மயமான ஆதியை அநாதி ஏக தத்துவ சொருபத்தை மத சம்மதம் பெறாச் சாலம்ப ரகிதமான சாசுவத புட்கல நிராலம்ப ஆலம்ப சாந்தபத வ்யோம நிலையை நித்த நிர்மல சகித நிஷ்ப்ரபஞ்சப் பொருளை நிர்விஷய சுத்தமான நிர்விகாரத்தைத் தடத்தமாய் நின்று ஒளிர் நிரஞ்சன நிராமயத்தைச் சித்தம் அறியாதபடி சித்தத்தில் நின்று இலகு திவ்ய தேசோமயத்தைச் சிற்பர வெளிக்குள் வளர் தற்பரமதான பரதேவதையை அஞ்சலிசெய்வாம்

மேல்

@2 பரிபூரணானந்தம்

#4 வாசா கயிங்கரியம் அன்றி ஒரு சாதனம் மனோ வாயு நிற்கும் வண்ணம் வாலாயமாகவும் பழகி அறியேன் துறவு மார்க்கத்தின் இச்சை போல நேசானுசாரியாய் விவகரிப்பேன் அந்த நினைவையும் மறந்த போது நித்திரைகொள்வேன் தேகம் நீங்கும் என எண்ணிலோ நெஞ்சம் துடித்து அயருவேன் பேசாத ஆனந்தம் நிட்டைக்கும் அறிவு_இலாப் பேதைக்கும் வெகு தூரமே பேய்_குணம் அறிந்து இந்த நாய்க்கும் ஒரு வழி பெரிய பேர்_இன்ப நிட்டை அருள்வாய் பாசாடவிக்குளே செல்லாதவர்க்கு அருள் பழுத்து ஒழுகு தேவதருவே பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே #5 தெரிவாக ஊர்வன நடப்பன பறப்பன செயல் கொண்டு இருப்பன முதல் தேகங்கள் அத்தனையும் மோகம்கொள் பெளதிகம் சென்மித்த ஆங்கு இறக்கும் விரிவாய பூதங்கள் ஒன்றோடொன்றாய் அழியும் மேற்கொண்ட சேடம் அதுவே வெறு வெளி நிராலம்பம் நிறை சூன்யம் உபசாந்த வேத வேதாந்த ஞானம் பிரியாத பேர்_ஒளி பிறக்கின்ற அருள் அருள்_பெற்றோர்கள் பெற்ற பெருமை பிறவாமை என்றைக்கும் இறவாமையாய் வந்து பேசாமையாகும் எனவே பரிவாய் எனக்கு நீ அறிவிக்க வந்ததே பரிபாக காலம் அலவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே #6 ஆராயும் வேளையில் பிரமாதி ஆனாலும் ஐய ஒரு செயலும் இல்லை அமைதியொடு பேசாத பெருமை பெறு குணசந்த்ரராம் என இருந்த பேரும் நேராக ஒரு கோபம் ஒரு வேளை வர அந்த நிறைவு ஒன்றும் இல்லாமலே நெட்டுயிர்த்துத் தட்டழிந்து உளறுவார் வசன நிர்வாகர் என்ற பேரும் பூராயமாய் ஒன்று பேசும் இடம் ஒன்றைப் புலம்புவார் சிவராத்திரிப் போது துயிலோம் என்ற விரதியரும் அறி துயில் போலே இருந்து துயில்வார் பாராதி-தனில் உள்ள செயல் எலாம் முடிவிலே பார்க்கில் நின் செயல் அல்லவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே #7 அண்ட பகிரண்டமும் மாயா விகாரமே அ மாயை இல்லாமையே ஆம் என்னும் அறிவும் உண்டு அப்பாலும் அறிகின்ற அறிவினனை அறிந்து பார்க்கின் எண் திசை விளக்கும் ஒரு தெய்வ அருள் அல்லாமல் இல்லை எனும் நினைவு உண்டு இங்கு யான் எனது அறத் துரிய நிறைவாகி நிற்பதே இன்பம் எனும் அன்பும் உண்டு கண்டன எலாம் அல்ல என்று கண்டனைசெய்து கருவி கரணங்கள் ஓயக் கண் மூடி ஒரு கணம் இருக்க என்றால் பாழ்த்த கர்மங்கள் போராடுதே பண்டை உள கர்மமே கர்த்தா எனும் பெயர்ப் பக்ஷம் நான் இச்சிப்பனோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே #8 சந்ததமும் எனது செயல் நினது செயல் யான் எனும் தன்மை நினை அன்றி இல்லாத் தன்மையால் வேறு அலேன் வேதாந்த சித்தாந்த சமரச சுபாவம் இதுவே இந்த நிலை தெளிய நான் நெக்குருகி வாடிய இயற்கை திரு_உளம் அறியுமே இ நிலையிலே சற்று இருக்க என்றால் மடமை இத சத்ருவாக வந்து சிந்தை குடிகொள்ளுதே மலம் மாயை கன்மம் திரும்புமோ தொடு_வழக்காய்ச் சென்மம் வருமோ எனவும் யோசிக்குதே மனது சிரத்தை எனும் வாளும் உதவிப் பந்தம்_அற மெய்ஞ்ஞான தீரமும் தந்து எனைப் பாதுகாத்து அருள்செய்குவாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே #9 பூதலயம் ஆகின்ற மாயை முதல் என்பர் சிலர் பொறி புலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர் கரண முடிவு என்பர் சிலர் குணம் போன இடம் என்பர் சிலபேர் நாத வடிவு என்பர் சிலர் விந்துமயம் என்பர் சிலர் நட்டநடுவே இருந்த நாம் என்பர் சிலர் உருவமாம் என்பர் சிலர் கருதி நாடில் அருவு. என்பர் சிலபேர் பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் பேசில் அருள் என்பர் சிலபேர் பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் பிறவுமே மொழிவர் இவையால் பாதரசமாய் மனது சஞ்சலப்படும் அலால் பரம சுக நிஷ்டை பெறுமோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே #10 அந்தகாரத்தை ஓர் அகம் ஆக்கி மின் போல் என் அறிவைச் சுருக்கினவர் ஆர் அ அறிவு-தானுமே பற்றினது பற்றாய் அழுந்தவும் தலை மீதிலே சொந்தமாய் எழுதப் படித்தார் மெய்ஞ்ஞான சுக நிஷ்டை சேராமலே சோற்றுத் துருத்தியைச் சதம் எனவும் உண்டு உண்டு தூங்கவைத்தவர் ஆர்-கொலொ தந்தை தாய் முதலான அகில ப்ரபஞ்சம்-தனைத் தந்தது எனது ஆசையோ தன்னையே நோவனோ பிறரையே நோவனோ தற்காலம்-அதை நோவனோ பந்தமானது தந்த வினையையே நோவனோ பரமார்த்தம் ஏதும் அறியேன் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே #11 வாராது எலாம் ஒழிய வருவன எலாம் எய்த மனது சாட்சியதாகவே மருவ நிலை தந்ததும் வேதாந்த சித்தாந்த மரபு சமரசமாகவே பூராயமாய் உணர ஊகம்-அது தந்ததும் பொய் உடலை நிலை அன்று எனப் போத நெறி தந்ததும் சாசுவத ஆனந்த போகமே வீடு என்னவே நீராளமாய் உருக உள்ளன்பு தந்ததும் நின்னது அருள் இன்னும் இன்னும் நின்னையே துணை என்ற என்னையே காக்க ஒரு நினைவு சற்று உண்டாகிலோ பார் ஆதி அறியாத மோனமே இடைவிடாப் பற்றாக நிற்க அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே #12 ஆழ் ஆழி கரை இன்றி நிற்கவிலையோ கொடிய ஆலம் அமுதாகவிலையோ அக் கடலின் மீது வட அனல் நிற்கவில்லையோ அந்தரத்து அகில கோடி தாழாமல் நிலைநிற்கவில்லையோ மேருவும் தனுவாக வளையவிலயோ சத்த மேகங்களும் வச்ரதரன் ஆணையில் சஞ்சரித்திடவில்லையோ வாழாது வாழவே இராமன் அடியால் சிலையும் மட மங்கை ஆகவிலையோ மணிமந்த்ரம் ஆதியால் வேண்டு சித்திகள் உலக மார்க்கத்தில் வைக்கவிலையோ பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே #13 ஆசைக்கு ஓர் அளவு இல்லை அகிலம் எல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக அம் பொன் மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் நெடு நாள் இருந்த பேரும் நிலையாகவே இனும் காயகற்பம் தேடி நெஞ்சு புண் ஆவர் எல்லாம் யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும் உள்ளதே போதும் நான் நான் எனக் குளறியே ஒன்றை விட்டு ஒன்று பற்றிப் பாச_கடற்குளே வீழாமல் மனது அற்ற பரிசுத்த நிலையை அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே

மேல்

@3 பொருள் வணக்கம்

#14 நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமயமாய் நிறைவாய் நீங்காச் சுத்தமுமாய் தூரமுமாய்ச் சமீபமுமாய்த் துரிய நிறை சுடராய் எல்லாம் வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயம் ஆகி மன வாக்கு எட்டாச் சித்து உருவாய் நின்ற ஒன்றைச் சுகாரம்பப் பெருவெளியைச் சிந்தைசெய்வாம் #15 யாது மனம் நினையும் அந்த நினைவுக்கு நினைவு ஆகி யாதின்-பாலும் பேதம்_அற நின்று உயிருக்கு உயிர் ஆகி அன்பருக்கே பேர்_ஆனந்தக் கோது_இல் அமுது ஊற்று அரும்பிக் குணம் குறி ஒன்று அறத் தன்னைக் கொடுத்துக் காட்டும் தீது_இல் பராபரம் ஆன சித்தாந்தப் பேர்_ஒளியைச் சிந்தைசெய்வாம் #16 பெருவெளியாய் ஐம்_பூதம் பிறப்பிடமாய்ப் பேசாத பெரிய மோனம் வரும் இடமாய் மனம் ஆதிக்கு எட்டாத பேர்_இன்ப மயமாய் ஞானக் குரு அருளால் காட்டிடவும் அன்பரைக் கோத்து அற விழுங்கிக்கொண்டு அப்பாலும் தெரிவு அரிதாய்க் கலந்தது எந்தப் பொருள் அந்தப் பொருளினை யாம் சிந்தைசெய்வாம் #17 இக பரமும் உயிர்க்கு உயிரை யான் எனது அற்றவர் உறவை எந்தநாளும் சுக பரிபூரணமான நிராலம்ப கோசரத்தைத் துரிய வாழ்வை அகம் மகிழ வரும் தேனை முக்கனியைக் கற்கண்டை அமிர்தை நாடி மொகுமொகென இரு விழி நீர் முத்து இறைப்பக் கர_மலர்கள் முகிழ்த்துநிற்பாம் #18 சாதி குலம் பிறப்பு இறப்புப் பந்தம் முத்தி அரு உருவத் தன்மை நாமம் ஏதும் இன்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவு_அற நின்று இயக்கம்செய்யும் சோதியை மாத் தூ வெளியை மனது அவிழ நிறைவான துரிய வாழ்வைத் தீது_இல் பரமாம் பொருளைத் திரு_அருளை நினைவாகச் சிந்தைசெய்வாம் #19 இந்திரசாலம் கனவு கானலின் நீர் என உலகம் எமக்குத் தோன்றச் சந்ததமும் சிற்பரத்தால் அழியாத தற்பரத்தைச் சார்ந்து வாழ்க புந்தி மகிழுற நாளும் தடை அற ஆனந்த வெள்ளம் பொலிக என்றே வந்து அருளும் குரு மெளனி மலர்_தாளை அநுதினமும் வழுத்தல்செய்வாம் #20 பொருளாகக் கண்ட பொருள் எவைக்கும் முதல்_பொருள் ஆகிப் போதம் ஆகித் தெருள் ஆகிக் கருதும் அன்பர் மிடி தீரப் பருக வந்த செழும் தேன் ஆகி அருளானோர்க்கு அகம் புறம் என்று உன்னாத பூரண ஆனந்தம் ஆகி இருள் தீர விளங்கு பொருள் யாது அந்தப் பொருளினை யாம் இறைஞ்சிநிற்பாம் #21 அரு மறையின் சிரப் பொருளாய் விண்ணவர் மா முனிவர் சித்தர் ஆதி ஆனோர் தெரிவு அரிய பூரணமாய்க் காரணம் கற்பனை கடந்த செல்வம் ஆகிக் கருது அரிய மலரின் மணம் எள்ளில் எண்ணைய் உடல் உயிர் போல் கலந்து எந்நாளும் துரிய நடுவூடு இருந்த பெரிய பொருள் யாது அதனைத் தொழுதல்செய்வாம் #22 விண் ஆதி பூதம் எல்லாம் தன் அகத்தில் அடக்கி வெறு வெளியாய் ஞானக் கண்ணாரக் கண்ட அன்பர் கண்ணூடே ஆனந்த_கடலாய் வேறு ஒன்று எண்ணாதபடிக்கு இரங்கித் தானாகச் செய்து அருளும் இறையே உன்றன் தண் ஆரும் சாந்த அருள்-தனை நினைந்து கர_மலர்கள் தலை மேல் கொள்வாம் #23 விண் நிறைந்த வெளியாய் என் மன_வெளியில் கலந்து அறிவாம் வெளியினூடும் தண் நிறைந்த பேர்_அமுதாய்ச் சதானந்தமான பெருந்தகையே நின்-பால் உள் நிறைந்த பேர்_அன்பால் உள் உருகி மொழி குழறி உவகையாகிக் கண் நிறைந்த புனல் உகுப்பக் கரம் முகிழ்ப்ப நின் அருளைக் கருத்தில்வைப்பாம் #24 ஆதி அந்தம் காட்டாத முதலாய் எம்மை அடிமைக்கா வளர்த்தெடுத்த அன்னை போல நீதி பெறும் குரு ஆகி மன வாக்கு எட்டா நிச்சயமாய்ச் சொச்சமதாய் நிமலம் ஆகி வாதமிடும் சமய நெறிக்கு அரியது ஆகி மெளனத்தோர்-பால் வெளியாய் வயங்காநின்ற சோதியை என் உயிர்த் துணையை நாடிக் கண்ணீர் சொரிய இரு கரம் குவித்துத் தொழுதல்செய்வாம் #25 அகர உயிர் எழுத்து அனைத்தும் ஆகி வேறாய் அமர்ந்தது என அகிலாண்டம் அனைத்தும் ஆகிப் பகர்வன எல்லாம் ஆகி அல்லது ஆகிப் பரம் ஆகிச் சொல் அரிய பான்மை ஆகித் துகள்_அறு சங்கற்பக விகற்பங்கள் எல்லாம் தோயாத அறிவு ஆகிச் சுத்தம் ஆகி நிகர்_இல் பசு பதி ஆன பொருளை நாடி நெட்டுயிர்த்துப் பேர்_அன்பால் நினைதல்செய்வாம்

மேல்

@4 சின்மயானந்தகுரு

#26 அங்கை கொடு மலர் தூவி அங்கம்-அது புளகிப்ப அன்பினால் உருகி விழி நீர் ஆறாக வாராத முத்தியினது ஆவேச ஆசைக் கடற்குள் மூழ்கிச் சங்கர சுயம்புவே சம்புவே எனவும் மொழி தழுதழுத்திட வணங்கும் சன்மார்க்க நெறி இலாத் துன்மார்க்கனேனையும் தண் அருள் கொடுத்து ஆள்வையோ துங்கம் மிகு பக்குவச் சனகன் முதல் முனிவோர்கள் தொழுது அருகில் வீற்றிருப்பச் சொல் அரிய நெறியை ஒரு சொல்லால் உணர்த்தியே சொரூபாநுபூதி காட்டிச் செங்கமல பீடம் மேல் கல்_ஆல் அடிக்குள் வளர் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே #27 ஆக்கை எனும் இடிகரையை மெய் என்ற பாவி நான் அத்துவித வாஞ்சை ஆதல் அரிய கொம்பில் தேனை முடவன் இச்சித்தபடி ஆகும் அறிவு அவிழ இன்பம் தாக்கும் வகை ஏது இ நாள் சரியை கிரியா யோக சாதனம் விடித்தது எல்லாம் சன்மார்க்கம் அல்ல இவை நிற்க என் மார்க்கங்கள் சாராத பேர்_அறிவு-அதாய் வாக்கு மனம் அணுகாத பூரணப் பொருள் வந்து வாய்க்கும்படிக்கு உபாயம் வருவித்து உவட்டாத பேர்_இன்பமான சுக_வாரியினை வாய்மடுத்துத் தேக்கித் திளைக்க நீ முன் நிற்பது என்று காண் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே #28 ஔவியம் இருக்க நான் என்கின்ற ஆணவம் அடைந்திட்டு இருக்க லோபம் அருள்_இன்மை கூடக் கலந்து உள் இருக்க மேல் ஆசாபிசாசம் முதல் ஆம் வெவ்விய குணம் பல இருக்க என் அறிவூடு மெய்யன் நீ வீற்றிருக்க விதி இல்லை என்னிலோ பூரணன் எனும் பெயர் விரிக்கில் உரை வேறும் உளதோ கவ்வு மலம் ஆகின்ற நாகபாசத்தினால் கட்டுண்ட உயிர்கள் மூர்ச்சை கடிது அகல வலிய வரும் ஞான சஞ்சீவியே கதியான பூமி நடுவுள் செவ்விதின் வளர்ந்து ஓங்கு திவ்ய குண_மேருவே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே #29 ஐ வகை எனும் பூதம் ஆதியை வகுத்து அதனுள் அசர சர பேதமான யாவையும் வகுத்து நல் அறிவையும் வகுத்து மறை ஆதி_நூலையும் வகுத்துச் சைவ முதலாம் அளவு_இல் சமயமும் வகுத்து மேல் சமயம் கடந்த மோன சமரசம் வகுத்த நீ உன்னை யான் அணுகவும் தண் அருள் வகுக்கவிலையோ பொய் வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே பொய் இலா மெய்யர் அறிவில் போத பரிபூரண அகண்டிதாகாரமாய்ப் போக்கு_வரவு அற்ற பொருளே தெய்வ மறை முடிவான பிரணவ சொரூபியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே #30 ஐந்து வகை ஆகின்ற பூத பேதத்தினால் ஆகின்ற ஆக்கை நீர் மேல் அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான் அறியாத காலம் எல்லாம் புந்தி மகிழ் உற உண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்த நெறி என்று இருந்தேன் பூராயமாக நினது அருள் வந்து உணர்த்த இவை போன வழி தெரியவில்லை எந்த நிலை பேசினும் இணங்கவிலை அல்லால் இறப்பொடு பிறப்பை உள்ளே எண்ணினால் நெஞ்சு-அது பகீரெனும் துயிலுறாது இரு விழியும் இரவு_பகலாய்ச் செம் தழலின் மெழுகான தங்கம் இவை என்-கொலோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே #31 கார் இட்ட ஆணவக் கருவறையில் அறிவு அற்ற கண் இலாக் குழவியைப் போல் கட்டுண்டு இருந்த எமை வெளியில்விட்டு அல்லலாம் காப்பிட்டு அதற்கு இசைந்த பேரிட்டு மெய் என்று பேசு பாழ்ம் பொய் உடல் பெலக்க விளை அமுதம் ஊட்டிப் பெரிய புவனத்தினிடை போக்கு_வரவு உறுகின்ற பெரிய விளையாட்டு அமைத்திட்டு ஏர் இட்ட தன் சுருதி மொழி தப்பில் நமனை விட்டு இடர் உற உறுக்கி இடர் தீர்த்து இரவு பகல் இல்லாத பேர்_இன்ப வீட்டினில் இசைந்து துயில்கொள்-மின் என்று சீர் இட்ட உலகு அன்னை வடிவான எந்தையே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே #32 கரு மருவு குகை அனைய காயத்தின் நடுவுள் களிம்பு தோய் செம்பு அனைய யான் காண் தக இருக்க நீ ஞான அனல் மூட்டியே கனிவு பெற உள் உருக்கிப் பருவம்-அது அறிந்து நின் அருளான குளிகை கொடு பரிசித்து வேதிசெய்து பத்து_மாற்றுத் தங்கம் ஆக்கியே பணிகொண்ட பக்ஷத்தை என் சொல்லுகேன் அருமை பெறு புகழ் பெற்ற வேதாந்த சித்தாந்தம் ஆதியாம் அந்தம் மீதும் அத்துவித நிலையராய் என்னை ஆண்டு உன் அடிமை ஆனவர்கள் அறிவினூடும் திரு மருவு கல்_ஆல் அடிக் கீழும் வளர்கின்ற சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே #33 கூடுதலுடன் பிரிதல் அற்று நிர்த்தொந்தமாய்க் குவிதலுடன் விரிதல் அற்றுக் குணம் அற்று வரவினொடு போக்கு அற்று நிலையான குறி அற்று மலமும் அற்று நாடுதலும் அற்று மேல் கீழ் நடுப் பக்கம் என நண்ணுதலும் அற்று விந்து நாதம் மற்று ஐ வகைப் பூத பேதமும் அற்று ஞாதுருவின் ஞானம் அற்று வாடுதலும் அற்று மேல் ஒன்று அற்று இரண்டு அற்று வாக்கு அற்று மனமும் அற்று மன்னு பரிபூரணச் சுக_வாரி-தன்னிலே வாய்மடுத்து உண்ட வசமாய்த் தேடுதலும் அற்ற இடம் நிலை என்ற மெளனியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே #34 தாராத அருள் எலாம் தந்து அருள மெளனியாய்த் தாய் அனைய கருணைகாட்டித் தாள்_இணை என் முடி சூட்டி அறிவில் சமாதியே சாசுவத சம்ப்ரதாயம் ஓராமல் மந்திரமும் உன்னாமல் முத்தி நிலை ஒன்றோடு இரண்டு எனாமல் ஒளி எனவும் வெளி எனவும் உரு எனவும் நாதமாம் ஒலி எனவும் உணர்வு அறாமல் பாராது பார்ப்பதே ஏது சாதனம் அற்ற பரம அநுபூதி வாய்க்கும் பண்பு என்று உணர்த்தியது பாராமல் அ நிலை பதிந்த நின் பழ அடியார்-தம் சீராய் இருக்க நினது அருள் வேண்டும் ஐயனே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே #35 போதமாய் ஆதி நடு அந்தமும் இலாததாய்ப் புனிதமாய் அவிகாரமாய்ப் போக்கு_வரவு இல்லாத இன்பமாய் நின்ற நின் பூரணம் புகலிடம்-அதா ஆதரவுவையாமல் அறிவினை மறைப்பது நின் அருள் பின்னும் அறிவு_இன்மை தீர்த்து அறிவித்து நிற்பது நின் அருள் ஆகில் எளியனேற்கு அறிவு ஆவதே அறிவு இலா ஏதம் வரு வகை ஏது வினை ஏது வினை-தனக்கு ஈடான காயம் ஏது என் இச்சாசுதந்தரம் சிறிதும் இலை இக_பரம் இரண்டினுள் மலைவு தீரத் தீது_இல் அருள் கொண்டு இனி உணர்த்தி எனை ஆள்வையோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே #36 பத்தி நெறி நிலைநின்றும் நவ கண்ட பூமிப் பரப்பை வலமாக வந்தும் பரவையிடை மூழ்கியும் நதிகளிடை மூழ்கியும் பசி_தாகம் இன்றி எழுநா மத்தியிடை நின்றும் உதிர் சருகு புனல் வாயு வினை வன் பசி-தனக்கு அடைத்தும் மவுனத்து இருந்தும் உயர் மலை முழை-தனில் புக்கும் மன்னு தசநாடி முற்றும் சுத்திசெய்தும் மூல ப்ராணனோடு அங்கியைச் சோமவட்டத்து அடைத்தும் சொல் அரிய அமுது உண்டும் அற்ப உடல் கற்பங்கள்-தோறும் நிலைநிற்க வீறு சித்திசெய்தும் ஞானம் அலது கதி கூடுமோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே

மேல்

@5 மெளனகுரு வணக்கம்

#37 ஆசை நிகளத்தினை நிர்த்தூளிபட உதறி ஆங்கார முளையை எற்றி அத்துவித மதம் ஆகி மதம் ஆறும் ஆறு ஆக அங்கையின் விலாழி ஆக்கிப் பாச இருள் தன் நிழல் எனச் சுளித்து ஆர்த்து மேல் பார்த்துப் பரந்த மனதைப் பாரித்த கவளமாய்ப் பூரிக்க உண்டு முகபடாம் அன்ன மாயை நூறித் தேசுபெற நீ வைத்த சின்முத்திராங்குசச் செம் கைக்கு உளே அடக்கிச் சின்மயானந்த சுக_வெள்ளம் படிந்து நின் திரு_அருள் பூர்த்தியான வாசம் உறு சற்சாரம் மீது என்னை ஒரு ஞான மத்தகஜம் என வளர்த்தாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே #38 ஐந்து வகை ஆகின்ற பூதம் முதல் நாதமும் அடங்க வெளி ஆக வெளி செய்து அறியாமை அறிவு ஆதி பிரிவாக அறிவார்கள் அறிவாக நின்ற நிலையில் சிந்தை அற நில் என்று சும்மா இருத்தி மேல் சின்மயானந்த வெள்ளம் தேக்கித் திளைத்து நான் அதுவாய் இருக்க நீ செய் சித்ரம் மிக நன்று காண் எந்தை வட ஆல் பரமகுரு வாழ்க வாழ அருளிய நந்தி மரபு வாழ்க என்று அடியர் மனம் மகிழ வேதாகமத் துணிபு இரண்டு இல்லை ஒன்று என்னவே வந்த குருவே வீறு சிவஞான சித்தி நெறி மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே #39 ஆதிக்கம் நல்கினவர் ஆர் இந்த மாயைக்கு என் அறிவு அன்றி இடம் இல்லையோ அந்தரப்புஷ்பமும் கானலின் நீரும் ஓர் அவசரத்து உபயோகமோ போதித்த நிலையையும் மயக்குதே அபயம் நான் புக்க அருள் தோற்றிடாமல் பொய்யான உலகத்தை மெய்யா நிறுத்தி என் புந்திக்குள் இந்த்ரசாலம் சாதிக்குதே இதனை வெல்லவும் உபாயம் நீ தந்து அருள்வது என்று புகல்வாய் சண்மதஸ்தாபனமும் வேதாந்த சித்தாந்த சமரச நிர்வாக நிலையும் மா திக்கொடு அண்டப் பரப்பு எலாம் அறியவே வந்து அருளும் ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே #40 மின் அனைய பொய் உடலை நிலை என்றும் மை இலகு விழி கொண்டு மையல் பூட்டும் மின்னார்கள் இன்பமே மெய் என்றும் வளர் மாடம் மேல்வீடு சொர்க்கம் என்றும் பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி இப் பொய் வேடம் மிகுதி காட்டிப் பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நல் குணம் எலாம் போக்கிலே போகவிட்டுத் தன் நிகர்_இல் லோபாதி பாழ்ம் பேய் பிடித்திடத் தரணி மிசை லோகாயதன் சமய நடை சாராமல் வேதாந்த சித்தாந்த சமரச சிவாநுபூதி மன்ன ஒரு சொல் கொண்டு எனைத் தடுத்தாண்டு அன்பின் வாழ்வித்த ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே #41 போனகம் இருக்கின்ற சாலையிடை வேண்டுவ புசித்தற்கு இருக்குமது போல் புருஷர் பெறு தர்மாதி வேதமுடன் ஆகமம் புகலும் அதினால் ஆம் பயன் ஞான நெறி முக்ய நெறி காட்சி அனுமானம் முதல் நானாவிதங்கள் தேர்ந்து நான் நான் எனக் குளறுபடை புடைபெயர்ந்திடவும் நான்கு சாதனமும் ஓர்ந்திட்டு ஆன நெறியாம் சரியை ஆதி சோபானம் உற்று அணுபக்ஷ சம்புபக்ஷம் ஆம் இரு விகற்பமும் மாயாதி சேவையும் அறிந்து இரண்டு ஒன்று என்னும் ஓர் மானத விகற்பம் அற வென்று நிற்பது நமது மரபு என்ற பரமகுருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே #42 கல்லாத அறிவும் மேல் கேளாத கேள்வியும் கருணை சிறிதேதும் இல்லாக் காட்சியும் கொலை களவு கள் காமம் மாட்சியாக் காதலித்திடும் நெஞ்சமும் பொல்லாத பொய்ம்மொழியும் அல்லாது நன்மைகள் பொருந்து குணம் ஏதும் அறியேன் புருஷர் வடிவானதே அல்லாது கனவிலும் புருஷார்த்தம் ஏதும் இல்லேன் எல்லாம் அறிந்த நீ அறியாதது அன்று எனக்கு எ வண்ணம் உய் வண்ணமோ இருளை இருள் என்றவர்க்கு ஒளி தாரகம் பெறும் எனக்கு நின் அருள் தாரகம் வல்லான் எனும் பெயர் உனக்கு உள்ளதே இந்த வஞ்சகனை ஆள நினையாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே #43 கானகம் இலங்கு புலி பசுவொடு குலாவும் நின் கண் காண மத யானை நீ கைகாட்டவும் கையால் நெகிடிக்கெனப் பெரிய கட்டை மிக ஏந்தி வருமே போனகம் அமைந்தது என அக் காமதேனு நின் பொன் அடியில் நின்று சொலுமே புவிராஜர் கவிராஜர் தவராஜன் என்று உனைப் போற்றி ஜய போற்றி என்பார் ஞான கருணாகர முகம் கண்ட போதிலே நவநாத சித்தர்களும் உன் நட்பினை விரும்புவார் சுகர் வாமதேவர் முதல் ஞானிகளும் உனை மெச்சுவார் வானகமும் மண்ணகமும் வந்து எதிர் வணங்கிடும் உன் மகிமை-அது சொல்ல எளிதோ மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே #44 சருகு சல பக்ஷணிகள் ஒரு கோடி அல்லால் சகோர பக்ஷிகள் போலவே தவள நில ஒழுகு அமிர்த தாரை உண்டு அழியாத தன்மையர் அனந்த கோடி இரு_வினைகள் அற்று இரவு_பகல் என்பது அறியாத ஏகாந்த மோன ஞான இன்ப நிஷ்டையர் கோடி மணிமந்த்ர சித்தி நிலை எய்தினர்கள் கோடி சூழக் குரு மணி இழைத்திட்ட சிங்காதனத்தின் மிசை கொலு வீற்றிருக்கும் நின்னை கும்பிட்டு அனந்தம் முறை தெண்டனிட்டு என் மனக் குறை எலாம் தீரும் வண்ணம் மரு மலர் எடுத்து உன் இரு தாளை அர்ச்சிக்க எனை வா என்று அழைப்பது எந்நாள் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே #45 ஆங்காரம் ஆன குல வேட வெம் பேய் பாழ்த்த ஆணவத்தினும் வலிது காண் அறிவினை மயக்கிடும் நடு அறியவொட்டாது யாதொன்று தொடினும் அதுவாய்த் தாங்காது மொழி பேசும் அரிகரப் பிரமாதி-தம்மொடு சமானம் என்னும் தடை அற்ற தேரில் அஞ்சுரு ஆணி போலவே தன்னில் அசையாது நிற்கும் ஈங்கு ஆர் எனக்கு நிகர் என்ன ப்ரதாபித்து இராவணாகாரம் ஆகி இதய_வெளி எங்கணும் தன் அரசு நாடு செய்திருக்கும் இதனொடு எந்நேரமும் வாங்கா நிலாது அடிமை போராட முடியுமோ மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே #46 பற்று வெகு விதம் ஆகி ஒன்றை விட்டு ஒன்றனைப் பற்றி உழல் கிருமி போலப் பாழ்ம் சிந்தை பெற்ற நான் வெளியாக நின் அருள் பகர்ந்தும் அறியேன் துவிதமோ சிற்றறிவு அது அன்றியும் எவரேனும் ஒரு மொழி திடுக்கென்று உரைத்த போது சிந்தை செவியாகவே பறையறைய உதர வெம் தீ நெஞ்சம் அளவளாவ உற்று உணர உணர்வு அற்று உன்மத்த வெறியினர் போல உளறுவேன் முத்தி மார்க்கம் உணர்வது எப்படி இன்ப_துன்பம் சமானமாய் உறுவது எப்படி ஆயினும் மற்று எனக்கு ஐய நீ சொன்ன ஒரு வார்த்தையினை மலை_இலக்கு என நம்பினேன் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே

மேல்

@6 கருணாகரக்கடவுள்

#47 நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப நிர்விஷய கைவல்யமாம் நிஷ்கள அசங்க சஞ்சலரகித நிர்வசன நிர்த்தொந்த நித்த முக்த தற்பர விஸ்வாதீத வ்யோம பரிபூரண சதானந்த ஞான பகவ சம்பு சிவ சங்கர சர்வேச என்று நான் சர்வ_காலமும் நினைவனோ அற்புத அகோசர நிவிர்த்தி பெறும் அன்பருக்கு ஆனந்த பூர்த்தியான அத்துவித நிச்சய சொரூப சாக்ஷாத்கார அநுபூதி அநுசூதமும் கற்பனை அறக் காண முக்கணுடன் வடநிழல் கண்ணூடு இருந்த குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகரக் கடவுளே #48 மண் ஆதி ஐந்தொடு புறத்தில் உள கருவியும் வாக்கு ஆதி சுரோத்ராதியும் வளர்கின்ற சப்தாதி மனம் ஆதி கலை ஆதி மன்னு சுத்து ஆதியுடனே தொண்ணூற்றொடு ஆறு மற்று உள்ளனவும் மெளனியாய்ச் சொன்ன ஒரு சொல் கொண்டதே தூ வெளியதாய கண்டானந்த சுக_வாரி தோற்றுமதை என் சொல்லுவேன் பண் ஆரும் இசையினொடு பாடிப் படித்து அருள் பான்மை நெறி நின்று தவறாப் பக்குவ விசேஷராய் நெக்குநெக்குருகிப் பணிந்து எழுந்து இரு கை கூப்பிக் கண் ஆறு கரைபுரள நின்ற அன்பரை எலாம் கைவிடாக் காட்சியுறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகரக் கடவுளே #49 எல்லாம் உன் அடிமையே எல்லாம் உன் உடைமையே எல்லாம் உன்னுடைய செயலே எங்கணும் வியாபி நீ என்று சொலும் இயல்பு என்று இருக்கு ஆதி வேதம் எல்லாம் சொல்லால் முழக்கியது மிக்க உபகாரமாச் சொல்லிறந்தவரும் விண்டு சொன்னவையும் இவை நல்ல குருவான பேரும் தொகுத்த நெறி-தானும் இவையே அல்லாமல் இல்லை என நன்றா அறிந்தேன் அறிந்தபடி நின்று சுகம் நான் ஆகாத வண்ணமே இ வண்ணம் ஆயினேன் அதுவும் நினது அருள் என்னவே கல்லாத வறிஞனுக்கு உள்ளே உணர்த்தினை கதிக்கு வகை ஏது புகலாய் கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகரக் கடவுளே #50 பட்டப்பகல் பொழுதை இருள் என்ற மருளர்-தம் பக்ஷமோ எனது பக்ஷம் பார்த்த இடம் எங்கணும் கோத்த நிலை குலையாது பரமவெளியாக ஒரு சொல் திட்டமுடன் மெளனியாய் அருள்செய்து இருக்கவும் சேராமல் ஆர் ஆக நான் சிறுவீடு கட்டி அதில் அடு சோற்றை உண்டுண்டு தேக்கு சிறியார்கள் போல நட்டணையதாக் கற்ற கல்வியும் விவேகமும் நல் நிலயமாக உன்னி நான் என்று நீ என்று இரண்டு இல்லை என்னவே நடுவே முளைத்த மனதைக் கட்ட அறியாமலே வாடினேன் எப்போது கருணைக்கு உரித்தாவனோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகரக் கடவுளே #51 மெய் விடா நா உள்ள மெய்யர் உள் இருந்து நீ மெய்யான மெய்யை எல்லாம் மெய் என உணர்த்தியது மெய் இதற்கு ஐயம் இலை மெய் ஏதும் அறியா வெறும் பொய் விடாப் பொய்யினேன் உள்ளத்து இருந்து தான் பொய்யான பொய்யை எல்லாம் பொய் எனா வண்ணமே புகலவைத்தாய் எனில் புன்மையேன் என் செய்குவேன் மை விடா செழும் நீலகண்ட குருவே விஷ்ணு வடிவான ஞான குருவே மலர் மேவி மறை ஓதும் நான்முகக் குருவே மதங்கள்-தொறும் நின்ற குருவே கைவிடாதே என்ற அன்பருக்கு அன்பாய்க் கருத்தூடு உணர்த்து குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகரக் கடவுளே #52 பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே பாவித்து இறைஞ்ச ஆங்கே பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அப் பனி மலர் எடுக்க மனமும் நண்ணேன் அலாமல் இரு கை-தான் குவிக்க எனில் நாணும் என் உளம் நிற்றி நீ நான் கும்பிடும் போது அரைக் கும்பிடு ஆதலால் நான் பூசை செய்யல் முறையோ விண்ணே விண் ஆதி ஆம் பூதமே நாதமே வேதமே வேதாந்தமே மே தக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள் வித்தே அ வித்தின் முளையே கண்ணே கருத்தே என் எண்ணே எழுத்தே கதிக்கான மோன வடிவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகரக் கடவுளே #53 சந்ததமும் வேத மொழி யாதொன்று பற்றின் அது தான் வந்து முற்றும் எனலால் சகம் மீது இருந்தாலும் மரணம் உண்டு என்பது சதா_நிஷ்டர் நினைவதில்லை சிந்தை அறியார்க்கு ஈது போதிப்பது அல்லவே செப்பினும் வெகு தர்க்கமாம் திவ்ய குண மார்க்கண்டர் சுகர் ஆதி முனிவோர்கள் சித்தாந்த நித்யர் அலரோ இந்த்ராதி தேவதைகள் பிரமாதி கடவுளர் இருக்கு ஆதி வேத முனிவர் எண் அரிய கணநாதர் நவநாத சித்தர்கள் இரவி மதி ஆதியோர்கள் கந்தருவர் கின்னரர்கள் மற்றையர்கள் யாவரும் கை குவித்திடு தெய்வமே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகரக் கடவுளே #54 துள்ளும் அறியா மனது பலிகொடுத்தேன் கர்ம துஷ்ட_தேவதைகள் இல்லை துரிய நிறை சாந்த_தேவதையாம் உனக்கே தொழும்பன் அன்பு அபிஷேக நீர் உள் உறையில் என் ஆவி நைவேத்தியம் ப்ராணன் ஓங்கும் மதி தூப தீபம் ஒருக்காலம் அன்று இது சதா_கால பூசையா ஒப்புவித்தேன் கருணைகூர் தெள்ளி மறை வடியிட்ட அமுதப் பிழம்பே தெளிந்த தேனே சீனியே திவ்ய ரசம் யாவும் திரண்டு ஒழுகு பாகே தெவிட்டாத ஆனந்தமே கள்ளன் அறிவூடுமே மெள்ளமெள வெளியாய்க் கலக்க வரும் நல்ல உறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகரக் கடவுளே #55 உடல் குழைய என்பு எலாம் நெக்குருக விழி நீர்கள் ஊற்று என வெதும்பி ஊற்ற ஊசி காந்தத்தினைக் கண்டு அணுகல் போலவே ஓர் உறவும் உன்னிஉன்னிப் படபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குறப் பாடி ஆடிக் குதித்துப் பனி மதி முகத்திலே நிலவு அனைய புன்னகை பரப்பி ஆர்த்தார்த்து எழுந்து மடல் அவிழும் மலர் அனைய கை விரித்துக் கூப்பி வானே அ வானில் இன்ப மழையே மழைத் தாரை வெள்ளமே நீடூழி வாழி என வாழ்த்தி ஏத்தும் கடல் மடை திறந்து அனைய அன்பர் அன்புக்கு எளியை கல்_நெஞ்சனுக்கு எளியையோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகரக் கடவுளே #56 இங்கு அற்றபடி அங்கும் என அறியும் நல் அறிஞர் எக்காலமும் உதவுவார் இன்_சொல் தவறார் பொய்மையாம் இழுக்கு உரையார் இரங்குவார் கொலைகள் பயிலார் சங்கற்ப சித்தர் அவர் உள்ளக் கருத்தில் உறை சாக்ஷி நீ இக_பரத்தும் சந்தான கற்பகத் தேவாய் இருந்தே சமஸ்த இன்பமும் உதவுவாய் சிங்கத்தை ஒத்து என்னைப் பாய வரு வினையினைச் சேதிக்க வரு சிம்புளே சிந்தாகுலத் திமிரம் அகல வரு பானுவே தீனனேன் கரையேறவே கங்கு அற்ற பேர்_ஆசை வெள்ளத்தின் வளர் அருள் ககன வட்டக் கப்பலே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகரக் கடவுளே

மேல்

@7 சித்தர்கணம்

#57 திக்கொடு திக்_அந்தமும் மன_வேகம் என்னவே சென்று ஓடி ஆடி வருவீர் செம்பொன் மக மேருவொடு குண மேரு என்னவே திகழ் துருவம் அளவு அளாவி உக்ரம் மிகு சக்ரதரன் என்ன நிற்பீர் கையில் உழுந்து அமிழும் ஆசமனமா ஓர் ஏழு கடலையும் பருக வல்லீர் இந்த்ரன் உலகும் அயிராவதமுமே கைக்கு எளிய பந்தா எடுத்து விளையாடுவீர் ககன வட்டத்தை எல்லாம் கடுகிடை இருத்தியே அஷ்டகுல வெற்பையும் காட்டுவீர் மேலும்மேலும் மிக்க சித்திகள் எலாம் வல்ல நீர் அடிமை முன் விளங்கு வரு சித்தி இலிரோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தகச் சித்தர் கணமே #58 பாட்டு அளி துதைந்து வளர் கற்பக நல் நீழலைப் பாரினிடை வரவழைப்பீர் பத்ம_நிதி சங்க_நிதி இரு பாரிசத்திலும் பணிசெய்யும் தொழிலாளர் போல் கேட்டது கொடுத்து வர நிற்கவைப்பீர் பிச்சை கேட்டுப் பிழைப்போரையும் கிரீட_பதி ஆக்குவீர் கற்பாந்த வெள்ளம் ஒரு கேணியிடை குறுக வைப்பீர் ஓட்டினை எடுத்து ஆயிரத்தெட்டு மாற்றாக ஒளி விடும் பொன் ஆக்குவீர் உரகனும் இளைப்பாற யோக தண்டத்திலே உலகு சுமையாக அருளால் மீட்டிடவும் வல்ல நீர் என் மன_கல்லை அனல் மெழுகு ஆக்கி வைப்பது அரிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தகச் சித்தர் கணமே #59 பாரொடு நல் நீர் ஆதி ஒன்றொடு ஒன்றாகவே பற்றி லயம் ஆம் போதினில் பரவெளியின் மருவுவீர் கற்பாந்த வெள்ளம் பரந்திடின் அதற்கும் ஈதே நீரில் உறை வண்டாய்த் துவண்டு சிவயோக நிலை நிற்பீர் விகற்பமாகி நெடிய முகில் ஏழும் பரந்து வருஷிக்கிலோ நிலவு மதி மண்டலமதே ஊர் என விளங்குவீர் பிரமாதி முடிவில் விடை ஊர்தி அருளால் உலவுவீர் உலகங்கள் கீழ்மேலவாகப் பெரும் காற்று உலாவின் நல் தாரணையினால் மேரு என அசையாமல் நிற்க வல்லீர் உமது மே தக்க சித்தி எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தகச் சித்தர் கணமே #60 எண் அரிய பிறவி-தனில் மானுடப் பிறவி-தான் யாதினும் அரிதரிது காண் இப் பிறவி தப்பினால் எப் பிறவி வாய்க்குமோ ஏது வருமோ அறிகிலேன் கண் அகல் நிலத்து நான் உள்ள பொழுதே அருள் ககன வட்டத்தில் நின்று கால் ஊன்றி நின்று பொழி ஆனந்த முகிலொடு கலந்து மதி அவசமுறவே பண்ணுவது நன்மை இ நிலை பதியும் மட்டுமே பதியாய் இருந்த தேகப் பவுரி குலையாமலே கவுரி குண்டலி ஆயி பண்ணவி-தன் அருளினாலே விண் நிலவும் மதி அமுதம் ஒழியாது பொழியவே வேண்டுவேன் உமது அடிமை நான் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தகச் சித்தர் கணமே #61 பொய் திகழும் உலக நடை என் சொல்கேன் என் சொல்கேன் பொழுதுபோக்கு ஏது என்னிலோ பொய் உடல் நிமித்தம் புசிப்புக் கலைந்திடல் புசித்த பின் கண்ணுறங்கல் கை_தவம் அலாமல் இது செய் தவம்-அது அல்லவே கண்கெட்டபேர்க்கும் வெளியாய்க் கண்டது இது விண்டு இதைக் கண்டித்து நிற்றல் எக் காலமோ அதை அறிகிலேன் மை திகழும் முகில் இனம் குடை நிழற்றிட வட்ட வரையினொடு செம்பொன் மேரு மால் வரையின் முதுகூடும் யோகதண்டக் கோல் வரைந்து சய விருது காட்டி மெய் திகழும் அஷ்டாங்க யோக பூமிக்குள் வளர் வேந்தரே குண_சாந்தரே வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தகச் சித்தர் கணமே #62 கெச துரக முதலான சதுரங்க மன ஆதி கேள்வியின் இசைந்து நிற்பக் கெடி கொண்ட தலம் ஆறு மு_மண்டலத்திலும் கிள்ளாக்குச் செல்ல மிக்க தெச விதம்-அதாய் நின்ற நாதங்கள் ஓலிடச் சிங்காசனாதிபர்களாய்த் திக்குத் திக்_அந்தமும் பூரண மதிக் குடை திகழ்ந்திட வசந்த காலம் இசைய மலர் மீது உறை மணம் போல ஆனந்தம் இதயம் மேல் கொள்ளும் வண்ணம் என்றைக்கும் அழியாத சிவராச யோகராய் இந்த்ராதி தேவர்கள் எலாம் விஜய ஜய ஜய என்ன ஆசி சொலவே கொலுவிருக்கும் நும் பெருமை எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தகச் சித்தர் கணமே #63 ஆணிலே பெண்ணிலே என் போல ஒரு பேதை அகிலத்தின் மிசை உள்ளதோ ஆடிய கறங்கு போல் ஓடி உழல் சிந்தையை அடக்கி ஒரு கணமேனும் யான் காணிலேன் திரு_அருளை அல்லாது மெளனியாய்க் கண் மூடி ஓடும் மூச்சைக் கட்டிக் கலா மதியை முட்டவே மூல வெம் கனலினை எழுப்ப நினைவும் பூணிலேன் இற்றை நாள் கற்றதும் கேட்டதும் போக்கிலே போகவிட்டுப் பொய் உலகன் ஆயினேன் நாயினும் கடையான புன்மையேன் இன்னம் இன்னம் வீணிலே அலையாமல் மலை_இலக்கு ஆக நீர் வெளிப்படத் தோற்றல் வேண்டும் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தகச் சித்தர் கணமே #64 கன்னல்_அமுது எனவும் முக்கனி எனவும் வாய் ஊறு கண்டு எனவும் அடியெடுத்துக் கடவுளர்கள் தந்தது அல அழுதழுது பேய் போல் கருத்தில் எழுகின்ற எல்லாம் என்னது அறியாமை அறிவு என்னும் இரு பகுதியால் ஈட்டு தமிழ் என் தமிழினுக்கு இன்னல் பகராது உலகம் ஆராமை மேலிட்டு இருத்தலால் இத் தமிழையே சொன்னவன் யாவன் அவன் முத்தி சித்திகள் எலாம் தோய்ந்த நெறியே படித்தீர் சொல்லும் என அவர் நீங்கள் சொன்ன அவையில் சிறிது தோய்ந்த குண_சாந்தன் எனவே மின்னல் பெறவே சொல்ல அச் சொல் கேட்டு அடிமை மனம் விகசிப்பது எந்த நாளோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தகச் சித்தர் கணமே #65 பொற்பினொடு கை காலில் வள் உகிர் படைத்தலால் போந்து இடை ஒடுக்கமுறலால் பொலிவான வெண்_நீறு பூசியே அருள்கொண்டு பூரித்த எண் நீர்மையால் எல் பட விளங்கு ககனத்தில் இமையா விழி இசைந்து மேல் நோக்கம் உறலால் இரவு_பகல் இருளான கன தந்தி பட நூறி இதயம் களித்திடுதலால் பற்பல விதம் கொண்ட புலி கலையின் உரியது படைத்து ப்ரதாபம் உறலால் பனி வெயில்கள் புகுதாமல் நெடிய வான் தொடர் நெடிய பரு மர வனங்கள் ஆரும் வெற்பினிடை உறைதலால் தவராஜசிங்கம் என மிக்கோர் உமைப் புகழ்வர் காண் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தகச் சித்தர் கணமே #66 கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் கற்றும் அறிவில்லாத என் கர்மத்தை என் சொல்கேன் மதியை என் சொல்லுகேன் கைவல்ய ஞான நீதி நல்லோர் உரைக்கிலோ கர்மம் முக்கியம் என்று நாட்டுவேன் கர்மம் ஒருவன் நாட்டினாலோ பழய ஞானம் முக்கியம் என்று நவிலுவேன் வடமொழியிலே வல்லான் ஒருத்தன் வரவும் த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் வல்ல தமிழ் அறிஞர் வரின் அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன் வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகை வந்த வித்தை என் முத்தி தருமோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தகச் சித்தர் கணமே

மேல்

@8 ஆனந்தமானபரம்

#67 கொல்லாமை எத்தனை குண_கேட்டை நீக்கும் அக் குணம் ஒன்றும் ஒன்றிலேன்-பால் கோரம் எத்தனை பக்ஷபாதம் எத்தனை வன்_குணங்கள் எத்தனை கொடிய பாழ்ம் கல்லாமை எத்தனை அகந்தை எத்தனை மனக் கள்ளம் எத்தனை உள்ள சற் காரியம் சொல்லிடினும் அறியாமை எத்தனை கதிக்கென்று அமைத்த அருளில் செல்லாமை எத்தனை விர்தா கோஷ்டி என்னிலோ செல்வது எத்தனை முயற்சி சிந்தை எத்தனை சலனம் இந்த்ரஜாலம் போன்ற தேகத்தில் வாஞ்சை முதலாய் அல்லாமை எத்தனை அமைத்தனை உனக்கு அடிமை ஆனேன் இவைக்கும் ஆளோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே #68 தெருள் ஆகி மருள் ஆகி உழலும் மனமாய் மனம் சேர்ந்து வளர் சித்து ஆகி அச் சித்து எலாம் சூழ்ந்த சிவ சித்தாய் விசித்ரமாய்த் திரம் ஆகி நானாவிதப் பொருள் ஆகி அப் பொருளை அறி பொறியும் ஆகி ஐம்_புலனுமாய் ஐம்_பூதமாய்ப் புறமுமாய் அகமுமாய்த் தூரம் சமீபமாய்ப் போக்கொடு வரத்தும் ஆகி இருள் ஆகி ஒளி ஆகி நன்மை தீமையும் ஆகி இன்று ஆகி நாளை ஆகி என்றுமாய் ஒன்றுமாய்ப் பலவுமாய் யாவுமாய் இவை அல்லவாய நின்னை அருள் ஆகி நின்றவர்கள் அறிவது அல்லால் ஒருவர் அறிவதற்கு எளிதாகுமோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே #69 மாறுபடு தர்க்கம் தொடுக்க அறிவார் சாண் வயிற்றின் பொருட்டதாக மண்டலமும் விண்டலமும் ஒன்றாகி மனது உழல மால் ஆகி நிற்க அறிவார் வேறுபடு வேடங்கள் கொள்ள அறிவார் ஒன்றை மெணமெணென்று அகம் வேறதாம் வித்தை அறிவார் எமைப் போலவே சந்தை போல் மெய்ந்நூல் விரிக்க அறிவார் சீறு புலி போல் சீறி மூச்சைப்பிடித்து விழி செக்கச் சிவக்க அறிவார் திரம் என்று தந்தம் மதத்தையே தாமதச் செய்கையொடும் உளற அறிவார் ஆறு சமயங்கள்-தொறும் வேறுவேறாகி விளையாடும் உனை யாவர் அறிவார் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே #70 காய் இலை உதிர்ந்த கனி சருகு புனல் மண்டிய கடும் பசி தனக்கு அடைத்தும் கார் வரையின் முழையில் கருங்கல் போல் அசையாது கண் மூடி நெடிது இருந்தும் தீயினிடை வைகியும் தோயம்-அதில் மூழ்கியும் தேகங்கள் என்பெலும்பாய்த் தெரிய நின்றும் சென்னி மயிர்கள் கூடாக் குருவி தெற்ற வெயிலூடு இருந்தும் வாயுவை அடக்கியும் மனதினை அடக்கியும் மெளனத்திலே இருந்தும் மதி மண்டலத்திலே கனல் செல்ல அமுது உண்டு வனமூடு இருந்தும் அறிஞர் ஆயும் மறை முடிவான அருள் நாடினார் அடிமை அகிலத்தை நாடல் முறையோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே #71 சுத்தமும் அசுத்தமும் துக்க சுக பேதமும் தொந்தமுடன் நிர்த்தொந்தமும் ஸ்தூலமொடு சூக்ஷ்மமும் ஆசையும் நிராசையும் சொல்லும் ஒரு சொல்லின் முடிவும் பெத்தமொடு முத்தியும் பாவமொடு அபாவமும் பேதமொடு அபேத நிலையும் பெருமையொடு சிறுமையும் அருமையுடன் எளிமையும் பெண்ணினுடன் ஆணும் மற்றும் நித்தமும் அநித்தமும் அஞ்சன நிரஞ்சனமும் நிஷ்களமும் நிகழ் சகளமும் நீதியும் அநீதியும் ஆதியோடு அநாதியும் நிர்விஷய விஷய வடிவும் அத்தனையும் நீ அலது எள்ளத்தனையும் இல்லை எனில் யாங்கள் உனை அன்றி உண்டோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே #72 கார் ஆரும் ஆணவக் காட்டைக் களைந்து அறக்கண்டு அகங்காரம் என்னும் கல்லைப் பிளந்து நெஞ்சகமான பூமி வெளி காணத் திருத்தி மேன்மேல் பார் ஆதி அறியாத மோனமாம் வித்தைப் பதித்து அன்பு நீர் ஆகவே பாய்ச்சி அது பயிராகும் மட்டும் மா மாயை வன் பறவை அணுகாத வண்ணம் நேராக நின்று விளை போகம் புசித்து உய்ந்த நின் அன்பர் கூட்டம் எய்த நினைவின்படிக்கு நீ முன் நின்று காப்பதே நின் அருள் பாரம் என்றும் ஆராரும் அறியாத சூது ஆன வெளியில் வெளி ஆகின்ற துரிய மயமே அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே #73 வான் ஆதி பூதமாய் அகிலாண்ட கோடியாய் மலை ஆகி வளை கடலுமாய் மதி ஆகி இரவியாய் மற்று உள எலாம் ஆகி வான் கருணை வெள்ளம் ஆகி நான் ஆகி நின்றவனும் நீ ஆகி நின்றிடவும் நான் என்பது அற்றிடாதே நான்நான் எனக் குளறி நானா விகாரியாய் நான் அறிந்து அறியாமையாய்ப் போனால் அதிட்ட வலி வெல்ல எளிதோ பகல் பொழுது புகும் முன் கண் மூடிப் பொய்த் துகில்கொள்வான்-தனை எழுப்ப வசமோ இனிப் போதிப்பது எந்த நெறியை ஆனாலும் என் கொடுமை அநியாயம் அநியாயம் ஆர்-பால் எடுத்து மொழிவேன் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே #74 பொய்யினேன் புலையினேன் கொலையினேன் நின் அருள் புலப்பட அறிந்து நிலையாப் புன்மையேன் கல்லாத தன்மையேன் நன்மை போல் பொருள் அலாப் பொருளை நாடும் வெய்யனேன் வெகுளியேன் வெறியனேன் சிறியனேன் வினையினேன் என்று என்னை நீ விட்டுவிட நினைவையேல் தட்டழிவது அல்லாது வேறு கதி ஏது புகலாய் துய்யனே மெய்யனே உயிரினுக்குயிரான துணைவனே இணை ஒன்று இலாத் துரியனே துரியமும் காணா அதீதனே சுருதி முடி மீது இருந்த ஐயனே அப்பனே எனும் அறிஞர் அறிவை விட்டு அகலாத கருணை வடிவே அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே #75 எத்தனை விதங்கள்-தான் கற்கினும் கேட்கினும் என் இதயமும் ஒடுங்கவில்லை யான் எனும் அகந்தை-தான் எள்ளளவும் மாறவிலை யாதினும் அபிமானம் என் சித்தம் மிசை குடிகொண்டது ஈகையொடு இரக்கம் என் சென்மத்து நான் அறிகிலேன் சீலமொடு தவ விரதம் ஒரு கனவிலாயினும் தெரிசனம் கண்டும் அறியேன் பொய்த்த மொழி அல்லால் மருந்துக்கும் மெய்ம் மொழி புகன்றிடேன் பிறர் கேட்கவே போதிப்பது அல்லாது சும்மா இருந்து அருள் பொருந்திடாப் பேதை நானே அத்தனை குண_கேடர் கண்டதாக் கேட்டதா அவனி மிசை உண்டோ சொலாய் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே #76 எக்காலமும் தனக்கென்ன ஒரு செயல் இலா ஏழை நீ என்று இருந்திட்டு எனது ஆவி உடல் பொருளும் மெளனியாய் வந்து கை ஏற்று நமது என்ற அன்றே பொய்க் கால தேசமும் பொய்ப் பொருளில் வாஞ்சையும் பொய் உடலை மெய் என்னலும் பொய் உறவு பற்றலும் பொய் ஆகும் நான் என்னல் பொய்யினும் பொய் ஆகையால் மைக் கால் இருட்டு அனைய இருள் இல்லை இரு_வினைகள் வந்து ஏற வழியும் இல்லை மனம் இல்லை அ மனத்து இனம் இல்லை வேறும் ஒரு வரவு இல்லை போக்கும் இல்லை அக் காலம் இக் காலம் என்பது இலை எல்லாம் அதீதமயம் ஆனது அன்றோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே

மேல்

@9 சுகவாரி

#77 இன் அமுது கனி பாகு கற்கண்டு சீனி தேன் என ருசித்திட வலிய வந்து இன்பம் கொடுத்த நினை எந்நேரம் நின் அன்பர் இடையறாது உருகி நாடி உன்னிய கருத்து அவிழ உரை குளறி உடல் எங்கும் ஓய்ந்து அயர்ந்து அவசமாகி உணர்வு அரிய பேர்_இன்ப அநுபூதி உணர்விலே உணர்வார்கள் உள்ளபடி காண் கன்னிகை ஒருத்தி சிற்றின்பம் வேம்பு என்னினும் கைக்கொள்வள் பக்குவத்தில் கணவன் அருள் பெறின் முனே சொன்னவாறு என் எனக் கருதி நகையாவள் அது போல் சொன்னபடி கேட்கும் இப் பேதைக்கு நின் கருணை தோற்றில் சுகாரம்பமாம் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே #78 அன்பின் வழி அறியாத என்னைத் தொடர்ந்து என்னை அறியாத பக்குவத்தே ஆசைப் பெருக்கைப் பெருக்கிக் கொடுத்து நான் அற்றேன் அலந்தேன் என என் புலன் மயங்கவே பித்தேற்றிவிட்டாய் இரங்கி ஒரு வழியாயினும் இன்ப_வெள்ளமாக வந்து உள்ளம் களிக்கவே எனை நீ கலந்தது உண்டோ தன் பருவ மலருக்கு மணம் உண்டு வண்டு உண்டு தண் முகை-தனக்கும் உண்டோ தமியனேற்கு இவ்வணம் திரு_உளம் இரங்காத தன்மையால் தனி இருந்து துன்பமுறின் எங்ஙனே அழியாத நின் அன்பர் சுகம் வந்து வாய்க்கும் உரையாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே #79 கல்லேனும் ஐய ஒரு காலத்தில் உருகும் என் கல்_நெஞ்சம் உருகவிலையே கருணைக்கு இணங்காத வன்மையையும் நான்முகன் கற்பிக்க ஒரு கடவுளோ வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும் பெரு வழக்குக்கு இழுக்கும் உண்டோ வானமாய் நின்று இன்ப மழையாய் இறங்கி எனை வாழ்விப்பது உன் பரம் காண் பொல்லாத சேய் எனில் தாய் தள்ளல் நீதமோ புகலிடம் பிறிதும் உண்டோ பொய் வார்த்தை சொல்லிலோ திரு_அருட்கு அயலுமாய்ப் புன்மையேன் ஆவன் அந்தோ சொல்லால் முழக்கிலோ சுகம் இல்லை மெளனியாய்ச் சும்மா இருக்க அருளாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே #80 என்பு எலாம் நெக்கு உடைய ரோமம் சிலிர்ப்ப உடல் இளக மனது அழலின் மெழுகாய் இடையறாது உருக வரும் மழை போல் இரங்கியே இரு விழிகள் நீர் இறைப்ப அன்பினால் மூர்ச்சித்த அன்பருக்கு அங்ஙனே அமிர்த சஞ்சீவி போல் வந்து ஆனந்த மழை பொழிவை உள்ளன்பு இலாத எனை யார்க்காக அடிமைகொண்டாய் புன் புலால் மயிர் தோல் நரம்பு என்பு மொய்த்திடு புலைக் குடிலில் அருவருப்புப் பொய் அல்லவே இதனை மெய் என்று நம்பி என் புந்தி செலுமோ பாழிலே துன்பமாய் அலையவோ உலக நடை ஐய ஒரு சொப்பனத்திலும் வேண்டிலேன் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே #81 வெந்நீர் பொறாது என் உடல் காலில் முள் தைக்கவும் வெடுக்கென்று அசைத்து எடுத்தால் விழி இமைத்து அங்ஙனே தண் அருளை நாடுவேன் வேறு ஒன்றை ஒருவர் கொல்லின் அந்நேரம் ஐயோ என் முகம் வாடி நிற்பதுவும் ஐய நின் அருள் அறியுமே ஆனாலும் மெத்தப் பயந்தவன் யான் என்னை ஆண்ட நீ கைவிடாதே இந்நேரம் என்று இலை உடல் சுமை அது ஆகவும் எடுத்தால் இறக்க என்றே எங்கெங்கும் ஒரு தீர்வை ஆயம் உண்டு ஆயினும் இறைஞ்சு சுகர் ஆதியான தொல் நீர்மையாளர்க்கு மானுடன் வகுத்த அருள் துணை என்று நம்புகின்றேன் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே #82 பற்றுவன அற்றிடு நிராசை என்று ஒரு பூமி பற்றிப் பிடிக்கும் யோகப் பாங்கில் பிராணலயம் என்னும் ஒரு பூமி இவை பற்றின் மனம் அறும் என்னவே கற்றை அம் சடை மெளனி தானே கனிந்த கனி கனிவிக்க வந்த கனி போல் கண்டது இ நெறி எனத் திரு_உளக் கனிவினொடு கனிவாய் திறந்தும் ஒன்றைப் பெற்றவனும் அல்லேன் பெறாதவனும் அல்லேன் பெருக்கத் தவித்து உளறியே பெண் நீர்மை என்ன இரு கண்ணீர் இறைத்து நான் பேய் போல் இருக்க உலகம் சுற்றி நகைசெய்யவே உலையவிட்டாய் எனில் சொல்ல இனி வாயும் உண்டோ சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே #83 அரும் பொனே மணியே என் அன்பே என் அன்பான அறிவே என் அறிவில் ஊறும் ஆனந்த_வெள்ளமே என்றுஎன்று பாடினேன் ஆடினேன் நாடிநாடி விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன் மெய் சிலிர்த்து இரு கை கூப்பி விண் மாரி என என் இரு கண் மாரி பெய்யவே வேசற்று அயர்ந்தேன் இனி யான் இரும்பு நேர் நெஞ்சகக் கள்வன் ஆனாலும் உனை இடைவிட்டு நின்றது உண்டோ என்று நீ அன்று யான் உன் அடிமை அல்லவோ யாதேனும் அறியா வெறும் துரும்பு_அனேன் என்னினும் கைவிடுதல் நீதியோ தொண்டரொடு கூட்டு கண்டாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே #84 பார் ஆதி அண்டங்கள் அத்தனையும் வைக்கின்ற பரவெளியின் உண்மை காட்டிப் பற்று மன_வெளி காட்டி மன_வெளியினில் தோய்ந்த பாவியேன் பரிசு காட்டித் தாராளமாய் நிற்க நிர்ச்சந்தை காட்டிச் சதா_கால நிஷ்டை எனவே சகச நிலை காட்டினை சுகாதீத நிலயம்-தனைக் காட்ட நாள் செல்லுமோ கார் ஆர எண் அரும் அனந்த கோடிகள் நின்று கால் ஊன்றி மழை பொழிதல் போல் கால் வீசி மின்னிப் படர்ந்து பரவெளி எலாம் கம்மி ஆனந்த_வெள்ளம் சோராது பொழியவே கருணையின் முழங்கியே தொண்டரைக் கூவும் முகிலே சுத்த நிர்க்குணமான பரதெய்வ மேபரஞ் சோதியே சுகவாரியே #85 பேதித்த சமயமோ ஒன்று சொனபடி ஒன்று பேசாது துறவு ஆகியே பேசாத பெரியோர்கள் நிருவிகற்பத்தினால் பேசார்கள் பரமகுருவாய்ப் போதிக்கும் முக்கண் இறை நேர்மையாய்க் கைக்கொண்டு போதிப்பது ஆச்சு அறிவிலே போக்கு_வரவு அற இன்ப நீக்கம் அற வசனமாப் போதிப்பது எவர் ஐயனே சாதித்த சாதனமும் யோகியர்கள் நமது என்று சங்கிப்பர் ஆதலாலே தன்னிலே தானாய் அயர்ந்துவிடுவோம் எனத் தனி இருந்திடின் அங்ஙனே சோதிக்க மன மாயை-தனை ஏவினால் அடிமை சுகமாவது எப்படி சொலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே #86 அண்ட முடி-தன்னிலோ பகிரண்டம்-அதனிலோ அலரி மண்டல நடுவிலோ அனல் நடுவிலோ அமிர்த மதி நடுவிலோ அன்பர் அகம் உருகி மலர்கள் தூவித் தெண்டமிட வரும் மூர்த்தி நிலையிலோ திக்குத் திக்_அந்தத்திலோ வெளியிலோ திகழ் விந்து நாத நிலை-தன்னிலோ வேதாந்த சித்தாந்த நிலை-தன்னிலோ கண்ட பல பொருளிலோ காணாத நிலை எனக் கண்ட சூனியம்-அதனிலோ காலம் ஒரு மூன்றிலோ பிறவி நிலை-தன்னிலோ கருவி கரணங்கள் ஓய்ந்த தொண்டர்களிடத்திலோ நீ வீற்றிருப்பது தொழும்பனேற்கு உளவு புகலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே #87 எந்த நாள் கருணைக்கு உரித்தாகும் நாள் எனவும் என் இதயம் எனை வாட்டுதே ஏதென்று சொல்லுவேன் முன்னொடு பின் மலைவு அறவும் இற்றை வரை யாது பெற்றேன் பந்தமானதில் இட்ட மெழுகு ஆகி உள்ளம் பதைத்துப்பதைத்து உருகவோ பரம சுகமானது பொறுப்பு அரிய துயரமாய்ப் பலகாலும் மூர்ச்சிப்பதோ சிந்தையானதும் அறிவை என் அறிவில் அறிவான தெய்வம் நீ அன்றி உளதோ தேக நிலை அல்லவே உடை கப்பல் கப்பலாய்த் திரை ஆழி ஊடு செலுமோ சொந்தமாய் ஆண்ட நீ அறியார்கள் போலவே துன்பத்தில் ஆழ்த்தல் முறையோ சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே #88 எந்நாளும் உடலிலே உயிராம் உனைப் போல் இருக்கவிலையோ மனது எனும் யானும் என் நட்பாம் பிராணனும் எமைச் சடம்-அது என்று உனைச் சித்து என்றுமே அந்நாளில் எவனோ பிரித்தான் அதைக் கேட்ட அன்று முதல் இன்று வரையும் அநியாயமாய் எமை அடக்கிக் குறுக்கே அடர்ந்து அரசுபண்ணி எங்கள் முன்னாக நீ என்ன கோட்டை கொண்டாய் என்று மூட மனம் மிகவும் ஏச மூண்டு எரியும் அனல் இட்ட மெழுகாய் உளம் கருகல் முறைமையோ பதினாயிரம் சொன்னாலும் நின் அருள் இரங்கவிலையே இனிச் சுகம் வருவது எப்படி சொலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே

மேல்

@10 எங்கு நிறைகின்ற பொருள்

#89 அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது எனும் பெரிய ஆப்தர் மொழி ஒன்று கண்டால் அறிவாவது ஏது சில அறியாமை ஏது இவை அறிந்தார்கள் அறியார்கள் ஆர் மெளனமொடு இருந்தது ஆர் என் போல் உடம்பு எலாம் வாயாய்ப் பிதற்றுமவர் ஆர் மனது எனவும் ஒரு மாயை எங்கே இருந்து வரும் வன்மையொடு இரக்கம் எங்கே புவனம் படைப்பது என் கர்த்தவியம் எவ்விடம் பூத பேதங்கள் எவிடம் பொய் மெய் இதம் அகிதமே வரும் நன்மை தீமையொடு பொறை பொறாமையும் எவ்விடம் எவர் சிறியர் எவர் பெரியர் எவர் உறவர் எவர் பகைஞர் யாதும் உனை அன்றி உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே #90 அன்னே அனே எனும் சில சமயம் நின்னையே ஐயா ஐயா என்னவே அலறிடும் சில சமயம் அல்லாது பேய் போல அலறியே ஒன்றும் இலவாய்ப் பின் ஏதும் அறியாமல் ஒன்றை விட்டு ஒன்றைப் பிதற்றிடும் சில சமயமேல் பேசு அரிய ஒளி என்றும் வெளி என்றும் நாதாதி பிறவுமே நிலயம் என்றும் தன் நேர் இலாதது ஓர் அணு என்றும் மூ விதத் தன்மையாம் காலம் என்றும் சாற்றிடும் சில சமயம் இவை ஆகி வேறதாய்ச் சதாஞான ஆனந்தமாய் என்னே எனே கருணை விளையாட்டு இருந்தவாறு எம்_அனோர் புகல எளிதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே #91 வேதமுடன் ஆகம புராணம் இதிகாசம் முதல் வேறும் உள கலைகள் எல்லாம் மிக்காக அத்துவித துவித மார்க்கத்தையே விரிவாய் எடுத்துரைக்கும் ஓது அரிய துவிதமே அத்துவித ஞானத்தை உண்டுபணும் ஞானம் ஆகும் ஊகம் அனுபவ வசனம் மூன்றுக்கும் ஒவ்வும் ஈது உலகவாதிகள் சம்மதம் ஆதலின் எனக்கு இனிச் சரியை ஆதிகள் போதும் யாதொன்று பாவிக்க நான் அது ஆதலால் உன்னை நான் என்று பாவிக்கின் அத்துவித மார்க்கம் உறலாம் ஏது பாவித்திடினும் அது ஆகி வந்து அருள்செய் எந்தை நீ குறையும் உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே #92 சொல்லானதில் சற்றும் வாராத பிள்ளையைத் தொட்டில் வைத்து ஆட்டிஆட்டித் தொடையினைக் கிள்ளல் போல் சங்கற்பம் ஒன்றில் தொடுக்கும் தொடுத்து அழிக்கும் பொல்லாத வாதனை எனும் சப்த பூமியிடை போந்துதலை சுற்றி ஆடும் புருஷனில் அடங்காத பூவை போல் தானே புறம் போந்து சஞ்சரிக்கும் கல்லோடு இரும்புக்கும் மிக வன்மை காட்டிடும் காணாது கேட்ட எல்லாம் கண்டதாக் காட்டியே அணுவாச் சுருக்கிடும் கபட_நாடக சாலமோ எல்லாமும் வலது இந்த மனம் மாயை ஏழையாம் என்னால் அடக்க வசமோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே #93 கண் ஆர நீர் மல்கி உள்ளம் நெக்குருகாத கள்ளனேன் ஆனாலுமோ கை குவித்து ஆடியும் பாடியும் விடாமலே கண் பனித் தாரை காட்டி அண்ணா பரஞ்சோதி அப்பா உனக்கு அடிமை யான் எனவும் மேல் எழுந்த அன்பாகி நாடகம் நடித்ததோ குறைவில்லை அகிலமும் சிறிது அறியுமேல் தண் ஆரும் நின்னது அருள் அறியாதது அல்லவே சற்றேனும் இனிது இரங்கிச் சாசுவத முத்தி நிலை ஈது என்று உணர்த்தியே சக நிலை தந்து வேறு ஒன்று எண்ணாமல் உள்ளபடி சுகமா இருக்கவே ஏழையேற்கு அருள்செய் கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே #94 காகமானது கோடி கூடி நின்றாலும் ஒரு கல்லின் முன் எதிர்நிற்குமோ கர்மமானது கோடி முன்னே செய்தாலும் நின் கருணை ப்ரவாக அருளைத் தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ தமியனேற்கு அருள் தாகமோ சற்றும் இலை என்பதுவும் வெளியாச்சு வினை எலாம் சங்கேதமாய்க் கூடியே தேகமானதை மிகவும் வாட்டுதே துன்பங்கள் சேராமல் யோக மார்க்க சித்தியோ வரவில்லை சகச நிஷ்டைக்கும் என் சிந்தைக்கும் வெகு தூரம் நான் ஏகமாய் நின்னோடு இருக்கும் நாள் எந்த நாள் இந்நாளில் முற்றுறாதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே #95 ஒருமை மனது ஆகியே அல்லல் அற நின் அருளில் ஒருவன் நான் வந்திருக்கின் உலகம் பொறாததோ மாயா விசித்ரம் என ஓயுமோ இடம் இல்லையோ அருள் உடைய நின் அன்பர் சங்கைசெய்திடுவரோ அலது கிர்த்திய கர்த்தராய் அகிலம் படைத்து எம்மை ஆள்கின்ற பேர் சிலர் அடாது என்பரோ அகன்ற பெருமை பெறு பூரணம் குறையுமோ பூதங்கள் பேய்க் கோலமாய் விதண்டை பேசுமோ அலது தான் பரிபாக காலம் பிறக்கவிலையோ தொல்லையாம் இருமை செறி சட_வினை எதிர்த்து வாய் பேசுமோ ஏது உளவு சிறிது புகலாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே #96 நில்லாது தேகம் எனும் நினைவு உண்டு தேக நிலை நின்றிடவும் மெளனி ஆகி நேரே உபாயம் ஒன்று அருளினை ஐயோ இதனை நின்று அனுட்டிக்க என்றால் கல்லாத மனமோ ஒடுங்கி உபரதி பெறக் காணவிலை ஆகையாலே கை ஏற்று உணும் புசிப்பு ஒவ்வாது எந்நாளும் உன் காட்சியில் இருந்துகொண்டு வல்லாளராய் இமய நியமாதி மேற்கொண்ட மா தவர்க்கு ஏவல்செய்து மனதின்படிக்கு எலாம் சித்தி பெறலாம் ஞானம் வாய்க்கும் ஒரு மனு எனக்கு இங்கு இல்லாமை ஒன்றினையும் இல்லாமை ஆக்கவே இப்போது இரங்கு கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே #97 மரவுரி உடுத்தும் மலை வன நெல் கொறித்தும் உதிர்வன சருகு வாயில் வந்தால் வன் பசி தவிர்த்தும் அனல் வெயில் ஆதி மழையால் வருந்தியும் மூல அனலைச் சிரம்_அளவு எழுப்பியும் நீரினிடை மூழ்கியும் தேகம் நமது அல்ல என்று சிற்சுக அபேக்ஷையாய் நின் அன்பர் யோகம் செலுத்தினார் யாம் பாவியேம் விரவும் அறு_சுவையினோடு வேண்டுவ புசித்து அரையில் வேண்டுவ எலாம் உடுத்து மேடை மாளிகை ஆதி வீட்டினிடை வைகியே வேறு ஒரு வருத்தம் இன்றி இரவு_பகல் ஏழையர்கள் சையோகம் ஆயினோம் எப்படிப் பிழைப்பது உரையாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே #98 முத்து அனைய மூரலும் பவள வாய் இன்_சொலும் முகத்து இலகு பசுமஞ்சளும் மூர்ச்சிக்க விரக சன்னதம் ஏற்ற இரு கும்ப முலையின் மணி மாலை நால வைத்து எமை மயக்கி இரு கண் வலையை வீசியே மாயா விலாச மோக_ வாரிதியில் ஆழ்த்திடும் பாழான சிற்றிடை மடந்தையர்கள் சிற்றின்பமோ புத்தமிர்த போகம் புசித்து விழி இமையாத பொன்_நாட்டும் வந்தது என்றால் போராட்டம் அல்லவோ பேர்_இன்ப முத்தி இப் பூமியிலிருந்து காண எத்தனை விகாதம் வரும் என்று சுகர் சென்ற நெறி இ உலகம் அறியாததோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே #99 உன் நிலையும் என் நிலையும் ஒரு நிலை எனக் கிடந்து உளறிடும் அவத்தை ஆகி உருவு-தான் காட்டாத ஆணவமும் ஒளி கண்டு ஒளிக்கின்ற இருள் என்னவே தன் நிலைமை காட்டாது ஒருங்க இரு_வினையினால் தாவு சுக_துக்க வேலை தட்டழிய முற்றும் இல்லா மாயை அதனால் தடித்து அகில பேதமான முன் நிலை ஒழிந்திட அகண்டிதாகாரமாய் மூதறிவு மேல் உதிப்ப முன்பினொடு கீழ் மேல் நடுப் பக்கம் என்னாமல் முற்றும் ஆனந்த நிறைவே என் நிலைமையாய் நிற்க இயல்பு கூர் அருள் வடிவம் எந்நாளும் வாழிவாழி இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே

மேல்

@11 சச்சிதானந்தசிவம்

#100 பார் ஆதி ககனப் பரப்பும் உண்டோ என்று படர் வெளியது ஆகி எழுநாப் பரிதி மதி காணாச் சுயஞ்சோதியாய் அண்ட பகிரண்ட உயிர் எவைக்கும் நேராக அறிவாய் அகண்டமாய் ஏகமாய் நித்தமாய் நிர்த்தொந்தமாய் நிர்க்குண விலாசமாய் வாக்கு மனம் அணுகாத நிர்மலானந்த மயமாய்ப் பேராது நிற்றி நீ சும்மா இருந்து-தான் பேர்_இன்பம் எய்திடாமல் பேய்_மனதை அண்டியே தாய்_இலாப் பிள்ளை போல் பித்தாகவோ மனதை நான் சாராதபடி அறிவின் நிருவிகற்பாங்கமாம் சாசுவத நிஷ்டை அருளாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே #101 குடக்கொடு குணக்கு ஆதி திக்கினை உழக்கூடு கொள்ளல் போல் ஐந்து பூதம் கூடம் சுருங்கு இலைச் சாலேகம் ஒன்பது குலாவு நடை_மனையை நாறும் வடக் கயிறு வெள் நரம்பா என்பு தசையினால் மதவேள் விழா நடத்த வைக்கின்ற கைத்தேரை வெண்ணீர் செந்நீர் கணீர் மல நீர் புண் நீர் இறைக்கும் விடக்குத் துருத்தியைக் கரு மருந்துக் கூட்டை வெட்டவெட்டத் தளிர்க்கும் வேட்கை மரம் உறுகின்ற சுடுகாட்டை முடிவிலே மெய் போல் இருந்து பொய்யாம் சடக்கைச் சடக்கெனச் சதம் என்று சின்மயம் தான் ஆகி நிற்பது என்றோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே #102 பாகத்தினால் கவிதை பாடிப் படிக்கவோ பத்தி நெறி இல்லை வேத பாராயணப் பனுவல் மூவர் செய் பனுவல்-அது பகரவோ இசையும் இல்லை யோகத்திலே சிறிது முயல என்றால் தேகம் ஒவ்வாது இ ஊண் வெறுத்தால் உயிர் வெறுத்திடல் ஒக்கும் அல்லாது கிரியைகள் உபாயத்தினால் செய்யவோ மோகத்திலே சிறிதும் ஒழியவிலை மெய்ஞ்ஞான மோனத்தில் நிற்க என்றால் முற்றாது பரிபாக சத்தி களனேக நின் மூதறிவிலே எழுந்த தாகத்திலே வாய்க்கும் அமிர்தப் பிரவாகமே தன்னந் தனிப் பெருமையே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே #103 இமை_அளவு போதை ஒரு கற்ப_காலம் பண்ணும் இ உலகம் எ உலகமோ என்று எண்ணம் வருவிக்கும் மாதர் சிற்றின்பமோ என்னில் மகமேரு ஆக்கிச் சுமை எடு-மின் என்று-தான் சும்மாடுமாய் எமைச் சுமையாளும் ஆக்கி நாளும் துர்_புத்தி பண்ணி உள நல்_புத்தி யாவையும் சூறையிட்டு இந்த்ரஜாலம் அமைய ஒரு கூத்தும் சமைந்து ஆடும் மன_மாயை அம்மம்ம வெல்லல் எளிதோ அருள் பெற்ற பேர்க்கு எலாம் ஒளி பெற்று நிற்கும் ஈது அருளோ அலாது மருளோ சமய நெறி காணாத சாக்ஷி நீ சூக்ஷ்மமாத் தமியனேற்கு உளவு புகலாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே #104 இனி ஏது எமக்கு உன் அருள் வருமோ எனக் கருதி ஏங்குதே நெஞ்சம் ஐயோ இன்றைக்கு இருந்தாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடம் இல்லையே அநியாயமாய் இந்த உடலை நான் என்று வரும் அந்தகற்கு ஆளாகவோ ஆடித் திரிந்து நான் கற்றதும் கேட்டதும் அவலமாய்ப் போதல் நன்றோ கனியேனும் வறிய செங்காயேனும் உதிர் சருகு கந்த மூலங்களேனும் கனல் வாதை வந்து எய்தின் அள்ளிப் புசித்து நான் கண் மூடி மெளனி ஆகித் தனியே இருப்பதற்கு எண்ணினேன் எண்ணம் இது சாமி நீ அறியாததோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே #105 மத்த மத கரி முகில் குலம் என்ன நின்று இலகு வாயிலுடன் மதி அகடு தோய் மாட கூடச் சிகரம் மொய்த்த சந்திரகாந்த மணி மேடை உச்சி மீது முத்தமிழ் முழக்கமுடன் முத்த நகையார்களொடு முத்துமுத்தாய்க் குலாவி மோகத்து இருந்தும் என் யோகத்தின் நிலை நின்று மூச்சைப் பிடித்து அடைத்துக் கைத்தலம் நகப் படை விரித்த புலி சிங்கமொடு கரடி நுழை நூழை கொண்ட கான மலை உச்சியில் குகையூடு இருந்தும் என் கரதலம் ஆமலகம் என்னச் சத்தம் அற மோன நிலை பெற்றவர்கள் உய்வர் காண் சனகாதி துணிவு இது அன்றோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே #106 கைத்தலம் விளங்கும் ஒரு நெல்லி அம் கனி எனக் கண்ட வேதாகமத்தின் காட்சி புருஷார்த்தம் அதில் மாட்சி பெறு முத்தி-அது கருதின் அனுமானம் ஆதி உத்தி பலவாம் நிருவிகற்பம் மேல் இல்லையால் ஒன்றோடு இரண்டு என்னவோ உரையும் இலை நீயும் இலை நானும் இலை என்பதும் உபாயம் நீ உண்டு நானும் சித்தம் உளன் நான் இல்லை எனும் வசனம் நீ அறிவை தெரியார்கள் தெரிய வசமோ செப்பு கேவல நீதி ஒப்பு உவமை அல்லவே சின்முத்திராங்க மரபில் சத்தம் அற எனை ஆண்ட குரு மெளனி கையினால் தமியனேற்கு உதவு பொருளே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே #107 காயாத மரம் மீது கல் ஏறு செல்லுமோ கடவுள் நீ யாங்கள் அடியேம் கர்ம பந்தத்தினால் சன்மபந்தம் பெறக் கற்பித்தது உன்னது அருளே வாயார உண்ட பேர் வாழ்த்துவதும் நொந்த பேர் வைவதுவும் எங்கள் உலக வாய்பாடு நிற்க நின் வைதிக ஒழுங்கு நினை வாழ்த்தினால் பெறு பேறு-தான் ஓயாது பெறுவர் என முறையிட்டதால் பின்னர் உளறுவது கருமம் அன்றாம் உபய நெறி ஈது என்னின் உசித நெறி எந்த நெறி உலகிலே பிழை பொறுக்கும் தாயான கருணையும் உனக்கு உண்டு எனக்கு இனிச் சஞ்சலம் கெட அருள்செய்வாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே #108 இன்னம் பிறப்பதற்கு இடம் என்னில் இ உடலம் இறவாது இருப்ப மூலத்து எழும் அங்கி அமிர்து ஒழுகும் மதி மண்டலத்தில் உற என் அம்மை குண்டலினி-பால் பின்னம் பிறக்காது சேய் என வளர்த்திடப் பேயேனை நல்கவேண்டும் பிறவாத நெறி எனக்கு உண்டு என்னின் இம்மையே பேசு கர்ப்பூர தீபம் மின்னும்படிக்கு அகண்டாகார அன்னை-பால் வினையேனை ஒப்புவித்து வீட்டு நெறி கூட்டிடுதல் மிகவும் நன்று இவை அன்றி விவகாரம் உண்டு என்னிலோ தன்னந்தனிச் சிறியன் ஆற்றிலேன் போற்றி வளர் சன்மார்க்க முத்தி முதலே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே #109 வேதாவை இ வணம் விதித்தது ஏது என்னின் உன் வினைப் பகுதி என்பன் அந்த வினை பேச அறியாது நிற்க இவை மனதால் விளைந்ததால் மனதை நாடில் போதமே நிற்கும் அப் போதத்தை நாடிலோ போதமும் நினால் விளக்கம் பொய் அன்று தெய்வ மறை யாவுமே நீ என்று போக்கு_வரவு அற நிகழ்த்தும் ஆதார ஆதேயம் முழுதும் நீ ஆதலால் அகிலம் மீது என்னை ஆட்டி ஆடல் கண்டவனும் நீ ஆடுகின்றவனும் நீ அருளும் நீ மெளன ஞான தாதாவும் நீ பெற்ற தாய் தந்தை-தாமும் நீ தமரும் நீ யாவும் நீ காண் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே #110 கொந்து அவிழ் மலர்ச் சோலை நல் நீழல் வைகினும் குளிர் தீம் புனல் கை அள்ளிக் கொள்ளுகினும் அ நீரிடைத் திளைத்து ஆடினும் குளிர் சந்த வாடை மடவார் வந்து உலவுகின்றது என முன்றிலிடை உலவவே வசதி பெறு போதும் வெள்ளை வட்ட மதி பட்டப்பகல் போல நிலவு தர மகிழ் போதும் வேலை அமுதம் விந்தைபெற அறு_சுவையில் வந்தது என அமுது உண்ணும் வேளையிலும் மாலை கந்தம் வெள்ளிலை அடைக்காய் விரும்பி வேண்டிய வண்ணம் விளையாடி விழி துயிலினும் சந்ததமும் நின் அருளை மறவா வரம் தந்து தமியேனை ரக்ஷை புரிவாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே

மேல்

@12 தேசோ மயானந்தம்

#111 மரு மலர்ச் சோலை செறி நல் நீழல் மலை ஆதி மன்னு முனிவர்க் கேவலமாய் மந்த்ரமாலிகை சொல்லும் இயம நியமாதியாம் மார்க்கத்தில் நின்றுகொண்டு கரு மருவு காயத்தை நிர்மலமதாகவே கமலாசனாதி சேர்த்துக் காலைப் பிடித்து அனலை அம்மை குண்டலி அடிக் கலை மதியினூடு தாக்கி உருகி வரும் அமிர்தத்தை உண்டுண்டு உறங்காமல் உணர்வான விழியை நாடி ஒன்றோடு இரண்டு எனாச் சமரச சொரூப சுகம் உற்றிட என் மனதின் வண்ணம் திரு_அருள் முடிக்க இத் தேகமொடு காண்பனோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே #112 இப் பிறவி என்னும் ஓர் இருள்_கடலில் மூழ்கி நான் என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு இரு_வினை எனும் திரையின் எற்றுண்டு புற்புதம் எனக் கொங்கை வரிசை காட்டும் துப்பு இதழ் மடந்தையர் மயல் சண்டமாருதச் சுழல் வந்துவந்து அடிப்பச் சோராத ஆசையாம் கானாறு வான் நதி சுரந்தது என மேலும் ஆர்ப்பக் கைப்பரிசுகாரர் போல் அறிவான வங்கமும் கைவிட்டு மதி மயங்கிக் கள்ள வங்கக் காலர் வருவர் என்று அஞ்சியே கண் அருவி காட்டும் எளியேன் செப்பு அரிய முத்தியாம் கரை சேரவும் கருணைசெய்வையோ சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே #113 தந்தை தாய் தமர் தாரம் மகவு என்னும் இவை எலாம் சந்தையில் கூட்டம் இதிலோ சந்தேகம் இல்லை மணி மாட மாளிகை மேடை சதுரங்க சேனையுடனே வந்தது ஓர் வாழ்வும் ஓர் இந்த்ரஜாலக் கோலம் வஞ்சனை பொறாமை லோபம் வைத்த மனமாம் கிருமி சேர்ந்த மல_பாண்டமோ வஞ்சனை இலாத கனவே எந்த நாளும் சரி எனத் தேர்ந்துதேர்ந்துமே இரவு_பகல் இல்லா இடத்து ஏகமாய் நின்ற நின் அருள்_வெள்ளம் மீதிலே யான் என்பது அறவும் மூழ்கிச் சிந்தை-தான் தெளியாது சுழலும் வகை என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே #114 ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் போல் விசை அடங்கி மனம் வீழ நேரே அறியாமை ஆகின்ற இருள் அகல இருள் ஒளியும் அல்லாது இருந்த வெளி போல் கோடாது எனைக் கண்டு எனக்குள் நிறை சாந்த வெளி கூடி இன்பாதீதமும் கூடினேனோ சரியை கிரியையில் முயன்று நெறி கூடினேனோ அல்லன் யான் ஈடாகவே யாறு வீட்டினில் நிரம்பியே இலகி வளர் பிராணன் என்னும் இரு நிதியினைக் கட்டி யோகபரன் ஆகாமல் ஏழைக் குடும்பன் ஆகித் தேடாது அழிக்க ஒரு மதி வந்தது என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே #115 பாடாது பாடிப் படித்து அளவு_இல் சமயமும் பஞ்சுபடு சொல்லன் இவனைப் பார்-மினோ பார்-மினோ என்று சபை கூடவும் பரமார்த்தம் இது என்னவே ஆடாதும் ஆடி நெஞ்சுருகி நெக்கு ஆடவே அமலமே ஏகமே எம் ஆதியே சோதியே எங்கு நிறை கடவுளே அரசே எனக் கூவி நான் வாடாது வாடும் என் முக வாட்டமும் கண்டு வாடா எனக் கருணை நீ வைத்திடா வண்ணமே சங்கேதமா இந்த வன்மையை வளர்ப்பித்தது ஆர் தேடாது தேடுவோர் தேட்டு அற்ற தேட்டமே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே #116 பிறியாத தண் அருள் சிவஞானியாய் வந்து பேசு அரிய வாசியாலே பேர்_இன்ப உண்மையை அளித்தனை என் மனது அறப் பேர்_அம்பலக் கடவுளாய் அறிவாய் இருந்திடும் நாத ஒலி காட்டியே அமிர்த ப்ரவாக சித்தி அருளினை அலாது திரு_அம்பலமும் ஆகி எனை ஆண்டனை பின் எய்தி நெறியாய்க் குறி-தான் அளித்தனை நல் மரவுரி கொள் அந்தணக் கோலமாய் அசபா நலம் கூறின பின் மெளனியாய்ச் சும்மா இருக்க நெறி கூட்டினை எலாம் இருக்கச் சிறியேன் மயங்கி மிக அறிவின்மை ஆவனோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே #117 ஆரார் எனக்கு என்ன போதித்தும் என்ன என் அறிவினை மயக்க வசமோ அண்ட கோடிகள் எலாம் கருப்ப அறை போலவும் அடுக்கடுக்கா அமைத்துப் பேராமல் நின்ற பரவெளியிலே மன_வெளி பிறங்குவது அலாது ஒன்றினும் பின்னமுற மருவாது நல் நயத்தால் இனிப் பேர்_இன்ப முத்தி நிலையும் தாராது தள்ளவும் போகாது உனால் அது தள்ளினும் போகேன் யான் தடை ஏதும் இல்லை ஆண்டவன் அடிமை என்னும் இரு தன்மையிலும் என் வழக்குத் தீராது விடுவதிலை நடுவான கடவுளே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே #118 கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம் கரடி வெம் புலி வாயையும் கட்டலாம் ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம் கட்செவி எடுத்து ஆட்டலாம் வெம் தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்று உண்ணலாம் வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம் விண்ணவரை ஏவல்கொளலாம் சந்ததமும் இளமையோடு இருக்கலாம் மற்று ஒரு சரீரத்தினும் புகுதலாம் சலம் மேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம் தன் நிகர்_இல் சித்தி பெறலாம் சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே #119 எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் இல்லை எனும் இ உலகம் மீது ஏதும் அறியாதவன் எனப் பெயர் தரித்து மிக ஏழைக்குள் ஏழை ஆகிக் கல்லாத அறிவில் கடைப்பட்ட நான் அன்று கையினால் உண்மை ஞானம் கற்பித்த நின் அருளினுக்கு என்ன கைம்மாறு காட்டுவேன் குற்றேவல் நான் அல் ஆர்ந்த மேனியொடு குண்டு கண் பிறை எயிற்று ஆபாச வடிவமான அந்தகா நீ ஒரு பகட்டால் பகட்டுவது அடாதடா காசு நம்பால் செல்லாதடா என்று பேசுவாய் அது தந்த செல்வமே சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே #120 மின் போலும் இடை ஒடியும்ஒடியும் என மொழிதல் போல் மென் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப வீங்கிப் புடைத்து விழ சுமை அன்ன கொங்கை மட மின்னார்கள் பின் ஆவலால் என் போல் அலைந்தவர்கள் கற்றார்கள் கல்லார்கள் இருவர்களில் ஒருவர் உண்டோ என் செய்கேன் அம்மம்ம என் பாவம் என் கொடுமை ஏது என்று எடுத்து மொழிவேன் அன்பால் வியந்து உருகி அடி அற்ற மரம் என்ன அடியிலே வீழ்ந்துவீழ்ந்து எம் அடிகளே உமது அடிமை யாங்கள் எனும் நால்வருக்கு அறம் ஆதி பொருள் உரைப்பத் தென்-பாலின் முகம் ஆகி வட ஆல் இருக்கின்ற செல்வமே சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே #121 புத்தமிர்த போகமும் கற்பக நல் நீழலில் பொலிவுற இருக்கும் இயல்பும் பொன்_உலகில் அயிராவதத்து ஏறு வரிசையும் பூமண்டலாதிக்கமும் மத்த வெறியினர் வேண்டும் மால் என்று தள்ளவும் எம்மாலும் ஒரு சுட்டும் அறவே வைக்கின்ற வைப்பாளன் மெளன தேசிகன் என்ன வந்த நின் அருள் வழி காண் சுத்த பரிபூரண அகண்டமே ஏகமே சுருதி முடிவான பொருளே சொல் அரிய உயிரினிடை அங்கங்கு நின்று அருள் சுரந்து பொழி கருணை முகிலே சித்தி நிலை முத்தி நிலை விளைகின்ற பூமியே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே

மேல்

@13 சிற்சுகோதய விலாசம்

#122 காகமோடு கழுகு அலகை நாய் நரிகள் சுற்று சோறிடு துருத்தியைக் கால் இரண்டு நவ வாசல் பெற்று வளர் காமவேள் நடன சாலையை மோக ஆசை முறியிட்ட பெட்டியை மு_மலம் மிகுந்து ஒழுகு கேணியை மொய்த்து வெம் கிருமி தத்து கும்பியை முடங்கல் ஆர் கிடை சரக்கினை மாக இந்த்ர தனு மின்னை ஒத்து இலக வேதம் ஓதிய குலாலனார் வனைய வெய்ய தடிகாரனான யமன் வந்து அடிக்கும் ஒரு மண்_கலத்து ஏகமான பொயை மெய் எனக் கருதி ஐய வையம் மிசை வாடவோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே #123 குறிகளோடு குணம் ஏதும் இன்றி அனல் ஒழுக நின்றிடும் இரும்பு அனல் கூடல் இன்றி அதுவாயிருந்தபடி கொடிய ஆணவ அறைக்கு உளே அறிவது ஏதும் அற அறிவிலாமை மயமாய் இருக்கும் எனை அருளினால் அளவிலாத தனு கரணம் ஆதியை அளித்த போது உனை அறிந்து நான் பிறிவு இலாத வணம் நின்றிடாதபடி பல நிறம் கவரும் உபலமாய்ப் பெரிய மாயையில் அழுந்தி நின்னது ப்ரசாத நல் அருள் மறந்திடும் சிறியனேனும் உனை வந்து அணைந்து சுகமாய் இருப்பது இனி என்று காண் தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே #124 ஐந்து பூதம் ஒரு கானல்_நீர் என அடங்க வந்த பெரு வானமே ஆதி அந்தம் நடு ஏதும் இன்றி அருளாய் நிறைந்து இலகு சோதியே தொந்த ரூபமுடன் அரூபம் ஆதி குறி குணம் இறந்து வளர் வஸ்துவே துரியமே துரிய உயிரினுக்கு உணர்வு தோன்ற நின்று அருள் சுபாவமே எந்த நாளும் நடு ஆகி நின்று ஒளிரும் ஆதியே கருணை நீதியே எந்தையே என இடைந்திடைந்து உருகும் எளியனேன் கவலை தீரவும் சிந்தையானதை அறிந்து நீ உன் அருள்செய்ய நானும் இனி உய்வனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே #125 ஐவர் என்ற புல வேடர் கொட்டம்-அது அடங்க மர்க்கடவன் முட்டியாய் அடவி நின்று மலை அருகில் நின்று சருகு ஆதி தின்று பனி வெயிலினால் மெய் வருந்து தவம் இல்லை நல் சரியை கிரியை யோகம் எனும் மூன்றதாய் மேவுகின்ற சவுபான நல் நெறி விரும்பவில்லை உலகத்திலே பொய் முடங்கு தொழில் யாததற்கும் நல சாரதித் தொழில் நடத்திடும் புத்தி யூகம் அறிவு_அற்ற மூகம் இவை பொருள் எனக் கருதும் மருளன் யான் தெய்வ நல் அருள் படைத்த அன்பரொடு சேரவும் கருணை கூர்வையோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே #126 ஏகமான உருவான நீ அருளினால் அனேக உரு ஆகியே எந்த நாள் அகில கோடி சிர்ஷ்டிசெய இசையும் நாள் வரை அ நாள் முத லாக நாள் இது வரைக்கும் உன் அடிமை கூடவே சனனம் ஆனதோ அநந்தம் உண்டு நல சனன மீது இதனுள் அறிய_வேண்டுவன அறியலாம் மோகம் ஆதி தரு பாசம்-ஆனதை அறிந்துவிட்டு உனையும் எனையுமே முழுது உணர்ந்து பரமான இன்ப_வெளம் மூழ்கவேண்டும் இது இன்றியே தேகமே நழுவி நானுமோ நழுவின் பின்னை உய்யும் வகை உள்ளதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே #127 நியம லக்ஷணமும் இயம லக்ஷணமும் ஆசனாதி வித பேதமும் நெடிது உணர்ந்து இதய_பத்ம பீடம் மிசை நின்று இலங்கும் அஜபா நலத்து இயல் அறிந்து வளர் மூல குண்டலியை இனிது இறைஞ்சி அவள் அருளினால் எல்லை_அற்று வளர் சோதி மூல அனல் எங்கள் மோன மனு முறையிலே வயம் மிகுந்து வரும் அமிர்த மண்டல மதிக்கு உளே மதியை வைத்து நான் வாய்மடுத்து அமிர்த_வாரியைப் பருகி மன்னும் ஆர் அமிர்த வடிவமாய்ச் செயம் மிகுந்து வரு சித்த யோக நிலை பெற்று ஞான நெறி அடைவனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே #128 எறி திரைக் கடல் நிகர்த்த செல்வம் மிக அல்லல் என்று ஒருவர் பின் செலாது இல்லை என்னும் உரை பேசிடாது உலகில் எவரும் ஆம் என மதிக்கவே நெறியின் வைகி வளர் செல்வமும் உதவி நோய்கள் அற்ற சுக வாழ்க்கையாய் நியமம் ஆதி நிலை நின்று ஞான நெறி நிஷ்டை கூடவும் எந்நாளுமே அறிவில் நின்று குருவாய் உணர்த்தியதும் அன்றி மோனகுரு ஆகியே அகிலம் மீது வர வந்த சீர் அருளை ஐய ஐய இனி என் சொல்கேன் சிறியன் ஏழை நமது அடிமை என்று உனது திரு_உளத்தினில் இருந்ததோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே #129 எவ்வுயிர்த் திரளும் உலகில் என் உயிர் எனக் குழைந்து உருகி நன்மையாம் இதம் உரைப்ப எனது என்ற யாவையும் எடுத்து எறிந்து மத யானை போல் கவ்வை அற்ற நடை பயில அன்பர் அடி கண்டதே அருளின் வடிவமாக் கண்ட யாவையும் அகண்டம் என்ன இரு கை குவித்து மலர் தூவியே பவ்வ வெண் திரை கொழித்த தண் தரளம் விழி உதிர்ப்ப மொழி குளறியே பாடி ஆடி உள் உடைந்துடைந்து எழுது பாவை ஒத்து அசைதல் இன்றியே திவ்ய அன்புருவம் ஆகி அன்பரொடும் இன்ப வீட்டினில் இருப்பனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே #130 மத்தர் பேயரொடு பாலர் தன்மை-அது மருவியே துரிய வடிவமாய் மன்னு தேசமொடு காலம் ஆதியை மறந்து நின் அடியர் அடியிலே பத்தியாய் நெடிது நம்பும் என்னை ஒரு மையல் தந்து அகில மாயையைப் பாருபார் என நடத்த வந்தது என் பாரதத்தினும் இது உள்ளதோ சுத்த நித்த இயல் பாகுமோ உனது விசுவ மாயை நடுவாகவே சொல்ல வேண்டும் வகை நல்ல காதி கதை சொல்லும் மாயையினும் இல்லை என் சித்தம் இப்படி மயங்குமோ அருளை நம்பினோர்கள் பெறு பேறு இதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே #131 பன்முகச் சமய நெறி படைத்தவரும் யாங்களே கடவுள் என்றிடும் பாதகத்தவரும் வாத தர்க்கமிடு படிறரும் தலை வணங்கிடத் தன்-முகத்தில் உயிர் வர அழைக்கும் எமதருமனும் பகடு மேய்க்கியாய்த் தனி இருப்ப வட நீழலூடு வளர் சனகன் ஆதி முனிவோர்கள்-தம் சொல் மயக்கம்-அது தீர அங்கை கொடு மோன ஞானம்-அது உணர்த்தியே சுத்த நித்த அருள் இயல்பு-அதாக உள சோமசேகர கிர்பாளுவாய்த் தென் முகத்தின் முகமாய் இருந்த கொலு எ முகத்தினும் வணங்குவேன் தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே

மேல்

@14 ஆகாரபுவனம் - சிதம்பர ரகசியம்

#132 ஆகார புவனம் இன்பாகாரம் ஆக அங்ஙனே ஒரு மொழியால் அகண்டாகார யோகானுபூதி பெற்ற அன்பர் ஆவிக்கு உறுதுணையே என்_அளவும் உகந்த நட்பே வாகு ஆரும்படிக்கு இசை கிண்கிணி வாய் என்ன மலர்ந்த மலரிடை வாசம் வயங்குமா போல் தேகாதி உலகம் எங்கும் கலந்து தானே திகழ் அனந்தானந்த மயத் தெய்வக் குன்றே #133 அனந்த பத உயிர்கள்-தொறும் உயிராய் என்றும் ஆனந்த நிலை ஆகி அளவைக்கு எட்டாத் தனந்தனிச் சின்மாத்திரமாய்க் கீழ் மேல் காட்டாச் சத் அசத்தாய் அருள் கோயில் தழைத்த தேவே இனம் பிரிந்த மான் போல் நான் இடையா வண்ணம் இன்பமுற அன்பர் பக்கல் இருத்திவைத்துக் கனம் தருமா கனமே தண் அருளில்-தானே கனி பலித்த ஆனந்தக் கட்டிப் பேறே #134 பேறு அனைத்தும் அணு எனவே உதறித்தள்ளப் பேர்_இன்பமாக வந்த பெருக்கே பேசா வீறு அனைத்தும் இ நெறிக்கே என்ன என்னை மேவு என்ற வரத்தே பாழ் வெய்ய மாயைக் கூறு அனைத்தும் கடந்த எல்லைச் சேடம் ஆகிக் குறைவு_அற நின்றிடும் நிறைவே குலவாநின்ற ஆறு அனைத்தும் புகும் கடல் போல் சமயகோடி அத்தனையும் தொடர்ந்து புகும் ஆதி நட்பே #135 ஆதி அந்தம் எனும் எழுவாய் ஈறு அற்று ஓங்கி அரு மறை இன்னமும் காணாது அரற்ற நானா பேத மதங்களும் மலைய மலை போல் வாதப் பெற்றியரும் வாய்வாதப் பேயர் ஆகச் சாதக மோனத்தில் என்ன வட ஆல் நீழல் தண் அருள் சந்திரமெளலி தடக் கைக்கு ஏற்க வேதக சின்மாத்திரமாய் எம்_அனோர்க்கும் வெளியாக வந்த ஒன்றே விமல வாழ்வே #136 விமல முதல் குணம் ஆகி நூற்றெட்டு ஆதி வேதம் எடுத்தெடுத்து உரைத்த விருத்திக்கு ஏற்க அமையும் இலக்கண வடிவாய் அதுவும் போதாது அப்பாலுக்கப்பாலாய் அருள் கண் ஆகிச் சமமும் உடன் கலப்பும் அவிழ்தலும் யாம் காணத் தண் அருள்தந்து எமைக் காக்கும் சாக்ஷிப் பேறே இமை_அளவும் உபகாரம் அல்லால் வேறு ஒன்று இயக்கா நிர்க்குண_கடலாய் இருந்த ஒன்றே #137 ஒன்று ஆகிப் பல ஆகிப் பலவாக் கண்ட ஒளி ஆகி வெளி ஆகி உருவும் ஆகி நன்று ஆகித் தீது ஆகி மற்றும் ஆகி நாசமுடன் உற்பத்தி நண்ணாது ஆகி இன்று ஆகி நாளையுமாய் மேலும் ஆன எந்தையே எம்மானே என்றுஎன்று ஏங்கிக் கன்று ஆகிக் கதறினர்க்குச் சேதா ஆகிக் கடிதினில் வந்து அருள்கூரும் கருணை விண்ணே #138 அருள் பழுத்த பழச் சுவையே கரும்பே தேனே ஆர் அமிர்தே என் கண்ணே அரிய வான பொருள் அனைத்தும் தரும் பொருளே கருணை நீங்காப் பூரணமாய் நின்ற ஒன்றே புனித வாழ்வே கருது அரிய கருத்து-அதனுள் கருத்தாய் மேவிக் காலமும் தேசமும் வகுத்துக் கருவி ஆதி இரு_வினையும் கூட்டி உயிர்த் திரளை ஆட்டும் விழுப் பொருளே யான் சொலும் விண்ணப்பம் கேளே #139 விண்ணவர் இந்திரன் முதலோர் நாரதாதி விளங்கு சப்தருஷிகள் கன வீணை வல்லோர் எண் அரிய சித்தர் மனு ஆதி வேந்தர் இருக்கு ஆதி மறை முனிவர் எல்லாம் இந்தக் கண் அகல் ஞாலம் மதிக்கத் தானே உள்ளங்கையில் நெல்லிக் கனி போலக் காட்சியாகத் திண்ணிய நல் அறிவால் இச் சமயத்து அன்றோ செப்பு அரிய சித்திமுத்தி சேர்ந்தார் என்றும் #140 செப்பு அரிய சமய நெறி எல்லாம் தந்தம் தெய்வமே தெய்வம் எனும் செயற்கையான அப் பரிசாளரும் அஃதே பிடித்து ஆலிப்பால் அடுத்த அ நூல்களும் விரித்தே அனுமான் ஆதி ஒப்ப விரித்து உரைப்பர் இங்ஙன் பொய் மெய் என்ன ஒன்று இலை ஒன்று எனப் பார்ப்பது ஒவ்வாது ஆர்க்கும் இப் பரிசாம் சமயமுமாய் அல்ல ஆகி யாது சமயமும் வணங்கும் இயல்பது ஆகி #141 இயல்பு என்றும் திரியாமல் இயமம் ஆதி எண்_குணமும் காட்டி அன்பால் இன்பம் ஆகிப் பயன் அருளப் பொருள்கள் பரிவாரம் ஆகிப் பண்புறவும் செளபான பக்ஷம் காட்டி மயல் அறு மந்திரம் சிக்ஷை சோதிடாதி மற்று அங்க நூல் வணங்க மெளன மோலி அயர்வு_அறச் சென்னியில் வைத்து ராஜாங்கத்தில் அமர்ந்தது வைதிக சைவம் அழகு இது அந்தோ #142 அந்தோ ஈது அதிசயம் இச் சமயம் போல் இன்று அறிஞர் எல்லாம் நடு அறிய அணிமா ஆதி வந்து ஆடித் திரிபவர்க்கும் பேசா மோனம் வைத்திருந்த மாதவர்க்கும் மற்றும் மற்றும் இந்த்ராதி போக நலம் பெற்ற பேர்க்கும் இது அன்றித் தாயகம் வேறு இல்லை இல்லை சந்தான கற்பகம் போல் அருளைக் காட்டத் தக்க நெறி இ நெறியே-தான் சன்மார்க்கம் #143 சன்மார்க்கம் ஞானம்-அதின் பொருளும் வீறு சமய சங்கேதப் பொருளும் தான் என்று ஆகப் பல் மார்க்க நெறியினிலும் கண்டதில்லை பகர்வு அரிய தில்லை மன்றுள் பார்த்த போது அங்கு என் மார்க்கம் இருக்குது எல்லாம் வெளியே என்ன எச்சமயத்தவர்களும் வந்து இறைஞ்சாநிற்பர் கல் மார்க்க நெஞ்சம் உள எனக்கும்-தானே கண்டவுடன் ஆனந்தம் காண்டல் ஆகும் #144 காண்டல்பெறப் புறத்தின் உள்ளபடியே உள்ளும் காட்சி மெய்ந்நூல் சொலும் பதியாம் கடவுளே நீ நீண்ட நெடுமையும் அகலக் குறுக்கும் காட்டா நிறை பரிபூரண அறிவாய் நித்தம் ஆகி வேண்டு விருப்பொடு வெறுப்புச் சமீபம் தூரம் விலகல் அணுகுதல் முதலாம் விவகாரங்கள் பூண்ட அளவைகள் மன வாக்கு ஆதி எல்லாம் பொருந்தாமல் அகம் புறமும் புணர்க்கை ஆகி #145 ஆகிய சற்காரிய ஊகத்துக்கு ஏற்ற அமலமாய் நடு ஆகி அனந்த சத்தி யோகம் உறும் ஆனந்த மயம்-அது ஆகி உயிர்க்கு உயிராய் எந்நாளும் ஓங்காநிற்ப மோக இருள் மாயை வினை உயிர்கட்கு எல்லாம் மொய்த்தது என்-கொல் உபகார முயற்சியாகப் பாகம் மிக அருள ஒரு சத்தி வந்து பதித்தது என்-கொல் நான் எனும் அப் பான்மை என்-கொல் #146 நான் என்னும் ஓர் அகந்தை எவர்க்கும் வந்து நலிந்தவுடன் சக மாயை நானா ஆகித் தான் வந்து தொடரும் இத்தால் வளரும் துன்பச் சாகரத்தின் பெருமை எவர் சாற்ற வல்லார் ஊன் என்றும் உடல் என்றும் கரணம் என்றும் உள் என்றும் புறம் என்றும் ஒழியா நின்ற வான் என்றும் கால் என்றும் தீ நீர் என்றும் மண் என்றும் மலை என்றும் வனம்-அது என்றும் #147 மலைமலையாம் காட்சி கண் காணாமை ஆதி மறப்பு என்றும் நினைப்பு என்றும் மாயா_வாரி அலையலையாய் அடிக்கும் இன்ப துன்பம் என்றும் அதை விளைக்கும் வினைகள் என்றும் அதனைத் தீர்க்கத் தலை பலவாம் சமயம் என்றும் தெய்வம் என்றும் சாதகர் என்றும் அதற்குச் சாக்ஷியாகக் கலை பலவாம் நெறி என்றும் தர்க்கம் என்றும் கடல் உறும் நுண்மணல் எண்ணிக் காணும் போதும் #148 காண் அரிய அல்லல் எல்லாம் தானே கட்டுக்கட்டாக விளையும் அதைக் கட்டோடே-தான் வீணினில் கர்ப்பூர மலை படு தீப்பட்ட விந்தை எனக் காண ஒரு விவேகம் காட்ட ஊண்_உறக்கம் இன்ப_துன்பம் பேர் ஊர் ஆதி ஒவ்விடவும் எனைப் போல உருவம் காட்டிக் கோண் அற ஓர் மான் காட்டி மானை ஈர்க்கும் கொள்கை என அருள் மெளனகுருவாய் வந்து #149 வந்து என் உடல் பொருள் ஆவி மூன்றும் தன் கைவசம் எனவே அத்துவா மார்க்கம் நோக்கி ஐந்து புலன் ஐம்_பூதம் கரணம் ஆதி அடுத்த குணம் அத்தனையும் அல்லை அல்லை இந்த உடல் அறிவு அறியாமையும் நீ அல்லை யாது ஒன்று பற்றின் அதன் இயல்பாய் நின்று பந்தம் அறும் பளிங்கு அனைய சித்து நீ உன் பக்குவம் கண்டு அறிவிக்கும் பான்மையேம் யாம் #150 அறிவு ஆகி ஆனந்த மயமாய் என்றும் அழியாத நிலை ஆகி யாதின்-பாலும் பிறியாமல் தண் அருளே கோயில் ஆன பெரிய பரம் பதி-அதனைப் பெறவே வேண்டில் நெறியாகக் கூறுவன் கேள் எந்த நாளும் நிர்க்குணம் நிற்கு உளம் வாய்த்து நீடு வாழ்க செறிவான அறியாமை எல்லாம் நீங்க சிற்சுகம் பெற்றிடுக பந்தம் தீர்க என்றே #151 பந்தம் அறும் மெய்ஞ்ஞானமான மோனப் பண்பு ஒன்றை அருளி அந்தப் பண்புக்கே-தான் சிந்தை இல்லை நான் என்னும் பான்மை இல்லை தேசம் இல்லை காலம் இல்லை திக்கும் இல்லை தொந்தம் இல்லை நீக்கம் இல்லை பிரிவும் இல்லை சொல்லும் இல்லை இரா_பகலாம் தோற்றம் இல்லை அந்தம் இல்லை ஆதி இல்லை நடுவும் இல்லை அகமும் இல்லை புறமும் இல்லை அனைத்தும் இல்லை #152 இல்லை இல்லை என்னின் ஒன்றும் இல்லாது அல்ல இயல்பு ஆகி என்றும் உள்ள இயற்கை ஆகிச் சொல் அரிய தன்மை-அதா யான்-தான் என்னத் தோன்றாது எல்லாம் விழுங்கும் சொரூபம் ஆகி அல்லை உண்ட பகல் போல அவித்தை எல்லாம் அடைய உண்டு தடை அற உன் அறிவைத்-தானே வெல்ல உண்டு இங்கு உன்னையும் தான் ஆகக் கொண்டு வேதகமாய்ப் பேசாமை விளங்கும்-தானே #153 தான் ஆன தன்மயமே அல்லால் ஒன்றைத் தலையெடுக்க ஒட்டாது தலைப்பட்டு ஆங்கே போனாலும் கர்ப்பூர தீபம் போலப் போய் ஒளிப்பது அல்லாது புலம் வேறு இன்றாம் ஞானாகாரத்தினொடு ஞேயம் அற்ற ஞாதுருவும் நழுவாமல் நழுவி நிற்கும் ஆனாலும் இதன் பெருமை எவர்க்கு ஆர் சொல்வார் அது ஆனால் அது ஆவர் அதுவே சொல்லும் #154 அது என்றால் எது என ஒன்று அடுக்கும் சங்கை ஆதலினால் அது எனலும் அறவே விட்டு மது உண்ட வண்டு எனவும் சனகன் ஆதி மன்னவர்கள் சுகர் முதலோர் வாழ்ந்தார் என்றும் பதி இந்த நிலை எனவும் என்னை ஆண்டபடிக்கு நிருவிகற்பத்தால் பரமானந்த கதி கண்டு கொள்ளவும் நின் அருள்கூர் இந்தக் கதி அன்றி உறங்கேன் மேல் கருமம் பாரேன் #155 பார் ஆதி விண் அனைத்தும் நீயாச் சிந்தை பரிய மடலா எழுதிப் பார்த்துப்பார்த்து வாராயோ என் ப்ராணநாதா என்பேன் வளைத்துவளைத்து எனை நீயா வைத்துக்கொண்டு பூராயமா மேல் ஒன்று அறியா வண்ணம் புண்ணாளர் போல் நெஞ்சம் புலம்பி உள்ளே நீராளமாய் உருகிக் கண்ணீர் சோர நெட்டுயிர்த்து மெய்ம்மறந்து ஓர் நிலையாய் நிற்பேன் #156 ஆயும் அறிவு ஆகி உன்னைப் பிரியா வண்ணம் அணைந்து சுகம் பெற்ற அன்பர் ஐயோ என்னத் தீய கொலைச் சமயத்தும் செல்லச் சிந்தை தெளிந்திடவும் சமாதானம் செய்வேன் வாழ்வான் காய் இலை புன் சருகு ஆதி அருந்தக் கானம் கடல் மலை எங்கே எனவும் கவலையாவேன் வாயில் கும்பம் போல் கிடந்து புரள்வேன் வானின் மதி கதிரை முன்னிலையா வைத்து நேரே #157 நேரே-தான் இரவு பகல் கோடா வண்ணம் நித்தம் வர உங்களை இ நிலைக்கே வைத்தார் ஆரே அங்கு அவர் பெருமை என்னே என்பேன் அடிக்கின்ற காற்றே நீ யாராலே-தான் பேராதே சுழல்கின்றாய் என்பேன் வந்து பெய்கின்ற முகில்காள் எம் பெருமான் நும் போல் தாராளமாக் கருணை பொழியச் செய்யும் சாதகம் என்னே கருதிச் சாற்றும் என்பேன் #158 கருது அரிய விண்ணே நீ எங்கும் ஆகிக் கலந்தனையே உன் முடிவின் காட்சியாக வரு பொருள் எப்படி இருக்கும் சொல்லாய் என்பேன் மண்ணே உன் முடிவில் எது வயங்கும் ஆங்கே துரிய அறிவு உடைச் சேடன் ஈற்றின் உண்மை சொல்லானோ சொல் என்பேன் சுருதியே நீ ஒருவரைப் போல் அனைவருக்கும் உண்மையா முன் உரை அன்றோ உன் முடிவை உரை நீ என்பேன் #159 உரை இறந்து பெருமை பெற்றுத் திரைக் கை நீட்டி ஒலிக்கின்ற கடலே இ உலகம் சூழக் கரையும் இன்றி உன்னை வைத்தார் யாரே என்பென் கானகத்தின் பைங்கிளிகாள் கமலம் மேவும் வரி சிறை வண்டு இனங்காள் ஓதிமங்காள் தூது மார்க்கம் அன்றோ நீங்கள் இதுவரையிலேயும் பெரிய பரிபூரணமாம் பொருளைக் கண்டு பேசியது உண்டோ ஒரு கால் பேசும் என்பேன் #160 ஒரு வனவன் யானை கெடக் குடத்துள் செம் கை ஓட்டுதல் போல் நான் பேதை உப்போடு அப்பை மருவ இட்டும் கர்ப்பூரம்-அதனில் தீபம் வயங்க இட்டும் ஐக்கியம் உன்னி வருந்தி நிற்பேன் அருள் உடைய பரம் என்றோ அன்று-தானே யான் உளன் என்றும் எனக்கே ஆணவாதி பெருகு வினைக் கட்டு என்றும் என்னால் கட்டிப் பேசியது அன்றே அருள் நூல் பேசிற்று அன்றே #161 அன்று முதல் இன்றை வரைச் சனன கோடி அடைந்தடைந்து இங்கு யாதனையால் அழிந்தது அல்லால் இன்றை வரை முக்தி இன்றே எடுத்த தேகம் எப்போதோ தெரியாதே இப்போதே-தான் துன்று மனக் கவலை கெடப் புலை நாயேனைத் தொழும்புகொளச் சீகாழி_துரையே தூது சென்றிடவே பொருளை வைத்த நாவலோய் நம் சிவன் அப்பா என்ற அருள் செல்வத் தேவே #162 தேவர் தொழும் வாதவூர்_தேவே என்பேன் திருமூலத் தேவே இச் சகத்தோர் முத்திக் காவலுறச் சிவ என் வாக்குடனே வந்த அரசே சும்மா இருந்து உன் அருளைச் சாரப் பூ_உலகில் வளர் அருணகிரியே மற்றைப் புண்ணியர்காள் ஓ என்பேன் புரை ஒன்று இல்லா ஓவியம் போல் அசைவு அறவும் தானே நிற்பேன் ஓது அரிய துயர் கெடவே உரைக்கும் முன்னே #163 ஓது அரிய சுகர் போல ஏன்ஏன் என்ன ஒருவர் இலையோ எனவும் உரைப்பேன் தானே பேதம் அபேதம் கெடவும் ஒரு பேசாமை பிறவாதோ ஆல் அடியில் பெரிய மோன நாதன் ஒரு தரம் உலகம் பார்க்க இச்சை நண்ணானோ என்றுஎன்றே நானா ஆகிக் காதல் மிகு மணி_இழையார் என வாடுற்றேன் கருத்து அறிந்து புரப்பது உன் மேல் கடன் முக்காலும் #164 காலமொடு தேசவர்த்தமானம் ஆதி கலந்து நின்ற நிலை வாழி கருணை வாழி மால் அறவும் சைவம் முதல் மதங்கள் ஆகி மதாதீதமான அருள் மரபு வாழி சாலம் மிகும் எளியேன் இ வழக்குப் பேசத் தயவுவைத்து வளர்த்த அருள் தன்மை வாழி ஆல் அடியில் பரமகுரு வாழி வாழி அகண்டிதாகார அருள் அடியார் வாழி

மேல்

@15 தேன்முகம்

#165 தேன் முகம் பிலிற்றும் பைந்தாள் செய்ய பங்கயத்தின் மேவும் நான்முக_தேவே நின்னால் நாட்டிய அகில மாயை கான் முயல்_கொம்பே என்கோ கானல் அம் புனலே என்கோ வான் முக முளரி என்கோ மற்று என்கோ விளம்பல் வேண்டும் #166 வேண்டுவ படைத்தாய் நுந்தை விதிப்படி புரந்தான் அத்தைக் காண் தக அழித்தான் முக்கண் கடவுள்-தான் இனைய ஆற்றால் ஆண்டவன் எவனோ என்ன அறிகிலாது அகிலம் நீயே ஈண்டிய அல்லல் தீர எம்_அனோர்க்கு இயம்பு கண்டாய் #167 கண்டன அல்ல என்றே கழித்திடும் இறுதிக்-கண்ணே கொண்டது பரமானந்தக் கோது_இலா முத்தி அத்தால் பண்டையில் படைப்பும் காப்பும் பறந்தன மாயையோடே வெண் தலை விழி கை காலில் விளங்கிட நின்றான் யாவன் #168 விளங்க வெண்_நீறு பூசி விரி சடைக் கங்கை தாங்கித் துளங்கு நல் நுதல்_கண் தோன்றச் சுழல் வளி நெடு மூச்சு ஆகக் களங்கம்_இல் உருவம்-தானே ககனமாய்ப் பொலியப் பூமி வளர்ந்த தாள் என்ன உள்ளம் மன்று என மறை ஒன்று இன்றி #169 மறை முழக்கு ஒலிப்பத் தானே வரதமோடு அபயக் கைகள் முறைமையின் ஓங்க நாதம் முரசு எனக் கறங்க எங்கும் குறைவு_இலா வணம் நிறைந்து கோது_இலா நடனம் செய்வான் இறையவன் எனலாம் யார்க்கும் இதய சம்மதம் ஈது அல்லால் #170 அல்லலாம் தொழில் படைத்தே அடிக்கடி உரு எடுத்தே மல்லல் மா ஞாலம் காக்க வருபவர் கடவுள் என்னில் தொல்லையாம் பிறவி_வேலை தொலைந்திடாது இருள் நீங்காது நல்லது மாயை-தானும் நான் என வந்து நிற்கும் #171 நான் என நிற்கும் ஞானம் ஞானம் அன்று அந்த ஞானம் மோனமாய் இருக்கவொட்டா மோனம் இன்றாகவே-தான் தேன் என ருசிக்கும் அன்பால் சிந்தை நைந்து உருகும் வண்ணம் வான் என நிறைந்து ஆனந்த மா கடல் வளைவது இன்றே #172 இன்று என இருப்பேம் என்னின் என்றும் சூனியம் ஆம் முத்தி நன்றொடு தீதும் அன்றி நாம் முன்னே பெறும் அவித்தை நின்றது பெத்தம்-தானே நிரந்தர முத்தி என்னின் ஒன்று ஒருவரை நான் கேட்க உணர்வு இல்லை குருவும் இல்லை #173 இல்லை என்றிடின் இப் பூமி இருந்தவாறு இருப்போம் என்னில் நல்லவன் சாருவாகன் நான் சொலும் நெறிக்கு வீணில் தொல்லை ஏன் ஆகமாதி தொடுப்பது ஏன் மயக்கம் ஏது இங்கு ஒல்லை வந்து இரு-மின் என்ன உறவுசெய்திடுவன் அந்தோ #174 அந்தணர் நால்வர் காண அருள் குரு ஆகி வந்த எந்தையே எல்லாம் தான் என்று இயம்பினன் எமைப் படைத்த தந்தை நீ எம்மைக் காக்கும் தலைவனே நுந்தை அன்றோ பந்தம்_இல் சித்தி முத்தி படைக்க நின் அருள்பாலிப்பாய்

மேல்

@16 பன்மாலை

#175 பல் மாலைத் திரள் இருக்கத் தமை உணர்ந்தோர் பாமாலைக்கே நீ-தான் பக்ஷம் என்று நல் மாலையா எடுத்துச் சொன்னார் நல்லோர் நலம் அறிந்து கல்லாத நானும் சொன்னேன் சொல் மாலைமாலையாக் கண்ணீர் சோரத் தொண்டனேன் எந்நாளும் துதித்து நிற்பேன் என் மாலை அறிந்து இங்கே வாவா என்றே எனைக் கலப்பாய் திரு_கருணை எம்பிரானே #176 கருணை மொழி சிறிது இல்லேன் ஈதல் இல்லேன் கண்ணீர் கம்பலை என்றன் கருத்துக்கு ஏற்க ஒருபொழுதும் பெற்று அறியேன் என்னை ஆளும் ஒருவா உன் அடிமை நான் ஒருத்தனுக்கோ இரு_வினையும் முக்குணமும் கரணம் நான்கும் இடர்செயும் ஐம்_புலனும் காமாதி ஆறும் வரவரவும் ஏழைக்கு ஓர் எட்டது ஆன மதத்தொடும் வந்து எதிர்த்த நவ வடிவம் அன்றே #177 வடிவு அனைத்தும் தந்த வடிவு இல்லாச் சுத்த வான் பொருளே எளியனேன் மனம் ஆம் மாயைக் குடிகெடுக்கத் துசம்கட்டிக்கொண்ட மோனகுருவே என் தெய்வமே கோது_இலாத படி எனக்கு ஆனந்த_வெள்ளம் வந்து தேக்கும்படி எனக்கு உன் திரு_கருணைப் பற்றுமாறே அடி எடுத்து என் முடியில் இன்னம் வைக்கவேண்டும் அடி முடி ஒன்று இல்லாத அகண்ட வாழ்வே #178 வாழ்வு அனைத்தும் மயக்கம் எனத் தேர்ந்தேன் தேர்ந்தவாறே நான் அப்பால் ஓர் வழி பாராமல் தாழ்வு பெற்று இங்கு இருந்தேன் ஈது என்ன மாயம் தடையுற்றால் மேல்_கதியும் தடை-அது ஆமே ஊழ் வலியோ அல்லது உன்றன் திரு_கூத்தோ இங்கு ஒரு தமியேன் மேல் குறையோ உணர்த்தாய் இன்னம் பாழ் அவதிப்பட எனக்கு முடியாது எல்லாம் படைத்து அளித்துத் துடைக்க வல்ல பரிசினானே #179 நான் நான் இங்கு எனும் அகந்தை எனக்கு ஏன் வைத்தாய் நல்_வினை தீ_வினை எனவே நடுவே நாட்டி ஊன் ஆரும் உடல் சுமை என் மீது ஏன் வைத்தாய் உயிர் எனவும் என்னை ஒன்றா உள் ஏன் வைத்தாய் ஆனாமையாய் அகில நிகில பேதம் அனைத்தின் உள்ளும் தான் ஆகி அறிவு ஆனந்தத் தேன் ஆகிப் பால் ஆகிக் கனியாய்க் கன்னல் செழும் பாகாய்க் கற்கண்டாய்த் திகழ்ந்த ஒன்றே #180 ஒன்றிஒன்றி நின்றுநின்றும் என்னை என்னை உன்னி உன்னும் பொருள் அலை நீ உன்-பால் அன்பால் நின்ற தன்மைக்கு இரங்கும் வயிராக்கியன் அல்லேன் நிவர்த்தி அவை வேண்டும் இந்த நீலனுக்கே என்றும்என்றும் இ நெறியோர் குணமும் இல்லை இடுக்குவார் கைப்பிள்ளை ஏதோ ஏதோ கன்று மனத்துடன் ஆடு தழை தின்றால் போல் கல்வியும் கேள்வியும் ஆகிக் கலக்குற்றேனே #181 உற்ற துணை நீ அல்லால் பற்று வேறு ஒன்று உன்னேன் பல் நாள் உலகத்து ஓடி ஆடிக் கற்றதும் கேட்டதும் இதனுக்கு ஏது ஆகும் கற்பதும் கேட்பதும் அமையும் காணா நீத நல் துணையே அருள் தாயே இன்பமான நாதாந்த பரம்பொருளே நாரணாதி சுற்றமுமாய் நல் அன்பர்-தமைச் சேய் ஆகத் தொழும்புகொளும் கனா கனமே சோதி_குன்றே #182 குன்றாத மூ_உருவாய் அருவாய் ஞானக் கொழுந்து ஆகி அறு_சமயக் கூத்தும் ஆடி நின்றாயே மாயை எனும் திரையை நீக்கி நின்னை யார் அறிய வல்லார் நினைப்போர் நெஞ்சம் மன்று ஆக இன்ப_கூத்து ஆட வல்ல மணியே என் கண்ணே மா மருந்தே நால்வர்க்கு அன்று ஆலின் கீழ் இருந்து மோன ஞானம் அமைத்த சின்முத்திரைக் கடலே அமரர் ஏறே #183 திரை இல்லாக் கடல் போலச் சலனம் தீர்ந்து தெளிந்து உருகும் பொன் போலச் செகத்தை எல்லாம் கரையவே கனிந்து உருக்கும் முகத்திலே நீ கனிந்த பரமானந்தக் கட்டி இ நாள் வரையிலே வரக் காணேன் என்னால் கட்டி வார்த்தை சொன்னால் சுகம் வருமோ வஞ்சனேனை இரையிலே இருத்தி நிருவிகற்பமான இன்ப நிஷ்டை கொடுப்பது ஐயா எந்த நாளோ #184 எந்த நாள் உனக்கு அடிமை ஆகும் நாளோ எ நாளோ கதி வரும் நாள் எளியனேன்-தன் சிந்தை நாளது வரைக்கும் மயங்கிற்று அல்லால் தெளிந்தது உண்டோ மெளனியாய்த் தெளிய ஓர் சொல் தந்த நாள் முதல் இன்பக் கால் சற்று அல்லால் தடை அற ஆனந்த_வெள்ளம் தானே பொங்கி வந்த நாள் இல்லை மெத்த அலைந்தேன் உன்னை மறவா இன்பத்தாலே வாழ்கின்றேனே

மேல்

@17 நினைவு ஒன்று

#185 நினைவு ஒன்றும் நினையாமல் நிற்கின் அகம் என்பார் நிற்கும் இடமே அருளாம் நிஷ்டை அருள் ஒட்டும் தனை என்றும் மறந்திருப்ப அருள் வடிவு ஆனது மேல் தட்டி எழுந்திருக்கும் இன்பம் தன்மயமே அதுவாம் பினை ஒன்றும் இலை அந்த இன்பம் எனும் நிலயம் பெற்றாரே பிறவாமை பெற்றார் மற்றும் தான் மனை என்றும் மகன் என்றும் சுற்றம் என்றும் அசுத்த வாதனையாம் ஆசை ஒழி மன் ஒரு சொல் கொண்டே #186 ஒரு மொழியே பல மொழிக்கும் இடம்கொடுக்கும் அந்த ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும் என மொழிந்த குரு மொழியே மலை_இலக்கு மற்றை மொழி எல்லாம் கோடு இன்றி வட்டு_ஆடல் கொள்வது ஒக்கும் கண்டாய் கரு மொழி இங்கு உனக்கு இல்லை மொழிக்கு மொழி ருசிக்கக் கரும்பு அனைய சொல் கொடு உனைக் காட்டவும் கண்டனை மேல் தரு மொழி இங்கு உனக்கு இல்லை உன்னை விட்டு நீங்காத் தற்பரமாய் ஆனந்தப் பொற்பொதுவாய் நில்லே #187 நில்லாத ஆக்கை நிலை அன்று எனவே கண்டாய் நேய அருள் மெய் அன்றோ நிலயம்-அதா நிற்கக் கல்லாதே ஏன் படித்தாய் கற்றது எல்லாம் மூடம் கற்றது எல்லாம் மூடம் என்றே கண்டனையும் அன்று சொல்லாலே பயன் இல்லை சொல் முடிவைத் தானே தொடர்ந்து பிடி மர்க்கடம் போல் தொட்டது பற்றா நில் எல்லாரும் அறிந்திடவே வாய்_பறை கொண்டு அடி நீ இரா_பகல் இல்லா இடமே எமக்கு இடம் என்று அறிந்தே #188 இடம் பொருள் ஏவலைக் குறித்து மடம் புகு நாய் எனவே எங்கே நீ அகப்பட்டாய் இங்கே நீ வாடா மடம் பெறு பாழ் நெஞ்சாலே அஞ்சாதே நிராசை மன் இடமே இடம் அந்த மா நிலத்தே பொருளும் திடம் பெறவே நிற்கின் எல்லா உலகமும் வந்து ஏவல் செய்யும் இந்த நிலை நின்றோர் சனகன் முதல் முனிவர் கடம் பெறு மா மத யானை என்னவும் நீ பாசக் கட்டான நிகளபந்தக் கட்டு அவிழப் பாரே #189 பார் ஆதி அண்டம் எலாம் படர் கானல்_சலம் போல் பார்த்தனையே முடிவில் நின்று பார் எது-தான் நின்றது ஆராலும் அறியாத சத்து அன்றோ அதுவாய் அங்கு இரு நீ எங்கு இருந்தும் அது ஆவை கண்டாய் பூராயம் ஆகவும் நீ மற்று ஒன்றை விரித்துப் புலம்பாதே சஞ்சலமாப் புத்தியை நாட்டாதே ஓராதே ஒன்றையும் நீ முன்னிலை வையாதே உள்ளபடி முடியும் எலாம் உள்ளபடி காணே #190 உள்ளபடி என்னவும் நீ மற்று ஒன்றைத் தொடர்ந்திட்டு உளம் கருத வேண்டா நிஷ்களங்க மதி ஆகிக் கள்ள மனத் துறவை விட்டு எல்லாம் துறந்த துறவோர் கற்பித்த மொழிப்படியே கங்குல் பகல் அற்ற வெள்ள வெளிக் கடல் மூழ்கி இன்ப மயப் பொருளாய் விரவி எடுத்தெடுத்தெடுத்து விள்ளவும் வாய் இன்றிக் கொள்ளைகொண்ட கண்ணீரும் கம்பலையும் ஆகிக் கும்பிட்டுச் சகம் பொய் எனத் தம்பட்டமடியே #191 அடி முடியும் நடுவும் அற்ற பரவெளி மேற்கொண்டால் அத்துவித ஆனந்த சித்தம் உண்டாம் நமது குடி முழுதும் பிழைக்கும் ஒரு குறையும் இல்லை எடுத்த கோலம் எல்லாம் நன்று ஆகும் குறைவு நிறைவு அறவே விடியும் உதயம் போல அருள் உதயம் பெற்ற வித்தகரோடும் கூடி விளையாடல் ஆகும் படி முழுதும் விண் முழுதும் தந்தாலும் களியாப் பாலருடன் உன்மத்தர் பசாசர் குணம் வருமே #192 வரும் போம் என்பனவும் இன்றி என்றும் ஒருபடித்தாய் வான் ஆதி தத்துவத்தை வளைந்து அருந்தி வெளி ஆம் இரும்போ கல்லோ மரமோ என்னும் நெஞ்சைக் கனல் மேல் இட்ட மெழுகா உருக்கும் இன்ப_வெள்ளம் ஆகிக் கரும்போ கண்டோ சீனி சருக்கரையோ தேனோ கனி அமிர்தோ என ருசிக்கும் கருத்து அவிழ்ந்தோர் உணர்வார் அரும்போ நல் மணம் காட்டும் காம_ரசம் கன்னி அறிவாளோ அபக்குவர்க்கோ அ நலம்-தான் விளங்கும் #193 தானேயும் இ உலகம் ஒரு முதலும் ஆகத் தன்மையினால் படைத்து அளிக்கும் தலைமையதுவான கோன் ஆக ஒரு முதல் இங்கு உண்டு எனவும் யூகம் கூட்டியதும் சக முடிவில் குலவுறு மெய்ஞ்ஞான வான் ஆக அ முதலே நிற்கும் நிலை நம்மால் மதிப்பு அரிதாம் என மோனம் வைத்ததும் உன் மனமே ஆனாலும் மனம் சடம் என்று அழுங்காதே உண்மை அறிவித்த இடம் குருவாம் அருள் இலது ஒன்று இலையே

மேல்

@18 பொன்னை மாதரை

#194 பொன்னை மாதரைப் பூமியை நாடிடேன் என்னை நாடிய என் உயிர் நாதனே உன்னை நாடுவன் உன் அருள் தூ வெளி- தன்னை நாடுவன் தன்னந்தனியனே #195 தன்னது என்று உரை சாற்றுவன எலாம் நின்னது என்றனை நின்னிடத்தே தந்தேன் இன்னம் என்னை இடர் உறக் கூட்டினால் பின்னை உய்கிலன் பேதையன் ஆவியே #196 ஆவியே உனை யான் அறிவாய் நின்று சேவியேன் களச் சிந்தை திறை கொடேன் பாவியேன் உளப் பான்மையைக் கண்டு நீ கூவி ஆள் எனை ஆட்கொண்ட கோலமே #197 கோலம் இன்றிக் குணம் இன்றி நின் அருள் சீலம் இன்றிச் சிறியன் பிழைப்பனோ ஆலம் உண்டும் அமிர்து உருவாய் வந்த காலம் எந்தை கதி நிலை காண்பதே #198 காணும் கண்ணில் கலந்த கண்ணே உனைச் சேணும் பாரும் திரிபவர் காண்பரோ ஆணும் பெண்ணும் அது எனும் பான்மையும் பூணும் கோலம் பொருந்தி உள் நிற்கவே #199 நிற்கும் நல் நிலை நிற்கப்பெற்றார் அருள் வர்க்கம் அன்றி மனிதர் அன்றே ஐயா துர்_குணக் கடல் சோங்கு அன்ன பாவியேற்கு என் குணம் கண்டு என் பெயர் சொல்வதே #200 சொல்லை உன்னித் துடித்தது அலால் அருள் எல்லை உன்னி எனை அங்கு வைத்திலேன் வல்லை நீ என்னை வா என்றிடாவிடின் கல்லை ஆம் இக் கருமி நடக்கையே #201 கையும் மெய்யும் கருத்துக்கு இசையவே ஐய தந்ததற்கு ஐயம் இனி உண்டோ பொய்யனேன் சிந்தைப் பொய் கெடப் பூரண மெய்-அதாம் இன்பம் என்று விளைவதே #202 என்றும் உன்னை இதய_வெளிக்குளே துன்ற வைத்தனனே அருள் சோதி நீ நின்ற தன்மை நிலைக்கு என்னை நேர்மையாம் நன்று தீது அற வைத்த நடுவதே #203 வைத்த தேகம் வருந்த வருந்திடும் பித்தன் நான் அருள் பெற்றும் திடம் இலேன் சித்த மோன சிவ சின்மயானந்தம் வைத்த ஐய அருள் செம்பொன் சோதியே #204 செம்பொன் மேனிச் செழும் சுடரே முழு வம்பனேன் உனை வாழ்த்தும் மதி இன்றி இம்பர் வாழ்வினுக்கு இச்சைவைத்தேன் மனம் நம்பி வா எனின் நான் என்-கொல் செய்வதே #205 செய்யும் செய்கையும் சிந்திக்கும் சிந்தையும் ஐய நின்னது என்று எண்ணும் அறிவு இன்றி வெய்ய காம வெகுளி மயக்கமாம் பொய்யிலே சுழன்றேன் என்ன புன்மையே #206 புன் புலால் நரம்பு என்பு உடைப் பொய் உடல் அன்பர் யார்க்கும் அருவருப்பு அல்லவோ என் பொலா மணியே இறையே இத்தால் துன்பம் அன்றிச் சுகம் ஒன்றும் இல்லையே #207 இல்லை உண்டு என்று எவர் பக்கம் ஆயினும் சொல்லவோ அறியாத தொழும்பன் யான் செல்ல வேறு ஒரு திக்கு அறியேன் எலாம் வல்ல நீ எனை வாழ்விக்கவேண்டுமே #208 வேண்டும் சீர் அருள் மெய்_அன்பர்க்கே அன்பு பூண்ட நான் என் புலம் அறியாததோ ஆண்ட நீ உன் அடியவன் நான் என்று தூண்டுவேன் அன்றித் தொண்டன் என் சொல்வதே #209 எனக்கு உளே உயிர் என்ன இருந்த நீ மன_கிலேசத்தை மாற்றல் வழக்கு அன்றோ கனத்த சீர் அருள் காட்சி அலால் ஒன்றை நினைக்கவோ அறியாது என்றன் நெஞ்சமே #210 நெஞ்சு உகந்து உனை நேசித்த மார்க்கண்டர்க்கு அஞ்சல் என்ற அருள் அறிந்தே ஐயா தஞ்சம் என்று உன் சரண் அடைந்தேன் எங்கும் செஞ்செவே நின்ற சிற்சுக_வாரியே #211 வாரி ஏழும் மலையும் பிறவும்-தான் சீரிதான நின் சின்மயத்தே என்றால் ஆரிலே உளது ஆவித் திரள் அதை ஓரிலேன் எனை ஆண்ட ஒருவனே #212 ஒருவர் என் உளத்து உள்ளும் குறிப்பு அறிந்து அருள்வரோ எனை ஆள் உடை அண்ணலே மருளனேன் பட்ட வாதை விரிக்கினோ பெருகும் நாள் இனிப் பேச விதி இன்றே #213 இன்று உனக்கு அன்பு இழைத்திலன் நான் என்றே அன்று-தொட்டு எனை ஆள் அரசே என்று நின்று அரற்றிய நீலனைக் கைவிட்டால் மன்றம் எப்படி நின் அருள் வாழ்த்துமே #214 வாழ்த்தும் நின் அருள் வாரம் வைத்தால் அன்றிப் பாழ்த்த சிந்தைப் பதகனும் உய்வனோ சூழ்த்து நின்ற தொழும்பரை ஆனந்தத்து ஆழ்த்தும் முக்கண் அருள் செம்பொன் சோதியே #215 சோதியே சுடரே சுகமே துணை நீதியே நிசமே நிறைவே நிலை ஆதியே உனை யான் அடைந்தேன் அகம் வாதியாது அருள்வாய் அருள் வான் ஐயே #216 வானைப் போல வளைந்துகொண்டு ஆனந்தத் தேனைத் தந்து எனைச் சேர்ந்து கலந்த மெய் ஞானத் தெய்வத்தை நாடுவன் நான் எனும் ஈனப் பாழ் கெட என்றும் இருப்பனே #217 இரும்பைக் காந்தம் இழுக்கின்றவாறு எனைத் திரும்பிப் பார்க்கவொட்டாமல் திரு_அடிக் கரும்பைத் தந்து கண்ணீர் கம்பலை எலாம் அரும்பச் செய் எனது அன்னை ஒப்பாம் மனே #218 அன்னை அப்பன் என் ஆவித் துணை எனும் தன்னை ஒப்பற்ற சற்குரு என்பது என் என்னைப் பூரண இன்ப வெளிக்குளே துன்னவைத்த சுடர் எனத்தக்கதே #219 தக்க கேள்வியில் சார்ந்த நல் பூமியின் மிக்கதாக விளங்கும் முதல் ஒன்றே எக்கணும் தொழ யாவையும் பூத்துக் காய்த்து ஒக்க நின்றும் ஒன்றாய் நிறைவு ஆனதே #220 ஆன மான சமயங்கள் ஆறுக்கும் தானமாய் நின்று தன்மயம் காட்டிய ஞான பூரண நாதனை நாடியே தீனனேன் இன்பம் தேக்கித் திளைப்பனே #221 தேக்கி இன்பம் திளைக்கத்திளைக்கவே ஆக்கமாய் எனக்கு ஆனந்தம் ஆகியே போக்கினோடு வரவு அற்ற பூரணம் தாக்கி நின்றவா தன்மயம் ஆம் அதே #222 அது என்று உன்னுமதுவும் அற நின்ற முதிய ஞானிகள் மோனப் பொருள் அது எது என்று எண்ணி இறைஞ்சுவன் ஏழையேன் மதியுள் நின்று இன்ப_வாரி வழங்குமே #223 வாரிக்கொண்டு எனை வாய்மடுத்து இன்பமாய்ப் பாரில் கண்டவை யாவும் பருகினை ஓரில் கண்டிடும் ஊமன் கனவு என யாருக்கும் சொல வாய் இலை ஐயனே #224 ஐயம் அற்ற அதிவருணர்க்கு எலாம் கையில் ஆமலகக் கனி ஆகிய மெய்யனே இந்த மேதினி மீது உழல் பொய்யனேற்குப் புகலிடம் எங்ஙனே #225 எங்ஙனே உய்ய யான் எனது என்பது அற்று அங்ஙனே உன் அருள் மயம் ஆகிலேன் திங்கள் பாதி திகழப் பணி அணி கங்கை வார் சடைக் கண்_நுதல் எந்தையே #226 கண்ணில் காண்பது உன் காட்சி கையால் தொழில் பண்ணல் பூசை பகர்வது மந்திரம் மண்ணொடு ஐந்தும் வழங்கு உயிர் யாவுமே அண்ணலே நின் அருள் வடிவு ஆகுமே #227 வடிவு எலாம் நின் வடிவு என வாழ்த்திடாக் கடியனேனும் உன் காரணம் காண்பனோ நெடிய வான் என எங்கும் நிறைந்து ஒளிர் அடிகளே அரசே அருள் அத்தனே #228 அத்தனே அகண்டானந்தனே அருள் சுத்தனே என உன்னைத் தொடர்ந்திலேன் மத்தனேன் பெறும் மா மலம் மாய வான் கத்தனே கல்வி யாது அது கற்கவே #229 கற்றும் என் பலன் கற்றிடும் நூல் முறை சொற்ற சொற்கள் சுகாரம்பமோ நெறி நிற்றல் வேண்டும் நிருவிகற்பச் சுகம் பெற்ற பேர் பெற்ற பேசாப் பெருமையே #230 பெருமைக்கே இறுமாந்து பிதற்றிய கருமிக்கு ஐய கதியும் உண்டாம்-கொலோ அருமைச் சீர் அன்பர்க்கு அன்னை ஒப்பாகவே வரும் அப் பேர்_ஒளியே உன் மனாந்தமே #231 உன்மனிக்குள் ஒளிர் பரஞ்சோதியாம் சின்மயப் பொருளே பழம் செல்வமே புன் மலத்துப் புழு அன்ன பாவியேன் கல் மனத்தைக் கரைக்கக் கடவதே #232 கரை_இல் இன்ப_கடல் அமுதே இது வரையில் நான் உனை வந்து கலந்திலேன் உரை_இலா இன்பம் உள்ளவர் போல இத் தரையிலே நடித்தேன் என்ன தன்மையே #233 மை உலாம் விழி மாதர்கள் தோதகப் பொய்யில் ஆழும் புலை இனிப் பூரை காண் கையில் ஆமலகக் கனி போன்ற என் ஐயனே எனை ஆள் உடை அண்ணலே #234 அண்ணலே உன் அடியவர் போல் அருள் கண்ணினால் உனைக் காணவும் வா எனப் பண்ணினால் என் பசுத்துவம் போய் உயும் வண்ணமாக மனோலயம் வாய்க்குமே #235 வாய்க்கும் கைக்கும் மெளனம் மெளனம் என்று ஏய்க்கும் சொல் கொண்டு இரா பகல் அற்றிடா நாய்க்கும் இன்பம் உண்டோ நல் அடியரைத் தோய்க்கும் ஆனந்தத் தூ வெளி வெள்ளமே #236 தூயதான துரிய அறிவு எனும் தாயும் நீ இன்பத் தந்தையும் நீ என்றால் சேய்-அதாம் இந்தச் சீவத் திரள் அன்றோ ஆயும் பேர்_ஒளியான அகண்டமே #237 அகண்டம் என்ன அரு மறை ஆகமம் புகன்ற நின் தன்மை போதத்து அடங்குமோ செகங்கள் எங்கும் திரிந்து நல் மோனத்தை உகந்த பேர் உனை ஒன்றுவர் ஐயனே #238 ஐயனே உனை அன்றி ஒரு தெய்வம் கையினால் தொழவும் கருதேன் கண்டாய் பொய்யன் ஆகிலும் பொய் உரையேன் சுத்த மெய்யனாம் உனக்கே வெளி ஆகுமே #239 வெளியில் நின்ற வெளியாய் விளங்கிய ஒளியில் நின்ற ஒளியாம் உன்றன்னை நான் தெளிவு தந்த கல்_ஆல் அடித் தே என்று களி பொருந்த அன்றே கற்ற கல்வியே #240 கல்லை உற்ற கருத்தினர் கார் நிறத்து அல்லை ஒத்த குழலினர் ஆசையால் எல்லையற்ற மயல் கொளவோ எழில் தில்லையில் திகழும் திரு_பாதனே #241 திரு_அருள் தெய்வச் செல்வி மலை_மகள் உரு இருக்கின்ற மேனி ஒரு பரம் குருவை முக்கண் எம் கோவைப் பணி நெஞ்சே கரு இருக்கின்ற கன்மம் இங்கு இல்லையே #242 கன்மம் ஏது கடு நரகு ஏது மேல் சென்மம் ஏது எனைத் தீண்டக் கடவதோ என் மனோரதம் எய்தும்படிக்கு அருள் நன்மை கூர் முக்கண் நாதன் இருக்கவே #243 நாத கீதன் என் நாதன் முக்கண் பிரான் வேத வேதியன் வெள் விடை ஊர்தி மெய்ப் போதமாய் நின்ற புண்ணியன் பூம் திருப் பாதமே கதி மற்று இலை பாழ் நெஞ்சே #244 மற்று உனக்கு மயக்கம் என் வல் நெஞ்சே கற்றை வார் சடைக் கண்_நுதலோன் அருள் பெற்றபேர் அவரே பெரியோர் எலாம் முற்றும் ஓர்ந்தவர் மூதுரை அர்த்தமே #245 உரை இறந்து உளத்து உள்ள விகாரமாம் திரை கடந்தவர் தேடும் முக்கண் பிரான் பரை நிறைந்த பரப்பு எங்ஙன் அங்ஙனே கரைகடந்து இன்பமாகக் கலப்பனே #246 கலந்த முத்தி கருதினும் கேட்பினும் நிலங்கள் ஆதியும் நின்று எமைப் போலவே அலந்து போயினம் என்னும் அரு மறை மலர்ந்த வாய் முக்கண் மாணிக்கச் சோதியே #247 சோதியாது எனைத் தொண்டருள் கூட்டியே போதியாத எல்லாம் மெளப் போதிக்க ஆதி காலத்தில் உன் அடிக்கு ஆம் தவம் ஏது நான் முயன்றேன் முக்கண் எந்தையே #248 எந்த நாளைக்கும் ஈன்று அருள் தாய் என வந்த சீர் அருள் வாழ்க என்று உன்னுவேன் சிந்தை நோக்கம் தெரிந்து குறிப்பு எலாம் தந்து காக்கும் தயா முக்கண் ஆதியே #249 கண் அகன்ற இக் காசினியூடு எங்கும் பெண்ணொடு ஆண் முதலாம் என் பிறவியை எண்ணவோ அரிது ஏழை கதி பெறும் வண்ணம் முக்கண் மணி வந்து காக்குமே #250 காக்கும் நின் அருள் காட்சி அல்லால் ஒரு போக்கும் இல்லை என் புந்திக் கிலேசத்தை நீக்கி ஆளுகை நின் பரம் அன்பினர் ஆக்கமே முக்கண் ஆனந்த மூர்த்தியே #251 ஆனந்தம் கதி என்ன என் ஆனந்த மோனம் சொன்ன முறை பெற முக்கண் எம் கோன் இங்கு ஈந்த குறிப்பு அதனால் வெறும் தீனன் செய்கை திரு_அருள் செய்கையே #252 கையினால் தொழுது ஏத்திக் கசிந்து உளம் மெய்யினால் உனைக் காண விரும்பினேன் ஐயனே அரசே அருளே அருள் தையல் ஓர் புறம் வாழ் சக_நாதனே #253 சகத்தின் வாழ்வைச் சதம் என எண்ணியே மிகுத்த தீமை விளைய விளைக்கின்றேன் அகத்துள் ஆர் அமுது ஆம் ஐய நின் முத்திச் சுகத்தில் நான் வந்து தோய்வது எக் காலமோ #254 காலம் மூன்றும் கடந்து ஒளிராநின்ற சீலமே நின் திரு_அருளால் இந்த்ர சாலம் ஆம் இச் சகம் என எண்ணி நின் கோலம் நாடுதல் என்று கொடியனே #255 கொடிய வெம் வினைக் கூற்றைத் துரந்திடும் அடிகளாம் பொருளே நினக்கு அன்பு இன்றிப் படியில் ஏழைமை பற்றுகின்றேன் வெறும் மிடியினேன் கதி மேவும் விதி இன்றே #256 விதியையும் விதித்து என்னை விதித்து இட்ட மதியையும் விதித்து அ மதி மாயையில் பதியவைத்த பசுபதி நின் அருள் கதியை எப்படிக் கண்டு களிப்பதே #257 கண்ட கண்ணுக்குக் காட்டும் கதிர் எனப் பண்டும் இன்றும் என்-பால் நின்று உணர்த்திடும் அண்டனே உனக்கு ஓர் பதினாயிரம் தெண்டன் என் பொய்ம்மை தீர்த்திடல் வேண்டுமே #258 வேண்டும் யாவும் இறந்து வெளியிடைத் தூண்டுவார் அற்ற சோதிப் பிரான் நின்-பால் பூண்ட அன்பர்-தம் பொன் பணி வாய்க்குமேல் ஈண்டு சன்மம் எடுப்பன் அனந்தமே #259 எடுத்த தேகம் இறக்கும் முனே எனைக் கொடுத்து நின்னையும் கூடவும் காண்பனோ அடுத்த பேர் அறிவாய் அறியாமையைக் கெடுத்த இன்பக் கிளர் மணிக் குன்றமே #260 குன்றிடாத கொழும் சுடரே மணி மன்றுள் ஆடிய மாணிக்கமே உனை அன்றி யார் துணை யார் உறவு ஆர் கதி என்று நீ எனக்கு இன் அருள் செய்வதே #261 அருள் எலாம் திரண்டு ஓர் வடிவு ஆகிய பொருள் எலாம் வல்ல பொன் பொது_நாத என் மருள் எலாம் கெடுத்தே உளம் மன்னலால் இருள் எலாம் இரிந்து எங்கு ஒளித்திட்டதே #262 எங்கும் என்னை இகல் உற வாட்டியே பங்கம்செய்த பழ_வினை பற்று அற்றால் அங்கணா உன் அடி_இணை அன்றியே தங்க வேறு இடம் உண்டோ சகத்திலே #263 உண்டவர்க்கு அன்றி உள் பசி ஓயுமோ கண்டவர்க்கு அன்றிக் காதல் அடங்குமோ தொண்டருக்கு எளியான் என்று தோன்றுவான் வண் தமிழ்க்கு இசைவு ஆக மதிக்கவே #264 மதியும் கங்கையும் கொன்றையும் மத்தமும் பொதியும் சென்னிப் புனிதரின் பொன் அடிக் கதியை விட்டு இந்தக் காமத்தில் ஆழ்ந்த என் விதியை எண்ணி விழி துயிலாது அன்றே #265 அன்று எனச் சொல ஆம் என அற்புதம் நன்று எனச் சொல நண்ணிய நன்மையை ஒன்று எனச் சொன ஒண் பொருளே ஒளி இன்று எனக்கு அருள்வாய் இருள் ஏகவே #266 இருவரே புகழ்ந்து ஏத்தற்கு இனியராம் ஒருவரே துணை என்று உணராய் நெஞ்சே வருவரே கொடும் காலர்கள் வந்து எதிர் பொருவரே அவர்க்கு என்-கொல் புகல்வதே #267 புகழும் கல்வியும் போதமும் பொய் இலா அகமும் வாய்மையும் அன்பும் அளித்தவே சுக விலாசத் துணைப் பொருள் தோற்றம் ஆம் ககன மேனியைக் கண்டன கண்களே #268 கண்ணுள் நின்ற ஒளியைக் கருத்தினை விண்ணுள் நின்று விளங்கிய மெய்யினை எண்ணி எண்ணி இரவும் பகலுமே நண்ணுகின்றவர் நான் தொழும் தெய்வமே #269 தெய்வம் வேறு உளது என்பவர் சிந்தனை நைவர் என்பதும் நல் பர தற்பர சைவ சிற்சிவனே உனைச் சார்ந்தவர் உய்வர் என்பதும் யான் உணர்ந்தேன் உற்றே #270 உற்ற வேளைக்கு உறு துணையாய் இந்தச் சுற்றமோ நமைக் காக்கும் சொலாய் நெஞ்சே கற்றை வார் சடைக் கண்_நுதல் பாதமே பற்று-அது ஆயில் பர சுகம் பற்றுமே #271 பற்றலாம் பொருளே பரம் பற்றினால் உற்ற மா தவர்க்கு உண்மையை நல்குமே மற்றும் வேறு உள மார்க்கம் எலாம் எடுத்து எற்றுவாய் மனமே கதி எய்தவே

மேல்

@19 ஆரணம்

#272 ஆரண மார்க்கத்து ஆகம வாசி அற்புதமாய் நடந்து அருளும் காரணம் உணர்த்தும் கையும் நின் மெய்யும் கண்கள் மூன்று உடைய என் கண்ணே பூரண அறிவில் கண்டிலம் அதனால் போற்றி இப் புந்தியோடு இருந்து தாரணி உள்ள மட்டுமே வணங்கத் தமியனேன் வேண்டிடத் தகுமே #273 இடம் ஒரு மடவாள் உலகு அன்னைக்கு ஈந்திட்டு எ உலகத்தையும் ஈன்றும் தடம் உறும் அகிலம் அடங்கும் நாள் அம்மை-தன்னையும் ஒழித்து விண் எனவே படருறு சோதிக் கருணை அம் கடலே பாய் இருள் படுகரில் கிடக்கக் கடவனோ நினைப்பும் மறப்பு எனும் திரையைக் கவர்ந்து எனை வளர்ப்பது உன் கடனே #274 வளம் பெறு ஞான_வாரி வாய்மடுத்து மண்ணையும் விண்ணையும் தெரியாது அளம் பெறு துரும்பு ஒத்து ஆவியோடு ஆக்கை ஆனந்தமாகவே அலந்தேன் களம் பெறு வஞ்ச நெஞ்சினர் காணாக் காட்சியே சாட்சியே அறிஞர் உளம் பெறும் துணையே பொதுவினில் நடிக்கும் உண்மையே உள்ளவாறு இதுவே #275 உள்ளமே நீங்கா என்னை வாவா என்று உலப்பு_இலா ஆனந்தமான வெள்ளமே பொழியும் கருணை வான் முகிலே வெப்பு_இலாத் தண் அருள் விளக்கே கள்ளமே துரக்கும் தூ வெளிப் பரப்பே கரு எனக் கிடந்த பாழ் மாயப் பள்ளமே வீழாது எனைக் கரையேற்றிப் பாலிப்பது உன் அருள் பரமே #276 பரம்பரம் ஆகிப் பக்குவம் பழுத்த பழ அடியார்க்கு அருள் பழுத்துச் சுரந்து இனிது இரங்கும் தான கற்பகமே சோதியே தொண்டனேன் நின்னை இரந்து நெஞ்சு உடைந்து கண் துயில்பெறாமல் இருந்ததும் என் கணில் இருட்டைக் கரந்து நின் கண்ணால் துயில்பெறல் வேண்டிக் கருதினேன் கருத்து இது-தானே #277 கருத்தினுள் கருத்தாய் இருந்து நீ உணர்த்தும் காரணம் கண்டு சும்மா-தான் வருத்தம் அற்று இருந்து சுகம்பெறா வண்ணம் வருந்தினேன் மதி_இன்மை தீர்ப்பார் ஒருத்தர் ஆர் உளப்பாடு உணர்பவர் யாவர் உலகவர் பல் நெறி எனக்குப் பொருத்தமோ சொல்லாய் மெளன சற்குருவே போற்றி நின் பொன் அடிப் போதே #278 அடி எனும் அதுவும் அருள் எனும் அதுவும் அறிந்திடின் நிர்க்குண நிறைவும் முடி எனும் அதுவும் பொருள் எனும் அதுவும் மொழிந்திடில் சுகம் மன மாயைக் குடிகெட வேண்டில் பணி அற நிற்றல் குணம் எனப் புன்னகை காட்டிப் படி மிசை மெளனி ஆகி நீ ஆளப் பாக்கியம் என் செய்தேன் பரனே #279 என் செயல் இன்றி யாவும் நின் செயல் என்று எண்ணுவேன் ஒவ்வொரு காலம் புன் செயல் மாயை மயக்கின் என் செயலாப் பொருந்துவேன் அஃது ஒரு காலம் பின் செயல் யாது நினைவு_இன்றிக் கிடப்பேன் பித்தனேன் நல் நிலை பெற நின் றன் செயலாக முடித்திடல் வேண்டும் சச்சிதானந்த சற்குருவே #280 குரு உரு ஆகி மெளனியாய் மெளனக் கொள்கையை உணர்த்தினை அதனால் கரு உரு ஆவது எனக்கு இலை இந்தக் காயமோ பொய் எனக் கண்ட திரு_உருவாளர் அநுபவ நிலையும் சேருமோ ஆவலோ மெத்த அரு உரு ஆகி அல்லவாய்ச் சமயம் அளவிடா ஆனந்த வடிவே #281 வடிவு_இலா வடிவாய் மன நினைவு அணுகா மார்க்கமாய் நீக்கு அரும் சுகமாய் முடிவு_இலா வீட்டின் வாழ்க்கை வேண்டினர்க்கு உன் மோனம் அல்லால் வழி உண்டோ படி இருள் அகலச் சின்மயம் பூத்த பசும் கொம்பை அடக்கி ஓர் கல்_ஆல் அடியிலே இருந்த ஆனந்த அரசே அன்பரைப் பருகும் ஆர் அமுதே

மேல்

@20 சொல்லற்குஅரிய

#282 சொல்லற்கு அரிய பரம் பொருளே சுக_வாரிதியே சுடர்க் கொழுந்தே வெல்லற்கு அரிய மயலில் எனை விட்டு எங்கு ஒளித்தாய் ஆ கெட்டேன் கல்லில் பசிய நார் உரித்துக் கடுகில் பெரிய கடல் அடைக்கும் அல்லின் கரிய அந்தகனார்க்கு ஆளாக்கினையோ அறியேனே #283 அறிவிற்கு அறிவு தாரகம் என்று அறிந்தே அறிவோடு அறியாமை நெறியில் புகுதாது ஓர்படித்தாய் நின்ற நிலையும் தெரியாது குறி அற்று அகண்டாதீதமயக் கோது_இல் அமுதே நினைக் குறுகிப் பிரிவு_அற்று இருக்க வேண்டாவோ பேயேற்கு இனி நீ பேசாயே #284 பேசா அநுபூதியை அடியேன் பெற்றுப் பிழைக்கப் பேர்_அருளால் தேசோமயம் தந்து இனி ஒரு கால் சித்தத்து இருளும் தீர்ப்பாயோ பாசாடவியைக் கடந்த அன்பர் பற்றும் அகண்டப் பரப்பான ஈசா பொதுவில் நடம் ஆடும் இறைவா குறையா இன் அமுதே #285 இன்ப_கடலில் புகுந்திடுவான் இரவும் பகலும் தோற்றாமல் அன்பில் கரைந்துகரைந்து உருகி அண்ணா அரசே எனக் கூவிப் பின்புற்று அழும் சேய் என விழி நீர் பெருக்கிப்பெருக்கிப் பித்தாகித் துன்ப_கடல் விட்டு அகல்வேனோ சொரூபானந்தச் சுடர்க் கொழுந்தே #286 கொழுந்து திகழ் வெண் பிறைச் சடிலக் கோவே மன்றில் கூத்து ஆடற்கு எழுந்த சுடரே இமயவரை என் தாய் கண்ணுக்கு இனியானே தொழும் தெய்வமும் நீ குருவும் நீ துணை நீ தந்தை தாயும் நீ அழுந்தும் பவம் நீ நன்மையும் நீ ஆவி யாக்கை நீ-தானே #287 தானே அகண்டாகார மயம்-தன்னில் எழுந்து பொது நடம்செய் வானே மாயப் பிறப்பு_அறுப்பான் வந்து உன் அடிக்கே கரம் கூப்பித் தேனே என்னைப் பருக வல்ல தெள் ஆர் அமுதே சிவலோகக் கோனே எனும் சொல் நினது செவி கொள்ளாது என்னோ கூறாயே #288 கூறாநின்ற இடர்க் கவலைக் குடும்பக் கூத்துள் துளைந்து தடு மாறாநின்ற பாவியை நீ வா என்று அழைத்தால் ஆகாதோ நீறு ஆர் மேனி முக்கண் உடை நிமலா அடியார் நினைவினிடை ஆறாய்ப் பெருகும் பெரும் கருணை அரசே என்னை ஆள்வானே #289 வானே முதல் ஆம் பெரும் பூதம் வகுத்துப் புரந்து மாற்ற வல்ல கோனே என்னைப் புரக்கும் நெறி குறித்தாய்_இலையே கொடியேனைத் தானே படைத்து இங்கு என்ன பலன்-தன்னைப் படைத்தாய் உன் கருத்தை நான் ஏது என்று இங்கு அறியேனே நம்பினேன் கண்டு அருள்வாயே #290 கண்டார் கண்ட காட்சியும் நீ காணார் காணாக் கள்வனும் நீ பண்டு ஆர் உயிர் நீ யாக்கையும் நீ பலவாம் சமயப் பகுதியும் நீ எண் தோள் முக்கண் செம் மேனி எந்தாய் நினக்கே எவ்வாறு தொண்டாய்ப் பணிவார் அவர் பணி நீ சூட்டிக் கொள்வது எவ்வாறே #291 சூட்டி எனது என்றிடும் சுமையைச் சுமத்தி எனையும் சுமையாளாக் கூட்டிப் பிடித்து வினை வழியே கூத்தாட்டினையே நினது அருளால் வீட்டைக் கருதும் அப்போது வெளியாம் உலக வியப்பு அனைத்தும் ஏட்டுக்கு அடங்காச் சொப்பனம் போல் எந்தாய் இருந்தது என் சொல்வேன்

மேல்

@21 வம்பனேன்

#292 வம்பனேன் கள்ளம் கண்டு மன் அருள்_வெள்ளர் ஆய உம்பர்-பால் ஏவல் செய் என்று உணர்த்தினை ஓகோ வானோர் தம்பிரானே நீ செய்த தயவுக்கும் கைம்மாறு உண்டோ எம்பிரான் உய்ந்தேன் உய்ந்தேன் இனி ஒன்றும் குறைவு_இலேனே #293 குறைவு_இலா நிறைவாய் ஞானக் கோது_இல் ஆனந்த_வெள்ளத் துறையிலே படிந்து மூழ்கித் துளைந்து நான் தோன்றாவாறு உள் ளுறையிலே உணர்த்தி மோன ஒண் சுடர் வை வாள் தந்த இறைவனே உனைப் பிரிந்து இங்கு இருக்கிலேன் இருக்கிலேனே #294 இரு நிலம் ஆதி நாதம் ஈறு-அதாம் இவை கடந்த பெரு நிலமாய தூய பேர்_ஒளிப் பிழம்பாய் நின்றும் கருது அரும் அகண்டானந்தக் கடவுள் நின் காட்சி காண வருக என்று அழைத்தால் அன்றி வாழ்வு உண்டோ வஞ்சனேற்கே #295 வஞ்சனை அழுக்காறு ஆதி வைத்திடும் பாண்டமான நெஞ்சனை வலிதின் மேன்மேல் நெக்குநெக்குருகப்பண்ணி அஞ்சலிசெய்யும் கையும் அருவி நீர் விழியுமாகத் தஞ்சம் என்று இரங்கிக் காக்கத் தற்பரா பரம் உனக்கே #296 உனக்கு நான் அடி_தொண்டு ஆகி உன் அடிக்கு அன்பு செய்ய எனக்கு நீ தோற்றி அஞ்சேல் என்னும் நாள் எந்த நாளோ மனக் கிலேசங்கள் தீர்ந்த மா தவர்க்கு இரண்டு அற்று ஓங்கும் தனக்கு நேர்_இல்லா ஒன்றே சச்சிதானந்த வாழ்வே #297 வாழ்வு என வயங்கி என்னை வசம்செய்து மருட்டும் பாழ்த்த ஊழ்வினைப் பகுதி கெட்டு இங்கு உன்னையும் கிட்டுவேனோ தாழ்வு எனும் சமயம் நீங்கித் தமை_உணர்ந்தோர்கட்கு எல்லாம் சூழ் வெளிப் பொருளே முக்கண் சோதியே அமரர் ஏறே #298 ஏறு வாம் பரியா ஆடை இரும் கலை உரியா என்றும் நாறும் நல் சாந்த நீறு நஞ்சமே அமுதாக் கொண்ட கூறு அரும் குணத்தோய உன்றன் குரை கழல் குறுகின் அல்லால் ஆறுமோ தாப சோபம் அகலுமோ அல்லல்-தானே #299 தானமும் தவமும் யோகத் தன்மையும் உணரா என்-பால் ஞானமும் தெவிட்டா இன்ப நன்மையும் நல்குவாயோ பால் நலம் கவர்ந்த தீம் சொல் பச்சிளம் கிள்ளை காண வானவர் இறைஞ்ச மன்றுள் வயங்கிய நடத்தினானே #300 நடத்தி இ உலகை எல்லாம் நாத நீ நிறைந்த தன்மை திடத்துடன் அறிந்து ஆனந்தத் தெள் அமுது அருந்திடாதே விடத் திரள் அனைய காம வேட்கையில் அழுந்தி மாயைச் சடத்தினை மெய் என்று எண்ணித் தளரவோ தனியனேனே #301 தனி வளர் பொருளே மாறாத் தண் அரும் கருணை பூத்த இனிய கற்பகமே முக்கண் எந்தையே நினக்கு அன்பு இன்றி நனி பெரும் குடிலம் காட்டும் நயன வேல் கரிய கூந்தல் வனிதையர் மயக்கில் ஆழ்ந்து வருந்தவோ வம்பனேனே

மேல்

@22 சிவன்செயல்

#302 சிவன் செயலாலே யாதும் வரும் எனத் தேறேன் நாளும் அவம் தரும் நினைவை எல்லாம் அகற்றிலேன் ஆசை_வெள்ளம் கவர்ந்துகொண்டு இழுப்ப அந்தக் கட்டிலே அகப்பட்டு ஐயோ பவம்-தனை ஈட்டிஈட்டிப் பதைக்கின்றேன் பாவியேனே #303 பாவியேன் இனி என் செய்கேன் பரமனே பணிந்து உன் பாதம் சேவியேன் விழி நீர் மல்கச் சிவசிவ என்று தேம்பி ஆவியே நிறைய வந்த அமுதமே என்னேன் அந்தோ சாவிபோம் சமயத்து ஆழ்ந்து சகத்திடைத் தவிக்கின்றேனே #304 இடைந்திடைந்து ஏங்கி மெய் புளகிப்ப எழுந்தெழுந்து ஐய நின் சரணம் அடைந்தனன் இனி நீ கைவிடேல் உனக்கே அபயம் என்று அஞ்சலிசெய்து உள் உடைந்துடைந்து எழுது சித்திர_பாவை ஒத்து நான் அசைவு_அற நிற்பத் தொடர்ந்து நீ எனை ஆட்கொள்ளும் நாள் என்றோ சோதியே ஆதி_நாயகனே #305 ஆதியாய் நடுவாய் அந்தமாய்ப் பந்தம் யாவும் அற்று அகம் புறம் நிறைந்த சோதியாய்ச் சுகமாய் இருந்த எம்பெருமான் தொண்டனேன் சுகத்திலே இருக்கப் போதியா வண்ணம் கைவிடல் முறையோ புன்மையேன் என் செய்கேன் மனமோ வாதியாநின்றது அன்றியும் புலன் சேர் வாயிலோ தீயினும் கொடிதே #306 வாயில் ஓர் ஐந்தில் புலன் எனும் வேடர் வந்து எனை ஈர்த்து வெம் காமத் தீயிலே வெதுப்பி உயிரொடும் தின்னச் சிந்தை நைந்து உருகி மெய் மறந்து தாய்_இலாச் சேய் போல் அலைந்து அலைப்பட்டேன் தாயினும் கருணையாய் மன்றுள் நாயகம் ஆகி ஒளிவிடு மணியே நாதனே ஞான_வாரிதியே #307 ஞானமே வடிவாய்த் தேடுவார் தேடும் நாட்டமே நாட்டத்துள் நிறைந்த வானமே எனக்கு வந்துவந்து ஓங்கும் மார்க்கமே மருளர் தாம் அறியா மோனமே முதலே முத்தி நல் வித்தே முடிவு_இலா இன்பமே செய்யும் தானமே தவமே நின்னை நான் நினைந்தேன் தமியனேன் தனை மறப்பதற்கே #308 மறம் மலி உலக வாழ்க்கையே வேண்டும் வந்து நின் அன்பர்-தம் பணியாம் அறம்-அது கிடைக்கின் அன்றி ஆனந்த அற்புத நிட்டையின் நிமித்தம் துறவு-அது வேண்டும் மெளனியாய் எனக்குத் தூய நல் அருள் தரின் இன்னம் பிறவியும் வேண்டும் யான் எனது இறக்கப்பெற்றவர் பெற்றிடும் பேறே #309 பெற்றவர் பெற்ற பெரும் தவ_குன்றே பெருகிய கருணை_வாரிதியே நல் தவத் துணையே ஆனந்த_கடலே ஞாதுரு ஞான ஞேயங்கள் அற்றவர்க்கு அறாத நட்பு உடைக் கலப்பே அநேகமாய் நின் அடிக்கு அன்பு கற்றதும் கேள்வி கேட்டதும் நின்னைக் கண்டிடும் பொருட்டு அன்றோ காணே #310 அன்று நால்வருக்கும் ஒளி நெறி காட்டும் அன்பு உடைச் சோதியே செம்பொன் மன்றுள் முக்கண்ணும் காளகண்டமுமாய் வயங்கிய வானமே என்னுள் துன்று கூர் இருளைத் துரந்திடும் மதியே துன்பமும் இன்பமும் ஆகி நின்ற வாதனையைக் கடந்தவர் நினைவே நேசமே நின் பரம் யானே #311 யான் எனல் காணேன் பூரண நிறைவில் யாதினும் இருந்த பேர்_ஒளி நீ தான் என நிற்கும் சமத்து உற என்னைத் தன்னவன் ஆக்கவும் தகும் காண் வான் என வயங்கி ஒன்று இரண்டு என்னா மார்க்கமா நெறி தந்து மாறாத் தேன் என ருசித்து உள் அன்பரைக் கலந்த செல்வமே சிற்பர சிவமே

மேல்

@23 தன்னையொருவர்

#312 தன்னை ஒருவர்க்கு அறிவு அரிதாய்த் தானே தானாய் எங்கும் நிறைந்து உன்னற்கு அரிய பரவெளியாய் உலவா அமுதாய் ஒளி விளக்காய் என்னுள் கலந்தாய் யான் அறியாது இருந்தாய் இறைவா இனியேனும் நின்னைப் பெறுமாறு எனக்கு அருளாம் நிலையைக் கொடுக்க நினையாயோ #313 நினையும் நினைவுக்கு எட்டாத நெறி பெற்று உணர்ந்த நெறியாளர் வினையைக் கரைக்கும் பரம இன்ப_வெள்ளப் பெருக்கே நினது அருளால் மனைவி புதல்வர் அன்னை பிதா மாடு வீடு என்றிடும் மயக்கம்- தனையும் மறந்து இங்கு உனை மறவாத் தன்மை வருமோ தமியேற்கே #314 வரும் போம் என்னும் இரு நிலைமை மன்னாது ஒருதன்மைத்து ஆகிக் கரும்போ தேனோ முக்கனியோ என்ன என்னுள் கலந்து நலம் தரும் பேர்_இன்பப் பொருளே நின்றன்னை நினைந்து நெக்குருகேன் இரும்போ கல்லோ மரமோ என் இதயம் யாது என்று அறியேனே #315 அறியும் தரமோ நான் உன்னை அறிவுக்கு அறிவாய் நிற்கையினால் பிறியும் தரமோ நீ என்னைப் பெம்மானே பேர்_இன்பம்-அதாய்ச் செறியும் பொருள் நீ நின்னை அன்றிச் செறியாப் பொருள் நான் பெரும் பேற்றை நெறி நின்று ஒழுக விசாரித்தால் நினக்கோ இல்லை எனக்காமே #316 எனது என்பதும் பொய் யான் எனல் பொய் எல்லாம் இறந்த இடம் காட்டும் நினது என்பதும் பொய் நீ எனல் பொய் நிற்கும் நிலைக்கே நேசித்தேன் மனது என்பதுமோ என் வசமாய் வாராது ஐய நின் அருளோ தனது என்பதுக்கும் இடம் காணேன் தமியேன் எவ்வாறு உய்வேனே #317 உய்யும்படிக்கு உன் திரு_கருணை ஒன்றைக் கொடுத்தால் உடையாய் பாழ்ம் பொய்யும் அவாவும் அழுக்காறும் புடைபட்டு ஓடும் நல் நெறியாம் மெய்யும் அறிவும் பெறும் பேறும் விளங்கும் எனக்கு உன் அடியார்-பால் செய்யும் பணியும் கைகூடும் சிந்தைத் துயரும் தீர்ந்திடுமே #318 சிந்தைத் துயர் என்று ஒரு பாவி சினந்துசினந்து போர் முயங்க நிந்தைக்கு இடமாய்ச் சுக வாழ்வை நிலை என்று உணர்ந்தே நிற்கின்றேன் எந்தப்படி உன் அருள் வாய்க்கும் எனக்கு அப்படி நீ அருள்செய்வாய் பந்தத் துயர்_அற்றவர்க்கு எளிய பரமானந்தப் பழம்_பொருளே #319 பொருளைப் பூவைப் பூவையரைப் பொருள் என்று எண்ணும் ஒரு பாவி இருளைத் துரந்திட்டு ஒளி நெறியை என்னுள் பதிப்பது என்று-கொலோ தெருளத்தெருள அன்பர் நெஞ்சம் தித்தித்து உருகத் தெவிட்டாத அருளைப் பொழியும் குண_முகிலே அறிவானந்தத் தார் அமுதே #320 ஆரா அமிர்தம் விரும்பினர்கள் அறிய விடத்தை அமிர்து ஆக்கும் பேர்_ஆனந்தச் சித்தன் எனும் பெரியோய் ஆவிக்கு_உரியோய் கேள் கார் ஆர் கிரக_வலையினிடைக் கட்டுண்டு இருந்த களைகள் எலாம் ஊரால் ஒருநாள் கையுணவு ஏற்று உண்டால் எனக்கு இங்கு ஒழிந்திடுமே #321 எனக்கென்று இருந்த உடல் பொருளும் யானும் நின என்று ஈந்த வண்ணம் அனைத்தும் இருந்தும் இலவாக அருளாய் நில்லாது அழி வழக்காய் மனத்துள் புகுந்து மயங்கவும் என் மதிக்குள் களங்கம் வந்தது என்னோ தனக்கு ஒன்று உவமை அற நிறைந்த தனியே தன்னந்தனி முதலே

மேல்

@24 ஆசையெனும்

#322 ஆசை எனும் பெரும் காற்றூடு இலவம்_பஞ்சு எனவும் மனது அலையும் காலம் மோசம் வரும் இதனாலே கற்றதும் கேட்டதும் தூர்ந்து முத்திக்கான நேசமும் நல் வாசமும் போய்ப் புலனாய் இல் கொடுமை பற்றி நிற்பர் அந்தோ தேசு பழுத்து அருள் பழுத்த பராபரமே நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ #323 இரப்பான் அங்கு ஒருவன் அவன் வேண்டுவ கேட்டு அருள்செய் என ஏசற்றே-தான் புரப்பான்-தன் அருள் நாடி இருப்பது போல் எங்கு நிறை பொருளே கேளாய் மரப் பான்மை நெஞ்சினன் யான் வேண்டுவ கேட்டு இரங்கு எனவே மெளனத்தோடு அந் தரப் பான்மை அருள் நிறைவில் இருப்பதுவோ பராபரமே சகச நிட்டை #324 சாட்டையின் பம்பர சாலம் போல் எலாம் ஆட்டுவான் இறை என அறிந்து நெஞ்சமே தேட்டம் ஒன்று அற அருள் செயலில் நிற்றியேல் வீட்டறம் துறவறம் இரண்டும் மேன்மையே #325 தன் நெஞ்சம் நினைப்பு ஒழியாது அறிவு_இலி நான் ஞானம் எனும் தன்மை பேச உன் நெஞ்சம் மகிழ்ந்து ஒரு சொல் உரைத்தனையே அதனை உன்னி உருகேன் ஐயா வன் நெஞ்சோ இரங்காத மர நெஞ்சோ இருப்பு நெஞ்சோ வைரமான கல் நெஞ்சோ அலது மண்ணாங்கட்டி நெஞ்சோ எனது நெஞ்சம் கருதில்-தானே #326 வாழி சோபனம் வாழி நல் அன்பர்கள் சூழ வந்து அருள் தோற்றமும் சோபனம் ஆழி போல் அருள் ஐயன் மவுனத்தால் ஏழையேன் பெற்ற இன்பமும் சோபனம் #327 கொடுக்கின்றோர்கள்-பால் குறைவையாது யான் எனும் குதர்க்கம் விடுக்கின்றோர்கள்-பால் பிரிகிலாது உள் அன்பு விடாதே அடுக்கின்றோர்களுக்கு இரங்கிடும் தண் தமிழ் அலங்கல் தொடுக்கின்றோர்களைச் சோதியாதது பரஞ்சோதி #328 உலக மாயையிலே எளியேன்-தனை உழல விட்டனையே உடையாய் அருள் இலகு பேர்_இன்ப வீட்டினில் என்னையும் இருத்திவைப்பது எக் காலம் சொலாய் எழில் திலக வாள் நுதல் பைம்_தொடி கண் இணை தேக்க நாடகம்செய்து அடியார்க்கு எலாம் அலகு_இலா வினை தீர்க்கத் துசம்கட்டும் அப்பனே அருள் ஆனந்த சோதியே #329 முன்னிலைச்சுட்டு ஒழிதி எனப் பல காலும் நெஞ்சே நான் மொழிந்தேனே நின் றன் நிலையைக் காட்டாதே என்னை ஒன்றாச் சூட்டாதே சரண் நான் போந்த அ நிலையே நிலை அந்த நிலையிலே சித்தி முத்தி அனைத்தும் தோன்றும் நல் நிலை ஈது அன்றி இலை சுகம் என்றே சுகர் முதலோர் நாடினாரே #330 அத்துவிதம் பெறும் பேறு என்று அறியாமல் யான் எனும் பேய்_அகந்தையோடு மத்த மதியினர் போல மனம் கிடப்ப இன்னம்இன்னம் வருந்துவேனோ சுத்த பரிபூரணமாய் நின்மலமாய் அகண்டிதமாய்ச் சொரூபானந்தச் சத்திகள் நீங்காத வணம் தன்மயமாய் அருள் பழுத்துத் தழைத்த ஒன்றே #331 தந்தை தாயும் நீ என் உயிர்த் துணையும் நீ சஞ்சலம்-அது தீர்க்க வந்த தேசிக வடிவு நீ உனை அலால் மற்று ஒரு துணை காணேன் அந்தம் ஆதியும் அளப்பு அரும் சோதியே ஆதியே அடியார்-தம் சிந்தை மேவிய தாயுமானவன் எனும் சிரகிரிப் பெருமானே #332 காதில் ஓலையை வரைந்து மேல் குமிழையும் கறுவி வேள் கருநீலப் போது போன்றிடும் கண்ணியர் மயக்கில் எப்போதுமே தளராமல் மாது காதலி_பங்கனை அபங்கனை மாட மாளிகை சூழும் சேது மேவிய ராம_நாயகன்-தனைச் சிந்தை செய் மட நெஞ்சே #333 அண்டமுமாய்ப் பிண்டமுமாய் அளவு_இலாத ஆர் உயிர்க்கு ஓர் உயிராய் அமர்ந்தாயானால் கண்டவர் ஆர் கேட்டவர் ஆர் உன்னால் உன்னைக் காண்பது அல்லால் என் அறிவால் காணப்போமோ வண் துளபம் அணி மார்பன் புதல்வனோடும் மனைவியொடும் குடியிருந்து வணங்கிப் போற்றும் புண்டரிகபுரத்தினில் நாதாந்த மெளன போதாந்த நடம் புரியும் புனித வாழ்வே #334 பொறியில் செறி ஐம்_புலக் கனியைப் புந்திக் கவரால் புகுந்து இழுத்து மறுகிச் சுழலும் மன_குரங்கு மாள வாளா இருப்பேனோ அறிவுக்கு அறிவாய்ப் பூரணமாய் அகண்டானந்த மயம் ஆகிப் பிறிவுற்று இருக்கும் பெரும் கருணைப் பெம்மானே எம்பெருமானே #335 உரை உணர்வு இறந்து தம்மை உணர்பவர் உணர்வினூடே கரை_இலா இன்ப_வெள்ளம் காட்டிடும் முகிலே மாறாப் பரை எனும் கிரணம் சூழ்ந்த பானுவே நின்னைப் பற்றித் திரை_இலா நீர் போல் சித்தம் தெளிவனோ சிறியனேனே #336 கேவல சகலம் இன்றிக் கீழொடு மேலாய் எங்கும் மேவிய அருளின் கண்ணாய் மேவிட மேலாய் இன்பம் தாவிட இன்பாதீதத் தனியிடை இருத்திவைத்த தே எனும் மெளனி செம்பொன் சேவடி சிந்தைசெய்வாம் #337 நேற்று_உளார் இன்று மாளாநின்றனர் அதனைக் கண்டும் போற்றிலேன் நின்னை அந்தோ போக்கினேன் வீணே காலம் ஆற்றிலேன் அகண்டானந்த அண்ணலே அளவு_இல் மாயைச் சேற்றிலே இன்னம் வீழ்ந்து திளைக்கவோ சிறியனேனே #338 போதம் என்பதே விளக்கு ஒவ்வும் அவித்தை பொய் இருளாம் தீது_இலா விளக்கு எடுத்து இருள் தேடவும் சிக்காது ஆதலால் அறிவாய் நின்ற இடத்து அறியாமை ஏதும் இல்லை என்று எம்பிரான் சுருதியே இயம்பும் #339 சுருதியே சிவாகமங்களே உங்களால் சொல்லும் ஒரு தனிப் பொருள் அளவை ஈது என்ன வாய் உண்டோ பொரு திரைக் கடல் நுண் மணல் எண்ணினும் புகலக் கருத எட்டிடா நிறை பொருள் அளவை யார் காண்பார் #340 மின்னைப் போன்றன அகிலம் என்று அறிந்து மெய்ப் பொருளாம் உன்னைப் போன்ற நல் பரம் பொருள் இல்லை என்று ஓர்ந்து பொன்னைப் போன்ற நின் போதம் கொண்டு உன் பணி பொருந்தா என்னைப் போன்று உள ஏழையர் ஐய இங்கு எவரே #341 தாயும் தந்தையும் எனக்கு உறவு ஆவதும் சாற்றின் ஆயும் நீயும் நின் அருளும் நின் அடியரும் என்றோ பேய்_அனேன் திரு_அடி இணைத் தாமரை பிடித்தேன் நாயனே எனை ஆள் உடை முக்கண் நாயகனே #342 காந்தம்-அதை எதிர் காணில் கரும்_தாது செல்லும் அக் காந்தத்து ஒன்றாது ஓய்ந்த இடம் எங்கே-தான் அங்கே-தான் சலிப்பு_அறவும் இருக்குமா போல் சாந்தபதப் பரம் பொருளே பற்று பொருள் இருக்குமத்தால் சலிக்கும் சித்தம் வாய்ந்த பொருள் இல்லை எனில் பேசாமை நின்ற நிலை வாய்க்கும் அன்றே #343 பொற்பு உறும் கருத்தே அகமாய் அதில் பொருந்தக் கற்பின் மங்கையர் என விழி கதவு போல் கவினச் சொற்பனத்தினும் சோர்வு இன்றி இருந்த நான் சோர்ந்து நிற்பதற்கு இந்த வினை வந்த ஆறு என்-கொல் நிமலா #344 வந்தவாறு இந்த வினை வழி இது என மதிக்கத் தந்தவாறு உண்டோ உள்ளுணர்வு இலை அன்றித் தமியேன் நொந்தவாறு கண்டு இரங்கவும் இலை கற்ற நூலால் எந்தவாறு இனித் தற்பரா உய்குவேன் ஏழை #345 சொல்லாலும் பொருளாலும் அளவையாலும் தொடரவொண்ணா அருள் நெறியைத் தொடர்ந்து நாடி நல்லார்கள் அவையகத்தே இருக்கவைத்தாய் நன்னர் நெஞ்சம் தன்னலமும் நணுகுவேனோ இல்லாளியாய் உலகோடு உயிரை ஈன்றிட்டு எண் அரிய யோகினுக்கும் இவனே என்னக் கல்_ஆலின் கீழ் இருந்த செக்கர் மேனிக் கற்பகமே பராபரமே கைலை வாழ்வே #346 சாக்கிரமா நுதலினில் இந்திரியம் பத்தும் சத்தாதி வசனாதி வாயு பத்தும் நீக்கம்_இல் அந்தக்கரணம் புருடனோடு நின்ற முப்பான் ஐந்து நிலவும் கண்டத்து ஆக்கிய சொப்பனம்-அதனில் வாயு பத்தும் அடுத்தன சத்தாதி வசனாதியாக நோக்கு கரணம் புருடன் உடனே கூட நுவல்வர் இருபத்தைந்தா நுண்ணியோரே #347 சுழுத்தி இதயம்-தனில் பிராணம் சித்தம் சொல் அரிய புருடனுடன் மூன்றது ஆகும் வழுத்திய நாபியில் துரியம் பிராணனோடு மன்னு புருடனும் கூட வயங்காநிற்கும் அழுத்திடும் மூலம்-தன்னில் துரியாதீதம் அதனிடையே புருடன் ஒன்றி அமரும் ஞானம் பழுத்திடும் பக்குவர் அறிவர் அவத்தை ஐந்தில் பாங்குபெறக் கருவி நிற்கும் பரிசு-தானே #348 இடத்தைக் காத்திட்ட சுவா எனப் புன் புலால் இறைச்சிச் சடத்தைக் காத்திட்ட நாயினேன் உன் அன்பர் தயங்கும் மடத்தைக் காத்து இட்ட சேடத்தால் விசேடமாய் வாழ விடத்தைக் காத்திட்ட கண்டத்தோய் நின் அருள் வேண்டும் #349 வாதனைப் பழக்கத்தினால் மனம் அந்த மனத்தால் ஓத வந்திடும் உரை உரைப்படி தொழில் உளவாம் ஏதம் அ மனம் மாயை என்றிடின் கண்ட எல்லாம் ஆதரம்செயாப் பொய் அதற்கு ஐயம் உண்டாமோ #350 ஐய வாதனைப் பழக்கமே மன நினைவு அது-தான் வையம் மீதினில் பரம்பரை யாதினும் மருவும் மெய்யில் நின்று ஒளிர் பெரியவர் சார்வுற்று விளங்கிப் பொய் அது என்பதை ஒருவி மெய் உணருதல் போதம் #351 குலம்_இலான் குணம் குறி_இலான் குறைவு_இலான் கொடிதாம் புலம்_இலான் தனக்கு என்ன ஓர் பற்று_இலான் பொருந்தும் இலம்_இலான் மைந்தர் மனைவி_இல்லான் எவன் அவன் சஞ் சலம்_இலான் முத்தி தரும் பரசிவன் எனத் தகுமே #352 கடத்தை மண் எனல் உடைந்த போதோ இந்தக் கருமச் சடத்தைப் பொய் எனல் இறந்த போதோ சொலத் தருமம் விடத்தை நல் அமிர்தா உண்டு பொன் பொது வெளிக்கே நடத்தைக் காட்டி எவ்வுயிரையும் நடப்பிக்கும் நலத்தோய் #353 நான் எனவும் நீ எனவும் இரு தன்மை நாடாமல் நடுவே சும்மா- தான் அமரும் நிலை இதுவே சத்தியம்சத்தியம் என நீ தமியனேற்கு மோனகுரு ஆகியும் கைகாட்டினையே திரும்பவும் நான் முளைத்துத் தோன்றி மானத மார்க்கம் புரிந்து இங்கு அலைந்தேனே பரந்தேனே வஞ்சனேனே #354 தன்மயம் சுபாவம் சுத்தம் தன் அருள் வடிவம் சாந்தம் மின் மயமான அண்ட வெளி உருவான பூர்த்தி என் மயம் எனக்குக் காட்டாது எனை அபகரிக்க வந்த சின்மயம் அகண்டாகாரம் தட்சிணாதிக்க மூர்த்தம் #355 சிற்றரும்பு அன சிற்றறிவாளனே தெளிந்தால் மற்று அரும்பு என மலர் எனப் பேர்_அறிவு ஆகிக் கற்று அரும்பிய கேள்வியால் மதித்திடக் கதிச் சீர் முற்று அரும்பிய மெளனியாய்ப் பரத்திடை முளைப்பான் #356 மயக்கு சிந்தனை தெளிவு என இரு நெறி வகுப்பான் நயக்கும் ஒன்றன்-பால் ஒன்று இலை எனல் நல வழக்கே இயக்கம் உற்றிடும் மயக்கத்தில் தெளிவுறல் இனிதாம் பயக்க வல்லது ஓர் தெளிவு_உடையவர்க்கு எய்தல் பண்போ #357 அருள் வடிவு ஏழு மூர்த்தம் அவைகள் சோபானம் என்றே சுருதி சொல்லிய ஆற்றாலே தொழும் தெய்வம் எல்லாம் ஒன்றே மருள் எனக்கு இல்லை முன்பின் வரும் நெறிக்கு இ வழக்குத் தெருளின முன்னிலையாம் உன்னைச் சேர்ந்து யான் தெளிகின்றேனே #358 எத்தனைப் பிறப்போ எத்தனை இறப்போ எளியேனேற்கு இதுவரை அமைத்து அத்தனை எல்லாம் அறிந்த நீ அறிவை அறிவு_இலி அறிகிலேன் அந்தோ சித்தமும் வாக்கும் தேகமும் நினவே சென்மமும் இனி எனால் ஆற்றா வைத்திடு இங்கு என்னை நின் அடிக் குடியா மறை முடி இருந்த வான் பொருளே #359 வான் பொருள் ஆகி எங்கு நீ இருப்ப வந்து எனைக் கொடுத்து நீ ஆகாது ஏன் பொருள் போலக் கிடக்கின்றேன் முன்னை இரு வினை வாதனை அன்றோ தீன் பொருளான அமிர்தமே நின்னைச் சிந்தையில் பாவனைசெய்யும் நான் பொருள் ஆனேன் நல்ல நல் அரசே நான் இறந்திருப்பது நாட்டம் #360 நாட்டம் மூன்று உடைய செம் நிற மணியே நடுவுறு நாயக விளக்கே கோட்டம்_இல் குணத்தோர்க்கு எளிய நிர்க்குணமே கோது_இலா அமிர்தமே நின்னை வாட்டம்_இல் நெஞ்சம் கிண்ணமாச் சேர்த்து வாய்மடுத்து அருந்தினன் ஆங்கே பாட்டு அளி நறவம் உண்டு அயர்ந்தது போல் பற்று அயர்ந்து இருப்பது எ நாளோ #361 என்னுடை உயிரே என் உளத்து அறிவே என்னுடை அன்பு எனும் நெறியாம் கன்னல் முக்கனி தேன் கண்டு அமிர்து என்னக் கலந்து எனை மேவிடக் கருணை மன்னிய உறவே உன்னை நான் பிரியா வண்ணம் என் மனம் எனும் கருவி தன்னது வழி அற்று என்-உழைக் கிடப்பத் தண் அருள் வரம்-அது வேண்டும்

மேல்

@25 எனக்கெனச் செயல்

#362 எனக்கு எனச் செயல் வேறு இலை யாவும் இங்கு ஒரு நின் றனக்கு எனத் தகும் உடல் பொருள் ஆவியும் தந்தேன் மனத்து அகத்து உள அழுக்கு எலாம் மாற்றி எம்பிரான் நீ நினைத்தது எப்படி அப்படி அருளுதல் நீதம் #363 உளவு அறிந்து எலாம் நின் செயலாம் என உணர்ந்தோர்க்கு அளவு_இல் ஆனந்தம் அளித்தனை அறிவு_இலாப் புன்மைக் களவு நாயினேற்கு இ வணம் அமைத்தனை கருத்துத் தளரும் தன்மை இங்கு ஆரொடு புகலுவேன் தக்கோய் #364 என்னைத்-தான் இன்ன வண்ணம் என்று அறிகிலா ஏழை தன்னைத் தான் அறிந்திட அருள் புரிதியேல் தக்கோய் பின்னைத்-தான் நின்றன் அருள் பெற்ற மா தவப் பெரியோர் நின்னைத்-தான் நிகர் ஆர் என வாழ்த்துவர் நெறியால் #365 ஏதும் இன்றித் தன் அடி_இணைக்கு அன்பு-தான் ஈட்டும் காதல் அன்பர்க்குக் கதி நிலை ஈது எனக் காட்டும் போத நித்திய புண்ணிய எண் அரும் புவன நாத தற்பர நான் எவ்வாறு உய்குவேன் நவிலாய் #366 வேதம் எத்தனை அத்தனை சிரத்தினும் விளங்கும் பாத நித்திய பரம்பர நிரந்தர பரம நாத தற்பர சிற்பர வடிவமாய் நடிக்கும் நீத நிர்க்குண நினை அன்றி ஒன்றும் நான் நினையேன் #367 நெறிகள் தாம் பலபலவுமாய் அந்தந்த நெறிக்காம் செறியும் தெய்வமும் பலபல ஆகவும் செறிந்தால் அறியும் தன்மை இங்கு ஆர் உனை அறிவினால் அறிந்தோர் பிறியும் தன்மை இல்லா வகை கலக்கின்ற பெரியோய் #368 பெரிய அண்டங்கள் எத்தனை அமைத்து அவில் பிறங்கும் உரிய பல் உயிர் எத்தனை அமைத்து அவைக்கு உறுதி வருவது எத்தனை அமைத்தனை அமைத்து அருள் வளர்க்கும் அரிய தத்துவ எனக்கு இந்த வண்ணம் ஏன் அமைத்தாய் #369 கணமதேனும் நின் காரணம்-தன்னையே கருத்தில் உணரும் மா தவர்க்கு ஆனந்தம் உதவினை ஒன்றும் குணம்_இலாத பொய் வஞ்சனுக்கு எந்தை நிர்க்குணமா மணம் உலாம் மலர்ப் பதம் தரின் யார் உனை மறுப்பார் #370 கன்னல் முக்கனி கண்டு தேன் சருக்கரை கலந்தது என்ன முத்தியில் கலந்தவர்க்கு இன்பமாய் இருக்கும் நல் நலத்த நின் நல் பதம் துணை என நம்பச் சொன்னவர்க்கு எனால் ஆம் கைம்மாறு இல்லை என் சொல்வேன் #371 தந்தை தாய் தமர் மகவு எனும் அவை எலாம் சகத்தில் பந்தமாம் என்றே அரு மறை வாயினால் பகர்ந்த எந்தை நீ எனை இன்னம் அ அல்லலில் இருத்தில் சிந்தை-தான் தெளிந்து எ வணம் உய் வணம் செப்பாய் #372 துய்யன் தண் அருள் வடிவினன் பொறுமையால் துலங்கும் மெய்யன் என்று உனை ஐயனே அடைந்தனன் மெத்த நொய்யன் நுண்ணிய அறிவிலன் ஒன்றை நூறு ஆக்கும் பொய்யன் என்று எனைப் புறம் விடின் என் செய்வேன் புகலாய் #373 ஒன்றதாய்ப் பலவாய் உயிர்த் திரட்கு எலாம் உறுதி என்றதாய் என்றும் உள்ளதாய் எவற்றினும் இசைய நின்றதாய் நிலை நின்றிடும் அறிஞ என் நெஞ்சம் மன்றதாய் இன்ப உருக்கொடு நடித்திடின் வாழ்வேன் #374 தனி இருந்து அருள் சகசமே பொருந்திடத் தமியேற்கு இனி இரங்குதல் கடன் இது சமயம் என் இதயக் கனிவும் அப்படி ஆயினது ஆதலால் கருணைப் புனித நீ அறியாதது ஒன்று உள்ளதோ புகலாய் #375 திருந்து சீர் அடித் தாமரைக்கு அன்பு-தான் செய்யப் பொருந்தும் நாள் நல்ல புண்ணியம் செய்த நாள் பொருந்தாது இருந்த நாள் வெகு தீ_வினை இழைத்த நாள் என்றால் அரும் தவா உனைப் பொருந்தும் நாள் எந்த நாள் அடிமை #376 பின்னும் முன்னுமாய் நடுவுமாய் யாவினும் பெரியது என்னும் தன்மையாய் எவ்வுயிர்த் திரளையும் இயக்கி மன்னும் தண் அருள் வடிவமே உனக்கு அன்புவைத்தும் துன்னும் இன்னல் ஏன் யான் எனும் அகந்தையேன் சொல்லாய் #377 மின்னை அன்ன பொய் வாழ்க்கையே நிலை என மெய்யாம் உன்னை நான் மறந்து எ வணம் உய் வணம் உரையாய் முன்னை வல்_வினை வேரற முடித்து என்று முடியாத் தன்னைத் தன் அடியார்க்கு அருள் புரிந்திடும் தக்கோய் #378 எம் பராபர எம் உயிர்த் துணைவ என்று இறைஞ்சும் உம்பர் இம்பர்க்கும் உள-கணே நடிக்கின்றாய் உன்றன் அம் பொன் மா மலர்ப் பதத்தையே துணை என அடிமை நம்பினேன் இனிப் புரப்பது எக் காலமோ நவிலாய் #379 பாடி ஆடி நின்று இரங்கி நின் பத_மலர் முடி மேல் சூடி வாழ்ந்தனர் அமல நின் அடியர் யான் தொழும்பன் நாடியே இந்த உலகத்தை மெய் என நம்பித் தேடினேன் வெறும் தீமையே என் இனிச் செய்வேன் #380 களவு வஞ்சனை காமம் என்று இவை எலாம் காட்டும் அளவு மாயை இங்கு ஆர் எனக்கு அமைத்தனர் ஐயா உளவிலே எனக்கு உள்ளவாறு உணர்த்தி உன் அடிமை வளரும் மா மதி போல் மதி தளர்வு_இன்றி வாழ்வேன் #381 வான நாயக வானவர் நாயக வளம் கூர் ஞான நாயக நான்மறை நாயக நலம் சேர் மோன நாயக நின் அடிக்கு அன்பு இன்றி முற்றும் தீனனாய் அகம் வாடவோ என் செய்வேன் செப்பாய் #382 ஏதம்_அற்றவர்க்கு இன்பமே பொழிகின்ற இறையே பாதகக் கருங்கல் மனம் கோயிலாப் பரிந்து சூது அகத்தனாய் யாதினும் இச்சை மேல் தோன்றும் வாதனைக்கு இடமாயினேன் எ வணம் வாழ்வேன் #383 தெளிவொடு ஈகையோ அறிகிலான் அறிவு_இலான் சிறிதும் அளி_இலான் இவன் திரு_அருட்கு அயல் என அறிந்தோ எளியன் ஆக்கினை என் செய்வேன் என் செய்வேன் எல்லா ஒளியுமாய் நிறை வெளியுமாய் யாவும் ஆம் உரவோய் #384 கண்ணின் உள் மணி என்னவே தொழும் அன்பர் கருத்துள் நண்ணுகின்ற நின் அருள் எனக்கு எந்த நாள் நணுகும் மண்ணும் விண்ணும் மற்று உள்ளன பூதமும் மாறாப் பெண்ணும் ஆணுமாய் அல்லவாய் நிற்கின்ற பெரியோய் #385 சகம் எலாம் தனி புரந்தனை தகவு உடைத் தக்கோர் அகம் எலாம் நிறைந்து ஆனந்தம் ஆயினை அளவு_இல் மகம் எலாம் புரிந்தோரை வாழ்வித்தனை மாறா இகம் எலாம் எனைப் பிறந்திடச் செய்தது ஏன் எந்தாய் #386 ஏய்ந்த நல் அருள்_பெற்றவர்க்கு ஏவலாய் எளியேன் வாய்ந்த பேர்_அன்பு வளர்க்கவும் கருணை நீ வளர்ப்பாய் ஆய்ந்த மா மறை எத்தனை அத்தனை அறிவால் தோய்ந்த பேர்கட்குந் தோன்றிலாத் தோன்றலாம் தூயோய் #387 தக்க நின் அருள் கேள்வியோ சிறிது இன்றித் தமியேன் மிக்க தெய்வமே நின் இன்ப_வெள்ளத்தில் வீழேன் ஒக்கல் தாய் தந்தை மகவு எனும் பாசக் கட்டுடனே துக்க_வெள்ளத்தில் ஆழ்கின்றேன் என் செய்வான் துணிந்தேன் #388 பவம் புரிந்திடும் பாவியேற்கு அருள் நிலை பதியத் தவம்செயும்படித் தயவு செய்து அருள்வதே தருமம் அவம்_புரிந்திடார்க்கு ஆனந்த அமிர்தத்தை அளிக்க நவம் கொள் தத்துவத் திரை எறி கடல் எனும் நலத்தோய் #389 உற்று உணர்ந்து எலாம் நீ அலது இல்லை என்று உனையே பற்றுகின்றனர் எந்தை நின் அடியர் யான் பாவி முற்றும் மாயமாம் சகத்தையே மெய் என முதல்-தான் அற்று இருந்திடத் தொழில் செய்வான்-தனை நிகர் ஆனேன்

மேல்

@26 மண்டலத்தின்

#390 மண்டலத்தின் மிசை ஒருவன் செய் வித்தை அகோ எனவும் வாரணாதி அண்டம் அவை அடுக்கடுக்காய் அந்தரத்தில் நிறுத்தும் அவதானம் போல எண் தரும் நல் அகிலாண்ட கோடியைத் தன் அருள் வெளியில் இலக வைத்துக் கொண்டு நின்ற அற்புதத்தை எவராலும் நிச்சயிக்கக் கூடா ஒன்றை #391 ஒன்று இரண்டாய் விவகரிக்கும் விவகாரம் கடந்து ஏழாம் யோக பூமி நின்று தெளிந்தவர் பேசா மெளன நியாயத்தை நிறை நிறைவைத் தன்னை அன்றி ஒரு பொருள் இலதாய் எப்பொருட்கும் தான் முதலாய் அசலம் ஆகி என்றும் உள்ள இன்பத்தைத் தண் என்ற சாந்தபத இயற்கை-தன்னை #392 பதம் மூன்றும் கடந்தவர்க்கு மேலான ஞான பதப் பரிசு காட்டிச் சதம் ஆகி நிராலம்ப சாக்ஷி-அதாய் ஆரம்பத் தன்மை ஆகி விதம் யாவும் கடந்து அவித்தை எனும் இருளைக் கீண்டு எழுந்து விமலம் ஆகி மதம் ஆறும் காணாத ஆனந்த_சாகரத்தை மெளன வாழ்வை #393 வாழ்வு அனைத்தும் தந்த இன்ப மா கடலை நல் அமிர்தை மணியைப் பொன்னைத் தாழ்வு அற என் உளத்து இருந்த தத்துவத்தை அத்துவித சாரம்-தன்னைச் சூழ் பெரும் பேர்_ஒளியை ஒளி பரந்த பரவெளியை இன்பச் சுகத்தை மாறாது ஏழ் உலகும் கலந்து இன்றாய் நாளையாய் என்றும் ஆம் இயற்கை-தன்னை #394 தன்னை அறிந்தவர்-தம்மைத் தான் ஆகச் செய்து அருளும் சமத்தை லோகம் மின்னை நிகர்த்திட அழியாச் சொரூபானந்தச் சுடரை வேதம் ஆதி என்னை அறிவு அரிது என்னச் சமயகோடிகள் இடைய இடையறாத பொன்னை விரித்திடும் உலகத்து உம்பரும் இம்பரும் பரவும் புனித மெய்யை #395 பரவு அரிய பரசிவமாய் அது எனலாய் நான் எனலாய்ப் பாச சாலம் விரவி நின்ற விசித்திரத்தை ஐக்ய பதத்து இனிது இருத்த விவேகம்-தன்னை இரவு பகல் நினைப்பு மறப்பு எனும் தொந்தம் அறியார்கள் இதயம் வேதச் சிரம் என வாழ் பராபரத்தை ஆனந்தம் நீங்காத சிதாகாசத்தை #396 அத்துவித அநுபவத்தை அனந்த மறை இன்னம்இன்னம் அறியேம் என்னும் நித்தியத்தை நிராமயத்தை நிர்க்குணத்தைத் தன் அருளால் நினைவுக்குள்ளே வைத்துவைத்துப் பார்ப்பவரைத் தான் ஆக எந்நாளும் வளர்த்துக் காக்கும் சித்தினை மாத் தூ வெளியைத் தன்மயமாம் ஆனந்தத் தெய்வம்-தன்னை #397 தன்னிலே தான் ஆக நினைந்து கனிந்து அவிழ்ந்து சுக சமாதி ஆகப் பொன்னிலே பணி போலும் மாயை தரும் மனமே உன் புரைகள் தீர்ந்தாய் என்னினோ யான் பிழைப்பேன் எனக்கு இனி யார் உன்_போல்வார் இல்லைஇல்லை உன்னிலோ திரு_அருளுக்கு ஒப்பு ஆவாய் என் உயிர்க்கு ஓர் உறவும் ஆவாய் #398 உற உடலை எடுத்தவரில் பிரமாதியேனும் உனை ஒழிந்து தள்ளற்கு அறவும் அரிதுஅரிது அன்றோ இக_பரமும் உன்னை அன்றி ஆவது உண்டோ வறிதில் உன்னை அசத்து என்னல் வழக்கு அன்று சத்து எனவும் வாழ்த்துவேன் என் சிறுமை கெடப் பெருமையின் நின் சென்ம தேயத்தினில் நீ செல்லல் வேண்டும் #399 வேண்டிய நாள் என்னோடும் பழகிய நீ எனைப் பிரிந்த விசாரத்தாலே மாண்டு கிடக்கினும் அந்த எல்லையையும் பூரணமாய் வணக்கம்செய்வேன் ஆண்ட குரு மெளனி-தன்னால் யான் எனது அற்று அவன் அருள் நான் ஆவேன் பூவில் காண் தக எண் சித்தி முத்தி எனக்கு உண்டாம் உன்னால் என் கவலை தீர்வேன் #400 தீராத என் சனன வழக்கு எல்லாம் தீரும் இந்தச் சனனத்தோடே யாரேனும் அறிவு அரிய சீவன் முத்தி உண்டாகும் ஐய ஐயோ காரேனும் கற்பகப் பூங்காவேனும் உனக்கு உவமை காட்டப்போமோ பார் ஆதியாக எழு மண்டலத்தில் நின் மகிமை பகரலாமோ

மேல்

@27 பாயப்புலி

#401 பாய் அப் புலி முனம் மான் கன்றைக் காட்டும்படி அகில மாயைப் பெரும் படைக்கே இலக்கா எனை வைத்தனையோ நீ எப்படி வகுத்தாலும் நன்றே நின் பெரும் கருணை தாய் ஒத்து அடியர்க்கு அருள் சச்சிதானந்த தற்பரமே #402 தற்பரமாம் சிற்பரம் ஆகி மன்றம்-தனில் நடித்து நிற்பர் அம்போருகன் மால் பணி நீதர் என் நெஞ்சகமாம் கல் பரந்தாங்கு கரைந்திட வான் ஒத்த காட்சி நல்கும் பொற்பு அரமாய் என் வினைக் கரும்_தாதைப் பொடிசெய்ததே #403 செய்யும் தவம் சற்றும் இல்லாத நான் உன் திரு_அடிக்கே கொய்யும் புது மலர் இட்டு மெய் அன்பர் குழாத்துடனே கையும் சிரம் மிசைக் கூப்பி நின்று ஆடிக் கசிந்து உருகி உய்யும்படிக்கு அருள்செய்வது என்றோ புலியூர் அத்தனே #404 அத்தனைச் சிற்றம்பலவனை என் உயிராகி நின்ற சுத்தனைச் சுத்த வெளியானவனைச் சுக வடிவாம் நித்தனை நித்தம் நிராதாரம் ஆகிய நின்மலனை எத்தனை நாள் செல்லுமோ மனமே கண்டு இறைஞ்சுதற்கே #405 கண்டார் உளத்தினில் கால் ஊன்றிப் பெய்யும் கருணை முகில் அண்டார் புரத்துக்கும் அன்பர் வினைக்கும் அசனி தன்னைக் கொண்டாடினார் முனம் கூத்தாடும் மத்தன்-தன் கோலம் எல்லாம் விண்டால் அம்மா ஒன்றும் காணாது வெட்டவெறு வெளியே #406 வெளியான நீ என் மன வெளியூடு விரவின் ஐயா ஒளி ஆரும் கண்ணும் இரவியும் போல் நின்று உலாவுவன் காண் அளி ஆரும் கொன்றைச் சடை ஆட அம்புலி ஆடக் கங்கைத் துளி ஆட மன்றுள் நடமாடும் முக்கண் சுடர்க் கொழுந்தே #407 கொழும் தாது உறை மலர்க் கோதையர் மோகக் குரை கடலில் அழுந்தாத வண்ணம் நின் பாதப் புணை தந்து அருள்வது என்றோ எழுந்து ஆதரவு செய் எம்பெருமான் என்று இறைஞ்சி விண்ணோர் தொழும் தாதையே வெண்_பொடி பூத்த மேனிச் சுகப் பொருளே #408 சுகம் ஆகும் ஞானம் திரு_மேனியாம் நல்ல தொண்டர்-தங்கள் அகமே பொன் கோயில் என மகிழ்ந்தே மன்றுள் ஆடிய கற் பகமே உன் பொன் அடி நீழல் கண்டால் அன்றிப் பாவிக்கு இந்தச் செக மாயையான அரும் கோடை நீங்கும் திறம் இலையே #409 நீங்காது உயிருக்குயிராகி நின்ற நினை அறிந்தே தூங்காமல் தூங்கின் அல்லாதே எனக்குச் சுகமும் உண்டோ ஓங்காரமாம் ஐந்து_எழுத்தால் புவனத்தை உண்டுபண்ணிப் பாங்காய் நடத்தும் பொருளே அகண்ட பரசிவமே #410 சிவம் ஆதி நான்முகக்கோ அந்த மா மறை செப்புகின்ற நவமாய் இலங்கிய ஒன்றே இரண்டு_அற்ற நன்மை பெறாது அவமே தரும் ஐம்_புலப் பொறிக்கே என் அறிவு பொல்லாப் பவமே விளைக்க என்றோ வெளிமான் எனப் பாய்ந்ததுவே #411 ஆறு ஒத்து இலங்கு சமயங்கள் ஆறுக்கும் ஆழ் கடலாய் வீறிப் பரந்த பரமான ஆனந்த_வெள்ளம் ஒன்று தேறித் தெளிந்து நிலைபெற்ற மா தவர் சித்தத்திலே ஊறிப் பரந்து அண்ட கோடி எல்லாம் நின்று உலாவியதே #412 நடக்கினும் ஓடினும் நிற்கினும் வேறு ஒரு நாட்டம் இன்றிக் கிடக்கினும் செவ்விது இருக்கினும் நல் அருள் கேள்வியிலே தொடக்கும் என் நெஞ்சம் மனம் அற்ற பூரணத் தொட்டிக்குளே முடக்குவன் யான் பரமானந்த நித்திரை மூடிடுமே #413 எண்ணாதது எண்ணிய நெஞ்சே துயர் ஒழி என் இரண்டு கண்ணே உறங்குக என் ஆணை முக்கண் கருணைப் பிரான் தண் ஆர் கருணை மவுனத்தினால் முத்தி சாதிக்கலாம் நண்ணாதது ஒன்று இல்லை எல்லா நலமும் நமக்கு உளவே #414 நான் என்று ஒரு முதல் உண்டு என்ற நான் தலை நாண என்னுள் தான் என்று ஒரு முதல் பூரணமாகத் தலைப்பட்டு ஒப்பு_இல் ஆனந்தம் தந்து என் அறிவை எல்லாம் உண்டு அவசம் நல்கி மோனம்-தனை விளைத்தால் இனி யாது மொழிகுவதே #415 தானம் தவம் சற்றும் இல்லாத நான் உண்மை-தான் அறிந்து மோனம் பொருள் எனக் கண்டிடச் சற்குரு மோனனுமாய்த் தீனன்-தனக்கு இங்கு இரங்கினையே இனிச் சிந்தைக்கு என்றும் ஆனந்தம்-தான் அல்லவோ பரமே சச்சிதானந்தமே #416 எனக்கு ஓர் சுதந்திரம் இல்லை அப்பா எனக்கு எய்ப்பில் வைப்பாய் மனக் கோது அகற்றும் பரம்பொருளே என்னை வாழ்வித்திட நினக்கே பரம் நின்னை நீங்காத பூரண நீள் கருணை- தனக்கே பரம் இனிச் சும்மா இருக்கத் தகும் என்றுமே #417 இடம்பெறு வீடும் மின்னார் செய் சகமும் இரு_நிதியும் உடம்பை விட்டு ஆர்_உயிர் போம் போது கூடி உடன் வருமோ மடம் பெறு மாயை மனமே இனி இங்கு வா மவுனி திடம்பெறவைத்த மவுனம் சகாயம் தெரிந்துகொள்ளே #418 நாற்றச் சடலத்தை ஒன்பது வாசல் நடைமனையைச் சோற்றுப் பசையினை மு_மல பாண்டத் தொடக்கறையை ஆற்றுப் பெருக்கு அன்ன கன்மப் பெருக்கை அடர் கிருமிச் சேற்றைத் துணை என்ற நாய்க்கும் உண்டோ கதி சேர்வதுவே #419 பொய் ஆர் உலக நிலை அல்ல கானல் புனல் எனவே மெய்யா அறிந்து என்ன என்னால் இதனை விடப்படுமோ கையால் மவுனம் தெரிந்தே கல்_ஆல் நிழல்-கண் இருந்த ஐயா அப்பா என் அரசே முக்கண் உடை ஆர் அமுதே #420 ஆரா அமுது என மோனம் வகித்துக் கல்_ஆல் நிழல் கீழ்ப் பேராது நால்வருடன் வாழ் முக்கண் உடைப் பேர்_அரசே நீராய் உருக உள் அன்பு தந்தே சுக நிட்டையை நீ தாராவிடின் என் பெருமூச்சுத்-தான் அத் தனஞ்சயனே #421 வாய் உண்டு வாழ்த்த மவுனம் செய் போது மவுன அருள் தாய் உண்டு சேய் என்ன என்னைப் புரக்கச் சதானந்தமாம் நீ உண்டு நின்னைச் சரண் புக நான் உண்டு என் நெஞ்சம் ஐயா தீ உண்டிருந்த மெழுகு அலவோ கதி சேர்வதற்கே #422 கல்லால் எறிந்தும் கை_வில்லால் அடித்தும் கனி மதுரச் சொல்லால் துதித்தும் நல் பச்சிலை தூவியும் தொண்டர் இனம் எல்லாம் பிழைத்தனர் அன்பு அற்ற நான் இனி ஏது செய்வேன் கொல்லா விரதியர் நேர்நின்ற முக்கண் குரு மணியே #423 முன்னிலைச்சுட்டு ஒழி நெஞ்சே நின் போதம் முளைக்கில் ஐயோ பின்னிலைச் சன்மம் பிறக்கும் கண்டாய் இந்தப் பேய்த்தனம் ஏன் தன்னிலையே நில்லு தானே தனிச் சச்சிதானந்தமாம் நல் நிலை வாய்க்கும் எண்_சித்தியும் காணும் நமது அல்லவே #424 சொல்லால் மவுனம்மவுனம் என்றே சொல்லிச்சொல்லிக்கொண்டது அல்லால் மனம் அறப் பூரண நிட்டையில் ஆழ்ந்தது உண்டோ கல்லாத மூடன் இனி என் செய்வேன் சகத் காரணமாம் வல்லாளனான மவுன சதானந்த மா கடலே #425 ஆரணம் ஆகமம் எல்லாம் உரைத்த அருள் மவுன காரண மூலம் கல்_ஆல் அடிக்கே உண்டு காணப்பெற்றால் பார் அணங்கோடு சுழல் நெஞ்சமாகிய பாதரசம் மாரணமாய்விடும் எண்_சித்தி முத்தியும் வாய்ந்திடுமே #426 சித்த மவுனி வட-பால் மவுனி நம் தீபகுண்ட சுத்த மவுனி எனும் மூவருக்கும் தொழும்புசெய்து சத்த மவுனம் முதல் மூன்று மௌனமும் தான் படைத்தேன் நித்த மவுனம் அல்லால் அறியேன் மற்றை நிட்டைகளே #427 கண்டேன் நினது அருள் அ அருளாய் நின்று காண்பது எல்லாம் உண்டே அதுவும் நினது ஆக்கினேன் உவட்டாத இன்பம் மொண்டே அருந்தி இளைப்பாறினேன் நல்ல முத்தி பெற்றுக் கொண்டேன் பராபரமே எனக்கு ஏதும் குறைவு இல்லையே #428 மேற்கொண்ட வாயுவும் கீழ்ப்பட மூலத்து வெம் தழலைச் சூல்கொண்ட மேகம் என ஊமை நின்று சொரிவதை என் னால் கண்டது அன்று மவுனோபதேசி அளிக்கையின் இப் பால் கண்டுகொண்டனன் மேலே அமிர்தம் பருகுவனே #429 சொல்லால் தொடர் பொருளால் தொடராப் பரஞ்சோதி நின்னை வல்லாளர் கண்ட வழி கண்டிலேன் சக மார்க்கத்திலும் செல்லாது என் சிந்தை நடுவே கிடந்து திகைத்து விம்மி அல்லானதும் பகலானதும் வாய்விட்டு அரற்றுவனே #430 அறியாத என்னை அறிவாயும் நீ என்று அகம் புறமும் பிறியாது அறிவித்த பேர்_அறிவாம் சுத்தப் பேர்_ஒளியோ குறியாத ஆனந்தக் கோவோ அமுது அருள் குண்டலியோ சிறியேன் படும் துயர் கண்டு கல்_ஆல் நிழல் சேர்ந்ததுவே #431 எல்லாம் உதவும் உனை ஒன்றில் பாவனையேனும் செய்து புல்லாயினும் ஒரு பச்சிலையாயினும் போட்டு இறைஞ்சி நில்லேன் நல் யோக நெறியும் செயேன் அருள் நீதி ஒன்றும் கல்லேன் எவ்வாறு பரமே பரகதி காண்பதுவே #432 ஒன்றும் தெரிந்திடவில்லை என் உள்ளத்து ஒருவ எனக்கு என்றும் தெரிந்த இவை அவை கேள் இரவும் பகலும் குன்று குழியும் வனமும் மலையும் குரை கடலும் மன்றும் மனையும் மனம் ஆதி தத்துவ மாயையுமே #433 பழுதுண்டு பாவையர் மோக விகாரப் பரவையிடை விழுகின்ற பாவிக்கும் தன் தாள் புணையை வியந்து அளித்தான் தொழுகின்ற அன்பர் உளம் களி கூரத் துலங்கும் மன்றுள் எழுகின்ற ஆனந்தக் கூத்தன் என் கண்மணி என் அப்பனே #434 அழுக்கு ஆர்ந்த நெஞ்சு_உடையேனுக்கு ஐயா நின் அருள் வழங்கின் இழுக்கு ஆகும் என்று எண்ணியோ இரங்காத இயல்பு கண்டாய் முழுக் காதல் ஆகி விழி நீர் பெருக்கிய முத்தர் எனும் குழுக் காண நின்று நடம் ஆடும் தில்லைக் கொழும் சுடரே #435 ஆலம் படைத்த விழியார்கள் மால்கொண்டு அவர் செய் இந்த்ர சாலம் படைத்துத் தளர்ந்தனையே என்றும் தண் அருள் கூர் கோலம் படைத்துக் கல்_ஆல் அடிக் கீழ் வைகும் கோவுக்கு அன்பாம் காலம் படைக்கத் தவம் படையாது என்-கொல் கல்_நெஞ்சமே #436 சும்மா இருக்கச் சுகம்சுகம் என்று சுருதி எல்லாம் அம்மா நிரந்தரம் சொல்லவும் கேட்டும் அறிவு இன்றியே பெம்மான் மவுனி மொழியையும் தப்பி என் பேதைமையால் வெம் மாயக் காட்டில் அலைந்தேன் அந்தோ என் விதிவசமே #437 தினமே செலச்செல வாழ்நாளும் நீங்கச் செகத்து இருள் சொற் பனமே என வெளி கண்டே இருக்கவும் பாசபந்த இனமே துணை என்று இருந்தோம் நமன் வரின் என் செய்குவோம் மனமே நம் போல உண்டோ சுத்த மூடர் இ வையகத்தே #438 கடல் எத்தனை மலை எத்தனை அத்தனை கன்மம் அதற்கு உடல் எத்தனை அத்தனை கடல் நுண் மணல் ஒக்கும் இந்தச் சடலத்தை நான் விடும் முன்னே உனை வந்து சார இருள் படலத்தை மாற்றப்படாதோ நிறைந்த பராபரமே #439 நினையும் நினைவும் நினை அன்றி இல்லை நினைத்திடுங்கால் வினை என்று ஒரு முதல் நின்னை அல்லாது விளைவது உண்டோ தனையும் தெளிந்து உன்னைச் சார்ந்தோர்கள் உள்ளச் செந்தாமரையாம் மனையும் பொன் மன்றமும் நின்று ஆடும் சோதி மணி விளக்கே #440 உள்ளத்தையும் இங்கு எனையும் நின் கையினில் ஒப்புவித்தும் கள்ளத்தைச் செய்யும் வினையால் வருந்தக் கணக்கும் உண்டோ பள்ளத்தின் வீழும் புனல் போல் படிந்து உன் பரம இன்ப வெள்ளத்தின் மூழ்கினர்க்கே எளிதாம் தில்லை_வித்தகனே #441 கள்ளம் பொருந்தும் மட நெஞ்சமே கொடும் காலர் வந்தால் உள்ளன்பு அவர்கட்கு உண்டோ இல்லையே உலகு ஈன்ற அன்னை வள்ளம் பொருந்தும் மலர்_அடி காண மன்று ஆடும் இன்ப வெள்ளச் செம் பாதப் புணையே அல்லால் கதி வேறு இல்லையே #442 தன்மயம் ஆன சுபாவத்தில் மெள்ளத் தலைப்படுங்கால் மின் மயம் ஆன சகம் யாது உரைத்து என் வெளியில் உய்த்த சின்மய முத்திரைக் கையே மெய் ஆகத் தெளிந்த நெஞ்சே நின் மயம் என் மயம் எல்லாம் நிறைந்த நிராமயமே #443 ஆயும் கலையும் சுருதியும் காண்டற்கு அரிய உனைத் தோயும்படிக்குக் கருணைசெய்வாய் சுக வான் பொருளே தாயும் பிதாவும் தமரும் குருவும் தனி முதலும் நீயும் பரையும் என்றே உணர்ந்தேன் இது நிச்சயமே #444 அல்லும் பகலும் உனக்கே அபயம்அபயம் என்று சொல்லும் சொல் இன்னம் தெரிந்தது அன்றோ துதிப்பார்கள் மனக் கல்லும் கரைக்கும் மௌனா உனது கருணை என்-பால் செல்லும் பொழுது அல்லவோ செல்லுவேன் அந்தச் சிற்சுகத்தே #445 எல்லாம் சிவன் செயல் என்று அறிந்தால் அவன் இன் அருளே அல்லால் புகலிடம் வேறும் உண்டோ அதுவே நிலையா நில்லாய் உன்னால் தமியேற்குக் கதி உண்டு இ நீள் நிலத்தில் பொல்லா மயக்கத்தில் ஆழ்ந்து ஆவது என்ன புகல் நெஞ்சமே #446 ஒளியே ஒளியின் உணர்வே உணர்வின் உவகை பொங்கும் களியே களிக்கும் கருத்தே கருத்தைக் கவளம்கொண்ட வெளியே வெளியின் விளை சுகமே சுகர் வீறு கண்டுந் தெளியேன் தெளிந்தவரைப் போற்றிடேன் என்ன செய்குவனே #447 மறக்கின்ற தன்மை இறத்தல் ஒப்பாகும் மனம்-அது ஒன்றில் பிறக்கின்ற தன்மை பிறத்தல் ஒப்பாகும் இப் பேய்ப் பிறவி இருக்கின்ற எல்லைக்கு அளவு இல்லையே இந்தச் சன்ம அல்லல் துறக்கின்ற நாள் எந்த நாள் பரமே நின் தொழும்பனுக்கே #448 காட்டிய அந்தக் கரணமும் மாயை இக் காயம் என்று சூட்டிய கோலமும் நானா இயங்கத் துறை இதனுள் நாட்டிய நான் தனக்கு என்று ஓர் அறிவு_அற்ற நான் இவற்றைக் கூட்டி நின்று ஆட்டினையே பரமே நல்ல கூத்து இதுவே #449 பொல்லாத மா மர்க்கட மனமே எனைப் போல் அடுத்த எல்லாவற்றையும் பற்றிக்கொண்டனையே என்னை நின் மயமா நில்லாய் அருள் வெளி நீ நான் நிற்பேன் அருள் நிட்டை ஒரு சொல்லால் பதிந்து பரிபூரணானந்தம் தோய்குவனே #450 வாராய் நெஞ்சே உன்றன் துன்_மார்க்கம் யாவையும் வைத்துக்கட்டு இங்கு ஆராய் அடிக்கடி சுற்றுகின்றாய் உன் அவல மதிக்கு ஓர் ஆயிரம் புத்தி சொன்னாலும் ஓர்கிலை ஓ கெடுவாய் பாராய் உனைக் கொல்லுவேன் வெல்லுவேன் அருள் பாங்கு கொண்டே #451 மாதத்திலே ஒரு திங்கள் உண்டாகி மடிவதை நின் போதத்திலே சற்றும் வைத்திலையே வெறும் புன்மை நெஞ்சே வேதத்திலே தர்க்க வாதத்திலே விளங்காது விந்து நாதத்திலே அடங்காது அந்த வான் பொருளே நாடிக்கொள்ளே #452 எங்கும் வியாபித்து உணர்வாய் உனக்கு என் இதயத்துள்ளே தங்கும் துயரம் தெரியாத வண்ணம் தடைசெய்தது ஆர் அங்கம் குழைந்து உள் உருகும் அன்பாளர்க்கு அணைகடந்து பொங்கும் கருணை_கடலே சம்பூரண போதத்தனே #453 வையக மாதர் சகத்தையும் பொன்னையும் மாயை மல மெய்யையும் மெய் என்று நின் அடியார்-தம் விவேகத்தையும் ஐயம்_இல் வீட்டையும் மெய் நூலையும் பொய்யது ஆக எண்ணும் பொய்யர்-தம் நட்பை விடுவது என்றோ பரிபூரணமே #454 அளியும் கனி ஒத்து அரு வினையால் நொந்து அயர்வுறுவேன் தெளியும்படிக்குப் பரிபாக காலமும் சித்திக்குமோ ஒளியும் கருணையும் மாறாத இன்பமும் ஓர் உருவாய் வெளிவந்து அடியர் களிக்க நின்று ஆடும் விழுப் பொருளே #455 அடையார் புரம் செற்ற தேவே நின் பொன் அடிக்கு அன்பு சற்றும் படையாத என்னைப் படைத்து இந்தப் பாரில் படர்ந்த வினைத் தடையால் தளையிட்டு நெஞ்சம் புண் ஆகத் தளரவைத்தாய் உடையாய் உடையபடி அன்றி யான் செய்தது ஒன்று இலையே #456 ஆடும் கறங்கும் திரிகையும் போல அலைந்தலைந்து காடும் கரையும் திரிவது அல்லால் நின் கருணை வந்து கூடும்படிக்குத் தவம் முயலாத கொடியர் எமன் தேடும் பொழுது என்ன செய்வார் பரானந்த சிற்சுடரே #457 கற்றும் பலபல கேள்விகள் கேட்டும் கறங்கு எனவே சுற்றும் தொழில் கற்றுச் சிற்றின்பத்தூடு சுழலின் என் ஆம் குற்றம் குறைந்து குணம் மேலிடும் என்பர் கூட்டத்தையே முற்றும் துணை என நம்பு கண்டாய் சுத்த மூட நெஞ்சே #458 நீ என நான் என வேறு இல்லை என்னும் நினைவு அருளத் தாய் என மோனகுரு ஆகி வந்து தடுத்து அடிமைச் சேய் எனக் காத்தனையே பரமே நின் திரு_அருளுக் கே என்ன செய்யும் கைம்மாறு உளதோ சுத்த ஏழையனே #459 ஆத்திரம் வந்தவர் போல் அலையாமல் அரோக திட காத்திரம் தந்து என்னையே அன்னை போலும் கருணைவைத்து இம் மாத்திரம் முன்னின்று உணர்த்தினையே மௌனா இனி நான் சாத்திரம் சொன்னபடி இயமாதியும் சாதிப்பனே

மேல்

@28 உடல்பொய்யுறவு

#460 உடல் பொய் உறவு ஆயின் உண்மை உறவாகக் கடவார் ஆர் தண் அருளே கண்டாய் திடமுடனே உற்றுப் பார் மோனன் ஒரு சொல்லே உண்மை நன்றாய்ப் பற்றிப் பார் மற்ற எல்லாம் பாழ் #461 பார் ஆதி பூதம் எல்லாம் பார்க்குங்கால் அப் பரத்தின் சீர் ஆக நிற்கும் திறம் கண்டாய் நேராக நிற்கும் திரு_அருளில் நெஞ்சே யாம் நிற்பது அல்லால் கற்கும் நெறி யாது இனிமேல் காண் #462 மெய்யான தன்மை விளங்கினால் யார்க்கேனும் பொய்யான தன்மை பொருந்துமோ ஐயாவே மன்னும் நிராசை இன்னம் வந்தது அல்ல உன் அடிமை என்னும் நிலை எய்துமாறு என் #463 அறியாமை மேலிட்டு அறிவு_இன்றி நிற்கும் குறியேற்கு அறிவு என்ற கோலம் வறிதேயாம் நீ உணர்த்த நான் உணரும் நேசத்தாலோ அறிவு என் றே எனக்கு ஓர் நாமம் இட்டதே #464 ஏதுக்குச் சும்மா இரு மனமே என்று உனக்குப் போதித்த உண்மை எங்கே போகவிட்டாய் வாதுக்கு வந்து எதிர்த்த மல்லரைப் போல் வாதாடினாயே உன் புந்தி என்ன போதம் என்ன போ #465 சகம் அனைத்தும் பொய் எனவே தான் உணர்ந்தால் துக்க சுகம் அனைத்தும் பொய் அன்றோ சோராது இக பரத்தும் விட்டுப் பிரியாத மேலான அத்துவிதக் கட்டுக்குள் ஆவது என்றோ காண் #466 கற்கண்டோ தேனோ கனி ரசமோ பாலோ என் சொற்கு அண்டாது ஏது என நான் சொல்லுவேன் வில் கண்ட வான மதி காண மௌனி மௌனத்து அளித்த தானம்-அதில் ஊறும் அமிர்தம் #467 கேட்டலுடன் சிந்தித்தல் கேடு_இலா மெய்த் தெளிவால் வாட்டம் அறா உற்பவ நோய் மாறுமோ நாட்டமுற்று மெய்யான நிட்டையினை மேவினர்கட்கு அன்றோ-தான் பொய்யாம் பிறப்பு இறப்புப் போம் #468 மாயா சகத்தை மதியாதார் மண் முத லாயே ஆன தத்துவத்தில் எய்துவரோ நேயானு பூதி நிலை நிற்கப் பொருந்துவர்கள் அன்னவர்-தம் நீதியையே ஓர் மனமே நீ #469 இகம் முழுதும் பொய் எனவே ஏய்ந்து உணர்ந்தால் ஆங்கே மிக வளர வந்த அருள் மெய்யே அகம் நெகிழப் பாரீர் ஒரு சொற்படியே அனுபவத்தைச் சேரீர் அதுவே திறம் #470 ஆரணங்கள் ஆகமங்கள் யாவுமே ஆனந்த பூரணமே உண்மைப் பொருள் என்னும் காரணத்தை ஓராயோ உள்ளுள்ளே உற்று உணர்ந்து அ உண்மையினைப் பாராயோ நெஞ்சே பகர் #471 நேராய் அ மெளன நிலை நில்லாமல் வாய் பேசி ஆராய் அலைந்தீர் நீர் ஆ கெடுவீர் தேரீர் திரையும் திரையும் நதிச் சென்னியனை நாவால் கரையும் கரையும் மனக் கல் #472 அற்ப மனமே அகில வாழ்வு அத்தனையும் சொற்பனம் கண்டாய் உண்மை சொன்னேன் நான் கற்பனை ஒன்று இல்லா இடத்தே எனைச் சும்மா வைத்திருக்கக் கல்லாய் நீ-தான் ஓர் கவி #473 ஏதும் திரு_அருளின் இச்சையாம் என்றுஎன்று எப் போதும் பொருந்தும் புனிதர்-பால் தீது நெறி செல்லுமோ செல்லாதே செல்லும் இடம் இன்பம் அலால் சொல்லுமோ வேதத் தொனி #474 கல் ஏறும் சில் ஏறும் கட்டி ஏறும் போலச் சொல் ஏறப் பாழ்த்த துளைச் செவி கொண்டு அல் ஏறு நெஞ்சன் என நிற்கவைத்தாய் நீதியோ தற்பரமே வஞ்சன் அல்லேன் நீயே மதி #475 அப் பொருளும் ஆன்மாவும் ஆரண நூல் சொன்னபடி தப்பு இல்லாச் சித்து ஒன்றாம் சாதியினால் எப்படியும் தேரில் துவிதம் சிவாகமமே சொல்லும் நிட்டை ஆரும் இடத்து அத்துவிதம் ஆம் #476 வேத முதலாய் விளங்கும் சிவ வடிவாம் போத நிலையில் பொருந்தாமல் ஏதம் மிகும் மோகாதி அல்லலிலே மூழ்கினையே நெஞ்சே இத் தேகாதி மெய்யோ தெளி #477 நோக்கற்கு அரிதான நுண்ணிய வான் மோன நிலை தாக்கற்கு உபாயம் சமைத்த பிரான் காக்கும் உயிர் அத்தனைக்கும் நான் அடிமை ஆதலினால் யான் எனது என்று இத்தனைக்கும் பேச இடம் இல் #478 ஒன்றும் அற நில் என்று உணர்த்திய நம் மோனகுரு- தன் துணைத் தாள் நீடூழி தாம் வாழ்க என்றென்றே திக்கு அனைத்தும் கை குவிக்கும் சின்மயராம் தன்மையர்க்கே கைக்கு வரும் இன்பக் கனி #479 மனத்தாலும் வாக்காலும் மன்னவொண்ணா மோன இனத்தாரே நல்ல இனத்தார் கனத்த புகழ் கொணடவரும் அன்னவரே கூறு அரிய முத்தி நெறி கண்டவரும் அன்னவரே காண் #480 கண் ஒளியே மோனக் கரும்பே கவலை அறப் பண் ஒளிக்கும் உள் ஒளியாம் பான்மையினை நண்ணிட உன் சித்தம் இரங்கிலது என் சித்தம் தெளியா வேறு இத்தனைக்கும் ஆதரவும் இல் #481 அறியாமை சாரின் அதுவாய் அறிவாம் நெறியான போது அதுவாய் நிற்கும் குறியால் சத் அசத்து அருள் உணர்த்தத் தான் உணராநின்ற விதம் உற்று அறிவு எனும் பேர் மெய் #482 குருலிங்க சங்கமமாக் கொண்ட திரு_மேனி கரு ஒன்றும் மேனி நம்-பால் காட்டாது அருள் என்று கண்டவர்க்கே ஆனந்தம் கண்டுகொளல் ஆம் அலது கொண்டவர்க்கு இங்கு என்ன கிடைக்கும் #483 புலியின் அதள்_உடையான் பூதப் படையான் பலி இரந்தும் எல்லாம் பரிப்பான் மலி புனல் சேர் பொன்_முடியான் முக்கண் புனிதன் சரண்புகுந்தோர்க்கு என் முடியாது ஏதும் உளதே #484 சொல்லுக்கு அடங்காச் சுகப் பொருளை நாம் எனவே அல்லும்_பகலும் அரற்றுவது என் நல்ல சிவ ஞான மயம் பெற்றோர்கள் நாம் இல்லை என்பர் அந்தோ மோன மயமான முறை #485 ஐயா அருணகிரி அப்பா உனைப் போல மெய்யாக ஓர் சொல் விளம்பினர் யார் வையகத்தோர் சாற்று அரிது என்று ஏசற்றார் தன்_அனையாய் முக்கண் எந்தை நால் திசைக்கும் கைகாட்டினான் #486 காது அற்றுப்போன முறி கட்டிவைத்தால் ஆவது உண்டோ தீது_அற்ற காயமும் அச் செய்கையே போதமாய் நிற்பர் அல்லால் இச் சகத்தில் நேரார்கள் நேர்ந்திடினும் தற்பரமாக் கண்டிருப்பார் தாம் #487 வெள்ளம் குலாவு சடை வெள்ளக் கருணையினான் கள்ளம் குலாவு வஞ்சக் கள்ளனேன் உள்ளத்தில் இல்லன் என்றால் அன்னவன்-தான் எங்கும் வியாபகத்தான் அல்லன் என்றும் சொல்ல வழக்கு ஆம் #488 தத்துவப் பேயோடே தலையடித்துக்கொள்ளாமல் வைத்த அருள் மௌன வள்ளலையே நித்தம் அன்பு பூணக் கருதும் நெஞ்சு போற்றக் கரம் எழும்பும் காணத் துடிக்கும் இரு கண் #489 தொல்லை வினைக்கு ஈடாய்ச் சுழல்கின்ற நான் ஒருவன் எல்லை_இலா நின் கருணை எய்துவனோ வல்லவனாம் மோனகுருவே முழுதினையும் தான் உணர்ந்த ஞான குருவே நவில் #490 மூன்று_கண்ணா மு_தொழிலா மு_முதலா மூ_உலகும் தோன்றக் கருணை பொழி தோன்றலே ஈன்ற அன்னை- தன்னைப் போல் அன்பு தழைத்தோய் ஒரு தெய்வம் உன்னைப் போல் உண்டோ உரை #491 நேசிக்கும் சிந்தை நினைவுக்குள் உன்னை வைத்துப் பூசிக்கும் தான் நிறைந்து பூரணமாய் யோசித்து நின்றது அல்லால் மோனா நிருவிகற்ப நிட்டை நிலை என்று வருமோ அறியேனே #492 அறிவின் அறியாமை அற்று அறிவாய் நின்று பிறிவு அற ஆனந்த மயம் பெற்றுக் குறி அவிழ்ந்தால் அன்றைக்கு உடல் வேண்டேன் ஐயா இ ஆக்கையையே என்றைக்கும் வேண்டுவனே யான் #493 உடலைப் பழித்து இங்கு உணவும் கொடாமல் விடவிடவே நாடுவரோ மெய்யைப் படபடென வேண்டுவேன் இந்த உடல் மெய் உணராப் பொய்யன் நான் ஆண்ட நீ-தானே அறி #494 அறியாயோ என்னையும் நீ ஆண்ட நீ சுத்த வெறியாய் மயங்கவும் ஏன் விட்டாய் நெறி மயங்கிக் குன்றும் செடியும் குறுகுமோ ஐயாவே கன்று கெட்டால் தாய் அருகே காண் #495 ஏதுக்கு உடல் சுமை கொண்டேன் இருந்தேன் ஐயனே ஆதிக்க மோன அருள் தாயே சோதியாம் மன்ன நிருவிகற்ப ஆனந்த நிட்டையிலே பின்னம் அற நில்லாத பின் #496 பின்னும் உடல் சுமையாப் பேசும் வழக்கதனால் என்ன பலன் நாம் உற்றிருந்தோமே அன்னதனால் ஆனந்தம் தானே தாம் ஆகும் எம் ஐயனே ஏன் இந்தத் துன்பம் இனி #497 துன்ப_கடலில் துளைந்தது எலாம் தீர்ந்ததே இன்ப_கடலில் இரும் என்ன அன்பில் கரைந்துகரைந்து உருகிக் கண் அருவி காட்ட விரைந்து வரும் ஆனந்தேமே #498 கரைந்துகரைந்து உருகிக் கண்ணீர் ஆறாக விரைந்தே நிருவிகற்பம் எய்த நிரந்தரமும் நின்னையே சிந்திக்க நீ கொடுத்தாய் மோனா நான் என்னை முழுதும் கொடுத்தேனே #499 அல்லும்_பகலும் பேர்_அன்புடனே தான் இருந்தால் கல்லும் உருகாதோ கல்_நெஞ்சே பொல்லாத தப்பு வழி ஏன் நினைந்தாய் சந்ததமும் நீ இறந்த எய்ப்பிலே ஆனந்தமே #500 கொடுத்தேனே என்னைக் கொடுத்தவுடன் இன்பம் மடுத்தேனே நீடுழி வாழ்ந்தே அடுத்தேனே பெற்றேனே பெற்றுப் பிழைத்தேனே சன்ம அல்லல் இற்றேனே ஏழை அடியேன் #501 பெற்றோம் பிறவாமை பேசாமையாய் இருக்கக் கற்றோம் என உரைக்கக் காரியம் என் சற்றேனும் நீக்கற்ற இன்ப நிலை பொருந்தி ஏசற்று வாக்கு அற்றால் பேசுமோ வாய் #502 காலன்-தனை உதைத்தான் காமன்-தனை எரித்தான் பாலன் பசிக்கு இரங்கிப் பாற்கடலை ஞாலம் மெச்சப் பின்னே நடக்கவிட்டான் பேர்_அருளை நாடாதார்க்கு என்னே நடக்கை இனி #503 விண் அருவி மேன்மேல் விளங்குவ போலே இரண்டு கண் அருவி வெள்ளமொடு கை கூப்பித் தண் அமிர்த வெள்ளமே ஆனந்த_வெற்பே எனத் தொழுவோர் உள்ளமே ஞான ஒளி #504 பிள்ளை மதிச் செம்_சடையான் பேசாப் பெருமையினான் கள் அவிழும் பூம் கொன்றைக் கண்ணியான் உள்ளபடி கல்_ஆலின் கீழ் இருந்து கற்பித்தான் ஓர் வசனம் எல்லாரும் ஈடேறவே #505 புலன் ஐந்தும் தானே பொர மயங்கிச் சிந்தை அலமந்து உழலும் அடிமை நலம் மிகுந்த சித்தான மோன சிவனே நின் சேவடிக்கே பித்து ஆனால் உண்டோ பிறப்பு #506 நிறைகுடம்-தான் நீர் கொளுமோ நிச்சயம் ஆம் மோன முறை உணர்ந்தார் யாதை முயல்வார் பிறை அணிந்த மிக்க கயிலாய மலை வித்தகனே வேதியனே செக்கர் அணி மேனியனே செப்பு #507 துங்க மழு மான் உடையாய் சூலப் படை உடையாய் திங்கள் அணி செம் சடையாய் சே உடையாய் மங்கை ஒரு பால் உடையாய் செம் கண் பணியாய் என் சென்னியின் மேல் கால் உடையாய் நீயே கதி #508 இனிய கருணை முகில் எம்பிரான் முக்கண் கனி அமிர்த_வாரி இன்பக் கட்டி தனி முதல்வன் நித்தன் பரமன் நிமலன் நிறைவாய் நிறைந்த சுத்தன் நமக்கு என்றும் துணை #509 நீதியாய்க் கல்_ஆலின் நீழலின் கீழே இருந்து போதியா உண்மை எல்லாம் போதித்தான் ஏது_இல் சனகாதி ஆய தவத்தோர்க்கு ஞான தினகரனாம் மௌன சிவன் #510 தேகச் செயல்-தானும் சிந்தையுடனே குழையில் யோக நிலை ஞானிகளுக்கு ஒப்புவதோ மோக நிலை அல்லலிலே வாழ்வாரோ அப்பனே நீ அற்ற எல்லையிலே சும்மா இரு #511 சும்மா இருக்கச் சுகம் உதயமாகுமே இ மாயா யோகம் இனி ஏனடா தம் அறிவின் சுட்டாலே ஆகுமோ சொல்லவேண்டாம் கன்ம நிட்டா சிறுபிள்ளாய் நீ #512 நீ அற்ற அ நிலையே நிட்டை அதில் நீ இலையோ வாய்_அற்றவனே மயங்காதே போய் அற்று இருந்தாலும் நீ போகாய் என்றும் உள்ளாய் சும்மா வருந்தாதே இன்பம் உண்டு வா #513 வாவா என்று இன்பம் வரவழைக்கும் கண்ணீரோடு ஆவா என்றே அழுத அப்பனே நீ வாடா எல்லாம் நமக்கெனவே ஈந்தனையே ஈந்தபடி நில்லாய் அதுவே நிலை #514 நில்லாப் பொருளை நினையாதே நின்னை_உள்ளோர் சொல்லாப் பொருள் திரளைச் சொல்லாதே கல்லாத சிந்தை குழைந்து சுகம் சேரக் குரு அருளால் வந்த வழி நல்ல வழி #515 வழி இது என்றும் அல்லா_வழி இது என்றும் சொல்லில் பழி பழியாம் நல் அருளால் பார்த்து ஓர் மொழி உனக்கே ஏற்றிருக்கச் சொன்ன அன்றே எங்கும் பெரு_வெளியாம் பார்த்த இடம் எல்லாம் நீ பார் #516 பார் அனைத்தும் பொய் எனவே பட்டினத்துப்பிள்ளையைப் போல் ஆரும் துறக்கை அரிதரிது நேரே மனத் துறவும் அப்படியே மாணா இவற்றில் உனக்கு இசைந்தவாறு ஒன்றே ஓர் #517 ஓராமலே ஒருகால் உன்னாமல் உள் ஒளியைப் பாராமல் உள்ளபடி பார்த்திருந்தால் வாராதோ பத்துத் திசையும் பரந்து எழுந்து ஆனந்த_வெள்ளம் தத்திக் கரைபுரண்டு தான் #518 தான் ஆன தன்மை வந்து தாக்கினால் அவ்விடத்தே வான் ஆதி மாயை வழங்காதோ ஞானா கேள் உன் உள்ளே தோன்றா உறவு ஆகி நின்றது என என் உள்ளே என்றும் இரு #519 என்னை உன்னை இன்னது இது என்னாமல் நிற்கும் நிலை- தன்னை அருள் என்ற தருணத்தில் அன்னை பெற்ற பிள்ளைக்கும் சொல்லாத பெற்றி கண்டாய் ஐயனே உள்ளத்தின் உள்ளே உணர் #520 சொன்னவர்-தாம் நிட்டை தொகுத்து இரார் நிட்டையிலே மன்னினவர் போதியார் மா மௌனன் தன் உள் விருப்பாகக் கைகாட்டி மிக்க வட நீழல் இருப்பான் நிருவிகற்பத்தே #521 இந்த நிருவிகற்பத்து எந்தை இருக்க நிட்டை சிந்தை நீ தேறாய் செகம் அனைத்தும் வந்த தொடர்ப் பாடு கெட அன்றோ ஓர் பாத்திரத்துக்கு ஆடல் அல்லால் ஆடுவது ஏன் ஆட்டும் அவன் #522 அவனே பரமும் அவனே குருவும் அவனே அகிலம் அனைத்தும் அவனே தாம் ஆனவரே சொன்னால் அவனே குரு எனக்கு நான் அவனாய் நிற்பது எந்த நாள் #523 நாள் அவங்கள் போகாமல் நாள்-தோறும் நம்-தமையே ஆள வந்தார் தாளின் கீழ் ஆள் புகுந்தாய் மீள உன்னைக் காட்டாமல் நிற்கும் கருத்து அறிந்தால் நெஞ்சே உன் ஆள்-தான் நான் ஐயம் இல்லையால் #524 யான்-தான் எனல் அறவே இன்ப நிட்டை என்று அருணைக் கோன்-தான் உரைத்த மொழி கொள்ளாயோ தோன்றி இழுக்கடித்தாய் நெஞ்சே நீ என் கலைகள் சோர அழுக்கு அடிக்கும் வண்ணார் போலாய் #525 எங்கும் சிவமே இரண்டு அற்று நிற்கில் நெஞ்சே தங்கும் சுகம் நீ சலியாதே அங்கு இங்கு என்று எண்ணாதே பாழில் இறந்து பிறந்து உழலப் பண்ணாதே யான் உன் பரம் #526 மெய்யைப் பொய் என்றிடவும் மெய் அணையாப் பொய் நெஞ்சே பொய்யைத்-தான் மெய் எனவும் போகுமோ ஐயம்_அறத் தன்மயத்தை மெய் எனவே சார்ந்தனையேல் ஆனந்தம் என் மயமும் நின் மயமுமே #527 பூங்காவன நிழலும் புத்தமுதும் சாந்தபதம் வாங்காத ஆனந்த மா மழையும் நீங்காவாம் சொல் இறந்து மாண்டவர் போல் தூ மௌன பூமியில் நான் இல்லை என நின்ற இடம் #528 இடம் கானம் நல்ல பொருள் இன்பம் எனக்கு ஏவல் அடங்காக் கருவி அனைத்தும் உடன் உதவ மந்தார தாரு என வந்து மௌனகுரு தந்தான் ஓர் சொல் கொண்டு-தான் #529 தானம் தவம் ஞானம் சாற்று அரிய சித்தி முத்தி ஆனவை எல்லாம் தாமே ஆகுமே மோனகுரு சொன்ன ஒரு சொல்லால் சுகமாய் இரு மனமே இன்னம் மயக்கம் உனக்கு ஏன் #530 உன்னை உடலை உறு பொருளைத் தா எனவே என்னை அடிமைக்கு இருத்தினான் சொன்ன ஒரு சொல்லை மறவாமல் தோய்ந்தால் நெஞ்சே உன்னால் இல்லை பிறப்பது எனக்கே #531 எனக்கும் உனக்கும் உறவு இல்லை எனத் தேர்ந்து நினைக்க அரிதான இன்ப நிட்டை-தனைக் கொடுத்தே ஆசான் மவுனி அளித்தான் நெஞ்சே உனை ஓர் காசா மதியேன் நான் காண் #532 ஆனந்த மோனகுரு ஆம் எனவே என் அறிவின் மோனம்-தனக்கு இசைய முற்றியதால் தேன் உந்து சொல் எல்லாம் மோனம் தொழில் ஆதியும் மோனம் எல்லாம் நல் மோன வடிவே #533 எல்லாமே மோன நிறைவு எய்துதலால் எவ்விடத்தும் நல்லார்கள் மோன நிலை நாடினார் பொல்லாத நான் என இங்கு ஒன்றை நடுவே முளைக்கவிட்டு இங்கு ஏன் அலைந்தேன் மோனகுருவே #534 மோனகுரு அளித்த மோனமே ஆனந்தம் ஞானம் அருளும் அது நானும் அது வான் ஆதி நின்ற நிலையும் அது நெஞ்சப் பிறப்பும் அது என்று அறிந்தேன் ஆனந்தமே #535 அறிந்த அறிவு எல்லாம் அறிவு அன்றி இல்லை மறிந்த மனம் அற்ற மவுனம் செறிந்திடவே நாட்டினான் ஆனந்த நாட்டில் குடி வாழ்க்கை கூட்டினான் மோனகுரு #536 குரு ஆகித் தண் அருளைக் கூறும் முன்னே மோனா உரு நீடு உயிர் பொருளும் ஒக்கத் தருதி என வாங்கினையே வேறும் உண்மை வைத்திடவும் கேட்டிடவும் ஈங்கு ஒருவர் உண்டோ இனி #537 இனிய கருப்பு வட்டை என் நாவில் இட்டான் நனி இரதம் மாறாது நானும் தனி இருக்கப் பெற்றிலேன் மோனம் பிறந்த அன்றே மோனம் அல்லால் கற்றிலேன் ஏதும் கதி #538 ஏதுக்கும் சும்மா இரு நீ என உரைத்த சூதுக்கோ தோன்றாத் துணை ஆகிப் போதித்து நின்றதற்கோ என் ஐயா நீக்கிப் பிரியாமல் கொன்றதற்கோ பேசாக் குறி #539 குறியும் குணமும் அறக் கூடாத கூட்டத்து அறிவு அறிவாய் நின்றுவிட ஆங்கே பிறிவு அறவும் சும்மா இருத்திச் சுகம் கொடுத்த மோன நின்-பால் கைம்மாறு நான் ஒழிதல் காண் #540 நான் தான் எனும் மயக்கம் நண்ணுங்கால் என் ஆணை வான்-தான் என நிறையமாட்டாய் நீ ஊன்றாமல் வைத்த மவுனத்தாலே மாயை மனம் இறந்து துய்த்துவிடு ஞான சுகம் #541 ஞான நெறிக்கு ஏற்ற குரு நண் அரிய சித்தி முத்தி தானம் தருமம் தழைத்த குரு மானமொடு தாய் எனவும் வந்து என்னைத் தந்த குரு என் சிந்தை கோயில் என வாழும் குரு #542 சித்தும் சடமும் சிவத்தைவிட இல்லை என்ற நித்தன் பரமகுரு நேசத்தால் சுத்த நிலை பெற்றோமே நெஞ்சே பெரும் பிறவி சாராமல் கற்றோமே மோனக் கரு

மேல்

@29 ஏசற்ற அந்நிலை

#543 ஏசற்ற அ நிலையே எந்தை பரிபூரணமாய் மாசு_அற்ற ஆனந்த_வாரி வழங்கிடுமே ஊசல் சுழல் போல் உலக நெறி வாதனையால் பாசத்துள் செல்லாதே பல்காலும் பாழ் நெஞ்சே #544 பாழாகி அண்டப் பரப்பை எலாம் வாய்மடுத்தும் ஆழ் ஆழி இன்பத்து அழுந்தப் படியாயோ தாழாயோ எந்தை அருள் தாள் கீழ் நெஞ்சே எனைப் போல் வாழாது வாழ்ந்து அழியா வண்ணம் இருப்பாயே #545 இருப்பாய் இருந்திடப் பேர்_இன்ப வெளிக்கே நமக்குக் குரு_பார்வை அல்லாமல் கூடக் கிடைத்திடுமோ அருள் பாய் நமக்காக ஆள வந்தார் பொன் அடிக் கீழ் மருள் பேயர் போல் இருக்க வா கண்டாய் வஞ்ச நெஞ்சே #546 வஞ்சமோ பண்டை உள வாதனையால் நீ அலைந்து கொஞ்சம் உற்றாய் உன்னைக் குறைசொல்ல வாயும் உண்டோ அஞ்சல்அஞ்சல் என்று இரங்கும் ஆனந்த மா கடல் கீழ் நெஞ்சமே என் போல நீ அழுந்த வாராயோ #547 வாரா வரவாய் வட நிழல் கீழ் வீற்றிருந்த பூராயம் நம்மைப் புலப்படுத்தவேண்டி அன்றோ ஓராயோ நெஞ்சே உருகாயோ உற்றிருந்து பாராயோ அ உருவைப் பார்க்க நிறைவாய்விடுமே #548 வாயாதோ இன்ப_வெள்ளம் வந்து உன் வழியாகப் பாயாதோ நானும் பயிராய்ப் பிழையேனோ ஓயாமல் உன்னி உருகும் நெஞ்சே அ நிலைக்கே தாயான மோனன் அருள் சந்திக்க வந்திடுமே #549 வந்த வரவை மறந்து உலகாய் வாழ்ந்து கன்ம பந்தம் உற உன்னைப் படிப்பிக்கக் கற்றவர் யார் இந்த மதி ஏன் உனக்கு இங்கு என் மதி கேள் என்னாலே சந்ததம் நெஞ்சே பரத்தில் சாரின் இன்பம் உண்டாமே #550 இன்ப மயமாய் உலகம் எல்லாம் பிழைப்பதற்கு உன் அன்பு நிலை என்பார் அதுவும் நினை அன்றி உண்டோ உன் புலத்தை ஓரின் அருட்கு ஒப்பு ஆவாய் நெஞ்சே நீ தென்புலத்தாரோடு இருந்து செய் பூசை கொண்டருளே #551 அருளே ஓர் ஆலயமா ஆனந்தமாய் இருந்த பொருளோடு யான் இருக்கப் போய் ஒளித்த நெஞ்சே நீ மருள் தீர் முயல்_கோடோ வான்_மலரோ பேய்த்தேரோ இருள் தீர நீ உறைந்தது எவ்விடமோ காணேனே #552 எவ்விடத்தும் பூரணமாம் எந்தை பிரான் தண் அருளே அவ்விடத்தே உன்னை நெஞ்சே ஆராயில் கண்டிலனே அவ்விடத்து மாயையிலே மாண்டனையோ அவ்விடமும் செவ்விடமே நீயும் செனனம் அற்று வாழியவே

மேல்

@30 காடுங்கரையும்

#553 காடு கரையும் மன_குரங்கு கால்விட்டு ஓட அதன் பிறகே ஓடும் தொழிலால் பயன் உளதோ ஒன்றாய்ப் பலவாய் உயிர்க்கு உயிராய் ஆடும் கருணைப் பரஞ்சோதி அருளைப் பெறுதற்கு அன்பு நிலை தேடும் பருவம் இது கண்டீர் சேர வாரும் சகத்தீரே #554 சைவ சமயமே சமயம் சமயாதீதப் பழம் பொருளைக் கைவந்திடவே மன்றுள் வெளி காட்டும் இந்தக் கருத்தை விட்டுப் பொய் வந்து உழலும் சமய நெறி புகுத வேண்டா முத்தி தரும் தெய்வ சபையைக் காண்பதற்குச் சேர வாரும் சகத்தீரே #555 காகம் உறவு கலந்து உண்ணக் கண்டீர் அகண்டாகார சிவ போகம் எனும் பேர்_இன்ப_வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் ஏக உருவாய்க் கிடக்குது ஐயோ இன்புற்றிட நாம் இனி எடுத்த தேகம் விழும் முன் புசிப்பதற்குச் சேர வாரும் சகத்தீரே

மேல்

@31 எடுத்த தேகம்

#556 எடுத்த தேகம் பொருள் ஆவி மூன்றும் நீ எனக்கு ஒன்று இல்லை என மோன நல் நெறி கொடுத்த போது கொடுத்தது அன்றோ பினும் குளறி நான் என்று கூத்தாட மாயையை விடுத்தவாறும் கண்ணீரொடு கம்பலை விலகுமாறும் என் வேட்கை ப்ரவாகத்தைத் தடுத்தவாறும் புகலாய் சிரகிரித் தாயுமான தயாபர மூர்த்தியே #557 நோயும் வெம் கலிப் பேயும் தொடர நின் நூலில் சொன்ன முறை இயமாதி நான் தோயும் வண்ணம் எனைக் காக்கும் காவலும் தொழும்புகொள்ளும் சுவாமியும் நீ கண்டாய் ஓயும் சன்மம் இனி அஞ்சல்அஞ்சல் என்று உலகம் கண்டு தொழ ஓர் உருவிலே தாயும் தந்தையும் ஆனோய் சிரகிரித் தாயுமான தயாபர மூர்த்தியே

மேல்

@32 முகமெலாம்

#558 முகம் எலாம் கணீர் முத்து அரும்பிடச் செம் கை முகிழ்ப்ப அகம் எலாம் குழைந்து ஆனந்தமாக நல் அறிஞர் இகம் எலாம் தவம் இழைக்கின்றார் என் செய்கோ ஏழை சகம் எலாம் பெற நல் அருள் உதரமாச் சமைந்தோய்

மேல்

@33 திடமுறவே

#559 திடமுறவே நின் அருளைச் சேர்த்து என்னைக் காத்து ஆளக் கடன் உனக்கு என்று எண்ணி நின்னைக் கைகுவித்தோன் நான் அலனோ அடைவு கெட்ட பாழ் மாயை ஆழியிலே இன்னம் அல்லல் பட முடியாது என் ஆவிப் பற்றே பராபரமே #560 ஆராமை கண்டு இங்கு அருள் குருவாய் நீ ஒரு கால் வாராயோ வந்து வருத்தம் எல்லாம் தீராயோ பூராயமாக அருள் பூரணத்தில் அண்டம் முதல் பார் ஆதி வைத்த பதியே பராபரமே #561 வாழாது வாழ உனை வந்து அடைந்தோர் எல்லாரும் ஆழ் ஆழி என்ன அருள் ஆனார் அழுக்காற்றோடு ஏழாய் என உலகம் ஏசும் இனி நான் ஒருவன் பாழாகாவாறு முகம் பார் நீ பராபரமே #562 உள்ளத்தின் உள்ளே ஒளித்து என்னை ஆட்டுகின்ற கள்ளக் கருணையை யான் காணும் தரம் ஆமோ வெள்ளத்தை மாற்றி விடக்கு உண்பார் நஞ்சு ஊட்டும் பள்ளத்தின் மீன் போல் பதைத்தேன் பராபரமே #563 வாவிக் கமல மலர் வண்டாய்த் துவண்டுதுவண்டு ஆவிக்குள் நின்ற உனக்கு அன்பு_வைத்தார்க்கு அஞ்சல் என்பாய் பூ விற்கும் வான் கடையில் புல் விற்போர் போல ஒன்றைப் பாவிக்கமாட்டேன் பதியே பராபரமே #564 விண்_ஆறு வெற்பின் விழுந்து ஆங்கு என மார்பில் கண் ஆறு பாய்ச்சிடும் என் காதல்_வெள்ளம் கண்டிலையோ தண் நாறு சாந்தபதத் தற்பரமே நால் வேதப் பண் நாறும் இன்பப் பதியே பராபரமே #565 கூடிய நின் சீர் அடியார் கூட்டம் என்றோ வாய்க்கும் என வாடிய என் நெஞ்சும் முக வாட்டமும் நீ கண்டிலையோ தேடிய நின் சீர் அருளைத் திக்கு அனைத்தும் கை குவித்துப் பாடிய நான் கண்டாய் பதியே பராபரமே #566 நெஞ்சத்தினூடே நினைவாய் நினைவூடும் அஞ்சல் என வாழும் எனது ஆவித் துணை நீயே சஞ்சலம் மாற்றினை இனிமேல் தாய்க்கு உபசாரம் புகன்று பஞ்சரிக்க நான் ஆர் பதியே பராபரமே #567 புத்தி நெறியாக உனைப் போற்றிப் பல காலும் முத்தி நெறி வேண்டாத மூடனேன் ஆ கெடுவேன் சித்தி நெறிக்கு என் கடவேன் சீர் அடியார்க்கு ஏவல்செயும் பத்தி நெறிக்கேனும் முகம் பார் நீ பராபரமே #568 கண்டு அறியேன் கேட்டு அறியேன் காட்டும் நினையே இதயம் கொண்டு அறியேன் முத்தி குறிக்கும் தரமும் உண்டோ தொண்டு அறியாப் பேதைமையேன் சொல்லேன் நின் தொன்மை பண்டு அறிவாய் நீயே பகராய் பராபரமே

மேல்

@34 தன்னை

#569 தன்னை அறியத் தனது அருளால் தான் உணர்த்தும் மன்னைப் பொருள் எனவே வாழாமல் பாழ் நெஞ்சே பொன்னைப் புவியை மடப் பூவையரை மெய் எனவே என்னைக் கவர்ந்து இழுத்திட்டு என்ன பலன் கண்டாயே

மேல்

@35 ஆக்குவை

#570 ஆக்குவை மாயை யாவும் நொடியினில் அவற்றை மாள நீக்குவை நீக்கம் இல்லா நினைப்பொடு மறப்பும் மாற்றிப் போக்கொடு வரவும் இன்றிப் புனித நல் அருள் ஆனந்தம் தாக்கவும் செய்வாய் அன்றோ சச்சிதானந்த வாழ்வே

மேல்

@36 கற்புறுசிந்தை

#571 கற்பு உறு சிந்தை மாதர் கணவரை அன்றி வேறு ஓர் இல்_புறத்தவரை நாடார் யாங்களும் இன்ப வாழ்வும் தன் பொறியாக நல்கும் தலைவ நின் அலது ஓர் தெய்வம் பொற்புறக் கருதோம் கண்டாய் பூரணானந்த வாழ்வே #572 முருந்து இள நகையார் பார முலை முகம் தழுவிச் செவ் வாய் விருந்து அமிர்து என அருந்தி வெறியாட்டுக்கு ஆளாய் நாளும் இருந்த லோகாயதப் பேர் இனத்தனாய் இருந்த ஏழை பொருந்தவும் கதி மேல் உண்டோ பூரணானந்த வாழ்வே #573 தீது எலாம் ஒன்று ஆம் வன்மை செறிந்து இருள் படலம் போர்த்த பாதகச் சிந்தை பெற்ற பதகன் உன் பாத நீழல் ஆதரவு அடைய உள்ளன்பு அருள்கிலையாயின் மற்று யார் போதனைசெய்ய வல்லார் பூரணானந்த வாழ்வே #574 நாதனை நாதாதீத நண்பனை நடுவாய் நின்ற நீதனைக் கலந்து நிற்க நெஞ்சமே நீ வா என்றால் வாதனை பெருக்கி என்னை வசம்செய்து மனம் துன்_மார்க்க போதனைசெய்தல் நன்றோ பூரணானந்த வாழ்வே #575 எண்ணிய எண்ணம் எல்லாம் இறப்பு மேல் பிறப்புக்கு ஆசை பண்ணி என் அறிவை எல்லாம் பாழாக்கி எனைப் பாழாக்கும் திண்ணிய வினையைக் கொன்று சிறியனை உய்யக் கொண்டால் புண்ணியம் நினக்கே அன்றோ பூரணானந்த வாழ்வே #576 பத்தி நீ பத்திக்கான பலனும் நீ பலவாச் சொல்லும் சித்தி நீ சித்தர் சித்தித் திறமும் நீ திறம் ஆர் மோன முத்தி நீ முத்திக்கான முதலும் நீ முதன்மையான புத்தி நீ எனக்கு ஒன்று உண்டோ பூரணானந்த வாழ்வே #577 தாயினும் இனிய நின்னைச் சரண் என அடைந்த நாயேன் பேயினும் கடையன் ஆகிப் பிதற்றுதல் செய்தல் நன்றோ தீயிடை மெழுகாய் நொந்தேன் தெளிவு_இலேன் வீணே காலம் போயினது ஆற்றகில்லேன பூரணானந்த வாழ்வே

மேல்

@37 மலைவளர்காதலி

#578 பதி உண்டு நிதி உண்டு புத்திரர்கள் மித்திரர்கள் பக்கம் உண்டு எக்காலமும் பவிசு உண்டு தவிசு உண்டு திட்டாந்தமாக யமபடர் எனும் திமிரம் அணுகாக் கதி உண்டு ஞானமாம் கதிர் உண்டு சதிர் உண்டு காயசித்திகளும் உண்டு கறை உண்ட கண்டர்-பால் அம்மை நின் தாளில் கருத்து ஒன்றும் உண்டாகுமேல் நதி உண்ட கடல் எனச் சமயத்தை உண்ட பர ஞான ஆனந்த ஒளியே நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே நான் எனும் அகந்தை தீர்த்து என் மதி உண்ட மதியான மதிவதனவல்லியே மதுசூதனன் தங்கையே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலிப் பெண் உமையே #579 தெட்டிலே வலிய மட மாதர் வாய் வெட்டிலே சிற்றிடையிலே நடையிலே சேல் ஒத்த விழியிலே பால் ஒத்த மொழியிலே சிறுபிறை நுதல் கீற்றிலே பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனை கந்த பொடியிலே அடியிலே மேல் பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே புந்தி-தனை நுழைய விட்டு நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே நின் அடியர் கூட்டத்திலே நிலைபெற்ற அன்பிலே மலைவு அற்ற மெய்ஞ்ஞான ஞேயத்திலே உன் இரு தாள் மட்டிலே மனது செல நினது அருளும் அருள்வையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலிப் பெண் உமையே #580 பூதம் முதலாகவே நாத பரியந்தமும் பொய் என்று எனைக் காட்டி என் போதத்தின் நடு ஆகி அடி ஈறும் இல்லாத போக பூரண வெளிக்குள் ஏதும் அற நில் என்று உபாயமா வைத்து நினைவு எல்லாம் செய் வல்ல சித்தாம் இன்ப உருவைத் தந்த அன்னையே நின்னையே எளியேன் மறந்து உய்வனோ வேத முதலான நல் ஆகமத் தன்மையை விளக்கும் உள்_கண்_இலார்க்கும் மிக்க நின் மகிமையைக் கேளாத செவிடர்க்கும் வீறு வாதம் புகலுவாய் வாத நோயாளர்க்கும் எட்டாத முக்கண் உடை மா மருந்துக்கு அமிர்தமே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலிப் பெண் உமையே #581 மிடியிட்ட வாழ்க்கையால் உப்பு இட்ட கலம் எனவும் மெய் எலாம் உள் உடைந்து வீறிட்ட செல்வர்-தம் தலைவாயில் வாசமாய் வேதனைகள் உற வேதனும் துடியிட்ட வெம்_வினையை ஏவினான் பாவி நான் தொடரிட்ட தொழில்கள் எல்லாம் துண்டிட்ட சாண் கும்பியின் பொருட்டாய் அது உன் தொண்டர் பணி செய்வது என்றோ அடியிட்ட செந்தமிழின் அருமையிட்டு ஆரூரில் அரிவையோர் பரவை வாயில் அம்மட்டும் அடியிட்டு நடை நடந்து அருள் அடிகள் அடி ஈது முடி ஈது என வடியிட்ட மறை பேசு பச்சிளம் கிள்ளையே வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலிப் பெண் உமையே #582 பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி புராந்தகி த்ரியம்பகி எழில் புங்கவி விளங்கு சிவசங்கரி சகஸ்ரதள புஷ்பம் மிசை வீற்றிருக்கும் நாரணி மனாதீத நாயகி குணாதீத நாதாந்த சத்தி என்று உன் நாமமே உச்சரித்திடும் அடியர் நாமமே நான் உச்சரிக்க வசமோ ஆர் அணி சடைக் கடவுள் ஆரணி எனப் புகழ அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயிலே வார் அணியும் இரு கொங்கை மாதர் மகிழ் கங்கை புகழ் வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலிப் பெண் உமையே #583 பாகமோ பெற உனைப் பாட அறியேன் மலபரிபாகம் வரவும் மனதில் பண்புமோ சற்றும் இலை நியமமோ செய்திடப் பாவியேன் பாப ரூப தேகமோ திடம் இல்லை ஞானமோ கனவிலும் சிந்தியேன் பேர்_இன்பமோ சேர என்றால் கள்ள மனதுமோ மெத்தவும் சிந்திக்குது என் செய்குவேன் மோகமோ மதமோ குரோதமோ லோபமோ முற்றும் மாற்சரியமோ-தான் முறியிட்டு எனைக் கொள்ளும் நிதியமோ தேட எனின் மூசு வரி வண்டு போல மாகம் ஓடவும் வல்லன் எனை ஆள வல்லையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலிப் பெண் உமையே #584 தூள் ஏறு தூசு போல் வினை ஏறும் மெய் எனும் தொக்கினுள் சிக்கி நாளும் சுழல் ஏறு காற்றினிடை அழல் ஏறு பஞ்சு எனச் சூறையிட்டு அறிவை எல்லாம் நாள் ஏற நாள் ஏற வார்த்திகம் எனும் கூற்றின் நட்பு ஏற உள் உடைந்து நயனங்கள் அற்றது ஓர் ஊர் ஏறு போலவே நானிலம்-தனில் அலையவோ வேள் ஏறு தந்தியைக் கன தந்தியுடன் வென்று விரை ஏறு மாலை சூடி விண் ஏறு மேகங்கள் வெற்பு ஏறி மறைவுற வெருட்டிய கரும்_கூந்தலாய் வாள் ஏறு கண்ணியே விடை ஏறும் எம்பிரான் மனதுக்கு இசைந்த மயிலே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலிப் பெண் உமையே #585 பூதமொடு பழகி வளர் இந்திரியமாம் பேய்கள் புந்தி முதலான பேய்கள் போராடு கோபாதி ராக்ஷசப் பேய்கள் என் போதத்தை ஊடு அழித்து வேதனை வளர்த்திடச் சதுர்வேத வஞ்சன் விதித்தான் இ அல்லல் எல்லாம் வீழும்படிக்கு உனது மௌன மந்த்ராதிக்ய வித்தையை வியந்து அருள்வையோ நாத வடிவாகிய மஹா மந்த்ர ரூபியே நாதாந்த வெட்டவெளியே நல் சமயமான பயிர் தழைய வரும் மேகமே ஞான ஆனந்த மயிலே வாதமிடு பர சமயம் யாவுக்கும் உணர்வு அரிய மகிமை பெறு பெரிய பொருளே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலிப் பெண் உமையே

மேல்

@38 அகிலாண்ட நாயகி

#586 வட்டமிட்டு ஒளிர் பிராணவாயு எனும் நிகளமோடு கமனம்செயும் மனம் எனும் பெரிய மத்த யானையை என் வசம் அடக்கிடின் மு_மண்டலத்து இட்டமுற்ற வள ராஜ_யோகம் இவன் யோகம் என்று அறிஞர் புகழவே ஏழையேன் உலகில் நீடு வாழ்வன் இனி இங்கு இதற்கும் அனுமானமோ பட்டவர்த்தனர் பராவு சக்ரதர பாக்யமான சுபயோகமும் பார காவிய கவித்வ நான்மறை பராயணம்செய் மதியூகமும் அட்ட சித்தியும் நல் அன்பருக்கு அருள விருது கட்டிய பொன் அன்னமே அண்ட கோடி புகழ் காவை வாழும் அகிலாண்டநாயகி என் அம்மையே

மேல்

@39 பெரியநாயகி

#587 காற்றைப் பிடித்து மண் கரகத்து அடைத்தபடி கன்மப் புனற்குள் ஊறும் கடைகெட்ட நவ வாயில் பெற்ற பசு மண்கலக் காயத்துள் எனை இருத்திச் சோற்றைச் சுமத்தி நீ பந்தித்து வைக்கத் துருத்திக்குள் மது என்னவே துள்ளித் துடித்து என்ன பேறு பெற்றேன் அருள் தோய நீ பாய்ச்சல்செய்து நாற்றைப் பதித்தது என ஞானமாம் பயிர்-அதனை நாட்டிப் புலப் பட்டியும் நமனான தீப்பூடும் அணுகாமல் முன் நின்று நாடு சிவபோகமான பேற்றைப் பகுத்து அருளி எனை ஆள வல்லையோ பெரிய அகிலாண்ட கோடி பெற்ற நாயகி பெரிய கபிலை மா நகர் மருவு பெரியநாயகி அம்மையே

மேல்

@40 தந்தைதாய்

#588 தந்தை தாய் மகவு மனை வாழ்க்கை யாக்கை சகம் அனைத்தும் மௌனி அருள் தழைத்த போதே இந்திரசாலம் கனவு கானல்_நீராய் இருந்ததுவே இ இயற்கை என்னே என்னே #589 என்னை நான் கொடுக்க ஒருப்பட்ட காலம் யாது இருந்து என் எது போய் என் என்னை நீங்கா அன்னை போல் அருள் பொழியும் கருணை_வாரி ஆனந்தப் பெரு முகிலே அரசே சொல்லாய் #590 அரசே நின் திரு_கருணை அல்லாது ஒன்றை அறியாத சிறியேன் நான் அதனால் முத்திக் கரை சேரும்படிக்கு உன் அருள் புணையைக் கூட்டும் கைப்பிடியே கடைப்பிடியாக் கருத்துள் கண்டேன் #591 கண்டேன் இங்கு என்னையும் என்றனையும் நீங்காக் கருணையும் நின்றன்னையும் நான் கண்டேன்கண்டேன் விண்டேன் என்று எனைப் புறம்பாத் தள்ளவேண்டாம் விண்டது நின் அருள் களிப்பின் வியப்பால் அன்றோ #592 ஓ என்ற சுத்தவெளி ஒன்றே நின்று இங்கு உயிரை எல்லாம் வம்-மின் என உவட்டா இன்பத் தே என்ற நீ கலந்து கலந்து முத்தி சேர்த்தனையேல் குறைவு ஆமோ செக விலாசம் #593 செகத்தை எல்லாம் அணுவளவும் சிதறா வண்ணம் சேர்த்து அணுவில் வைப்பை அணுத் திரளை எல்லாம் மகத்துவமாப் பிரமாண்டமாகச் செய்யும் வல்லவா நீ நினைத்தவாறே எல்லாம் #594 சொல்லாலே வாய் துடிப்பது அல்லால் நெஞ்சம் துடித்து இரு கண் நீர் அருவி சொரியத் தேம்பிக் கல்லால் ஏய் இருந்த நெஞ்சும் கல்_ஆல் முக்கண் கனியே நெக்குருகிடவும் காண்பேன்-கொல்லோ

மேல்

@41 பெற்றவட்கே

#595 பெற்றவட்கே தெரியும் அந்த வருத்தம் பிள்ளை பெறாப் பேதை அறிவாளோ பேர்_ஆனந்தம் உற்றவர்க்கே கண்ணீர் கம்பலை உண்டாகும் உறாதவரே கல்_நெஞ்சம் உடையர் ஆவார் #596 ஆவா என்று அழுது தொழும் கையர் ஆகி அப்பனே ஆனந்த அடிகளே நீ வாவா என்றவர்க்கு அருளும் கருணை எந்தாய் வன்_நெஞ்சர்க்கு இரங்குவது எவ்வாறு நீயே #597 நீயே இங்கு எளியேற்கும் தாக மோகம் நினைவூடே நின்று உணர்த்தி நிகழ்த்தலாலே பேயேற்கும் தனக்கென ஓர் அன்பும் உண்டோ பெம்மானே இன்னம் அன்பு பெருகப் பாராய் #598 பாராயோ என் துயரம் எல்லாம் ஐயா பகரும் முன்னே தெரியாதோ பாவியேன் முன் வாராயோ இன்னம் ஒரு காலானாலும் மலர்க் கால் என் சென்னி மிசை வைத்திடாயோ #599 வைத்திடும் காலைப் பிடித்துக் கண்ணின் மார்பில் வைத்து அணைத்துக்கொண்டு கையால் வளைத்துக் கட்டிச் சித்தம் மிசைப் புக இருத்திப் பிடித்துக்கொண்டு தியக்கம்_அற இன்ப சுகம் சேர்வது என்றோ #600 சேராமல் சிற்றினத்தைப் பிரிந்து எந்நாளும் திரு_அடிப் பேர்_இனத்துடனே சேரா வண்ணம் ஆராக நான் அலைந்தேன் அரசே நீ-தான் அறிந்திருந்தும் மாயையில் ஏன் அழுந்தவைத்தாய் #601 வைத்த பொருள் உடல் ஆவி மூன்றும் நின் கை வசம் எனவே யான் கொடுக்க வாங்கிக்கொண்டு சித்தம் மிசைப் புகுந்தது தான் மெய்யோ பொய்யோ சிறியேற்கு இங்கு உளவு உரையாய் திகையா வண்ணம் #602 திகையாதோ எந்நாளும் பேர்_ஆனந்தத் தெள் அமுதம் உதவாமல் திவலை காட்டி வகையாக அலக்கழித்தாய் உண்டு உடுத்து வாழ்ந்தேன் நான் இரண்டு கால் மாடு போலே #603 மாடு மக்கள் சிற்றிடையார் செம்பொன் ஆடை வைத்த கன தனம் மேடை மாட கூடம் வீடும் என்-பால் தொடர்ச்சியோ இடைவிடாமல் மிக்க கதி வீடு அன்றோ விளங்கல் வேண்டும் #604 விளங்க எனக்கு உள்ளுள்ளே விளங்காநின்ற வேதகமே போதகமே விமல வாழ்வே களங்கரகிதப் பொருளே என்னை நீங்காக் கண்_நுதலே நாதாந்தக் காட்சிப் பேறே #605 நாதமே நாதாந்த வெளியே சுத்த ஞாதுருவே ஞானமே ஞேயமே நல் வேதமே வேத முடிவான மோன வித்தே இங்கு என்னை இனி விட்டிடாதே

மேல்

@42 கல்லாலின்

#606 கல்_ஆலின் நீழல்-தனில் ஒரு நால்வர்க்கும் கடவுள் நீ உணர்த்துவதும் கைகாட்டு என்றால் சொல்லாலே சொலப்படுமோ சொல்லும் தன்மை துரும்பு பற்றிக் கடல் கடக்கும் துணிபே அன்றோ #607 அன்றோ ஆமோ எனவும் சமயகோடி அத்தனையும் வெவ்வேறாய் அரற்ற நேரே நின்றாயே நினைப் பெறுமாறு எவ்வாறு ஆங்கே நின் அருள் கொண்டு அறிவது அல்லால் நெறி வேறு உண்டோ #608 நெறி பார்க்கின் நின்னை அன்றி அகிலம் வேறோ நிலம் நீர் தீக் கால் வானும் நீ அலாத குறி யாதும் இல்லை என்றால் யாங்கள் வேறோ கோதை ஒரு கூறு_உடையாய் கூறாய் கூறாய் #609 கூறு ஆய ஐம்_பூதச் சுமையைத் தாங்கிக் குணம்_இலா மனம் எனும் பேய்க் குரங்கின் பின்னே மாறாத கவலையுடன் சுழல என்னை வைத்தனையே பரமே நின் மகிமை நன்றே #610 நன்று எனவும் தீது எனவும் எனக்கு இங்கு உண்டோ நான் ஆகி நீ இருந்த நியாயம் சற்றே இன்று எனக்கு வெளி ஆனால் எல்லாம் வல்ல இறைவா நின் அடியருடன் இருந்து வாழ்வேன் #611 வாழ்வு எனவும் தாழ்வு எனவும் இரண்டாப் பேசும் வையகத்தார் கற்பனையாம் மயக்கம் ஆன பாழ் வலையைக் கிழித்து உதறிச் செயல் போய் வாழப் பரமே நின் ஆனந்தப் பார்வை எங்கே #612 எங்கேஎங்கே அருள் என்று எமை இரந்தான் ஏழை இவன் எனவும் எண்ணி இச்சைகூரும் அங்கேஅங்கே எளி வந்து என்னை ஆண்ட ஆர் அமுதே உனைக் காண்பான் அலந்துபோனேன் #613 போன நாட்கு இரங்குவதே தொழிலா இங்ஙன் பொருந்தும் நாள் அத்தனையும் போக்கினேன் என் ஞான_நாயகனே நின் மோன ஞான நாட்டம் உற்று வாழ்ந்திருக்கும் நாள் எ நாளோ #614 நாள் பட்ட கமலம் என்ன இதயம் மேவும் நறும் தேனே துன்_மார்க்க நாரிமார் கண் வாள் பட்ட காயம் இந்தக் காயம் என்றோ வன் கூற்றும் உயிர் பிடிக்க வரும் அ நீதி #615 நீதி எங்கே மறை எங்கே மண் விண் எங்கே நித்தியராம் அவர்கள் எங்கே நெறி தப்பாத சாதி எங்கே ஒழுக்கம் எங்கே யாங்கள் எங்கே தற்பர நீ பின்னும் ஒன்றைச் சமைப்பதானால் #616 ஆனாலும் யான் எனது இங்கு அற்ற எல்லை அது போதும் அது கதி-தான் அல்ல என்று போனாலும் யான் போவன் அல்லால் மோனப் புண்ணியனே வேறும் ஒரு பொருளை நாடேன் #617 பொருளே நின் பூரணம் மேலிட்ட காலம் போக்கு_வரவு உண்டோ தற்போதம் உண்டோ இருள்-தான் உண்டோ அல்லால் வெளி-தான் உண்டோ இன்பம் உண்டோ துன்பம் உண்டோ யாம் அங்கு உண்டோ #618 உண்டோ நீ படைத்த உயிர்த் திரளில் என் போல் ஒரு பாவி தேகாதி உலகம் பொய்யாக் கண்டேயும் எள்ளளவும் துறவும் இன்றிக் காசினிக்குள் அலைந்தவர் ஆர் காட்டாய் தேவே #619 தேவர் எலாம் தொழச் சிவந்த செம் தாள் முக்கண் செங்கரும்பே மொழிக்கு மொழி தித்திப்பாக மூவர் சொலும் தமிழ் கேட்கும் திரு_செவிக்கே மூடனேன் புலம்பிய சொல் முற்றுமோ-தான் #620 முற்றுமோ எனக்கு இனி ஆனந்த வாழ்வு மூதறிவுக்கு இனியாய் நின் முளரித் தாளில் பற்றுமோ சற்றும் இல்லை ஐயோஐயோ பாவி படும் கண் கலக்கம் பார்த்திலாயோ #621 பார்த்தன எல்லாம் அழியும் அதனால் சுட்டிப் பாராதே பார்த்திருக்கப் பரமே மோன மூர்த்தி வடிவாய் உணர்த்தும் கைகாட்டு உண்மை முற்றி எனது அல்லல் வினை முடிவது என்றோ #622 என்று உளை நீ அன்று உளம் யாம் என்பது என்னை இது நிற்க எல்லாம் தாம் இல்லை என்றே பொன்றிடச்செய் வல்லவன் நீ எமைப் படைக்கும் பொற்பு_உடையாய் என்னின் அது பொருந்திடாதே #623 பொருந்து சகம் அனைத்தினையும் பொய்பொய் என்று புகன்றபடி மெய் என்றே போத ரூபத்து இருந்தபடி என்று இருப்பது அன்றே அன்றோ எம்பெருமான் யான் கவலை எய்தாக் காலம் #624 காலமே காலம் ஒரு மூன்றும் காட்டும் காரணமே காரண_காரியங்கள் இல்லாக் கோலமே எனை வாவா என்று கூவிக் குறைவு_அற நின் அருள் கொடுத்தால் குறைவோ சொல்லாய் #625 சொல் ஆய தொகுதி எல்லாங் கடந்துநின்ற சொரூபானந்தச் சுடரே தொண்டனேனைக் கல்லாகப் படைத்தாலும் மெத்த நன்றே கரணமுடன் நான் உறவு கலக்கமாட்டேன் #626 கலங்காத நெஞ்சு உடைய ஞான தீரர் கடவுள் உனைக் காணவே காயம் ஆதி புலம் காணார் நான் ஒருவன் ஞானம் பேசிப் பொய்க் கூடு காத்தது என்ன புதுமை கண்டாய் #627 கண்டிலையோ யான் படும் பாடு எல்லாம் மூன்று கண் இருந்தும் தெரியாதோ கசிந்து உள் அன்பு ஆர் தொண்டரடித்தொண்டன் அன்றோ கருணை நீங்காச் சுத்த பரிபூரணமாம் சோதி நாதா #628 சோதியாய் இருள் பிழம்பைச் சூறையாடும் தூ வெளியே எனைத் தொடர்ந்துதொடர்ந்து எந்நாளும் வாதியாநின்ற வினைப் பகையை வென்ற வாழ்வே இங்கு உனைப் பிரிந்து மயங்குகின்றேன் #629 மயக்குறும் என் மனம் அணுகாப் பாதை காட்டி வல்_வினையைப் பறித்தனையே வாழ்வே நான் என் செயக் கடவேன் செயல் எல்லாம் நினதே என்று செம் கை குவிப்பேன் அல்லால் செயல் வேறு இல்லை #630 வேறுபடும் சமயம் எல்லாம் புகுந்து பார்க்கின் விளங்கு பரம்பொருளே நின் விளையாட்டு அல்லால் மாறுபடும் கருத்து இல்லை முடிவு_இல் மோன_ வாரிதியில் நதித் திரள் போல் வயங்கிற்று அம்மா #631 அம்மா ஈது அதிசயம்-தான் அன்றோஅன்றோ அண்ட நிலை ஆக்கி என்னை அறிவு ஆம் வண்ணம் சும்மாவே இருக்கவைத்தாய் ஐயா ஆங்கே சுக மயமாய் இருப்பது அல்லால் சொல்வான் என்னே #632 என்னே நான் பிறந்து உழல வந்த ஆறு இங்கு எனக்கென ஓர் செயல் இலையே ஏழையேன்-பால் முன்னே செய் வினை எனவும் பின்னே வந்து மூளும் வினை எனவும் வர முறை ஏன் எந்தாய் #633 தாய் ஆன தண் அருளை நிரம்ப வைத்துத் தமியேனைப் புரவாமல் தள்ளித்தள்ளிப் போய் ஆனது என்-கொல் ஐயா ஏகதேசம் பூரணத்துக்கு உண்டோ-தான் புகலல்வேண்டும் #634 புகல் அரிய நின் விளையாட்டு என்னே எந்தாய் புன்மை அறிவு உடைய என்னைப் பொருளாப் பண்ணி இகல் விளைக்கும் மல மாயை கன்மத்தூடே இடருறவும் செய்தனையே இரக்கம் ஈதோ #635 இரக்கமொடு பொறை ஈதல் அறிவு ஆசாரம் இல்லேன் நான் நல்லோர்கள் ஈட்டம் கண்டால் கரக்கும் இயல்பு_உடையேன் பாழ் நெஞ்சம் எந்தாய் கரும்_தாதோ வல் உருக்கோ கரிய கல்லோ

மேல்

@43. பராபரக்கண்ணி

#636 சீர் ஆரும் தெய்வத் திரு_அருளாம் பூமி முதல் பார் ஆதி ஆண்ட பதியே பராபரமே #637 கண்ணாரக் கண்டோர் கருப் பொருள் காணாமல் அருள் விண்ணூடு இருந்த இன்ப_வெற்பே பராபரமே #638 சிந்தித்த எல்லாம் என் சிந்தை அறிந்தே உதவ வந்த கருணை_மழையே பராபரமே #639 ஆரா அமுதே அரசே ஆனந்த_வெள்ளப் பேர்_ஆறே இன்ப_பெருக்கே பராபரமே #640 ஆர் அறிவார் என்ன அனந்த மறை ஓலமிடும் பேர்_அறிவே இன்ப_பெருக்கே பராபரமே #641 உரை இறந்த அன்பர் உளத்து ஓங்கு ஒளியாய் ஓங்கிக் கரையிறந்த இன்ப_கடலே பராபரமே #642 எத்திக்கும் தான் ஆகி என் இதயத்தே ஊறித் தித்திக்கும் ஆனந்தத் தேவே பராபரமே #643 திக்கொடு கீழ் மேலும் திரு_அருளாம் பொற்பு_அறிந்தோர் கைக்குள் வளர் நெல்லிக் கனியே பராபரமே #644 முத்தே பவளமே மொய்த்த பசும் பொன் சுடரே சித்தே என் உள்ளத் தெளிவே பராபரமே #645 கண்ணே கருத்தே என் கற்பகமே கண் நிறைந்த விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே #646 வாக்காய் மனதாய் மன வாக்கு இறந்தவர்-பால் தாக்காதே தாக்கும் தனியே பராபரமே #647 பார்த்த இடம் எல்லாம் பரவெளியாய்த் தோன்ற ஒரு வார்த்தை சொல்ல வந்த மனுவே பராபரமே #648 வான் அந்தம் மண்ணின் அந்தம் வைத்துவைத்துப் பார்க்க எனக்கு ஆனந்தம் தந்த அரசே பராபரமே #649 அன்பைப் பெருக்கி எனது ஆர் உயிரைக் காக்க வந்த இன்ப_பெருக்கே இறையே பராபரமே #650 வானம் எல்லாம் கொண்ட மெளன மணிப் பெட்டகத்துக் கான பணியான அணியே பராபரமே #651 ஓடும் இரு_நிதியும் ஒன்றாகக் கண்டவர்கள் நாடும் பொருளான நட்பே பராபரமே #652 சித்த நினைவும் செயும் செயலும் நீ என வாழ் உத்தமர்கட்கான உறவே பராபரமே #653 போதாந்தப் புண்ணியர்கள் போற்றி சய போற்றி எனும் வேதாந்த வீட்டில் விளக்கே பராபரமே #654 முத்தாந்த வீதி முளரி தொழும் அன்பருக்கே சித்தாந்த வீதி வரும் தேவே பராபரமே #655 ஈனம் தரும் உடலம் என்னது யான் என்பது அற ஆனந்தம் வேண்டி அலந்தேன் பராபரமே #656 என்பு உருகி நெஞ்சம் இளகிக் கரைந்துகரைந்து அன்பு உருவாய் நிற்க அலந்தேன் பராபரமே. #657 சுத்த அறிவாய்ச் சுகம் பொருந்தின் அல்லால் என் சித்தம் தெளியாது என் செய்வேன் பராபரமே #658 மாறா அனுபூதி வாய்க்கின் அல்லால் என் மயக்கம் தேறாது என் செய்வேன் சிவமே பராபரமே #659 தாகம் அறிந்து இன்ப நிட்டை தாராயேல் ஆ கெடுவேன் தேகம் விழுந்திடின் என் செய்வேன் பராபரமே #660 அப்பா என் எய்ப்பில் வைப்பே ஆற்றுகிலேன் போற்றி என்று செப்புவது அல்லால் வேறு என் செய்வேன் பராபரமே #661 உற்று அறியும் என் அறிவும் உட்கருவி போல் சவி மாண்டு அற்றும் இன்பம் தந்திலையே ஐயா பராபரமே #662 சொல்லால் அடங்காச் சுக_கடலில் வாய்மடுக்கின் அல்லால் என் தாகம் அறுமோ பராபரமே #663 பாராயோ என்னை முகம் பார்த்து ஒரு கால் என் கவலை தீராயோ வாய் திறந்து செப்பாய் பராபரமே #664 ஓயாதோ என் கவலை உள்ளே ஆனந்த_வெள்ளம் பாயாதோ ஐயா பகராய் பராபரமே #665 ஓகோ உனைப் பிரிந்தார் உள்ளம் கனலில் வைத்த பாகோ மெழுகோ பகராய் பராபரமே #666 கூர்த்த அறிவு அத்தனையும் கொள்ளை கொடுத்து உன் அருளைப் பார்த்தவன் நான் என்னை முகம் பாராய் பராபரமே #667 கடல் அமுதே தேனே என் கண்ணே கவலைப் பட முடியாது என்னை முகம் பார் நீ பராபரமே #668 உள்ளம் அறிவாய் உழப்பு அறிவாய் நான் ஏழை தள்ளிவிடின் மெத்தத் தவிப்பேன் பராபரமே #669 கன்றினுக்குச் சேதா கனிந்து இரங்கல் போல எனக்கு என்று இரங்குவாய் கருணை எந்தாய் பராபரமே #670 எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணிஎண்ணி ஏழை நெஞ்சம் புண்ணாகச் செய்தது இனிப் போதும் பராபரமே #671 ஆழித் துரும்பு எனவே அங்குமிங்கும் உன் அடிமை பாழில் திரிவது என்ன பாவம் பராபரமே #672 கற்ற அறிவால் உனை நான் கண்டவன் போல் கூத்தாடில் குற்றம் என்று என் நெஞ்சே கொதிக்கும் பராபரமே #673 ஐயோ உனைக் காண்பான் ஆசைகொண்டது அத்தனையும் பொய்யோ வெளியாப் புகலாய் பராபரமே #674 துன்பக் கண்ணீரில் துளைந்தேற்கு உன் ஆனந்த இன்பக் கண்ணீர் வருவது எ நாள் பராபரமே #675 வஞ்சனையும் பொய்யும் உள்ளே வைத்து அழுக்காறாய் உளறும் நெஞ்சனுக்கும் உண்டோ நெறி-தான் பராபரமே #676 பாசம் போய் நின்றவர் போல் பாராட்டியானாலும் மோசம்போனேன் நான் முறையோ பராபரமே #677 நன்று அறியேன் தீது அறியேன் நான் என்று நின்றவன் ஆர் என்று அறியேன் நான் ஏழை என்னே பராபரமே #678 இன்று புதிது அன்றே எளியேன் படும் துயரம் ஒன்றும் அறியாயோ உரையாய் பராபரமே #679 எத்தனை-தான் சன்மம் எடுத்து எத்தனை நான் பட்ட துயர் அத்தனையும் நீ அறிந்தது அன்றோ பராபரமே #680 இந்த நாள் சற்றும் இரங்கிலையேல் காலன் வரும் அந்த நாள் காக்க வல்லார் ஆர் காண் பராபரமே #681 உற்றுஉற்று நாடி உளம் மருண்ட பாவியை நீ சற்று இரங்கி ஆளத் தகாதோ பராபரமே #682 எள்ளளவும் நின்னை விட இல்லா எனை மயக்கில் தள்ளுதலால் என்ன பலன் சாற்றாய் பராபரமே #683 பாடிப் படித்து உலகில் பாராட்டி நிற்பதற்கோ தேடி எனை அடிமை சேர்த்தாய் பராபரமே #684 சொன்னதைச் சொல்வது அல்லால் சொல் அற என் சொல் இறுதிக்கு என்னத்தைச் சொல்வேன் எளியேன் பராபரமே #685 சொல்லும் பொருளும் அற்றுச் சும்மா இருப்பதற்கே அல்லும்_பகலும் எனக்கு ஆசை பராபரமே #686 நேச நிருவிகற்ப நிட்டை அல்லால் உன் அடிமைக்கு ஆசை உண்டோ நீ அறியாது அன்றே பராபரமே #687 துச்சன் என வேண்டா இத் தொல் உலகில் அல்லல் கண்டால் அச்சம் மிக உடையேன் ஐயா பராபரமே #688 கண் ஆவாரேனும் உனைக் கைகுவியாராயின் அந்த மண் ஆவார் நட்பை மதியேன் பராபரமே #689 கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே #690 எத்தால் பிழைப்பேனோ எந்தையே நின் அருட்கே பித்து ஆனேன் மெத்தவும் நான் பேதை பராபரமே #691 வாயினால் பேசா மௌனத்தை வைத்திருந்தும் தாய்_இலார் போல் நான் தளர்ந்தேன் பராபரமே #692 அன்னை_இலாச் சேய் போல் அலக்கணுற்றேன் கண்ணார என் அகத்தில் தாய் போல் இருக்கும் பராபரமே #693 உற்று நினைக்கில் துயரம் உள்ளுள்ளே செம் தீயாய்ப் பற்ற நொந்தேன் என்னை முகம் பார் நீ பராபரமே #694 பொய்யன் இவன் என்று மெள்ளப் போதிப்பார் சொல் கேட்டுக் கைவிடவும் வேண்டாம் என் கண்ணே பராபரமே #695 எண்ணம் அறிந்தே இளைப்பு அறிந்தே ஏழை உய்யும் வண்ணம் திரு_கருணை வையாய் பராபரமே #696 நாட்டாதே என்னை ஒன்றில் நாட்டி இதம் அகிதம் காட்டாதே எல்லாம் நீ கண்டாய் பராபரமே #697 உன்னை நினைந்து உன் நிறைவின் உள்ளே உலாவும் என்னை அன்னை வயிற்று இன்னம் அடைக்காதே பராபரமே #698 பரம் உனக்கு என்று எண்ணும் பழக்கமே மாறா வரம் எனக்குத் தந்து அருள் என் வாழ்வே பராபரமே #699 வந்தித்து நின்னை மறவாக் கடனாகச் சிந்திக்க நின்னது அருள்செய்யாய் பராபரமே #700 எவ்வுயிரும் என் உயிர் போல் எண்ணி இரங்கவும் நின் தெய்வ அருள் கருணை செய்யாய் பராபரமே #701 வெட்டவெளிப் பேதையன் யான் வேறு கபடு ஒன்று அறியேன் சிட்டருடன் சேர் அனந்த தெண்டன் பராபரமே #702 இரவு பகல் அற்ற இடத்து ஏகாந்த யோகம் வரவும் திரு_கருணை வையாய் பராபரமே #703 மால் காட்டிச் சிந்தை மயங்காமல் நின்று சுகக் கால் காட்டி வாங்காதே கண்டாய் பராபரமே #704 எப்பொருளும் நீ எனவே எண்ணி நான் தோன்றாத வைப்பை அழியா நிலையா வையாய் பராபரமே #705 சும்மா இருப்பதுவே சுட்டு அற்ற பூரணம் என்று எம்மால் அறிதற்கு எளிதோ பராபரமே #706 முன்னொடு பின் பக்கம் முடி அடி நாப்பண் அற நின் றன்னொடு நான் நிற்பது என்றோ சாற்றாய் பராபரமே #707 மை வண்ணம் தீர்ந்த மௌனி சொன்னது எவ்வண்ணம் அவ்வண்ணம் நிட்டை அருளாய் பராபரமே #708 வித்து அன்றி யாதும் விளைவது உண்டோ நின் அருளாம் சித்து அன்றி யாங்கள் உண்டோ செப்பாய் பராபரமே #709 ஆங்காரம் அற்று உன் அறிவான அன்பருக்கே தூங்காத தூக்கம்-அது தூக்கும் பராபரமே #710 சிந்தை அவிழ்ந்துஅவிழ்ந்து சின்மயமா நின் அடிக்கே வந்தவர்க்கே இன்ப நிலை வாய்க்கும் பராபரமே #711 சொல்லாடா ஊமரைப் போல் சொல் இறந்து நீ ஆகின் அல்லால் எனக்கு முத்தி ஆமோ பராபரமே #712 பேச்சாகா மோனம் பிறவா முளைத்தது என்றற்கு ஆச்சாச்சு மேல் பயன் உண்டாமோ பராபரமே #713 கெட்டி என்று உன் அன்பர் மலம் கெட்டு அயர்ந்தோர் பூரணமாம் தொட்டிலுக்குள் சேய் போல் துயின்றார் பராபரமே #714 காட்ட அருள் இருக்கக் காணாது இருள் மலத்து நாட்டம் எனக்கு வரல் நன்றோ பராபரமே #715 எத்தன்மைக் குற்றம் இயற்றிடினும் தாய் பொறுக்கும் அத் தன்மை நின் அருளும் அன்றோ பராபரமே #716 எத்தனையோ தேர்ந்தாலும் என்னாலே இன்பம் உண்டோ சித்து உருவே இன்பச் சிவமே பராபரமே #717 மண்ணொடு விண் காட்டி மறைந்தும் மறையா அருளைக் கண்ணொடு கண்ணாக என்று காண்பேன் பராபரமே #718 பஞ்சரித்து நின்னைப் பல கால் இரந்தது எல்லாம் அஞ்சல் எனும் பொருட்டே அன்றோ பராபரமே #719 எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அ உயிராய் அங்கங்கு இருப்பது நீ அன்றோ பராபரமே #720 அனைத்துமாய் நின்றாயே யான் வேறோ நின்னை நினைக்குமாறு எங்கே நிகழ்த்தாய் பராபரமே #721 நின் போதத்தாலே நினைப்பும் மறப்பும் என்றால் என் போதம் எங்கே இயம்பாய் பராபரமே #722 ஒன்றை நினைந்து ஒன்றை மறந்து ஓடும் மனம் எல்லாம் நீ என்று அறிந்தால் எங்கே இயங்கும் பராபரமே #723 கொழுந்தில் வயிரம் எனக் கோது_அற உள் அன்பில் அழுந்துமவர்க்கே சுகம் உண்டாகும் பராபரமே #724 பற்றும் பயிர்க்குப் படர் கொழுந்து போல் பருவம் பெற்றவர்க்கே நின் அருள்-தான் பேறு ஆம் பராபரமே #725 யோகியர்க்கே ஞானம் ஒழுங்கு ஆம் பேர்_அன்பான தாகியரும் யோகம் முன்னே சார்ந்தோர் பராபரமே #726 அல்லும்_பகலும் அறிவு ஆகி நின்றவர்க்கே சொல்லும் பொருளும் சுமை காண் பராபரமே #727 எச்சில் என்று பூவை இகழ்ந்தோர்க்கு உனைப் போற்றப் பச்சிலையும் கிள்ளப்படுமோ பராபரமே #728 அந்தக் கரணம் அடங்கத் துறப்பதுவே எந்தத் துறவினும் நன்று எந்தாய் பராபரமே #729 தன்னை அறிந்தால் தலைவன் மேல் பற்று அலது பின்னை ஒரு பற்றும் உண்டோ பேசாய் பராபரமே #730 அன்பால் கரைந்து கண்ணீர் ஆறு கண்ட புண்ணியருக்கு உன்-பால் வர வழி-தான் உண்டோ பராபரமே #731 தன்னை அறிந்து அருளே தாரகமா நிற்பதுவே உன்னை அறிதற்கு உபாயம் பராபரமே #732 கற்ற கலையால் நிலை-தான் காணுமோ காண்பது எல்லாம் அற்ற இடத்தே வெளியாம் அன்றோ பராபரமே #733 கண் மூடிக் கண் விழித்துக் காண்பது உண்டோ நின் அருளாம் விண் மூடின் எல்லாம் வெளி ஆம் பராபரமே #734 நேரே நினது அருள் என் நெஞ்சைக் கவரின் ஒன்றும் பாரேன் சுகமும் படைப்பேன் பராபரமே #735 வான் காண வேண்டின் மலை ஏறல் ஒக்கும் உன்னை நான் காணப் பாவனை செய் நாட்டம் பராபரமே #736 வாதனை விட்டு உன் அருளின் மன்னின் அல்லால் வேறும் ஒரு சாதனை-தான் உண்டோ நீ சாற்றாய் பராபரமே #737 பாரகமும் விண்ணகமும் பற்றாக நிற்பது அருள் தாரகத்தைப் பற்றி அன்றோ சாற்றாய் பராபரமே #738 விளக்கும் தகளியையும் வேறு என்னார் நின்னைத் துளக்கம்_அறச் சீவன் என்று சொல்வார் பராபரமே #739 பார் ஆதி நீயாப் பகர்ந்தால் அகம் எனவும் ஆராயும் சீவனும் நீ ஆம் காண் பராபரமே #740 பொய்யைப் பொய் என்று அறியும் போதத்துக்கு ஆதரவு உன் மெய் அருளே அன்றோ விளம்பாய் பராபரமே #741 வருவான் வந்தேன் எனல் போல் மன்னி அழியும் சகத்தைத் தெரிவாக இல்லை என்ற தீரம் பராபரமே #742 மாயா சகம் இலையேல் மற்று எனக்கு ஓர் பற்றும் இலை நீயே நான் என்று வந்து நிற்பேன் பராபரமே #743 வான் ஆதி நீ எனவே வைத்த மறை என்னையும் நீ தானாகச் சொல்லாதோ சாற்றாய் பராபரமே #744 வெள்ளக் கருணை மத வேழமாம் நின் அருட்கு என் கள்ளக் கருத்தே கவளம் பராபரமே #745 வண்டாய்த் துவண்டு மௌன மலர்_அணை மேல் கொண்டார்க்கோ இன்பம் கொடுப்பாய் பராபரமே #746 மாயை முதலாம் வினை நீ மன் உயிர் நீ மன் உயிர் தேர்ந்து ஆயும் அறிவு ஆனது நீ அன்றோ பராபரமே #747 என் அறிவும் யானும் எனது என்பதுவுமாம் இவைகள் நின்னவையே அன்றோ நிகழ்த்தாய் பராபரமே #748 பார் அறியாது அண்டப் பரப்பு அறியாது உன் பெருமை யார் அறிவார் நானோ அறிவேன் பராபரமே #749 அண்டம் அனைத்திலுமாய் அப்பாலுக்கப்பாலும் கொண்ட நின்னை யார் அறிந்துகொள்வார் பராபரமே #750 ஒப்பு உயர்வு ஒன்று இன்றி ஒலி புகா மோன வட்டக் கப்பலுக்கு ஆம் வான் பொருள் நீ கண்டாய் பராபரமே #751 என் போல் எளியவரும் எங்கெங்கும் பார்த்தாலும் உன் போல் வலியவரும் உண்டோ பராபரமே #752 பார்க்கின் அண்ட பிண்டப் பரப்பு அனைத்தும் நின் செயலே யார்க்கும் செயல் இலையே ஐயா பராபரமே #753 ஒன்றே பலவே உருவே அருவே ஓ என்றே அழைப்பது உன்னை என்றோ பராபரமே #754 செப்புவது எல்லாம் செபம் நான் சிந்திப்பது எல்லாம் நின் ஒப்பு_இல் தியானம் என ஓர்ந்தேன் பராபரமே #755 ஆர் இருந்து என் ஆர் போய் என் ஆர் அமுதாம் நின் அருளின் சீர் இருந்தால் உய்வேன் சிவமே பராபரமே #756 வஞ்ச நமன் வாதனைக்கும் வன் பிறவி வேதனைக்கும் அஞ்சி உனை அடைந்தேன் ஐயா பராபரமே #757 எந்தப்படி உன் இதயம் இருந்தது எமக்கு அந்தப்படி வருவது அன்றோ பராபரமே #758 எந்தெந்த நாளும் எனைப் பிரியாது என் உயிராய்ச் சிந்தை குடிகொண்ட அருள் தேவே பராபரமே #759 அஞ்சல்அஞ்சல் என்று அடிமைக்கு அப்போதைக்கப்போதே நெஞ்சில் உணர்த்தும் நிறைவே பராபரமே #760 என்னை உன்றன் கைக்கு அளித்தார் யாவர் என்னை யான் கொடுத்துப் பின்னை உன்னால் பெற்ற நலம் பேசேன் பராபரமே #761 வாய் பேசா ஊமை என வைக்க என்றோ நீ மௌனத் தாயாக வந்து அருளைத் தந்தாய் பராபரமே #762 தன்னைத் தந்து என்னைத் தடுத்தாண்ட நின் கருணைக்கு என்னைக் கொண்டு என்ன பலன் எந்தாய் பராபரமே.. #763 மார்க்கண்டர்க்காக மறலி பட்ட பாட்டை உன்னிப் பார்க்கின் அன்பர்க்கு என்ன பயம் காண் பராபரமே.. #764 சுட்டி உணராமல் துரிய நிலையாய் வெளியில் விட்ட நின்னை யானோ வியப்பேன் பராபரமே.. #765 சூது ஒன்றும் இன்றி என்னைச் சும்மா இருக்கவைத்தாய் ஈது ஒன்றும் போதாதோ இன்பம் பராபரமே.. #766 வாய் ஒன்றும் பேசா மௌனியாய் வந்து ஆண்ட தே ஒன்றும் போதாதோ இன்பம் பராபரமே #767 என்றும் இருந்தபடிக்கு என்னை எனக்கு அளித்தது ஒன்றும் போதாதோ உரையாய் பராபரமே #768 எண் திசைக் கீழ் மேலான எல்லாம் பெருவெளியாக் கண்ட இடத்து என்னையும் நான் கண்டேன் பராபரமே.. #769 பித்தனை ஏதும் அறியாப் பேதையனை ஆண்ட உனக்கு எத்தனை-தான் தெண்டன் இடுவேன் பராபரமே.. #770 தாயர் கர்ப்பத்தூடு அன்னமும் தண்ணீரும் தந்து அருளும் நேய உனை யாரோ நினையார் பராபரமே.. #771 விரிந்த மனம் ஒடுங்கும் வேளையில் நானாகப் பரந்த அருள் வாழி பதியே பராபரமே.. #772 சிந்தனை போய் நான் எனல் போய்த் தேக்க இன்ப மா மழையை வந்து பொழிந்தனை நீ வாழி பராபரமே.. #773 தந்தேனே ஓர் வசனம் தந்தபடிக்கு இன்பமுமாய் வந்தேனே என்றனை நீ வாழி பராபரமே.. #774 மண்ணும் விண்ணும் வந்து வணங்காவோ நின் அருளைக் கண்ணுறவுள் கண்டவரைக் கண்டால் பராபரமே.. #775 என்றும் கருணை பெற்ற இன்பத் தபோதனர் சொல் சென்றசென்ற திக்கு அனைத்தும் செல்லும் பராபரமே.. #776 ஆடுவதும் பாடுவதும் ஆனந்தமாக நின்னைத் தேடுவதும் நின் அடியார் செய்கை பராபரமே.. #777 பொங்கிய நின் தண் அருளைப் புட்கலமாப் பெற்றவர்கட்கு எங்கு எழுந்து என் ஞாயிறு இயம்பாய் பராபரமே.. #778 பாலரொடு பேயர் பித்தர் பான்மை என நிற்பதுவே சீலம் மிகு ஞானியர்-தம் செய்கை பராபரமே.. #779 உண்டு உடுத்துப் பூண்டு இங்கு உலகத்தார் போல் திரியும் தொண்டர் விளையாட்டே சுகம் காண் பராபரமே.. #780 கங்குல் பகல் அற்ற திரு_காட்சியர்கள் கண்ட வழி எங்கும் ஒரு வழியே எந்தாய் பராபரமே.. #781 காயம் நிலை அல்ல என்று காண்பார் உறங்குவரோ தூய அருள் பற்றாத் தொடர்வார் பராபரமே.. #782 அப்பும் உப்பும் போன்ற அயிக்யபரானந்தர்-தமக்கு ஒப்பு உவமை சொல்லவும் வாய் உண்டோ பராபரமே.. #783 சித்தம் தெளிந்து சிவம் ஆனோர் எல்லோர்க்கும் கொத்தடிமையான குடி நான் பராபரமே.. #784 தம் உயிர் போல் எவ்வுயிரும் தான் என்று தண் அருள் கூர் செம்மையருக்கு ஏவல் என்று செய்வேன் பராபரமே.. #785 விண்ணுக்கும் விண் ஆகி மேவும் உனக்கு யான் பூசை பண்ணி நிற்குமாறு பகராய் பராபரமே.. #786 நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே.. #787 கெட்ட வழி ஆணவப் பேய் கீழாக மேலான சிட்டர் உனைப் பூசைசெய்வார் பராபரமே.. #788 கால் பிடித்து மூலக் கனலை மதி மண்டலத்தின் மேல் எழுப்பில் தேகம் விழுமோ பராபரமே.. #789 பஞ்ச_சுத்தி செய்து நின்னைப் பாவித்துப் பூசைசெய்தால் விஞ்சிய ஞானம் விளங்கும் பராபரமே.. #790 அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்ப நிலை தானே வந்து எய்தும் பராபரமே.. #791 மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கு ஓர் வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே.. #792 விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும் அரும்பு மலர் காய் கனி போல் அன்றோ பராபரமே.. #793 தானம் தவம் தருமம் சந்ததமும் செய்வர் சிவ ஞானம்-தனை அணைய நல்லோர் பராபரமே.. #794 சொன்னத்தைச் சொல்லித் துடிக்கின்ற ஆணவப் பேய்க்கு இன்னல் வருவது எ நாள் எந்தாய் பராபரமே.. #795 இன்றோ இரு_வினை வந்து ஏறியது நான் என்றோ அன்றே விளைந்தது அன்றோ ஆற்றேன் பராபரமே.. #796 எண்ணமும்-தான் நின்னைவிட இல்லை என்றால் யான் முனமே பண்ண வினை ஏது பகராய் பராபரமே.. #797 என்னை இன்னது என்று அறியா ஏழைக்கும் ஆ கெடுவேன் முன்னை வினை கூடல் முறையோ பராபரமே.. #798 அறியா நான் செய் வினையை ஐயா நீ கூட்டும் குறி ஏது எனக்கு உளவு கூறாய் பராபரமே.. #799 என்னைக் கெடுக்க இசைந்த இரு_வினை நோய்- தன்னைக் கெடுக்கத் தகாதோ பராபரமே.. #800 வல்லமையே காட்டுகின்ற மா மாயை நான் ஒருவன் இல்லை எனின் எங்கே இருக்கும் பராபரமே.. #801 முக்குணத்தால் எல்லாம் முளைக்கப் பிரகிருதிக்கு இக் குணத்தை நல்கியது ஆர் எந்தாய் பராபரமே.. #802 ஆற்றப்படாது துன்பம் ஐய என்னால் என் மனது தேற்றப்படாது இனி என் செய்வேன் பராபரமே.. #803 பூராயமாய் மனதைப் போக்க அறியாமல் ஐயோ ஆராய் அலைந்தேன் அரசே பராபரமே.. #804 சினம் இறக்கக் கற்றாலும் சித்தி எல்லாம் பெற்றாலும் மனம் இறக்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே.. #805 வாதுக்கு வந்து எதிர்த்த மல்லரைப் போல் பாழ்த்த மனம் ஏதுக்குக் கூத்தாடுது எந்தாய் பராபரமே.. #806 சூதாடுவார் போல் துவண்டுதுவண்டு மனம் வாதாடின் என்ன பலன் வாய்க்கும் பராபரமே.. #807 கொள்ளித் தேள் கொட்டிக் குதிக்கின்ற பேய்க் குரங்காய்க் கள்ள மனம் துள்ளுவது என் கண்டோ பராபரமே.. #808 வந்ததையும் போனவையும் வைத்துவைத்துப் பார்த்திருந்தால் சிந்தை இதம் அகிதம் சேரும் பராபரமே.. #809 ஏறு மயிர்ப் பாலம் உணர்வு இந்த விடயங்கள் நெருப்பு ஆறு எனவும் நன்றாய் அறிந்தேன் பராபரமே.. #810 பொறி வழியே ஏழை பொறியாய் உழல்வது நின் அறிவின் விதித்த விதி ஆமோ பராபரமே #811 பாச சாலங்கள் எலாம் பற்று விட ஞான வை வாள் வீசும் நாள் எ நாள் விளம்பாய் பராபரமே.. #812 எந்த உடலேனும் எடுத்த உடல் நல்லது என்று சிந்தைசெய வந்த திறம் செப்பாய் பராபரமே.. #813 பொய் எல்லாம் ஒன்றாய்ப் பொருத்திவைத்த பொய் உடலை மெய் என்றால் மெய் ஆய்விடுமோ பராபரமே.. #814 மின் அனைய பொய் உடலை மெய் என்று நம்பி ஐயோ நின்னை மறக்கை நெறியோ பராபரமே.. #815 நித்தியம் ஒன்று இல்லாத நீர்க்குமிழி போன்ற உடற்கு இத்தனை-தான் துன்பம் உண்டோ என்னே பராபரமே.. #816 தேகம் இறும் என்று சடர் தேம்புவது என் நித்திரையில் ஊகம் அறிந்தால் பயம்-தான் உண்டோ பராபரமே.. #817 ஏதைச் சுமையா எடுப்பார் எடுத்த உடல் சேதம் உறின் யாது பின்னே செல்லும் பராபரமே.. #818 தோல்_பாவை நாலு ஆள் சுமை ஆகும் சீவன் ஒன்று இங்கு ஆர்ப்பால் எடுத்தது எவராலே பராபரமே.. #819 ஞாலத்தை மெய் எனவே நம்பிநம்பி நாளும் என்றன் காலத்தைப் போக்கி என்ன கண்டேன் பராபரமே.. #820 பொய் உலக வாழ்க்கைப் புலைச் சேரி வாதனை நின் மெய் அருளின் மூழ்கின் விடும் காண் பராபரமே.. #821 நூலேணி விண் ஏற நூற்குப் பருத்தி வைப்பார் போலே கருவி நல் நூல் போதம் பராபரமே.. #822 சின்னஞ்சிறியார்கள் செய்த மணல் சோற்றை ஒக்கும் மன்னும் கலை ஞான மார்க்கம் பராபரமே.. #823 வாசக ஞானத்தால் வருமோ சுகம் பாழ்த்த பூசல் என்று போமோ புகலாய் பராபரமே.. #824 கேட்டதையே சொல்லும் கிளி போல நின் அருளின் நாட்டம் இன்றி வாய் பேசல் நன்றோ பராபரமே.. #825 வெளியாய் அருளில் விரவும் அன்பர் தேகம் ஒளியாய்ப் பிறங்கியதும் உண்டோ பராபரமே.. #826 காலம் ஒரு மூன்றும் கருத்தில் உணர்ந்தாலும் அதை ஞாலம்-தனக்கு உரையார் நல்லோர் பராபரமே.. #827 கொல்லா விரதம் ஒன்று கொண்டவரே நல்லோர் மற்று அல்லாதார் யாரோ அறியேன் பராபரமே.. #828 இல்லாத காரியத்தை இச்சித்துச் சிந்தை வழிச் செல்லாமை நல்லோர் திறம் காண் பராபரமே.. #829 ஏது வந்தும் ஏது ஒழிந்தும் என்னது யான் என்னார்கள் போத நிலை கண்ட புலத்தோர் பராபரமே.. #830 ஆயிரம் சொன்னாலும் அறியாத வஞ்ச நெஞ்சப் பேயரொடு கூடில் பிழை காண் பராபரமே.. #831 மாய மயக்கு ஒழிந்தார் மற்று ஒன்றை நாடுவரோ நேய அருள் நிலையில் நிற்பார் பராபரமே.. #832 நித்திரையில் செத்த பிணம் நேரும் உடற்கு இச்சைவையாச் சுத்தர்களே நல்ல துறவோர் பராபரமே.. #833 எ நெஞ்சமேனும் இரங்குமே நின் அருட்குக் கல்_நெஞ்சரும் உளரோ காட்டாய் பராபரமே.. #834 மந்த அறிவு ஆகி இன்பம் வாயாதிருந்து அலைந்தால் சிந்தை மயங்காதோ என் செய்வேன் பராபரமே.. #835 தேடினேன் திக்கு அனைத்தும் தெண்டனிட்டேன் சிந்தை நைந்து வாடினேன் என் மயக்கம் மாற்றாய் பராபரமே.. #836 மடிமை எனும் ஒன்றை மறுத்து அன்றோ என்னை அடிமைகொளல் வேண்டும் அரசே பராபரமே.. #837 காலர் பயம் தீர இன்பக் காற்கு அபயம் என்று எழுந்த மாலை வளர்த்தனையே வாழி பராபரமே.. #838 நீர்ப்புற்புதமாய் நினைவு அருட்கே நின்று அழியப் பார்ப்பது அல்லால் வேறும் ஒன்றைப் பாரேன் பராபரமே.. #839 நீர்க்குமிழி போல் என் நினைவு வெளியாக் கரையப் பார்க்கும் இடம் எல்லாம் என் பார்வை பராபரமே.. #840 ஆடி ஓய் பம்பரம் போல் ஆசையுடன் எங்கும் உனைத் தேடி ஓய்கின்றேன் என் செய்வேன் பராபரமே.. #841 வேதாந்தம் சித்தாந்தம் வேறு என்னார் கண் களிக்கும் நாதாந்த மோன நலமே பராபரமே.. #842 ஆனந்தமான நின்னை அன்றி ஒன்றை உன்னாத மோனம் தமியேற்கு முத்தி பராபரமே.. #843 ஏதுக்கும் உன்னைவிட இல்லை என்றால் என் கருத்தைச் சோதிக்கவேண்டாம் நான் சொன்னேன் பராபரமே.. #844 முத்தியிலும் தேகம் மிசை மூ விதமாம் சித்தி பெற்றார் எத்தனை பேர் என்று உரைப்பது எந்தாய் பராபரமே.. #845 நீ அன்றி நான் ஆர் நினைவு ஆர் என் நெஞ்சகம் ஆர் தாய் அன்றிச் சூலும் உண்டோ சாற்றாய் பராபரமே.. #846 அங்கமே நின் வடிவமான சுகர் கூப்பிட நீ எங்கும் ஏன்ஏன் என்றது என்னே பராபரமே.. #847 கொள்ளை வெள்ளத் தண் அருள் மேற்கொண்டு சுழித்து ஆர்த்து இழுத்தால் கள்ள மனக் கப்பல் எங்கே காணும் பராபரமே.. #848 எ கலையும் கற்று உணர்ந்தோம் என்றவர்க்கும் சம்மதம் சொல் வக்கணையால் இன்பம் வருமோ பராபரமே.. #849 கல் எறியப் பாசி கலைந்து நல் நீர் காணும் நல்லோர் சொல் உணரின் ஞானம் வந்து தோன்றும் பராபரமே.. #850 நின்னை உணர்ந்தோர் கடமை நிந்தித்த பேய் அறிஞர் என்ன கதி பெறுவார் எந்தாய் பராபரமே.. #851 என்னது யான் என்னல் அற்றோர் எங்கிருந்து பார்க்கினும் நின் சன்னிதியாம் நீ பெரிய சாமி பராபரமே.. #852 சோற்றுத் துருத்திச் சுமை சுமப்பக் கண் பிதுங்கக் காற்றைப் பிடித்து அலைந்தேன் கண்டாய் பராபரமே.. #853 உள்ளபடி ஒன்றை உரைக்கின் அவர்க்கு உள்_உறவாய்க் கள்ளம் இன்றி அன்பாய்க் களிப்பேன் பராபரமே.. #854 அடுத்த இயல்பாக ஒன்றை யான் பகர்வது அல்லால் தொடுத்தது ஒன்றை யான் வேண்டிச் சொல்லேன் பராபரமே.. #855 உள்ளம் அறியாது ஒருவர் ஒன்றை உன்னிப் பேசில் ஐயோ துள்ளி இளம்கன்றாய்த் துடிப்பேன் பராபரமே.. #856 எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே.. #857 முன்_நாள் மெய்ஞ்ஞான முனிவர் தவம் ஈட்டுதல் போல் இ நாளில் காண எனக்கு இச்சை பராபரமே.. #858 கன்மம் என்பது எல்லாம் கரிசு_அறவே மெய்ஞ்ஞான தன்ம நிலை சார்ந்தது அன்பர் தன்மை பராபரமே.. #859 கண் துயிலாது என் அறிவின்-கண்ணூடே காட்சி பெற மண்டிய பேர்_ஒளி நீ வாழி பராபரமே.. #860 நானான தன்மை என்று நாடாமல் நாட இன்ப வான் ஆகி நின்றனை நீ வாழி பராபரமே.. #861 அகத்தூடு அணு அணுவாய் அண்டம் எல்லாந் தானாய் மகத்து ஆகி நின்றனை நீ வாழி பராபரமே.. #862 காரகமாம் கர்ப்ப அறைக்-கண்ணூடும் என் கண்ணே வாரம் வைத்துக் காத்தனை நீ வாழி பராபரமே.. #863 புரந்தோர் தம் தேசம் என்பார் பூமியைப் போராடி இறந்தோரும் தம்மது என்பார் என்னே பராபரமே.. #864 மூர்த்தி எல்லாம் வாழி எங்கள் மோனகுரு வாழி அருள் வார்த்தை ஒன்றும் வாழி அன்பர் வாழி பராபரமே.. #865 சொல்லும் பொருளும் தொடரா அருள் நிறைவில் செல்லும்படிக்கு அருள் நீ செய்தாய் பராபரமே.. #866 இற்றை வரைக்கு உள்ளாக எண் அரிய சித்தி முத்தி பெற்றவர்கள் எத்தனை பேர் பேசாய் பராபரமே.. #867 நாடும் நகரும் நிசான் நாட்டிய பாளயமும் ஈடு செயுமோ முடிவில் எந்தாய் பராபரமே.. #868 தேடும் திரவியமும் சேர்ந்த மணிப் பெட்டகமும் கூட வரும் துணையோ கூறாய் பராபரமே.. #869 தேடாத தேட்டினரே செம் கைத் துலாக்கோல் போல் வாடாச் சமநிலையில் வாழ்வார் பராபரமே.. #870 நீராய்க் கசிந்து உருகி நெட்டுயிர்த்து நின்றேனைப் பாராதது என்னோ பகராய் பராபரமே.. #871 உள்ள பொருள் ஆவி உடல் மூன்றும் அன்றே-தான் கொள்ளைகொண்ட நீ என் குறை தீர் பராபரமே.. #872 ஆழ்ந்தாயே இ உலகில் அல்லல் எல்லாம் தீர்ந்து அருளால் வாழ்ந்தாயே என்றனை நீ வாழி பராபரமே.. #873 தாரா அருளை எல்லாம் தந்து எனையும் நின் அருளின் வாராயோ என்றனை நீ வாழி பராபரமே.. #874 ஆசை உன் மீது அல்லால் அருள் அறிய வேறும் ஒன்றில் பாசம்வையேன் நின் கருணைப் பாங்கால் பராபரமே. #875 ஆதியந்தம் நீ குருவாய் ஆண்டது அல்லால் நின்னை அன்றிப் போதனையும் உண்டோ புகலாய் பராபரமே.. #876 தானாக வந்து தடுத்தாண்டு எனை இன்ப வானாகச் செய்த இன்ப வானே பராபரமே.. #877 பற்று அற்று இருக்கும் நெறி பற்றில் கடல் மலையும் சுற்ற நினைக்கும் மனம் சொன்னேன் பராபரமே.. #878 படிப்பு அற்றுக் கேள்வி அற்றுப் பற்று அற்றுச் சிந்தைத் துடிப்பு_அற்றார்க்கு அன்றோ சுகம் காண் பராபரமே.. #879 சத்து ஆகி நின்றோர் சடங்கள் இலிங்கம் என வைத்தாரும் உண்டோ என் வாழ்வே பராபரமே.. #880 சித்த நிருவிகற்பம் சேர்ந்தார் உடல் தீபம் வைத்த கர்ப்பூரம் போல் வயங்கும் பராபரமே.. #881 ஆதி_காலத்தில் எனை ஆண்டனையே இப்பால் நீ போதி எனில் எங்கே நான் போவேன் பராபரமே.. #882 நா வழுத்தும் சொல்_மலரோ நாள் உதிக்கும் பொன்_மலரோ தேவை உனக்கு இன்னது என்று செப்பாய் பராபரமே.. #883 கன்னல் தரும் பாகாய்க் கருப்பு வட்டாய்க் கற்கண்டாய் இன் அமுதாய் என்னுள் இருந்தாய் பராபரமே.. #884 சிற்பரமே தற்பரமே தெய்வச் சுருதி சொன்ன அற்புதமே அன்பே அறிவே பராபரமே.. #885 அறிவிப்பான் நீ என்றால் ஐம்_புலன்கள் தந்தந் நெறி நிற்பார் யாரே நிகழ்த்தாய் பராபரமே.. #886 அந்தக்கரணம் எனும் ஆகாத பேய்கள் எனை வந்து பிடித்து ஆட்ட வழக்கோ பராபரமே.. #887 ஐவரொடும் கூடாமல் அந்தரங்க சேவை தந்த தெய்வ அறிவே சிவமே பராபரமே.. #888 அருள் ஆகி நின்ற சுகம் ஆகாமல் ஐயோ இருள் ஆகி நிற்க இயல்போ பராபரமே.. #889 அன்பர் எல்லாம் இன்பம் அருந்திடவும் யான் ஒருவன் துன்புறுதல் நன்றோ நீ சொல்லாய் பராபரமே.. #890 சந்ததமும் நின் கருணை சாற்றுவது அல்லால் வேறு சிந்தை அறியேன் உன்றன் சித்தம் பராபரமே.. #891 நான்நான் எனக் குளறும் நாட்டத்தால் என்னை விட்டுப் போனாலும் உன்னை விட்டுப் போகேன் பராபரமே.. #892 இக் காயம் பொய் என்றோர் ஈட்டத்து உனக்கு அபயம் புக்காதார் உண்டோ புகலாய் பராபரமே.. #893 தான் ஆதல் பூரணமே சாரும் இடம் உண்டு உயிரும் வான் ஆதியும் ஒழுங்காய் மன்னும் பராபரமே.. #894 உன்னும் மனம் கர்ப்பூர உண்டை போலே கரைய மின்னும் ஆனந்த விளக்கே பராபரமே.. #895 நாட்பட்டு அலைந்த நடுக்கம் எலாம் தீர உனக்கு ஆட்பட்டும் துன்பம் எனக்கு ஆமோ பராபரமே.. #896 பாவி படும் கண் கலக்கம் பார்த்தும் இரங்காது இருந்தால் ஆவிக்கு உறுதுணை யார் ஐயா பராபரமே.. #897 நின் நிறைவே தாரகமாய் நின்று சுகம் எய்தாமல் என் நிறைவே பாவித்தேன் என்னே பராபரமே.. #898 நின்னைச் சரண்புகுந்தால் நீ காக்கல் வேண்டும் அல்லால் என்னைப் புறம் விடுதல் என்னே பராபரமே.. #899 மாறாத துன்பம் எல்லாம் வந்து உரைத்தால் நின் செவியில் ஏறாத ஆறு ஏது இயம்பாய் பராபரமே.. #900 விஞ்சு புலப் பாடு அனைத்தும் வீறு துன்பம்செய்ய வந்த அஞ்சு புல வேடருக்கும் ஆற்றேன் பராபரமே.. #901 கன்னங்கரிய நிறக் காமாதி ராக்ஷசப் பேய்க்கு என்னை இலக்காக வைத்தது என்னே பராபரமே.. #902 சித்தி நெறி கேட்டல் செக மயக்கம் சன்மம்_அற முத்தி நெறி கேட்டல் முறை காண் பராபரமே.. #903 சிந்தை சிதையச் சிதையாத ஆனந்தம் எந்த வகையாலே வந்து எய்தும் பராபரமே.. #904 கூர்த்த அறிவால் அறியக் கூடாது எனக் குரவன் தேர்த்தபடி-தானே திரிந்தேன் பராபரமே.. #905 பத்தர் அருந்தும் பரம சுகம் யான் அருந்த எத்தனை நாள் செல்லும் இயம்பாய் பராபரமே.. #906 தீரத்தினால் துறவு சேராமல் இ உலகில் பாரத்தனம் பேசல் பண்போ பராபரமே.. #907 இந்த வெளியினை உண்டு ஏப்பமிடப் பேர்_அறிவாத் தந்த வெளிக்கே வெளியாய்ச் சார்ந்தேன் பராபரமே.. #908 உணர்த்தும் உனை நாடாது உணர்ந்தவையே நாடி இணக்குறும் என் ஏழைமை-தான் என்னே பராபரமே.. #909 உண்டு போல் இன்று ஆம் உலகைத் திரம் என உட் கொண்டு நான் பெற்ற பலன் கூறாய் பராபரமே.. #910 உள்ளபடி யாதும் என உற்று உணர்ந்தேன் அக் கணமே கள்ள மனம் போன வழி காணேன் பராபரமே.. #911 சித்தம் மவுனம் செயல் வாக்கு எலாம் மவுனம் சுத்த மவுனம் என்-பால் தோன்றில் பராபரமே.. #912 எண்ணில் பல கோடி உயிர் எத்தனையோ அத்தனைக்கும் கண்ணில் கலந்த அருள் கண்ணே பராபரமே.. #913 எனக்கு இனியார் உன் போலும் இல்லை என்றால் யானும் உனக்கு இனியான் ஆகா உளவு ஏன் பராபரமே.. #914 அண்ட பிண்டம் காணேன் அகமும் புறமும் ஒன்றாக் கண்ட என்னை நீ கலந்த காலம் பராபரமே.. #915 எத்தனையோ கோடி எடுத்தெடுத்துச் சொன்னாலும் சித்தம் இரங்கிலை என் செய்வேன் பராபரமே.. #916 அன்று அந்த நால்வருக்கும் அற்புதமாய் நீ உரைத்தது ஒன்று அந்த வார்த்தை எனக்கு உண்டோ பராபரமே.. #917 அப்பன் என்றும் அன்னை என்றும் ஆரியன் என்றும் உனையே செப்புவதும் உன் நிலையின் சீர் காண் பராபரமே.. #918 கட்டும் கனமும் அந்தக் காலர் வரும் போது எதிர்த்து வெட்டும் தளமோ விளம்பாய் பராபரமே.. #919 பேசாத மோன நிலை பெற்று அன்றோ நின் அருளாம் வாசாமகோசரம்-தான் வாய்க்கும் பராபரமே. #920 கற்றாலும் கேட்டாலும் காயம் அழியாத சித்தி பெற்றாலும் இன்பம் உண்டோ பேசாய் பராபரமே.. #921 கண்ட வடிவு எல்லாம் கரைக்கின்ற அஞ்சனம் போல் அண்டம் எல்லாம் நின் அருளே அன்றோ பராபரமே.. #922 தன் செயலால் ஒன்றும் இலை தான் என்றால் நான் பாவி நின் செயலாய் நில்லா நினைவு ஏன் பராபரமே.. #923 கொலை களவு கள் காமம் கோபம் விட்டால் அன்றோ மலை_இலக்கா நின் அருள் நான் வாய்க்கும் பராபரமே.. #924 தன்னை அறியாது சகம் தானாய் இருந்துவிட்டால் உன்னை அறிய அருள் உண்டோ பராபரமே.. #925 ஒன்று இரண்டு என்று உன்னா உணர்வு கொடுத்து உள்ளபடி என்றும் என்னை வையாய் இறையே பராபரமே.. #926 கருதும் அடியார்கள் உளம் காண வெளி ஆகும் துரிய நிறைவு ஆன சுகமே பராபரமே.. #927 பொய் குவித்த நெஞ்சன் அருள் பொற்பு அறிந்து திக்கு அனைத்தும் கை குவித்து நிற்பது எந்தக் காலம் பராபரமே.. #928 அத்துவிதமான அயிக்ய அனுபவமே சுத்த நிலை அ நிலை யார் சொல்வார் பராபரமே.. #929 வைத்த சுவர் அலம்பின் மண் போமோ மாயையினோர்க்கு எத்தனை போதித்தும் என் ஆம் எந்தாய் பராபரமே.. #930 பூட்டு அற்றுத் தேகம் அற்றுப் போகும் முன்னே நின் அருளைக் காட்டத் தகாதோ என் கண்ணே பராபரமே.. #931 சொல்லில் பதர் களைந்து சொல் முடிவு காணாதார் நெல்லில் பதர் போல் நிற்பார் பராபரமே.. #932 அழுக்காற்றால் நெஞ்சம் அழுங்கிய புன் மாக்கள் இழுக்காற்றால் இன்ப நலம் எய்தார் பராபரமே.. #933 தேகாதி பொய் எனவே தேர்ந்த உபசாந்தருக்கு மோகாதி உண்டோ மொழியாய் பராபரமே.. #934 சாதனை எல்லாம் அவிழத் தற்போதம் காட்டாது ஓர் போதனை நீ நல்குவது எப்போதோ பராபரமே.. #935 ஒன்றும் அறியா இருளாம் உள்ளம் படைத்த எனக்கு என்று கதி வருவது எந்தாய் பராபரமே.. #936 சிந்திக்கும்-தோறும் என்னுள் சிற்சுகமாய் ஊற்று ஊறிப் புந்திக்குள் நின்ற அருள் பொற்பே பராபரமே.. #937 என்றும் அடைந்தோர்கட்கு இரங்கார் குறிப்பு அனைத்தும் கன்றை உதை காலி கதை காண் பராபரமே.. #938 குற்றம் குறையக் குணம் மேலிட அருளை உற்றவரே ஆவிக்கு உறவாம் பராபரமே.. #939 ஓர் உரையால் வாய்க்கும் உண்மைக்கு ஓர் அனந்த நூல் கோடிப் பேர்_உரையால் பேசில் என்ன பேறு ஆம் பராபரமே.. #940 சொல்லும் சமய நெறிச் சுற்றுக்குளே சுழலும் அல்லல் ஒழிவது என்றைக்கு ஐயா பராபரமே.. #941 பிடித்ததையே தாபிக்கும் பேர்_ஆணவத்தை அடித்துத் துரத்த வல்லார் ஆர் காண் பராபரமே.. #942 நேசத்தால் நின்னை நினைக்கும் நினைவு_உடையார் ஆசை_கடலில் அழுந்தார் பராபரமே.. #943 கள்ளாது கட்டுணவும் காரியமோ நான் ஒரு சொல் கொள்ளாத தோஷம் அன்றோ கூறாய் பராபரமே.. #944 சென்ற இடம் எல்லாம் திரு_அருளே தாரகமாய் நின்றவர்க்கே ஆனந்த நிட்டை பராபரமே.. #945 நீட்சி குறுகல் இல்லா நித்ய சுகாரம்ப சக சாக்ஷியாம் உன்னை வந்து சார்ந்தேன் பராபரமே.. #946 வான் ஆதி தத்துவமாய் மன்னி நின்ற காரண நீ நான் ஆகி நிற்பது எந்த நாளோ பராபரமே.. #947 காட்டத்தில் அங்கி கடைய வந்தால் என்ன உன்னும் நாட்டத்தினூடு வந்த நட்பே பராபரமே.. #948 நித்திரையாய்த் தானே நினைவு அயர்ந்தால் நித்தம்நித்தம் செத்த பிழைப்பு ஆனது எங்கள் செய்கை பராபரமே.. #949 இன்ப நிட்டை எய்தாமல் யாதெனினும் சென்று மனம் துன்புறுதல் வன் பிறவித் துக்கம் பராபரமே.. #950 பொய் அகல மெய்யான போத நிலை கண்டோர்க்கு ஓர் ஐயம் இலை ஐயம் இலை ஐயா பராபரமே.. #951 மந்திரத்தை உன்னி மயங்காது எனக்கு இனி ஓர் தந்திரத்தை வைக்கத் தகாதோ பராபரமே.. #952 விண் கருணை பூத்து என்ன மேவி உயிர்க்கு உயிராய்த் தண் கருணை தோன்ற அருள் தாய் நீ பராபரமே.. #953 தன்மயமாய் நின்ற நிலை தானே தான் ஆகி நின்றால் நின் மயமாய் எல்லாம் நிகழும் பராபரமே.. #954 ஏங்கி இடையும் நெஞ்சம் ஏழையை நீ வா என்றே பாங்கு பெறச் செய்வது உன் மேல் பாரம் பராபரமே.. #955 ஆண்ட நின்னை நீங்கா அடிமைகள் யாம் ஆணவத்தைப் பூண்டது என்ன கன்மம் புகலாய் பராபரமே.. #956 எங்கணும் நீ என்றால் இருந்தபடி எய்தாமல் அங்குமிங்கும் என்று அலையலாமோ பராபரமே.. #957 கற்கும் மது உண்டு களித்தது அல்லால் நின் அருளில் நிற்கும் மது தந்தது உண்டோ நீ-தான் பராபரமே.. #958 அண்ட பகிரண்டம் அறியாத நின் வடிவைக் கண்டவரைக் கண்டால் கதி ஆம் பராபரமே.. #959 கலக்கமுற நெஞ்சைக் கலக்கித் திரும்பத் துலக்குபவன் நீ அலையோ சொல்லாய் பராபரமே.. #960 சிந்தையும் என் போலச் செயல் அற்று அடங்கிவிட்டால் வந்தது எல்லாம் நின் செயலா வாழ்வேன் பராபரமே.. #961 பந்தம் எலாம் தீரப் பரஞ்சோதி நீ குருவாய் வந்த வடிவை மறவேன் பராபரமே.. #962 தான் அந்தம் ஆன சகச நிருவிகற்ப ஆனந்த நிட்டை அருள் ஐயா பராபரமே.. #963 அல்லல் எல்லாந் தீர எனக்கு ஆனந்தமாக ஒரு சொல்லை என்-பால் வைத்ததை என் சொல்வேன் பராபரமே.. #964 சிந்தை மயக்கம்_அறச் சின்மயமாய் நின்ற உன்னைத் தந்த உனக்கு என்னையும் நான் தந்தேன் பராபரமே.. #965 மை காட்டும் மாயை மயக்கம்_அற நீ குருவாய்க் கைகாட்டவும் கனவு கண்டேன் பராபரமே.. #966 மால் வைத்த சிந்தை மயக்கு_அற என் சென்னி மிசைக் கால் வைக்கவும் கனவு கண்டேன் பராபரமே.. #967 மண்ணான மாயை எல்லாம் மாண்டு வெளியாக இரு கண்ணாரவும் கனவு கண்டேன் பராபரமே.. #968 மண் நீர்மையாலே மயங்காது உன் கையால் என் கண்ணீர் துடைக்கவும் நான் கண்டேன் பராபரமே.. #969 உள்ளது உணரா உணர்வு_இலி மா பாவி என்றோ மெள்ளமெள்ளக் கை நெகிழ விட்டாய் பராபரமே.. #970 எல்லாம் நினது செயல் என்று எண்ணும் எண்ணமும் நீ அல்லால் எனக்கு உளதோ ஐயா பராபரமே.. #971 பந்த மயக்கு இருக்கப் பற்று ஒழிந்தேன் என்று உளறும் இந்த மயக்கம் எனக்கு ஏன் பராபரமே.. #972 காட்சி எல்லாம் கண்ணைவிடக் கண்டது உண்டோ யாதினுக்கும் ஆட்சி உனது அருளே அன்றோ பராபரமே.. #973 எட்டுத் திசையும் ஒன்றாய் இன்பமாய் நின்ற உன்னை விட்டுப் பிரிய இடம் வேறோ பராபரமே.. #974 பிறியாது உயிர்க்குயிராய்ப் பின்னம்_அற ஓங்கும் செறிவே அறிவே சிவமே பராபரமே.. #975 ஏதேது சொன்னாலும் எள்ளளவும் நீ இரங்காச் சூது ஏது எனக்கு உளவு சொல்லாய் பராபரமே.. #976 கற்பனையாப் பாடுகின்றேன் கண்ணீரும்_கம்பலையும் சொற்பனத்தும் காணேன் என் சொல்வேன் பராபரமே.. #977 வன்பு ஒன்றும் நீங்கா மனது இறப்ப மாறாப் பேர்_ அன்பு ஒன்றும் போதும் எனக்கு ஐயா பராபரமே.. #978 ஏதும் தெரியா எளியேனை வா என நின் போத நிலை காட்டில் பொறாதோ பராபரமே.. #979 ஓராமல் எல்லாம் ஒழிந்தேற்கு உன் தெய்வ அருள் தாராது இருக்கத் தகுமோ பராபரமே.. #980 மோனம் தரு ஞானம் ஊட்டி எனக்கு உவட்டா ஆனந்த வாழ்க்கை அருளாய் பராபரமே.. #981 வாடும் முகம் கண்டு என்னை வாடாமலே காத்த நீடும் கருணை நிறைவே பராபரமே.. #982 புந்தியினால் நின் அடியைப் போற்றுகின்ற மெய் அடியார் சிந்தை இறப்போ நின் தியானம் பராபரமே.. #983 உனக்கு உவமையாக் கருணை உள்ளவரும் வன்மைக்கு எனக்கு உவமையானவரும் இல்லை பராபரமே.. #984 தாய் இருந்தும் பிள்ளை தளர்ந்தால் போல் எவ்விடத்தும் நீ இருந்தும் நான் தளர்ந்து நின்றேன் பராபரமே.. #985 வாயால் கிணறு கெட்டவாறே போல் வாய் பேசிப் பேய்_ஆனார்க்கு இன்பம் உண்டோ பேசாய் பராபரமே.. #986 பாவம் என்றால் ஏதும் பயம் இன்றிச் செய்ய இந்தச் சீவனுக்கு ஆர் போதம் தெரித்தார் பராபரமே.. #987 இன்ப நிருவிகற்பம் இன்றே தா அன்று எனிலோ துன்பம் பொறுப்பு அரிது சொன்னேன் பராபரமே.. #988 கற்கும் நிலை கற்றால் கருவி அவிழாது அருளாய் நிற்கும் நிலை கற்பதுவே நீதம் பராபரமே.. #989 காச்சச் சுடர்விடும் பொன் கட்டி போல் நின்மலமாய்ப் பேச்சு_அற்றவரே பிறவார் பராபரமே.. #990 பற்று ஒழிந்து சிந்தைப் பதைப்பு ஒழிந்து தானே தான் அற்று இருப்பது என்றைக்கு அமைப்பாய் பராபரமே.. #991 உரு வெளி-தான் வாதவூர் உத்தமர்க்கு அல்லால் இனமும் குரு வழி நின்றார்க்கும் உண்டோ கூறாய் பராபரமே.. #992 தேகம் யாதேனும் ஒரு சித்தி பெறச் சீவன் முத்தி ஆகும் நெறி நல்ல நெறி ஐயா பராபரமே.. #993 உலக நெறி போல் சடலம் ஓய உயிர் முத்தி இலகும் எனல் பந்த இயல்பே பராபரமே.. #994 பரமாப் பரவெளியாப் பார்ப்பது அல்லால் மற்று எவர்க்கும் திரம் ஏதும் இல்லை நன்றாய்த் தேர்ந்தேன் பராபரமே.. #995 தேடுவேன் நின் அருளைத் தேடும் முன்னே எய்தில் நடம் ஆடுவேன் ஆனந்தம் ஆவேன் பராபரமே.. #996 உள்ளம் குழைய உடல் குழைய உள் இருந்த கள்ளம் குழைய என்று காண்பேன் பராபரமே.. #997 பட்டப்பகல் போலப் பாழ்த்த சிந்தை மாளின் எல்லாம் வெட்டவெளியாக விளங்கும் பராபரமே.. #998 பார்க்கின் அணுப் போல் கிடந்த பாழ்ம் சிந்தை மாளின் என்னை யார்க்குச் சரியிடலாம் ஐயா பராபரமே.. #999 பாட்டுக்கோ அன்பினுக்கோ பத்திக்கோ அன்பர்-தங்கள் நீட்டுக்கு எல்லாம் குறுகி நின்றாய் பராபரமே.. #1000 முத்தாந்த வித்தே முளைக்கும் நிலமாய் எழுந்த சித்தாந்த மார்க்கச் சிறப்பே பராபரமே.. #1001 உன்னா வெளியாய் உறங்காத பேர்_உணர்வாய் என் ஆவிக்குள்ளே இருந்தாய் பராபரமே.. #1002 தத்துவம் எல்லாம் அகன்ற தன்மையர்க்குச் சின்மயமா நித்த முத்த சுத்த நிறைவே பராபரமே.. #1003 உள்ளக் கொதிப்பு அகல உள் உள்ளே ஆனந்த வெள்ள மலர்க் கருணை வேண்டும் பராபரமே.. #1004 என்னைப் புறப்பது அருளின் கடனாம் என் கடனாம் நின்னில் பணி அறவே நிற்கை பராபரமே.. #1005 தானே ஆம் நல் நிலையைத் தந்த அருள் ஆனந்த வானே மனாதீத வாழ்வே பராபரமே.. #1006 மண் ஆதி பூதம் எல்லாம் வைத்திருந்த நின் நிறைவைக் கண்ணாரக் கண்டு களித்தேன் பராபரமே.. #1007 அறியாமை ஈது என்று அறிவித்த அன்றே-தான் பிறியா அருள் நிலையும் பெற்றேன் பராபரமே.. #1008 தீது எனவும் நன்று எனவும் தேர்ந்து நான் தேர்ந்தபடி ஏதும் நடக்கவொட்டாது என்னே பராபரமே.. #1009 கண்ட அறிவு அகண்டாகாரம் என மெய் அறிவில் கொண்டவர்க்கே முத்தி கொடுப்பாய் பராபரமே.. #1010 ஈறாக வல்_வினை நான் என்னாமல் இன்ப சுகப் பேறாம்படிக்கு அடிமை பெற்றேன் பராபரமே.. #1011 பெற்றார் அநுபூதி பேசாத மோன நிலை கற்றார் உனைப் பிரியார் கண்டாய் பராபரமே.. #1012 நீயே நான் என்று நினைப்பும் மறப்பும் அறத் தாயே அனைய அருள் தந்தாய் பராபரமே.. #1013 சஞ்சலம்_அற்று எல்லாம் நீ-தான் என்று உணர்ந்தேன் என் அஞ்சலியும் கொள்ளாய் அரசே பராபரமே.. #1014 பூத முதல் நாதம் வரை பொய் என்ற மெய்யர் எல்லாம் காதலித்த இன்ப_கடலே பராபரமே.. #1015 வாக்கு மனம் ஒன்றுபட்ட வார்த்தை அல்லால் வெவ்வேறாய்ப் போக்கு உடைய வார்த்தை பொருந்தேன் பராபரமே.. #1016 வன்மை இன்றி எல்லாம் மதித்து உணர்வாய்க்கா கெடுவேன் தன்மை ஒன்றும் தோயாத் தடையோ பராபரமே.. #1017 பத்தர் சித்தர் வாழி பரிபக்குவர்கள் வாழி செங்கோல் வைத்தவர்கள் வாழி குரு வாழி பராபரமே.. #1018 கல்லாதேன் ஆனாலும் கற்று உணர்ந்த மெய் அடியார் சொல்லாலே நின்னைத் தொடர்ந்தேன் பராபரமே.. #1019 சொல் இறப்பச் சற்குருவாய்த் தோன்றிச் சுகம் கொடுத்த நல்லவர்க்கே கொத்தடிமை நான் காண் பராபரமே.. #1020 முத்திக்கு வித்தான மோனக் கரும்பு வழி தித்தித்திட விளைந்த தேனே பராபரமே.. #1021 நித்திரையும் பாழ்த்த நினைவும் அற்று நிற்பதுவோ சுத்த அருள் நிலை நீ சொல்லாய் பராபரமே.. #1022 மண்ணும் மறி கடலும் மற்று உளவும் எல்லாம் உன் கண்ணில் இருக்கவும் நான் கண்டேன் பராபரமே.. #1023 பூட்டிவைத்து வஞ்சப் பொறி வழியே என்றனை நீ ஆட்டுகின்றது ஏதோ அறியேன் பராபரமே.. #1024 பொய் உணர்வாய் இந்தப் புழுக் கூட்டைக் காத்திருந்தேன் உய்யும் வகையும் உளதோ பராபரமே.

மேல்

.

@44. பைங்கிளிக்கண்ணி

#1025 அந்தமுடன் ஆதி அளவாமல் என் அறிவில் சுந்தர வான் சோதி துலங்குமோ பைங்கிளியே #1026 அகம் மேவும் அண்ணலுக்கு என் அல்லல் எல்லாம் சொல்லிச் சுகமான நீ போய்ச் சுகம் கொடு வா பைங்கிளியே #1027 ஆவிக்குள் ஆவி எனும் அற்புதனார் சிற்சுகம்-தான் பாவிக்கும் கிட்டுமோ சொல்லாய் நீ பைங்கிளியே #1028 ஆரும் அறியாமல் எனை அந்தரங்கமாக வந்து சேரும்படி இறைக்குச் செப்பி வா பைங்கிளியே #1029 ஆறான கண்ணீர்க்கு என் அங்கபங்கம் ஆனதையும் கூறாதது என்னோ குதலை மொழிப் பைங்கிளியே #1030 இன்பு அருள ஆடை அழுக்கேறும் எமக்கு அண்ணல் சுத்த அம்பரமாம் ஆடை அளிப்பானோ பைங்கிளியே #1031 உன்னாமல் ஒன்று இரண்டு என்று ஓராமல் வீட்டு நெறி சொன்னார் வரவும் வகை சொல்லாய் நீ பைங்கிளியே #1032 ஊரும்_இலார் பேரும்_இலார் உற்றார் பெற்றாருடனே யாரும்_இலார் என்னை அறிவாரோ பைங்கிளியே #1033 ஊரைப் பாராமல் எனக்கு உள்ளகத்து நாயகனார் சீரைப் பார்த்தால் கருணை செய்வாரோ பைங்கிளியே #1034 என்று விடியும் இறைவா ஓ என்றுஎன்று நின்ற நிலை எல்லாம் நிகழ்த்தாய் நீ பைங்கிளியே #1035 எந்த மடலூடும் எழுதா இறை வடிவைச் சிந்தை மடலால் எழுதிச் சேர்ப்பேனோ பைங்கிளியே #1036 கண்ணுள் மணி போல் இன்பம் காட்டி எனைப் பிரிந்த திண்ணியரும் இன்னம் வந்து சேர்வாரோ பைங்கிளியே #1037 ஏடு ஆர் மலர் சூடேன் எம்பெருமான் பொன் அடியாம் வாடா_மலர் முடிக்கு வாய்க்குமோ பைங்கிளியே #1038 கல் ஏன் மலர் ஏன் கனிந்த அன்பே பூசை என்ற நல்லோர் பொல்லா எனையும் நாடுவரோ பைங்கிளியே #1039 கண்டதனைக் கண்டு கலக்கம் தவிர் எனவே விண்ட பெருமானையும் நான் மேவுவனோ பைங்கிளியே #1040 காணாத காட்சி கருத்து வந்து காணாமல் வீண் நாள் கழித்து மெலிவேனோ பைங்கிளியே #1041 காந்தம் இரும்பைக் கவர்ந்து இழுத்தால் என்ன அருள் வேந்தன் எமை இழுத்து மேவுவனோ பைங்கிளியே #1042 காதலால் வாடினதும் கண்டனையே எம் இறைவர் போதரவால் இன்பம் புசிப்பேனோ பைங்கிளியே #1043 கிட்டிக்கொண்டு அன்பர் உண்மை கேளாப் பல அடி கொள் பட்டிக்கும் இன்பம் உண்டோ சொல்லாய் நீ பைங்கிளியே #1044 கிட்டு ஊராய் நெஞ்சில் கிளர்வார் தழுவ என்றால் நெட்டு_ஊரர் ஆவர் அவர் நேசம் என்னோ பைங்கிளியே #1045 கூறும் குணமும் இல்லாக் கொள்கையினார் என் கவலை ஆறும்படிக்கும் அணைவாரோ பைங்கிளியே #1046 சின்னஞ்சிறியேன்-தன் சிந்தை கவர்ந்தார் இறைவர் தன்னந்தனியே தவிப்பேனோ பைங்கிளியே #1047 சிந்தை மருவித் தெளிவித்து எனை ஆள வந்த குருநாதன் அருள் வாய்க்குமோ பைங்கிளியே #1048 சொல் இறந்து நின்ற சுக ரூபப் பெம்மானை அல்லும்_பகலும் அணைவேனோ பைங்கிளியே #1049 தற்போதத்தாலே தலைகீழதாக ஐயன் நல் போத இன்பு வர நாள் செலுமோ பைங்கிளியே #1050 தன்னை அறியும் தருணம்-தனில் தலைவர் என்னை அணையாத வண்ணம் எங்கு ஒளித்தார் பைங்கிளியே #1051 தாங்கு அரிய மையல் எல்லாம் தந்து எனை விட்டு இன் அருளாம் பாங்கியைச் சேர்ந்தார் இறைக்குப் பண்போ சொல் பைங்கிளியே #1052 தாவியதோர் மர்க்கடமாம் தன்மை விட்டே அண்ணலிடத்து ஓவியம் போல் நிற்கின் எனை உள்குவரோ பைங்கிளியே #1053 தீராக் கரு வழக்கைத் தீர்வையிட்டு அங்கு என்னை இனிப் பார் ஏறாது ஆண்டானைப் பற்றுவனோ பைங்கிளியே #1054 தூங்கி விழித்து என்ன பலன் தூங்காமல் தூங்கிநிற்கும் பாங்கு கண்டால் அன்றோ பலன் காண்பேன் பைங்கிளியே #1055 தொல்லைக் கவலை தொலைத்துத் தொலையாத எல்லை_இலா இன்ப மயம் எய்துவனோ பைங்கிளியே #1056 நல் நெஞ்சத்து அன்பர் எல்லாம் நாதரைச் சேர்ந்து இன்பு அணைந்தார் வல் நெஞ்சத்தாலே நான் வாழ்வு இழந்தேன் பைங்கிளியே #1057 நானே கருதின் வர நாடார் சும்மா இருந்தால் தானே அணைவர் அவர் தன்மை என்னோ பைங்கிளியே #1058 நீர்க்குமிழி போன்ற உடல் நிற்கையிலே சாசுவதம் சேர்க்க அறியாமல் திகைப்பேனோ பைங்கிளியே #1059 நெஞ்சகத்தில் வாழ்வார் நினைக்கின் வேறு என்று அணையார் வஞ்சகத்தார் அல்லர் அவர் மார்க்கம் என்னோ பைங்கிளியே #1060 பல் முத்திரைச் சமயம் பாழ்படக் கல்_ஆல் அடி வாழ் சின்முத்திரை அரசைச் சேர்வேனோ பைங்கிளியே #1061 பச்சை கண்ட நாட்டில் பறக்கும் உனைப் போல் பறந்தேன் இச்சை எல்லாம் அண்ணற்கு இயம்பி வா பைங்கிளியே #1062 பாச பந்தம் செய்த துன்பம் பாராமல் எம் இறைவர் ஆசை தந்த துன்பம்-அதற்கு ஆற்றேன் நான் பைங்கிளியே #1063 பார் ஆசை அற்று இறையைப் பற்று அற நான் பற்றி நின்ற பூராயம் எல்லாம் புகன்று வா பைங்கிளியே #1064 பேதைப் பருவத்தே பின்தொடர்ந்து என் பக்குவமும் சோதித்த அண்ணல் வந்து தோய்வாரோ பைங்கிளியே #1065 பைம் பயிரை நாடும் உன் போல் பார் பூத்த பைங்கொடி சேர் செம் பயிரை நாடித் திகைத்தேன் நான் பைங்கிளியே #1066 பொய்க் கூடு கொண்டு புலம்புவனோ எம் இறைவர் மெய்க் கூடு சென்று விளம்பி வா பைங்கிளியே #1067 பொய்ப் பணி வேண்டேனைப் பொருட்படுத்தி அண்ணல் என்-பால் மெய்ப் பணியும் தந்து ஒரு கால் மேவுவனோ பைங்கிளியே #1068 மண் உறங்கும் விண் உறங்கும் மற்று உள எலாம் உறங்கும் கண் உறங்கேன் எம் இறைவர் காதலால் பைங்கிளியே #1069 மட்டுப்படாத மயக்கம் எல்லாம் தீர என்னை வெட்டவெளி வீட்டில் அண்ணல் மேவுவனோ பைங்கிளியே #1070 மாலை வளர்ந்து என்னை வளர்த்து இறைவர் பல் நெறியாம் பாலைவனத்தில் விட்ட பாவம் என்னோ பைங்கிளியே #1071 மெய்யில் நோய் மாற்று அவுழ்தம் மெத்த உண்டு எம் அண்ணல் தந்த மையல் நோய் தீர்க்க மருந்தும் உண்டோ பைங்கிளியே #1072 மேவு பஞ்ச வண்ணம் உற்றாய் வீண் சிறையால் அல்லலுற்றாய் பாவி பஞ்ச வண்ணம் பகர்ந்து வா பைங்கிளியே #1073 வாய் திறவா வண்ணம் எனை வைத்து ஆண்டார்க்கு என் துயரை நீ திறவாச் சொல்லின் நிசம் ஆம் காண் பைங்கிளியே #1074 வாட்டப்படாத மவுன இன்பம் கையாலே காட்டிக் கொடுத்தானைக் காண்பேனோ பைங்கிளியே #1075 வாரா வரவாக வந்து அருளும் மோனருக்கு என் பேர்_ஆசை எல்லாம் போய்ப் பேசி வா பைங்கிளியே #1076 விண்ணவர்-தம் பால் அமுதம் வேப்பங்காய் ஆக என்-பால் பண்ணியது எம் அண்ணல் மயல் பார்த்தாயோ பைங்கிளியே #1077 விண்ணுள் வளி அடங்கி வேறு அற்றது என்ன அருள் கண்ணுள் அடங்கிடவும் காண்பேனோ பைங்கிளியே #1078 விண் ஆர் நிலவு தவழ் மேடையில் எல்லாரும் உற மண்ணான வீட்டில் என்னை வைத்தது என்னோ பைங்கிளியே #1079 உள்ளத்தின் உள்ளே ஒளித்திருந்து என் கள்ளம் எல்லாம் வள்ளல் அறிந்தால் எனக்கு வாயும் உண்டோ பைங்கிளியே #1080 ஆகத்தை நீக்கும் முன்னே ஆவித் துணைவரை நான் தாகத்தின் வண்ணம் தழுவுவனோ பைங்கிளியே #1081 தானே சுபாவம் தலைப்பட நின்றால் ஞான வானோனவரும் வருவாரோ பைங்கிளியே #1082 கள்ளத் தலைவர் அவர் கைகாட்டிப் பேசாமல் உள்ளத்தில் வந்த உபாயம் என்னோ பைங்கிளியே

மேல்

@45. எந்நாள்கண்ணி

*. 1. தெய்வ வணக்கம் #1083 நீர் பூத்த வேணி நிலவு எறிப்ப மன்று ஆடும் கார் பூத்த கண்டனை யான் காணும் நாள் எந்நாளோ #1084 பொன் ஆரும் மன்றுள் மணிப் பூவை விழி வண்டு சுற்றும் என் ஆர் அமுதின் நலன் இச்சிப்பது எந்நாளோ #1085 நீக்கி மலக் கட்டு அறுத்து நேரே வெளியில் எம்மைத் தூக்கி வைக்கும் தாளைத் தொழுதிடும் நாள் எந்நாளோ #1086 கரு முகம் காட்டாமல் என்றும் கர்ப்பூரம் வீசும் திரு_முகமே நோக்கித் திருக்கு அறுப்பது எந்நாளோ #1087 வெம் சேல் எனும் விழியார் வேட்கை நஞ்சுக்கு அஞ்சினரை அஞ்சேல் எனும் கைக்கு அபயம் என்பது எந்நாளோ #1088 ஆறு சமயத்தும் அதுவதுவாய் நின்று இலங்கும் வீறு பரை திரு_தாள் மேவும் நாள் எந்நாளோ #1089 பச்சை நிறமாய்ச் சிவந்த பாகம் கலந்து உலகை இச்சையுடன் ஈன்றாளை யாம் காண்பது எந்நாளோ #1090 ஆதி அந்தம் காட்டாது அகண்டிதமாய் நின்று உணர்த்தும் போத வடிவாம் அடியைப் போற்றும் நாள் எந்நாளோ #1091 கங்கை நிலவு சடைக் காட்டானைத் தந்தை எனும் புங்க வெண்_கோட்டானை பதம் புந்தி வைப்பது எந்நாளோ #1092 அஞ்சு முகம் காட்டாமல் ஆறு முகம் காட்ட வந்த செம் சரணச் சேவடியைச் சிந்தை வைப்பது எந்நாளோ #1093 தந்தை இரு தாள் துணித்துத் தம்பிரான் தாள் சேர்ந்த எந்தை இரு தாள் இணைக்கே இன்புறுவது எந்நாளோ * 2. குருமரபின் வணக்கம் #1094 துய்ய கர_மலரால் சொல்லாமல் சொன்ன உண்மை ஐயனைக் கல்_ஆல் அரசை யாம் அணைவது எந்நாளோ #1095 சிந்தையினுக்கு எட்டாத சிற்சுகத்தைக் காட்ட வல்ல நந்தி அடிக் கீழ்க் குடியாய் நாம் அணைவது எந்நாளோ #1096 எந்தை சனற்குமரன் ஆதி எமை ஆட்கொள்வான் வந்த தவத்தினரை வாழ்த்தும் நாள் எந்நாளோ #1097 பொய் கண்டார் காணாப் புனிதம் எனும் அத்துவித மெய்கண்டநாதன் அருள் மேவும் நாள் எந்நாளோ #1098 பாதி விருத்தத்தால் இப் பார் விருத்தம் ஆக உண்மை சாதித்தார் பொன் அடியைத் தான் பணிவது எந்நாளோ #1099 சிற்றம்பலம் மன்னும் சின்மயராம் தில்லைநகர்க் கொற்றங்குடி முதலைக் கூறும் நாள் எந்நாளோ #1100 குறைவு_இல் அருள் ஞானம் முதல் கொற்றங்குடி அடிகள் நறை மலர்த் தாட்கு அன்பு பெற்று நாம் இருப்பது எந்நாளோ #1101 நாள் அவங்கள் போகாமல் நல் நெறியைக் காட்டி எமை ஆள வந்த கோலங்கட்கு அன்பு வைப்பது எந்நாளோ #1102 என் அறிவை உள் அடக்கி என் போல் வரும் மவுனி- தன் அறிவுக்கு உள்ளே நான் சாரும் நாள் எந்நாளோ #1103 ஆறுள் ஒன்றை நாடின் அதற்கு ஆறும் உண்டாம் என்று எமக்குக் கூறும் மவுனி அருள் கூடும் நாள் எந்நாளோ #1104 நில்லாமல் நின்று அருளை நேரே பார் என்ற ஒரு சொல்லால் மவுனி அருள் தோற்றும் நாள் எந்நாளோ #1105 வைதிகமாம் சைவ மவுனி மவுனத்து அளித்த மெய் திகழ்ந்து என் அல்லல் விடியும் நாள் எந்நாளோ #1106 வாக்கு மனம் அற்ற மவுனி மவுனத்து அருளே தாக்கவும் என் அல்லல் எல்லாம் தட்டழிவது எந்நாளோ *. 3. அடியார் வணக்கம் #1107 வெம் பந்தம் தீர்த்து உலகு ஆள் வேந்தன் திருஞானசம் பந்தனை அருளால் சாரும் நாள் எந்நாளோ #1108 ஏரின் சிவ போகம் இங்கு இவற்கே என்ன உழ வாரம் கொள் செம் கையர் தாள் வாரம் வைப்பது எந்நாளோ #1109 பித்தர் இறை என்று அறிந்து பேதை-பால் தூது அனுப்பு வித்த தமிழ்ச் சமர்த்தர் மெய் புகழ்வது எந்நாளோ #1110 போதவூர் நாடு அறியப் புத்தர்-தமை வாதில் வென்ற வாதவூர் ஐயன் அன்பை வாஞ்சிப்பது எந்நாளோ #1111 ஒட்டுடன் பற்று இன்றி உலகைத் துறந்த செல்வப் பட்டினத்தார் பத்ரகிரி பண்பு உணர்வது எந்நாளோ #1112 கண்டது பொய் என்று அகண்டாகார சிவம் மெய் எனவே விண்ட சிவவாக்கியர் தாள் மேவும் நாள் எந்நாளோ #1113 சக்கரவர்த்தி தவ ராச யோகி எனும் மிக்க திருமூலன் அருள் மேவும் நாள் எந்நாளோ #1114 கந்தர் அநுபூதி பெற்றுக் கந்தரநுபூதி சொன்ன எந்தை அருள் நாடி இருக்கும் நாள் எந்நாளோ #1115 எண் அரிய சித்தர் இமையோர் முதலான பண்ணவர்கள் பத்தர் அருள் பாலிப்பது எந்நாளோ *. 4. யாக்கையைப் பழித்தல் #1116 சுக்கிலமும் நீரும் சொரி மலமும் நாறும் உடல் புக்கு உழலும் வாஞ்சை இனிப் போதும் என்பது எந்நாளோ #1117 நீர்க்குமிழி பூண் அமைத்து நின்றாலும் நில்லா மெய் பார்க்கும் இடத்து இதன் மேல் பற்று அறுவது எந்நாளோ #1118 காக்கை நரி செந்நாய் கழுகு ஒருநாள் கூடி உண்டு தேக்கு விருந்தாம் உடலைச் சீ என்பது எந்நாளோ #1119 செம் கிருமி ஆதி செனித்த சென்ம பூமியினை இங்கு என் உடல் என்னும் இழுக்கு ஒழிவது எந்நாளோ #1120 தத்துவர் தொண்ணூற்றறுவர் தாமாய் வாழ் இ நாட்டைப் பித்தன் நான் என்னும் பிதற்று ஒழிவது எந்நாளோ #1121 ஊன் ஒன்றி நாதன் உணர்த்தும் அதை விட்டு அறிவேன் நான் என்ற பாவி தலை நாணும் நாள் எந்நாளோ #1122 வேலை_இலா வேதன் விதித்த இந்த்ரசால உடல் மாலை வியாபார மயக்கு ஒழிவது எந்நாளோ #1123 ஆழ்ந்து நினைக்கின் அரோசிகமாம் இ உடலில் வாழ்ந்து பெறும் பேற்றை மதிக்கும் நாள் எந்நாளோ #1124 மு_மலச் சேறு ஆன முழுக் கும்பிபாகம் எனும் இ மல காயத்துள் இகழ்ச்சி வைப்பது எந்நாளோ #1125 நாற்றம் மிகக் காட்டும் நவ வாயில் பெற்ற பசும் சோற்றுத் துருத்தி சுமை என்பது எந்நாளோ #1126 உரு இருப்ப உள்ளே-தான் ஊறும் மலக் கேணி அருவருப்பு வாழ்க்கையைக் கண்டு அஞ்சும் நாள் எந்நாளோ *. 5. மாதர் மயக்கறுத்தல் #1127 மெய் வீசும் நாற்றம் எலாம் மிக்க மஞ்சளால் மறைத்துப் பொய் வீசும் வாயார் புலை ஒழிவது எந்நாளோ #1128 திண்ணிய நெஞ்சப் பறவை சிக்கக் குழல்_காட்டில் கண்ணிவைப்போர் மாயம் கடக்கும் நாள் எந்நாளோ #1129 கண்டு மொழி பேசி மனம் கண்டுகொண்டு கைவிலையாக் கொண்டு விடு மானார் பொய்க் கூத்து ஒழிவது எந்நாளோ #1130 காமனை வா என்று இருண்ட கண்_வலையை வீசும் மின்னார் நாமம் மறந்து அருளை நண்ணும் நாள் எந்நாளோ #1131 கண்களில் வெண் பீளை கரப்பக் கரு மை இட்ட பெண்கள் மயல் தப்பிப் பிழைக்கும் நாள் எந்நாளோ #1132 வீங்கித் தளர்ந்து விழும் முலையார் மேல் வீழ்ந்து தூங்கும் மதன் சோம்பைத் துடைக்கும் நாள் எந்நாளோ #1133 கச்சு இருக்கும் கொங்கை கரும்பு இருக்கும் இன் மாற்றம் வைச்சிருக்கும் மாதர் மயக்கு ஒழிவது எந்நாளோ #1134 பச்சென்ற கொங்கைப் பசப்பியர் பாழான மயல் நச்சென்று அறிந்து அருளை நண்ணும் நாள் எந்நாளோ #1135 உந்திச் சுழியால் உளத்தைச் சுழித்த கன தந்தித் தனத்தார்-தமை மறப்பது எந்நாளோ #1136 தட்டுவைத்த சேலைக் கொய்சகத்தில் சிந்தை எல்லாம் கட்டிவைக்கும் மாய மின்னார் கட்டு அழிவது எந்நாளோ #1137 ஆழ் ஆழி என்ன அளவுபடா வஞ்ச நெஞ்சப் பாழான மாதர் மயல் பற்று ஒழிவது எந்நாளோ #1138 தூய பனித் திங்கள் சுடுவது எனப் பித்தேற்றும் மாய மடவார் மயக்கு ஒழிவது எந்நாளோ #1139 ஏழைக்குறும்பு செய்யும் ஏந்து_இழையார் மோகம் எனும் பாழைக் கடந்து பயிராவது எந்நாளோ #1140 விண்டு மொழி குளறி வேட்கை மது மொண்டுதரும் தொண்டியர்கள் கண்கடையில் சுற்று ஒழிவது எந்நாளோ #1141 மெய்யில் சிவம் பிறக்க மேவும் இன்பம் போல் மாதர் பொய்யில் இன்பு இன்று என்று பொருந்தா நாள் எந்நாளோ *. 6. தத்துவ முறைமை #1142 ஐம்_பூதத்தாலே அலக்கழிந்த தோஷம் அற எம் பூதநாதன் அருள் எய்தும் நாள் எந்நாளோ #1143 சத்தம் முதலாம் புலனில் சஞ்சரித்த கள்வர் எனும் பித்தர் பயம் தீர்ந்து பிழைக்கும் நாள் எந்நாளோ #1144 நாளும் பொறி வழியை நாடாத வண்ணம் எமை ஆளும் பொறியால் அருள் வருவது எந்நாளோ #1145 வாக்கு ஆதியான கன்ம மாயை-தம்பால் வீண் காலம் போக்காமல் உண்மை பொருந்தும் நாள் எந்நாளோ #1146 மனமான வானரக் கை மாலை ஆக்காமல் எனை ஆள் அடிகள் அடி எய்தும் நாள் எந்நாளோ #1147 வேட்டைப் புலப் புலையர் மேவாத வண்ணம் மனக் காட்டைத் திருத்திக் கரை காண்பது எந்நாளோ #1148 உந்து பிறப்பு இறப்பை உற்றுவிடாது எந்தை அருள் வந்து பிறக்க மனம் இறப்பது எந்நாளோ #1149 புத்தி எனும் துத்திப் பொறி அரவின் வாய்த் தேரை ஒத்து விடாது எந்தை அருள் ஓங்கும் நாள் எந்நாளோ #1150 ஆங்காரம் என்னும் மத யானை வாயில் கரும்பாய் ஏங்காமல் எந்தை அருள் எய்தும் நாள் எந்நாளோ #1151 சித்தம் எனும் பெளவத் திரைக் கடலில் வாழ் துரும்பாய் நித்தம் அலையாது அருளில் நிற்கும் நாள் எந்நாளோ #1152 வித்தியா தத்துவங்கள் ஏழும் வெருண்டு ஓடச் சுத்தபரபோகத்தைத் துய்க்கும் நாள் எந்நாளோ #1153 சுத்த வித்தையே முதலாத் தோன்றும் ஓர் ஐந்து வகைத் தத்துவத்தை நீங்கி அருள் சாரும் நாள் எந்நாளோ #1154 பொல்லாத காமப் புலைத் தொழிலில் என் அறிவு செல்லாமல் நல் நெறியில் சேரும் நாள் எந்நாளோ #1155 அடிகள் அடிக் கீழ்க் குடியாய் யாம் வாழா வண்ணம் குடிகெடுக்கும் பாழ் மடிமைக் கூறு ஒழிவது எந்நாளோ #1156 ஆன புறக் கருவி ஆறுபத்தும் மற்று உளவும் போன வழியும் கூடப் புல் முளைப்பது எந்நாளோ #1157 அந்தகனுக்கு எங்கும் இருள் ஆனவாறா அறிவில் வந்த இருள் வேலை வடியும் நாள் எந்நாளோ #1158 புன் மலத்தைச் சேர்ந்து மலபோதம் பொருந்துதல் போய் நின்மலத்தைச் சேர்ந்து மலம் நீங்கும் நாள் எந்நாளோ #1159 கண்டுகண்டும் தேறாக் கலக்கம் எல்லாம் தீர் வண்ணம் பண்டை வினை வேரைப் பறிக்கும் நாள் எந்நாளோ #1160 பைங்கூழ் வினை-தான் படு சாவியாக எமக்கு எம் கோன் கிரண வெயில் எய்தும் நாள் எந்நாளோ #1161 குறித்தவிதம் ஆதியால் கூடும் வினை எல்லாம் வறுத்த வித்து ஆம் வண்ணம் அருள் வந்திடும் நாள் எந்நாளோ #1162 சஞ்சிதமே ஆதி சரக்கான மு_சேறும் வெந்த பொரி ஆக அருள் மேவும் நாள் எந்நாளோ #1163 தேகம் முதல் நான்காத் திரண்டு ஒன்றாய் நின்று இலகும் மோகம் மிகு மாயை முடியும் நாள் எந்நாளோ #1164 சத்தம் முதலாத் தழைத்து இங்கு எமக்கு உணர்த்தும் சுத்த மா மாயை தொடக்கு அறுவது எந்நாளோ #1165 எம்மை வினையை இறையை எம்-பால் காட்டாத அம்மை திரோதை அகலும் நாள் எந்நாளோ #1166 நித்திரையாய் வந்து நினைவு அழிக்கும் கேவலமாம் சத்துருவை வெல்லும் சமர்த்து அறிவது எந்நாளோ #1167 சன்னல்பின்னலான சகலம் எனும் குப்பையிடை முன்னவன் ஞானக் கனலை மூட்டும் நாள் எந்நாளோ #1168 மாயாவிகார மலம் ஒழி சுத்தாவத்தை தோயா அருளைத் தொடரும் நாள் எந்நாளோ *. 7. தன் உண்மை #1169 உடம்பு அறியும் என்னும் அந்த ஊழல் எல்லாம் தீரத் திடம் பெறவே எம்மைத் தெரிசிப்பது எந்நாளோ #1170 செம்மை அறிவால் அறிந்து தேகாதிக்குள் இசைந்த எம்மைப் புலப்படவே யாம் அறிவது எந்நாளோ #1171 தத்துவமாம் பாழ்த்த சட உருவைத் தான் சுமந்த சித்துருவாம் எம்மைத் தெரிசிப்பது எந்நாளோ #1172 பஞ்சப் பொறியை உயிர் என்னும் அந்தப் பஞ்சம் அறச் செஞ்செவே எம்மைத் தெரிசிப்பது எந்நாளோ #1173 அந்தக்கரணம் உயிராம் என்ற அந்தரங்க சிந்தை அழிய எம்மைத் தேர்ந்து அறிவது எந்நாளோ #1174 முக்குணத்தைச் சீவன் என்னும் மூடத்தை விட்டு அருளால் அக்கணமே எம்மை அறிந்து கொள்வது எந்நாளோ #1175 காலை உயிர் என்னும் கலதிகள் சொல் கேளாமல் சீலமுடன் எம்மைத் தெளிந்துகொள்வது எந்நாளோ #1176 வான் கெடுத்துத் தேடும் மதிகேடர் போல எமை நான் கெடுத்துத் தேடாமல் நன்கு அறிவது எந்நாளோ *. 8. அருளியல்பு #1177 ஈனம் தரும் நாடு இது நமக்கு வேண்டா என்று ஆனந்த நாட்டில் அவதரிப்பது எந்நாளோ #1178 பொய்க் காட்சியான புவனத்தை விட்டு அருளாம் மெய்க் காட்சியாம் புவனம் மேவும் நாள் எந்நாளோ #1179 ஆதி அந்தம் காட்டாமல் அம்பரம் போலே நிறைந்த தீது_இல் அருள்_கடலைச் சேரும் நாள் எந்நாளோ #1180 எட்டுத் திசைக் கீழ் மேல் எங்கும் பெருகி வரும் வெட்டவெளி விண் ஆற்றில் மெய் தோய்வது எந்நாளோ #1181 சூதானம் என்று சுருதி எல்லாம் ஓலமிடும் மீதானமான வெற்பை மேவும் நாள் எந்நாளோ #1182 வெந்து வெடிக்கின்ற சிந்தை வெப்பு அகலத் தண் அருளாய் வந்து பொழிகின்ற மழை காண்பது எந்நாளோ #1183 சூரியர்கள் சந்திரர்கள் தோன்றாச் சுயஞ்சோதிப் பூரண தேயத்தில் பொருந்தும் நாள் எந்நாளோ #1184 கன்றும் மன வெப்பக் கலக்கம் எலாந் தீர அருள் தென்றல் வந்து வீசு வெளி சேரும் நாள் எந்நாளோ #1185 கட்டும் நமன் செங்கோல் கடா அடிக்கும் கோலாக வெட்டவெளிப் பொருளை மேவும் நாள் எந்நாளோ #1186 சாலக் கபாடத் தடை தீர எம்பெருமான் ஓலக்க மண்டபத்துள் ஓடும் நாள் எந்நாளோ #1187 விண்ணவன் தாள் என்னும் விரி நிலா மண்டபத்தில் தண்ணீர் அருந்தித் தளர்வு ஒழிவது எந்நாளோ #1188 வெய்ய புவி பார்த்து விழித்திருந்த அல்லல் அறத் துய்ய அருளில் துயிலும் நாள் எந்நாளோ #1189 வெய்ய பிறவி வெயில் வெப்பம் எல்லாம் விட்டு அகல ஐயன் அடி நீழல் அணையும் நாள் எந்நாளோ #1190 வாதைப் பிறவி வளை கடலை நீந்த ஐயன் பாதப் புணை இணையைப் பற்றும் நாள் எந்நாளோ #1191 ஈனம் இல்லா மெய்ப் பொருளை இம்மையிலே காண வெளி ஞானம் எனும் அஞ்சனத்தை நான் பெறுவது எந்நாளோ #1192 எல்லாம் இறந்த இடத்து எந்தை நிறைவாம் வடிவைப் புல்லாமல் புல்லிப் புணரும் நாள் எந்நாளோ #1193 சடத்துள் உயிர் போல் எமக்குத் தான் உயிராய் ஞானம் நடத்தும் முறை கண்டு பணி நாம் விடுவது எந்நாளோ #1194 எக்கணுமாம் துன்ப இருள்_கடலை விட்டு அருளால் மிக்க கரை ஏறி வெளிப்படுவது எந்நாளோ *. 9. பொருளியல்பு #1195 கைவிளக்கின் பின்னே போய்க் காண்பார் போல் மெய்ஞ்ஞான மெய் விளக்கின் பின்னே போய் மெய் காண்பது எந்நாளோ #1196 கேடு_இல் பசு பாசம் எல்லாம் கீழ்ப்படவும் தானே மேல் ஆடும் சுகப் பொருளுக்கு அன்புறுவது எந்நாளோ #1197 ஆணவத்தை நீக்கி அறிவூடே ஐ வகையாக் காண் அவத்தைக்கு அப்பாலைக் காணும் நாள் எந்நாளோ #1198 நீக்கப் பிரியா நினைக்க மறக்கக் கூடாப் போக்கு_வரவு அற்ற பொருள் அணைவது எந்நாளோ #1199 அண்டருக்கும் எய்ப்பில் வைப்பாம் ஆர் அமுதை என் அகத்தில் கண்டுகொண்டு நின்று களிக்கும் நாள் எந்நாளோ #1200 காட்டும் திரு_அருளே கண்ணாகக் கண்டு பர வீட்டு இன்ப மெய்ப் பொருளை மேவும் நாள் எந்நாளோ #1201 நான் ஆன தன்மை நழுவியே எவ்வுயிர்க்கும் தான் ஆன உண்மை-தனைச் சாரும் நாள் எந்நாளோ #1202 சிந்தை மறந்து திரு_அருளாய் நிற்பவர்-பால் வந்த பொருள் எம்மையும்-தான் வாழ்விப்பது எந்நாளோ #1203 எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் வியாபகமாய் உள்ள ஒன்றை உள்ளபடி ஓரும் நாள் எந்நாளோ #1204 அரு உருவம் எல்லாம் அகன்றதுவாய் ஆன பொருள் எமக்கு வந்து புலப்படுவது எந்நாளோ #1205 ஆரணமும் காணா அகண்டிதாகார பரி பூரணம் வந்து எம்மைப் பொருந்தும் நாள் எந்நாளோ #1206 சத்தொடு சித்து ஆகித் தயங்கிய ஆனந்த பரி சுத்த அகண்ட சிவம் தோன்றும் நாள் எந்நாளோ #1207 எங்கெங்கும் பார்த்தாலும் இன்பு உருவாய் நீக்கம் இன்றித் தங்கும் தனிப் பொருளைச் சாரும் நாள் எந்நாளோ #1208 அடி முடி காட்டாத சுத்த அம்பரமாம் சோதிக் கடுவெளி வந்து என்னைக் கலக்கும் நாள் எந்நாளோ #1209 ஒன்றனையும் காட்டா உளத்து இருளைச் சூறையிட்டு நின்ற பரஞ்சோதியுடன் நிற்கும் நாள் எந்நாளோ #1210 எந்தச் சமயம் இசைந்தும் அறிவூடு அறிவாய் வந்த பொருளே பொருளா வாஞ்சிப்பது எந்நாளோ #1211 எவ்வாறு இங்கு உற்று உணர்ந்தார் யாவர் அவர்-தமக்கே அவ்வாறாய் நின்ற பொருட்கு அன்பு வைப்பது எந்நாளோ #1212 பெண் ஆண் அலி எனவும் பேசாமல் என் அறிவின் கண்ணூடே நின்ற ஒன்றைக் காணும் நாள் எந்நாளோ #1213 நினைப்பும் மறப்பும் அற நின்ற பரஞ்சோதி- தனைப் புலமா என் அறிவில் சந்திப்பது எந்நாளோ *. 10. ஆனந்த இயல்பு #1214 பேச்சு_மூச்சு இல்லாத பேர்_இன்ப வெள்ளம் உற்று நீச்சு நிலை காணாமல் நிற்கும் நாள் எந்நாளோ #1215 சித்தம் தெளிந்தோர் தெளிவில் தெளிவான சுத்த சுகக் கடலுள் தோயும் நாள் எந்நாளோ #1216 சிற்றின்பம் உண்ட ஊழ் சிதைய அனந்தம் கடல் போல் முற்று இன்ப_வெள்ளம் எமை மூடும் நாள் எந்நாளோ #1217 எல்லை_இல் பேர்_இன்ப மயம் எப்படி என்றோர்-தமக்குச் சொல் அறியா ஊமர்கள் போல் சொல்லும் நாள் எந்நாளோ #1218 அண்டர் அண்ட கோடி அனைத்தும் உகாந்த வெள்ளம் கொண்டது எனப் பேர்_இன்பம் கூடும் நாள் எந்நாளோ #1219 ஆதி அந்தம் இல்லாத ஆதி அநாதி எனும் சோதி இன்பத்தூடே துளையும் நாள் எந்நாளோ #1220 சாலோகம் ஆதி சவுக்கியமும் விட்ட நம்-பால் மேலான ஞான இன்பம் மேவும் நாள் எந்நாளோ #1221 தற்பரத்தின் உள்ளேயும் சாலோகம் ஆதி எனும் பொற்பு அறிந்து ஆனந்தம் பொருந்தும் நாள் எந்நாளோ #1222 உள்ளத்தின் உள்ளே-தான் ஊறும் சிவானந்த வெள்ளம் துளைந்து விடாய் தீர்வது எந்நாளோ #1223 கன்னலுடன் முக்கனியும் கற்கண்டும் சீனியுமாய் மன்னும் இன்ப ஆர் அமுதை வாய்மடுப்பது எந்நாளோ #1224 மண்ணூடு உழன்ற மயக்கம் எல்லாம் தீர்ந்திடவும் விண்ணூடு எழுந்த சுகம் மேவும் நாள் எந்நாளோ #1225 கானல்_சலம் போன்ற கட்டு உழலைப் பொய் தீர வான் அமுத வாவி மருவும் நாள் எந்நாளோ #1226 தீம் கரும்பு என்றால் இனியா தின்றால் இனிப்பன போல் பாங்குறும் பேர்_இன்பம் படைக்கும் நாள் எந்நாளோ #1227 புண்ணிய பாவங்கள் பொருந்தா மெய் அன்பர் எல்லாம் நண்ணிய பேர்_இன்ப சுகம் நான் அணைவது எந்நாளோ *. 11. அன்பு நிலைமை #1228 தக்க ரவி கண்ட சரோருகம் போல் என் இதயம் மிக்க அருள் கண்டு விகசிப்பது எந்நாளோ #1229 வான முகில் கண்ட மயூர பக்ஷீ போல ஐயன் ஞான நடம் கண்டு நடிக்கும் நாள் எந்நாளோ #1230 சந்திரனை நாடும் சகோர பக்ஷி போல் அறிவில் வந்த பரஞ்சோதியை யான் வாஞ்சிப்பது எந்நாளோ #1231 குத்திர மெய்ப் புற்றகத்துக் குண்டலிப் பாம்பு ஒன்று ஆட்டும் சித்தனை என் கண்ணால் தரிசிப்பது எந்நாளோ #1232 அந்தரத்தே நின்று ஆடும் ஆனந்தக் கூத்தனுக்கு என் சிந்தை திறை கொடுத்துச் சேவிப்பது எந்நாளோ #1233 கள்ளன் இவன் என்று மெள்ளக் கைவிடுதல் காரியமோ வள்ளலே என்று வருந்தும் நாள் எந்நாளோ #1234 விண்_நாடர் காணா விமலா பரஞ்சோதி அண்ணா வாவா என்று அரற்றும் நாள் எந்நாளோ #1235 ஏதேது செய்தாலும் என் பணி போய் நின் பணியாம் மா தேவா என்று வருந்தும் நாள் எந்நாளோ #1236 பண்டும் காணேன் நான் பழம் பொருளே இன்றும் உனைக் கண்டும் காணேன் எனவும் கைகுவிப்பது எந்நாளோ #1237 பொங்கு ஏதமான புழுக்கம் எலாம் தீர இன்பம் எங்கேஎங்கே என்று இரங்கும் நாள் எந்நாளோ #1238 கடலில் மடை கண்டது போல் கண்ணீர் ஆறாக உடல் வெதும்பி மூர்ச்சித்து உருகும் நாள் எந்நாளோ #1239 புலர்ந்தேன் முகம் சருகாய்ப் போனேன் நின் காண அலந்தேன் என்று ஏங்கி அழுங்கும் நாள் எந்நாளோ #1240 புண்_நீர்மையாளர் புலம்புமா போல் புலம்பிக் கண்ணீரும்_கம்பலையும் காட்டும் நாள் எந்நாளோ #1241 போற்றேன் என்றாலும் என்னைப் புந்தி செயும் வேதனைக்கு இங்கு ஆற்றேன்ஆற்றேன் என்று அரற்றும் நாள் எந்நாளோ #1242 பொய் முடங்கும் பூமி சில பொட்டலுறப் பூம் கமலன் கை முடங்க நான் சனனக் கட்டு அறுவது எந்நாளோ #1243 கல் குணத்தைப் போன்ற வஞ்சக்காரர்கள் கைகோவாமல் நல்_குணத்தார் கைகோத்து நான் திரிவது எந்நாளோ #1244 துட்டனை மா மாயைச் சுழல் நீக்கி அந்தரமே விட்டனையோ என்று வியக்கும் நாள் எந்நாளோ *. 12. அன்பர் நெறி #1245 அத்துவா எல்லாம் அடங்கச் சோதித்தபடிச் சித்து உருவாய் நின்றார் தெளிவு அறிவது எந்நாளோ #1246 மூச்சு அற்றுச் சிந்தை முயற்சி அற்று மூதறிவாய்ப் பேச்சு_அற்றோர் பெற்ற ஒன்றைப் பெற்றிடும் நாள் எந்நாளோ #1247 கோட்டாலையான குணம் இறந்த நிர்க்குணத்தோர் தேட்டாலே தேடு பொருள் சேரும் நாள் எந்நாளோ #1248 கெடுத்தே பசுத்துவத்தைக் கேடு_இலா ஆனந்தம் அடுத்தோர் அடுத்த பொருட்கு ஆர்வம் வைப்பது எந்நாளோ #1249 கல் கண்டால் ஓடுகின்ற காக்கை போல் பொய் மாயச் சொல் கண்டால் ஓடும் அன்பர் தோய்வு அறிவது எந்நாளோ #1250 மெய்த்த குலம் கல்வி புனை வேடம் எலாம் ஓடவிட்ட சித்தர் ஒன்றும் சேராச் செயல் அறிவது எந்நாளோ #1251 குற்றச் சமயக் குறும்பு அடர்ந்து தற்போதம் அற்றவர்கட்கு அற்ற பொருட்கு அன்பு வைப்பது எந்நாளோ #1252 தர்க்கமிட்டுப் பாழாம் சமயக் குதர்க்கம் விட்டு நிற்குமவர் கண்ட வழி நேர்பெறுவது எந்நாளோ #1253 வீறிய வேதாந்த முதல் மிக்க கலாந்தம் வரை ஆறும் உணர்ந்தோர் உணர்வுக்கு அன்பு வைப்பது எந்நாளோ #1254 கண்ட இடம் எல்லாம் கடவுள் மயம் என்று அறிந்து கொண்ட நெஞ்சர் நேய நெஞ்சில் கொண்டிருப்பது எந்நாளோ #1255 பாக்கியங்கள் எல்லாம் பழுத்து மனம் பழுத்தோர் நோக்கும் திரு_கூத்தை நோக்கும் நாள் எந்நாளோ #1256 எவ்வுயிரும் தன் உயிர் போல் எண்ணும் தபோதனர்கள் செவ் அறிவை நாடி மிகச் சிந்தை வைப்பது எந்நாளோ *. 13. அறிஞர் உரை #1257 இரு நிலனாய்த் தீ ஆகி என்ற திரு_பாட்டின் பெரு நிலையைக் கண்டு அணைந்து பேச்சு அறுவது எந்நாளோ #1258 அற்றவர்கட்கு அற்ற சிவன் ஆம் என்ற அத்துவிதம் முற்று மொழி கண்டு அருளில் மூழ்கும் நாள் எந்நாளோ #1259 தான் என்னை முன் படைத்தான் என்ற தகவு உரையை நான் என்னா உண்மை பெற்று நாம் உணர்வது எந்நாளோ #1260 என்னுடைய தோழனுமாய் என்ற திரு_பாட்டின் நல் நெறியைக் கண்டு உரிமை நாம் செய்வது எந்நாளோ #1261 ஆருடனே சேரும் அறிவு என்ற அ உரையைத் தேரும்படிக்கு அருள்-தான் சேரும் நாள் எந்நாளோ #1262 உன்னில் உன்னும் என்ற உறு மொழியால் என் இதயம்- தன்னில் உன்னி நல் நெறியைச் சாரும் நாள் எந்நாளோ #1263 நினைப்பு அறவே-தான் நினைந்தேன் என்ற நிலை நாடி அனைத்தும் ஆம் அப் பொருளில் ஆழும் நாள் எந்நாளோ #1264 சென்று சென்றே அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாகி நின்றுவிடும் என்ற நெறி நிற்கும் நாள் எந்நாளோ #1265 ஆதி அந்தம் இல்லா அரிய பரஞ்சோதி என்ற நீதிமொழி கண்டு அதுவாய் நிற்கும் நாள் எந்நாளோ #1266 பிறிது ஒன்றில் ஆசை இன்றிப் பெற்றிருந்தேன் என்ற நெறி_உடையான் சொல்லில் நிலைநிற்கும் நாள் எந்நாளோ #1267 திரை அற்ற நீர் போல் தெளிய எனத் தேர்ந்த உரை பற்றி உற்று அங்கு ஒடுங்கும் நாள் எந்நாளோ #1268 அறியா அறிவில் அவிழ்ந்து ஏற என்ற நெறியாம் உரை உணர்ந்து நிற்கும் நாள் எந்நாளோ #1269 எனக்குள் நீ என்றும் இயற்கையாப் பின்னும் உனக்குள் நான் என்ற உறுதி கொள்வது எந்நாளோ #1270 அறிவை அறிவதுவே ஆகும் பொருள் என்று உறுதி சொன்ன உண்மையினை ஓரும் நாள் எந்நாளோ *. 14. நிற்கும் நிலை #1271 பண்ணின் இசை போலப் பரமன்-பால் நின்ற திறன் எண்ணி அருளாகி இருக்கும் நாள் எந்நாளோ #1272 அறிவோடு அறியாமை அற்று அறிவினூடே குறியில் அறிவு வந்து கூடும் நாள் எந்நாளோ #1273 சொல்லால் மனத்தால் தொடராச் சம்பூரணத்தில் நில்லா நிலையாய் நிலைநிற்பது எந்நாளோ #1274 செம் கதிரின் முன் மதியம் தேசு அடங்கி நின்றிடல் போல் அங்கணனார் தாளில் அடங்கும் நாள் எந்நாளோ #1275 வானூடு அடங்கும் வளி போல இன்பு உருவாம் கோனூடு அடங்கும் குறிப்பு அறிவது எந்நாளோ #1276 செப்பு அரிய தண் கருணைச் சிற்சுகனார் பூரணத்தில் அப்பினிடை உப்பாய் அணையும் நாள் எந்நாளோ #1277 தூய அறிவான சுக ரூப சோதி-தன்பால் தீயில் இரும்பு என்னத் திகழும் நாள் எந்நாளோ #1278 தீது அணையாக் கர்ப்பூர தீபம் என நான் கண்ட சோதியுடன் ஒன்றித் துரிசு அறுவது எந்நாளோ #1279 ஆராரும் காணாத அற்புதனார் பொன் படிக் கீழ் நீர் ஆர் நிழல் போல் நிலாவும் நாள் எந்நாளோ #1280 எட்டத் தொலையாத எந்தை பிரான் சந்நிதியில் பட்டப்பகல் விளக்காய்ப் பண்புறுவது எந்நாளோ #1281 கருப்பு வட்டா வாய்மடுத்துக் கண்டார் நாப் போல் விருப்பு உவட்டா இன்பு உருவை மேவும் நாள் எந்நாளோ #1282 துச்சப் புலனால் சுழலாமல் தண் அருளால் உச்சிக் கதிர்ப் படிகம் ஒவ்வும் நாள் எந்நாளோ #1283 இ மா நிலத்தில் இருந்தபடியே இருந்து சும்மா அருளைத் தொடரும் நாள் எந்நாளோ #1284 தான் அவனாம் தன்மை எய்தித் தண்டம் என அண்டம் எங்கும் ஞான மத யானை நடத்தும் நாள் எந்நாளோ #1285 ஒன்று இரண்டும் இல்லதுவாய் ஒன்று இரண்டும் உள்ளதுவாய் நின்ற சமத்து நிலை நேர்பெறுவது எந்நாளோ #1286 பாசம் அகலாமல் பதியில் கலவாமல் மாசு_இல் சமத்து முத்தி வாய்க்கும் நாள் எந்நாளோ #1287 சிற்றறிவு மெள்ளச் சிதைந்து எம்மான் பேர்_அறிவை உற்று அறியா வண்ணம் அறிந்து ஓங்கும் நாள் எந்நாளோ #1288 தந்திரத்தை மந்திரத்தைச் சாரின் நவை ஆம் அறிவு என்று எந்தை உணர்வே வடிவாய் எய்தும் நாள் எந்நாளோ #1289 போக்கு_வரவு அற்ற வெளி போல் நிறைந்த போத நிலை நீக்கம்_அறக் கூடி நினைப்பு அறுவது எந்நாளோ #1290 காண்பானும் காட்டுவதும் காட்சியுமாய் நின்ற அந்த வீண் பாவம் போய் அதுவாய் மேவும் நாள் எந்நாளோ #1291 வாடாதே நானாவாய் மாயாதே எம் கோவை நாடாதே நாடி நலம் பெறுவது எந்நாளோ #1292 ஆடலையே காட்டி எனது ஆடல் ஒழித்து ஆண்டான் பொன் தாள் தலை மேல் சூடித் தழைக்கும் நாள் எந்நாளோ #1293 மேலொடு கீழ் இல்லாத வித்தகனார்-தம்முடனே பாலொடு நீர் போல் கலந்து பண்பு உறுவது எந்நாளோ #1294 அறியாது அறிந்து எமை ஆள் அண்ணலை நாமாகக் குறியாத வண்ணம் குறிக்கும் நாள் எந்நாளோ #1295 ஓராமல் மந்திரமும் உன்னாமல் நம் பரனைப் பாராமல் பார்த்துப் பழகும் நாள் எந்நாளோ #1296 ஊன் பற்றும் என்னோடு உறவு பற்றும் பூரணன்-பால் வான் பற்றும் கண் போல் மருவும் நாள் எந்நாளோ #1297 ஆண்டான் மௌனி அளித்த அறிவால் அறிவைத் தூண்டாமல் தூண்டித் துலங்கும் நாள் எந்நாளோ #1298 ஆணவத்தொடு அத்துவிதமானபடி மெய்ஞ்ஞானத் தாணுவினோடு அத்துவிதம் சாரும் நாள் எந்நாளோ *. 15. நிலைபிரிந்தோர் கூடுதற்கு உபாயம் #1299 கன்ம நெறி தப்பில் கடு நரகு என்று எந்நாளும் நன்மை தரும் ஞான நெறி நான் அணைவது எந்நாளோ #1300 ஞான நெறி-தானே நழுவிடினும் மு பதத்துள் ஆன முத்தி நல்கும் என அன்புறுவது எந்நாளோ #1301 பல் மார்க்கமான பல அடிபட்டேனும் ஒரு சொல் மார்க்கம் கண்டு துலங்கும் நாள் எந்நாளோ #1302 அத்துவிதம் என்ற அந்நியச் சொல் கண்டு உணர்ந்து சுத்த சிவத்தைத் தொடரும் நாள் எந்நாளோ #1303 கேட்டல் முதல் நான்காலே கேடு_இலா நால் பதமும் வாட்டம்_அற எனக்கு வாய்க்கும் நாள் எந்நாளோ #1304 என்னது யான் என்பது அற எவ்விடமும் என் ஆசான் சந்நிதியாக் கண்டு நிட்டை சாதிப்பது எந்நாளோ #1305 நாம் பிரமம் என்றால் நடுவே ஒன்று உண்டாமால் தேம்பி எல்லாம் ஒன்றாய்த் திகழும் நாள் எந்நாளோ #1306 மு_சகமே ஆதி முழுதும் அகண்டாகார சச்சிதானந்த சிவம்-தான் என்பது எந்நாளோ #1307 எவ்வடிவும் பூரணமாம் எந்தை உரு என்று இசைந்த அ வடிவுக்கு உள்ளே அடங்கும் நாள் எந்நாளோ #1308 சிந்தித்தது எல்லாம் சிவ பூரணமாக வந்தித்து வாழ்த்தி வணங்கும் நாள் எந்நாளோ #1309 தாங்கிய பார் விண் ஆதி தானே ஞானாக்கினியாய் ஓங்கும் யோக உணர்வு உற்றிடும் நாள் எந்நாளோ #1310 ஆசன மூர்த்தங்கள் அற அகண்டாகார சிவ பூசை செய ஆசை பொருந்தும் நாள் எந்நாளோ #1311 அஞ்சு_எழுத்தின் உண்மை அதுவான அப் பொருளை நெஞ்சு அழுத்தி ஒன்றாகி நிற்கும் நாள் எந்நாளோ #1312 அ உயிர் போல் எவ்வுயிரும் ஆன பிரான்-தன் அடிமை எவ்வுயிரும் என்று பணி யாம் செய்வது எந்நாளோ #1313 தேசிகர் கோனான திறன் மவுனி நம்-தமக்கு வாசிகொடுக்க மகிழும் நாள் எந்நாளோ #1314 குரு லிங்க சங்கமமாக் கொண்ட திரு_மேனி அருள் மயம் என்று அன்புற்று அருள் பெறுவது எந்நாளோ

மேல்

@46. காண்பேனோ என் கண்ணி

#1315 சிந்திக்கும்-தோறும் தெவிட்டா அமுதே என் புந்திக்குள் நீ-தான் பொருந்திடவும் காண்பேனோ #1316 கேவலத்தில் நான் கிடந்து கீழ்ப்படாது இன்ப அருள் காவலன்-பால் ஒன்றிக் கலந்திடவும் காண்பேனோ #1317 துரியம் கடந்த ஒன்றே தூ வெளியாய் நின்ற பெரிய நிறைவே உனை நான் பெற்றிடவும் காண்பேனோ #1318 மாசு_அற்ற அன்பர் நெஞ்சே மாறாத பெட்டகமாத் தேசு_உற்ற மா மணி நின் தேசினையும் காண்பேனோ #1319 மாயா விகார மலம் அகல எந்தை பிரான் நேயானுபூதி நிலை பெறவும் காண்பேனோ #1320 பொய் உலகும் பொய் உறவும் பொய் உடலும் பொய் எனவே மெய்ய நினை மெய் எனவே மெய்யுடனே காண்பேனோ #1321 வால் அற்ற பட்டம் என மாயா மனப் படலம் கால் அற்று வீழவும் முக்கண்_உடையாய் காண்பேனோ #1322 உள்ளும் புறம்பும் ஒருபடித்தாய் நின்று சுகம் கொள்ளும்படிக்கு இறை நீ கூட்டிடவும் காண்பேனோ #1323 காட்டுகின்ற முக்கண் கரும்பே கனியே என் ஆட்டம் எல்லாம் தீர உனது ஆடலையும் காண்பேனோ #1324 தூங்காமல் தூங்கிச் சுகப் பெருமான் நின் நிறைவில் நீங்காமல் நிற்கும் நிலை பெறவும் காண்பேனோ #1325 வாதவூராளி-தனை வான் கருணையால் விழுங்கும் போதவூர் ஏறே நின் பொன் அடியும் காண்பேனோ #1326 சாட்டை இலாப் பம்பரம் போல் ஆடும் சடசாலம் நாட்டம்_அற எந்தை சுத்த ஞான வெளி காண்பேனோ #1327 மன்று ஆடும் வாழ்வே மரகதம் சேர் மாணிக்கக் குன்றே நின் தாள் கீழ்க் குடி பெறவும் காண்பேனோ #1328 பொய் என்று அறிந்தும் எமைப் போகவொட்டாது ஐய இந்த வையம் கன மயக்கம் மாற்றிடவும் காண்பேனோ #1329 தாயினும் நல்ல தயாளுவே நின்னை உன்னித் தீயின் மெழுகு ஒத்து உருகும் சிந்தை வரக் காண்பேனோ #1330 என் செயினும் என் பெறினும் என் இறைவா ஏழையன் யான் நின் செயல் என்று உன்னும் நினைவு வரக் காண்பேனோ #1331 எள்ளத்தனையும் இரக்கம் இலா வன் பாவி உள்ளத்தும் எந்தை உலவிடவும் காண்பேனோ #1332 வஞ்சகத்துக்கு ஆலயமாம் வல்_வினையேன் ஆ கெடுவேன் நெஞ்சகத்தில் ஐயா நீ நேர்பெறவும் காண்பேனோ #1333 தொல்லைப் பிறவித் துயர் கெடவும் எந்தை பிரான் மல்லல் கருணை வழங்கிடவும் காண்பேனோ #1334 வாள் ஆரும் கண்ணார் மயல் கடலில் ஆழ்ந்தேன் சற்று ஆள் ஆக எந்தை அருள்செயவும் காண்பேனோ #1335 பஞ்சாய்ப் பறக்கும் நெஞ்சப் பாவியை நீ கூவி ஐயா அஞ்சாதே என்று இன் அருள்செயவும் காண்பேனோ #1336 ஆடு கறங்கு ஆகி அலமந்து உழன்று மனம் வாடும் எனை ஐயா நீ வா எனவும் காண்பேனோ #1337 சிட்டர்க்கு எளிய சிவனேயோ தீ_வினையேன் மட்டற்ற ஆசை மயக்கு அறவும் காண்பேனோ #1338 உள் நின்று உணர்த்தும் உலப்பு_இலா ஒன்றே நின் தண் என்ற சாந்த அருள் சார்ந்திடவும் காண்பேனோ #1339 ஓடும் கருத்து ஒடுங்க உள்ளுணர்வு தோன்ற நினைக் கூடும்படிக்கு இறை நீ கூட்டிடவும் காண்பேனோ #1340 வாக்கால் மனத்தால் மதிப்பு அரியாய் நின் அருளை நோக்காமல் நோக்கி நிற்கும் நுண் அறிவு காண்பேனோ #1341 இ உடம்பு நீங்கும் முனே எந்தாய் கேள் இன் அருளாம் அ உடம்புக்குள்ளே அவதரிக்கக் காண்பேனோ #1342 நித்தமாய் ஒன்றாய் நிரஞ்சனமாய் நிர்க்குணமாம் சுத்த வெளி நீ வெளியாய்த் தோன்றிடவும் காண்பேனோ #1343 கண் நிறைந்த மோனக் கருத்தே என் கண்ணே என் உள் நிறைந்த மாயை ஒழிந்திடவும் காண்பேனோ #1344 அத்தா விமலா அருளாளா ஆனந்த சித்தா எனக்கு உன் அருள் செய்திடவும் காண்பேனோ #1345 வீணே பிறந்து இறந்து வேசற்றேன் ஆசை அறக் காணேன் இறை நின் கருணை பெறக் காண்பேனோ #1346 சட்டை ஒத்த இ உடலைத் தள்ளும் முன்னே நான் சகச நிட்டையைப் பெற்று ஐயா நிருவிகற்பம் காண்பேனோ #1347 எல்லாம் தெரியும் இறைவா என் அல்லல் எலாம் சொல்லா முன் நீ தான் தொகுத்து இரங்கக் காண்பேனோ #1348 அண்ட பகிரண்டம் அனைத்தும் ஒருபடித்தாக் கண்டவர்கள் கண்ட திரு_காட்சியையும் காண்பேனோ #1349 ஊன் இருந்த காயம் உடன் இருப்ப எந்தை நின்-பால் வான் இருந்தது என்னவும் நான் வந்து இருக்கக் காண்பேனோ #1350 தினையத்தனையும் தெளிவு அறியாப் பாவியேன் நினைவில் பரம்பொருள் நீ நேர்பெறவும் காண்பேனோ #1351 துன்பம் எனும் திட்டு அனைத்தும் சூறையிட ஐயாவே இன்ப_வெள்ளம் வந்து இங்கு எதிர்ப்படவும் காண்பேனோ

மேல்

@47. ஆகாதோ என் கண்ணி

#1352 கல்லாத நெஞ்சம் கரைந்து உருக எத் தொழிற்கும் வல்லாய் நின் இன்பம் வழங்கினால் ஆகாதோ #1353 என்னை அறிய எனக்கு அறிவாய் நின்று அருள் நின் றன்னை அறிந்து இன்ப நலம் சாரவைத்தால் ஆகாதோ #1354 பொய் மயமேயான புரை தீர எந்தை இன்ப மெய் மயம் வந்து என்னை விழுங்கவைத்தால் ஆகாதோ #1355 மட்டில்லாச் சிற்சுகமாம் வாழ்வே நின் இன்ப மயம் சிட்டர் போல் யான் அருந்தித் தேக்கவைத்தால் ஆகாதோ #1356 அத்தா நின் பொன் தாள் அடிக்கே அனுதினமும் பித்தாக்கி இன்பம் பெருகவைத்தால் ஆகாதோ #1357 மெல்_இயலார் மோக விழற்கு இறைப்பேன் ஐயா நின் எல்லை_இல் ஆனந்த நலம் இச்சித்தால் ஆகாதோ #1358 சுட்டு அழகாய் எண்ணும் மனம் சூறையிட்டு ஆனந்த மயக் கட்டழகா நின்னைக் கலக்கவைத்தால் ஆகாதோ #1359 சோதியே நந்தாச் சுக வடிவே தூ வெளியே ஆதியே என்னை அறியவைத்தால் ஆகாதோ #1360 நேசம் சிறிதும் இலேன் நின்மலனே நின் அடிக்கே வாசம்செய இரங்கி வா என்றால் ஆகாதோ #1361 என் அறிவுக்குள்ளே இருந்தது போல் ஐயாவே நின் அறிவுள் நின்னுடன் யான் நிற்கவைத்தால் ஆகாதோ #1362 ஆதிப் பிரானே என் அல்லல் இருள் அகலச் சோதி ப்ரகாச மயம் தோற்றுவித்தால் ஆகாதோ #1363 ஆசைச் சுழல்_கடலில் ஆழாமல் ஐயா நின் நேசப் புணைத் தாள் நிறுத்தினால் ஆகாதோ #1364 பாச நிகளங்கள் எல்லாம் பஞ்சாகச் செஞ்செவே ஈச எனை வா என்று இரங்கினால் ஆகாதோ #1365 ஓயா உள் அன்பாய் உருகி வாய்விட்டு அரற்றிச் சேய் ஆகி எந்தை நின்னைச் சேரவைத்தால் ஆகாதோ #1366 ஆதியாம் வாழ்வாய் அகண்டிதமாய் நின்ற பரஞ் சோதி நீ என்னைத் தொழும்பன் என்றால் ஆகாதோ #1367 விண் ஆரக் கண்ட விழி போல் பரஞ்சோதி கண்ணார நின் நிறைவைக் காணவைத்தால் ஆகாதோ #1368 சேராமல் சேர்ந்து நின்று சின்மயனே நின் மயத்தைப் பாராமல் பார் என நீ பக்ஷம்வைத்தால் ஆகாதோ #1369 கண்ணாடி போல எல்லாம் காட்டும் திரு_அருளை உள் நாடி ஐயா உருகவைத்தால் ஆகாதோ #1370 மூல இருள் கால்வாங்க மூதறிவு தோன்ற அருள் கோலம் வெளியாக எந்தை கூடுவித்தால் ஆகாதோ #1371 சாற்று அரிய இன்ப_வெள்ளம் தாக்குமதில் நீ முளைக்கில் ஊற்றமுறும் என்ன அதில் உண்மை சொன்னால் ஆகாதோ #1372 கையும் குவித்து இரண்டு கண் அருவி பெய்ய அருள் ஐய நின் தாள் கீழே அடிமை நின்றால் ஆகாதோ

மேல்

@48 இல்லையோ என் கண்ணி

#1373 ஏதும் தெரியாது எனை மறைத்த வல் இருளை நாத நீ நீக்க ஒரு ஞான விளக்கு இல்லையோ #1374 பணி அற்று நின்று பதைப்பு அற என் கண்ணுள் மணி ஒத்த சோதி இன்ப_வாரி எனக்கு இல்லையோ #1375 எம்மால் அறிவது அற எம்பெருமான் யாதும் இன்றிச் சும்மா இருக்க ஒரு சூத்திரம்-தான் இல்லையோ #1376 நாய்க்கும் கடை ஆனேன் நாதா நின் இன்ப மயம் வாய்க்கும்படி இனி ஓர் மந்திரம்-தான் இல்லையோ #1377 ஊனாக நிற்கும் உணர்வை மறந்து ஐயா நீ தான் ஆக நிற்க ஒரு தந்திரம்-தான் இல்லையோ #1378 அல்லும்_பகலும் அகண்ட வடிவே உனை நான் புல்லும்படி எனக்கு ஓர் போதனை-தான் இல்லையோ

மேல்

@49. வேண்டாவோ என் கண்ணி

#1379 கண்ட வடிவு எல்லாம் நின் காட்சி என்றே கை குவித்துப் பண்டும் இன்றும் நின்ற என்னைப் பார்த்து இரங்க வேண்டாவோ #1380 வாதனையோடு ஆடும் மனப் பாம்பு மாய ஒரு போதனை தந்து ஐயா புலப்படுத்த வேண்டாவோ #1381 தன்னை அறியத் தனி அறிவாய் நின்று அருளும் நின்னை அறிந்து என் அறிவை நீங்கி நிற்க வேண்டாவோ #1382 அள்ளக் குறையா அகண்டிதானந்தம் எனும் வெள்ளம் எனக்கு ஐயா வெளிப்படுத்த வேண்டாவோ #1383 அண்டனே அண்டர் அமுதே என் ஆர்_உயிரே தொண்டனேற்கு இன்பம் தொகுத்து இரங்க வேண்டாவோ #1384 பாராதே நின்று பதையாதே சும்மா-தான் வாராய் எனவும் வழிகாட்ட வேண்டாவோ

மேல்

@50. நல்லறிவே என் கண்ணி

#1385 எண் நிறைந்த மேன்மை படைத்து எவ்வுயிர்க்கும் அ உயிராய்க் கண் நிறைந்த சோதியை நாம் காண வா நல் அறிவே #1386 சித்தான நாம் என் சடத்தை நாம் என்ன என்றும் சத்தான உண்மை-தனைச் சார வா நல் அறிவே #1387 அங்கும் இங்கும் எங்கும் நிறை அற்புதனார் பொற்பு அறிந்து பங்கயத்துள் வண்டாய்ப் பயன் பெற வா நல் அறிவே #1388 கான்ற சோறு என்ன இந்தக் காசினி வாழ்வு அத்தனையும் தோன்ற அருள் வெளியில் தோன்ற வா நல் அறிவே

மேல்

@51. பலவகைக் கண்ணி

#1389 என் அரசே கேட்டிலையோ என் செயலோ ஏதும் இலை தன் அரசு நாடு ஆகித் தத்துவம் கூத்தாடியதே #1390 பண்டு ஒரு கால் நின்-பால் பழக்கம் உண்டோ எந்தை நினைக் கண்டு ஒரு கால் போற்றக் கருத்தும் கருதியதே #1391 கண்டனவே காணும் அன்றிக் காணாவோ காணா என் கொண்டு அறிவேன் எந்தை நினைக் கூடும் குறிப்பினையே #1392 கல்_ஆல் அடியில் வளர் கற்பகமே என் அளவோ பொல்லா வினைக்குப் பொருத்தம்-தான் சொல்லாயோ #1393 தப்பிதம் ஒன்று இன்றி அது தானாக நிற்க உண்மை செப்பியதும் அல்லால் என் சென்னி-அது தொட்டனையே #1394 மாசு_ஆன நெஞ்சன் இவன் வஞ்சன் என்றோ வாய் திறந்து பேசா மௌனம் பெருமான் படைத்ததுவே #1395 கற்பது எல்லாம் கற்றேம் முக்கண்_உடையாய் நின் பணியாய் நிற்பது கற்று அன்றோ நிருவிகற்பம் ஆவதுவே #1396 முன் அளவு_இல் கன்மம் முயன்றான் இவன் என்றோ என்_அளவில் எந்தாய் இரங்காது இருந்ததுவே #1397 நெஞ்சகம் வேறாகி நினைக் கூட எண்ணுகின்ற வஞ்சகனுக்கு இன்பம் எந்தாய் வாய்க்கும் ஆறு எவ்வாறே #1398 பள்ளங்கள்-தோறும் பரந்த புனல் போல் உலகில் உள்ளம் பரந்தால் உடையாய் என் செய்வேனே #1399 முன் நினைக்கப் பின் மறைக்கும் மூட இருள் ஆ கெடுவேன் என் நினைக்க என் மறக்க எந்தை பெருமானே #1400 வல்லாளா மோனா நின் வான் கருணை என்னிடத்தே இல்லாதே போனால் நான் எவ்வண்ணம் உய்வேனே #1401 வாக்கும் மனமும் மவுனமுற எந்தை நின்னை நோக்கும் மவுனம் இந்த நூல்_அறிவில் உண்டாமோ #1402 ஒன்றாய்ப் பலவாய் உலகம் எங்கும் தானேயாய் நின்றாய் ஐயா எனை நீ நீங்கற்கு எளிதாமோ #1403 ஆவித் துணையே அரு மருந்தே என்றனை நீ கூவி அழைத்து இன்பம் கொடுத்தால் குறைவு ஆமோ #1404 எத்தனையோ நின் விளையாட்டு எந்தாய் கேள் இவ்வளவு என்று அத்தனையும் என்னால் அறியும் தரம் ஆமோ #1405 தேடுவார் தேடும் சிவனேயோ நின் திரு_தாள் கூடுவான் பட்ட துயர் கூறற்கு எளிது ஆமோ #1406 பற்றினதைப் பற்றும் எந்தாய் பற்று விட்டால் கேவலத்தில் உற்றுவிடும் நெஞ்சம் உனை ஒன்றி நிற்பது எப்படியோ #1407 ஒப்பு_இலா ஒன்றே நின் உண்மை ஒன்றும் காட்டாமல் பொய்ப் புவியை மெய் போல் புதுக்கிவைத்தது என்னேயோ #1408 காலால் வழி தடவும் காலத்தே கண் முளைத்தால் போலே எனது அறிவில் போந்து அறிவாய் நில்லாயோ #1409 தன் அரசு நாடாம் சடசால பூமி மிசை என் அரசே என்னை இறையாக நாட்டினையோ #1410 திங்கள் அமுதா நின் திரு_வாக்கை விட்டு அரசே பொங்கு விடம் அனைய பொய் நூல் புலம்புவனோ #1411 உன்னஉன்ன என்னை எடுத்து உள் விழுங்கும் நின் நிறைவை இன்னம்இன்னம் காணாமல் எந்தாய் சுழல்வேனோ #1412 ஆரா அமுது அனைய ஆனந்த_வாரி என்-பால் தாராமல் ஐயா நீ தள்ளிவிட வந்தது என்னோ

மேல்

@52 நின்றநிலை

#1413 நின்ற நிலையே நிலையா வைத்து ஆனந்த நிலை தானே நிருவிகற்ப நிலையும் ஆகி என்றும் அழியாத இன்ப_வெள்ளம் தேக்கி இருக்க எனைத் தொடர்ந்துதொடர்ந்து இழுக்கும் அந்தோ. #1414 இருக்கு ஆதி மறை முடிவும் சிவாகமம் ஆதி இதயமும் கைகாட்டு எனவே இதயத்து உள்ளே ஒருக்காலே உணர்ந்தவர்கட்கு எக்காலும் தான் ஒழியாத இன்ப_வெள்ளம் உலவாநிற்கும். #1415 கற்றதும் கேட்டதும் தானே ஏதுக்காகக் கட_படம் என்று உருட்டுதற்கோ கல்_ஆல் எம்மான் குற்றம்_அறக் கைகாட்டும் கருத்தைக் கண்டு குணம் குறி அற்று இன்ப நிட்டை கூட அன்றோ.

மேல்

@53 பாடுகின்ற பனுவல்

#1416 பாடுகின்ற பனுவலோர்கள் தேடுகின்ற செல்வமே நாடுகின்ற ஞான மன்றில் ஆடுகின்ற அழகனே #1417 அத்தன் என்ற நின்னையே பத்திசெய்து பனுவலால் பித்தன் இன்று பேசவே வைத்தது என்ன வாரமே #1418 சிந்தை அன்பு சேரவே நைந்து நின்னை நாடினேன் வந்துவந்து உன் இன்பமே தந்து இரங்கு தாணுவே #1419 அண்டர் அண்டம் யாவும் நீ கொண்டு நின்ற கோலமே தொண்டர் கண்டு சொரி கணீர் கண்ட நெஞ்சு கரையுமே #1420 அன்னை போல அருள் மிகுத்து மன்னும் ஞான வரதனே என்னையே எனக்கு அளித்த நின்னை யானும் நினைவனே

மேல்

@54 ஆனந்தக்களிப்பு

#1421 ஆதி அனாதியும் ஆகி எனக்கு ஆனந்தமாய் அறிவாய் நின்று இலங்கும் சோதி மௌனியாய்த் தோன்றி அவன் சொல்லாத வார்த்தையைச் சொன்னாண்டி தோழி #1422 சொன்ன சொல் ஏது என்று சொல்வேன் என்னைச் சூதாய்த் தனிக்கவே சும்மா இருத்தி முன்னிலை ஏதும் இல்லாதே சுகம் முற்றச்செய்தே எனைப் பற்றிக்கொண்டாண்டி #1423 பற்றிய பற்று அற உள்ளே தன்னைப் பற்றச் சொன்னான் பற்றிப் பார்த்த இடத்தே பெற்றதை ஏது என்று சொல்வேன் சற்றும் பேசாத காரியம் பேசினான் தோழி #1424 பேசா இடும்பைகள் பேசிச் சுத்தப் பேய் அங்கம் ஆகிப் பிதற்றித் திரிந்தேன் ஆசா பிசாசைத் துரத்தி ஐயன் அடி_இணைக் கீழே அடக்கிக்கொண்டாண்டி #1425 அடக்கிப் புலனைப் பிரித்தே அவன் ஆகிய மேனியில் அன்பை வளர்த்தேன் மடக்கிக்கொண்டான் என்னைத் தன்னுள் சற்றும் வாய் பேசா வண்ணம் மரபும் செய்தாண்டி #1426 மரபைக் கெடுத்தனன் கெட்டேன் இத்தை வாய்விட்டுச் சொல்லிடின் வாழ்வு எனக்கு இல்லை கரவு புருஷனும் அல்லன் என்னைக் காக்கும் தலைமைக் கடவுள் காண் மின்னே #1427 கடலின் மடை விண்டது என்ன இரு கண்களும் ஆனந்தக் கண்ணீர் சொரிய உடலும் புளகிதமாக எனது உள்ளம் உருக உபாயம் செய்தாண்டி #1428 உள்ளதும் இல்லதுமாய் முன் உணர்வதுவாய் உன் உளம் கண்டது எல்லாம் தள் எனச் சொல்லி என் ஐயன் என்னைத் தான் ஆக்கிக்கொண்ட சமர்த்தைப் பார் தோழி #1429 பார் ஆதி பூதம் நீ அல்லை உன்னிப் பார் இந்திரியம் கரணம் நீ அல்லை ஆராய் உணர்வு நீ என்றான் ஐயன் அன்பாய் உரைத்த சொல் ஆனந்தம் தோழி #1430 அன்பருக்கு அன்பான மெய்யன் ஐயன் ஆனந்த மோனன் அருள் குருநாதன் தன் பாதம் சென்னியில் வைத்தான் என்னைத் தான் அறிந்தேன் மனம்-தான் இறந்தேனே #1431 இறப்பும் பிறப்பும் பொருந்த எனக்கு எவ்வணம் வந்தது என்று எண்ணி யான் பார்க்கில் மறப்பும் நினைப்புமாய் நின்ற வஞ்ச மாயா மனத்தால் வளர்ந்தது தோழி #1432 மனதே கல்லால் எனக்கு அன்றோ தெய்வம் மௌனகுரு ஆகி வந்து கைகாட்டி எனதாம் பணி அற மாற்றி அவன் இன் அருள்_வெள்ளத்து இருத்திவைத்தாண்டி #1433 அருளால் எவையும் பார் என்றான் அத்தை அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன் இருளான பொருள் கண்டது அல்லால் கண்ட என்னையும் கண்டிலன் என்னேடி தோழி #1434 என்னையும் தன்னையும் வேறா உள்ளத்து எண்ணாத வண்ணம் இரண்டற நிற்கச் சொன்னதுமோ ஒரு சொல்லே அந்தச் சொல்லால் விளைந்த சுகத்தை என் சொல்வேன் #1435 விளையும் சிவானந்த பூமி அந்த வெட்டவெளி நண்ணித் துட்ட இருளாம் களையைக் களைந்து பின் பார்த்தேன் ஐயன் களை அன்றி வேறு ஒன்றும் கண்டிலன் தோழி #1436 கண்டார் நகைப்பு உயிர் வாழ்க்கை இரு கண் காண நீங்கவும் கண்டோம் துயில்-தான் கொண்டார் போல் போனாலும் போகும் இதில் குணம் ஏது நலம் ஏது கூறாய் நீ தோழி #1437 நலம் ஏதும் அறியாத என்னைச் சுத்த நாதாந்த மோனமாம் நாட்டம் தந்தே சஞ் சலம் ஏதும் இல்லாமல் எல்லாம் வல்லான் தாளால் என் தலை மீது தாக்கினான் தோழி #1438 தாக்கும் நல் ஆனந்த சோதி அணு- தன்னில் சிறிய எனைத் தன் அருளால் போக்கு_வரவு அற்று இருக்கும் சுத்த பூரணம் ஆக்கினான் புதுமை காண் மின்னே #1439 ஆக்கி அளித்துத் துடைக்கும் தொழில் அத்தனை வைத்தும் எள்ளத்தனையேனும் தாக்கு அற நிற்கும் சமர்த்தன் உள்ள சாட்சியைச் சிந்திக்கத் தக்கது தோழி #1440 சிந்தை பிறந்ததும் ஆங்கே அந்தச் சிந்தை இறந்து தெளிந்ததும் ஆங்கே எந்த நிலைகளும் ஆங்கே கண்ட யான்-தான் இரண்டு அற்று இருந்ததும் ஆங்கே #1441 ஆங்கு என்றும் ஈங்கு என்றும் உண்டோ சச்சி தானந்த சோதி அகண்ட வடிவாய் ஓங்கி நிறைந்தது கண்டால் பின்னர் ஒன்று என்று இரண்டு என்று உரைத்திடலாமோ #1442 என்றும் அழியும் இக் காயம் இத்தை ஏதுக்கு மெய் என்று இருந்தீர் உலகீர் ஒன்றும் அறியாத நீரோ யமன் ஓலை வந்தால் சொல்ல உத்தரம் உண்டோ #1443 உண்டோ நமைப் போல வஞ்சர் மலம் ஊறித் ததும்பும் உடலை மெய் என்று கொண்டோ பிழைப்பது இங்கு ஐயோ அருள் கோலத்தை மெய் என்று கொள்ளவேண்டாவோ #1444 வேண்டா விருப்பும் வெறுப்பும் அந்த வில்லங்கத்தாலே விளையும் சனனம் ஆண்டான் உரைத்தபடியே சற்றும் அசையாது இருந்துகொள் அறிவு ஆகி நெஞ்சே #1445 அறிவாரும் இல்லையோ ஐயோ என்னை யார் என்று அறியாத அங்க தேசத்தில் வறிதே காம_தீயில் சிக்கி உள்ள வான் பொருள் தோற்கவோ வந்தேன் நான் தோழி #1446 வந்த வரவை மறந்து மிக்க மாதர் பொன் பூமி மயக்கத்தில் ஆழும் இந்த மயக்கை அறுக்க எனக்கு எந்தை மெய்ஞ்ஞான எழில் வாள் கொடுத்தான் #1447 வாள் ஆரும் கண்ணியர் மோகம் யம வாதைக் கனலை வளர்க்கும் மெய் என்றே வேள் ஆனவனு மெய் விட்டான் என்னில் மிக்கோர் துறக்கை விதி அன்றோ தோழி #1448 விதிக்கும் பிரபஞ்சம் எல்லாம் சுத்த வெயில் மஞ்சள் என்னவே வேதாகமங்கள் மதிக்கும் அதனை மதியார் அவர் மார்க்கம் துன்_மார்க்கம் சன்_மார்க்கமோ மானே #1449 துன்_மார்க்க மாதர் மயக்கம் மனத் தூயர்க்குப் பற்றாது சொன்னேன் சனகன்- தன் மார்க்கம் நீதி திட்டாந்தம் அவன்- தான் அந்தமான சதானந்தன் அன்றோ #1450 அன்று என்றும் ஆம் என்றும் உண்டோ உனக்கு ஆனந்தம் வேண்டின் அறிவு ஆகிச் சற்றே நின்றால் தெரியும் எனவே மறை நீதி எம் ஆதி நிகழ்த்தினான் தோழி

மேல்

@55 அகவல்

#1451 திரு_அருள் ஞானம் சிறந்து அருள் கொழிக்கும் குரு வடிவான குறைவு_இலா நிறைவே நின்ற ஒன்றே நின்மல வடிவே குன்றாப் பொருளே குணப் பெரும் கடலே ஆதியும் அந்தமும் ஆனந்த மயமாம் 5 சோதியே சத்தே தொலைவு_இலா முதலே சீர் மலி தெய்வத் திரு_அருள் அதனால் பார் முதல் அண்டப் பரப்பு எலாம் நிறுவி அண்டசம் முதலாம் எண் தரும் நால் வகை ஏழு பிறவியில் தாழாது ஓங்கும் 10 அனந்த யோனியில் இனம் பெற மல்க அணு முதல் அசலம் ஆன ஆக்கையும் கணம் முதல் அளவு_இல் கற்ப காலமும் கன்மப் பகுதித் தொன்மைக்கு ஈடா இமைப்பொழுதேனும் தமக்கு என அறிவு இலா 15 ஏழை உயிர்த் திரள் வாழ அமைத்தனை எவ்வுடல் எடுத்தார் அ உடல் வாழ்க்கை இன்பம் எனவே துன்பம் இலை எனப் பிரியா வண்ணம் உரிமையின் வளர்க்க ஆதரவாகக் காதலும் அமைத்திட்டு 20 ஊகம் இன்றியே தேகம் நான் என அறிவு போல் அறியாமை இயக்கிக் காலமும் கன்மமும் கட்டும் காட்டியே மேலும் நரகமும் மேதகு சுவர்க்கமும் மால்_அற வகுத்தனை ஏலும் வண்ணம் 25 அமையாக் காதலில் சமய கோடி அறம் பொருள் ஆதி திறம்படு நிலையில் குருவாய் உணர்த்தி ஒருவர் போல் அனைவரும் தத்தம் நிலையே முத்தி முடிவு என வாத தர்க்கமும் போத நூல்களும் 30 நிறைவில் காட்டியே குறைவு இன்றி வயங்க அங்கங்கு நின்றனை எங்கும் ஆகிச் சமயாதீதத் தன்மை ஆகி இமையோர் முதலிய யாவரும் முனிவரும் தம்மைக் கொடுத்திட்டு எம்மை ஆள் என 35 ஏசற்று இருக்க மாசு_அற்ற ஞான நலமும் காட்டினை ஞானம்_இலேற்கு நிலையும் காட்டுதல் நின் அருள் கடனே

மேல்

@56 வண்ணம்

#1452 அரு என்பனவும் அன்றி உரு என்பனவும் இன்றி அகமும் புறமும் இன்றி முறை பிறழாது குறியும் குணமும் அன்றி நிறைவும் குறைவும் அன்றி மறை ஒன்று என விளம்ப விமலம்-அது ஆகி அசலம் பெற உயர்ந்து விபுலம் பெற வளர்ந்து 5 சபலம்சபலம் என்று உள் அறிவினர் காண ஞான வெளியிடை மேவும் உயிராய் அனல் ஒன்றிட எரிந்து புகை மண்டிடுவது அன்று புனல் ஒன்றிட அமிழ்ந்து மடிவு இலது ஊதை சருவும் பொழுது உயர்ந்து சலனம் படுவது அன்று 10 சமர்கொண்டு அழிவது அன்று ஓர் இயல்பினது ஆகும் அவன் என்பதுவும் அன்றி அவள் என்பதுவும் அன்றி அது என்பதுவும் அன்றி எழில் கொடு உலாவும் ஆரும் நிலை அறியாதபடியே இருள் என்பதுவும் அன்றி ஒளி என்பதுவும் அன்றி 15 எவையும் தன் உள் அடங்க ஒரு முதல் ஆகும் உளது என்பதுவும் அன்றி இலது என்பதுவும் அன்றி உலகம் தொழ இருந்த அயன் முதலோர்கள் எவரும் கவலைகொண்டு சமயங்களில் விழுந்து சுழலும் பொழுது இரங்கி அருள் செயுமாறு 20 கூறு அரிய சக மாயை அறவே எனது என்பதை இகழ்ந்த அறிவின் திரளில் நின்றும் அறிவு ஒன்று என விளங்கும் உபயம் அது ஆக அறியும் தரமும் அன்று பிறியும் தரமும் அன்று அசரம் சரம் இரண்டின் ஒருபடி ஆகி 25 எது சந்ததம் நிறைந்தது எது சிந்தனை இறந்தது எது மங்கள சுபம் கொள் சுக வடிவு ஆகும் யாது பரம் அதை நாடி அறி நீ பருவம் குலவுகின்ற மட மங்கையர் தொடங்கு கபடம்-தனில் விழுந்து கெடு நினைவு ஆகி 30 வலையின் புடை மறிந்த மறி என்று அவசமுண்டு வசனம் திரமும் இன்றி அவர் இதழ் ஊறல் பருகும் தொழில் இணங்கி இரவும்_பகலும் இன்_சொல் பருகும்படி துணிந்து குழல் அழகு ஆக மாலை வகை பல சூடி உடனே 35 பதுமம்-தனை இசைந்த முலை என்று அதை உகந்து வரி வண்டு என உழன்று கலிலென வாடும் சிறு கிண்கிணி சிலம்பு புனை தண்டைகள் முழங்கும் ஒலி நன்று என மகிழ்ந்து செவி கொள நாசி பசு மஞ்சளின் வியந்த மணமும் திடம் உகந்து 40 பவம் மிஞ்சிட இறைஞ்சி வரிசையினூடு காலின் மிசை முடி சூடி மயலாய் மருளும் தெருளும் வந்து கதி என்பதை மறந்து மதனன் சலதி பொங்க இரணம்-அது ஆன அளி புண்-தனை வளைந்து விரல் கொண்டு உற அளைந்து 45 சுரதம் சுகம் இது என்று பரவசமாகி மருவும் தொழில் மிகுந்து தினமும் விஞ்சி வளரும் பிறை குறைந்தபடி மதி சோர வானரம்-அது என மேனி திரை ஆய் வயதும் பட எழுந்து பிணியும் திமிதிமென்று 50 வரவும் செயல் அழிந்து உள் இருமலும் ஆகி அனமும் செலுதல் இன்றி விழியும் சுடர்கள் இன்று முகமும் களைகள் இன்று சரி என நாடி மனை இன்புற இருந்த இனமும் குலை குலைந்து கலகம்செய இருண்ட யமன் வரும் வேளை 55 ஏது துணை பழிகார மனமே *

மேல்

No comments:

Post a Comment

தொடர்பு படிவம்

Name

Email *

Message *