Wednesday, September 21, 2022

home

                  இணைய வழிசிவபெருமான்

                 தேவார 

                   சிவத்தொண்டரடியவர்கள் 

இவ்விணையத்தை பயன்படுத்தும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் சிவபெருமான் தான் எழுந்தருளியுள்ள தன்மையினை 

உணர்த்தவும், யாவற்றிலும் தன்னையே காணும்; பேதமற்ற பரிபக்குவ நிலையை அளித்தருளவும்

முக்கண் முதல்வர்

திருவுள்ளம் கொள்வோனாக!

              ஓம் கம் கணபதயே நம!

சிவ! சிவ!

ஓம் நம சிவாய! சிவாய நம ஓம்! சிவ! சிவ!

எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கு அருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ் செவி நீள் முடிக்
  கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!.          

   மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்!

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்!.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே!.

அவன் ஒருவனே அனைத்துமாகவும் , அனைத்திலும் அவன் ஒருவனாகவும் இரண்டறக்கலந்து nbsp; இருப்பவனை ,பஞ்ச பூதங்கள் ஆனவனை , யாண்டும் இளமையோடு கூடிய அழகனை ,  தேவர்களுக்கும் எட்டாத அதீதத்தில் இருக்கும் சித் ஆகாசனை , அடியவர்களுக்கு எளி வந்த பிரானை,பற்றிப் பிடித்து வளர்வதற்குக் கொம்பு ஒன்றும் இல்லாத கொடி சுழல்வது போன்று மனம் தடுமாறுகிற ,தவிக்கின்ற நம்மைக்  காத்து அருள்வானை ,தேவர்களுக்கு மகாதேவராகவும் அனைத்துயிர்களுக்கும் அம்மையப்பராகவும் உள்ள  நம் ஈசன் சிவபெருமான் அவன் வாக்கின் கண் எழுந்த "மேலான வழிபாடாவது போற்றியுரைக்கும் புகழுரைகளே யாகும்"  என்பதனால் தானே தனது உயிராம் மெய்யடியார்கள் மூலம் உலகம் உய்ய, உயிர்கள் தனதியல்பாம் சிவத்தினுள் நிலை பெற்று  சிவானந்தத்தில் என்றென்றும் திளைத்திருக்க அருளிய  தேன்மதுரத்  தேவாரத்  திருமுறைப்  பதிகங்களை  , பொருளுணர்ந்து , நாவார, நெஞ்சுர மகிழ்ந்து பாடி ஈசன் திருவடியில் என்றென்றும் மாறா அன்பினோடு மனம், மெய் ,மொழியினால் ஒன்றாகி இரண்டறக்கலந்து அவனருளால் நிலைத்து இருப்போமாக! 

மற்றுநீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம்
பெற்றனை நமக்கு அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனை பாட்டே ஆகும் ஆதலான் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடுக  என்றார்  தூ மறை பாடும் வாயார்!.
                          திருமலைச் சருக்கம் - தடுத்தாட்கொண்ட புராணம் - பாடல் எண் : 216
( பொருள்)
தூய்மையான மறைகளைப் பண்டு அருளிச் செய்த சிவபெருமான், மேலும் நீ என்னுடன் வன்மையான சொற்களைச் சொல்லி வழக்கிட்டமையால், வன்தொண்டன் என்னும் பெயரைப் பெற்றாய். நமக்கும் அன்பினால் செய்யும் திருமுழுக்காட்டுதல் திருமாலை அணிவித்தல், திருவிளக்கிடுதல் முதலாய வழிபாடுகளினும் மேலான வழிபாடாவது போற்றியுரைக்கும் புகழுரைகளே யாகும். 

இப்பெரியபுராணப் பாடலில்  சுவாமியே தமிழில் பாடுவது தமக்கு விருப்பம் என்று தன் தோழர் சுந்தரருக்கு மொழிந்தமையால் , அவனருளால் அவன் தாள்  வணங்கி   நாமும்  பாடுவோமாக, பாடி இம்மை,மறுமை உய்வு பெறுவோமாக!.

ஒவ்வொரு வரியின் இயல்பையும் ,நயத்தையும்,வார்த்தைகள் தொடுத்த விதத்தையும், ஒவ்வொரு வார்த்தையின் பொருளையும்  உணர்ந்து  எளிதில் பாட , படிக்கத் துணைபுரியும் வண்ணம்  சந்தி பிரித்த நடையில் எளிதில் பொருள் புரிந்து சிவனைப் பாமாலையால் துதித்து அகமகிழ, சீர்களாகப் பிரித்து இடைவெளியிட்டுப் படைக்கப்பட்டுள்ளது.அதன் அருகிலேயே பொருளுரையும் கொடுக்கப்பட(ட்டுள்)(உ)ளது.சுந்தரத்தமிழில் அவனருளால் தேன் மதுரத் தேவாரப்பாக்களால் அவனைத்துதித்து, உள்ளும், புறமும் அர்ச்சித்து,  அவனுள் ஐக்கியமாக அவன் அருள் துணை செய்யட்டும்.

பழந்தமிழ் திருமுறைப் பதிகங்களைப்  படிக்க, பாட  வேண்டும் என்னும் ஆர்வத்துடன் முயல்பவர்கள் , அதன்  முதல் வரியைக் கூடப்  படித்து, எல்லோராலும் பொருள்  உணர்ந்துகொள்ள முடிவதில்லை. அசை - சீர் முறையில் உள்ள  செய்யுள் வரிகளை, படிக்கும் முறை தெரியாமல் மேலும் தொடர மனமில்லாமல் இடையிலேயே நிறுத்திவிட வாய்ப்பு அமைகிறது. 

அசை - சீர்களை, சொற்களாகப் பிரித்துப் படிக்க முடிந்தால்தான் ஒரு செய்யுளை, இன்னொரு முறை படித்து  ஓரளவு புரிந்துகொள்ளும் விருப்பம் ஏற்படும். பொருள் தெரியாத வார்த்தைகளுக்கு அகரமுதலி பார்த்துப் பொருள் தெரிந்து கொள்ளலாம் என்னும் எண்ணம் ஏற்படும். ஆனால், சொற்களாகப் பிரித்து படிக்கத் தெரியாததால், பழைய தமிழ் இலக்கியச் செய்யுள் நூல்களைத் தொட நாம் அஞ்சுகிறோம். பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் செய்யுள் வடிவமே. அதிலும் பெரும்பாலானவை பக்தி இலக்கியங்களே. 
 
“திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்” ,பொருளவுணர்ந்து படித்தாலல்லவோ  வாய் மணக்கும் . “திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்”, அதனில் உள்கலந்து படித்தாலல்லவோ உள்ளம் உருகும், மனம் கரையும், உள்ளேவுள்ள சிவம் வெளியாகி எங்கும் வியாபித்து நிற்க்கும்.

இதனைக் கருத்தில் கொண்டு முடிந்தளவு இவ்வலைதளப் பதிப்பில் உள்ள ஒவ்வொரு பதிகமும், திருமுறைப்பாடல்களும்   முதலில்,  அசை - சீர் வரிசை பிரித்து பொருள் உணரும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. அடுத்து அதே செய்யுள் சொல் பிரிக்கப்பட்டு எளிதாகப் படிக்கும் முறையில் உள்ளது. அதற்கு முழு சொற்பொருள் விளக்கமும் அதனருகிலேயேக்  கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், ஒவ்வொரு பதிக்கத்தையும்  ஆர்வத்துடன் படித்துப் பொருள் புரிந்து கொண்டு ,கருத்துகளை,சிவ மகா மகிமையை எளிதில் நினைவில் நிறுத்திக்  கொண்டு, தன் பெருமை தானறியா மதுரமொழியினனை, அம்மையப்பனை, ஆதிமுதல்வனை, உள்ளும் புறமும் இருப்பவனை,உட்கலந்த ஜோதியை, உள்ளத் தூய்மையாலும் , நாவார, சளைக்காமல் அனுதினமும் பாடித்துதித்து அவனுள் மகிழ்ந்து இருப்போமாக!.
 
எடுத்துக்காட்டாக: பாடல் 

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே!.

சீர் பிரித்த பின்

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடிக்
காடு உடைய சுட லைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் உன்னை நாள் பணிந்து  ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!.

(பொருள்)
தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச் சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை  உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!.

பழந்தமிழ்ச்  திருமுறை பக்தி இலக்கிய  பாடல்கள் யாவற்றையும் இந்த முறையிலேயே  இனி பதிப்பிக்க முன்வர வேண்டும். இதன்மூலம் தேவாரப்பாடல்  படிக்க முயல்வோரின் நேரமும், முயற்சியும் வீணாகாது. தமிழ் திருமுறைப் படிக்க விரும்பும் ஒவ்வொருவரும் பாடலை  முழுமையாகப் படித்துப் பயன்பெறமுடியும். 

சைவ திருமுறை

மன்னன் நினைத்திருந்தால் அவர்களைச் சிறையில் பூட்டி, பாடல்களைப் பறிமுதல் பண்ணியிருக்கலாம். ஆனால் ராஜராஜன் தூய சிவபக்தன். தஞ்சைப் பெரிய கோயில் கண்டவன்.அதனால் அவன் தீக்ஷிதர்களிடம் எதிர் வாதம் செய்யாமல், மூவர் திருமேனியையும் சிலை வடிவில் கோயிலுக்கு எடுத்து வந்து நிறுத்தி, இதோ தேவாரம் பாடியோர் வந்துவிட்டார்கள். சுவடியைக் கொடுங்கள் என்று கேட்டுப் பெற்றான். அதனால் நமக்குக் கிடைத்தது அமிழ்தினும் இனிய தேவாரம். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் சேர்ந்து 276 சிவாலயங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு தேவாரம் எனப்படும்.

இவற்றுள் பதினோரு திருமுறைகளைத் தொகுத்து வகுத்தவர் நம்பியாண்டார் நம்பி.பின்னர் அநபாய சோழன் என்ற மன்னன் சேக்கிழாரைக் கொண்டு திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணத்தை அரங்கேறச் செய்து அதைப் பன்னிரண்டாவது திருமுறை ஆக்கினான்.

சிவ(த்) திருவாளர்கள் , அருளாளர்கள்

பாடல் பாடப் பெற்ற தேவார சிவாலயங்கள்  எண்ணிக்கை

அப்பர், திருஞான சம்பந்தர், சுந்தரர் பாடியது

44

திருஞான சம்பந்தர், அப்பர் பாடியது

52

திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடியது

13

அப்பர், சுந்தரர் பாடியது

2

திருஞானசம்பந்தர் மட்டும் பாடியது

112

அப்பர் மட்டும் பாடியது

28

சுந்தரர் மட்டும் பாடியது

25

மூவரால் பாடல் பெற்ற தேவார ஸ்தலங்கள் மொத்தம்

276

 

திருமுறை

பாடல்கள் எண்ணிக்கை

முதல் திருமுறை (திருஞானசம்பந்தர் )

1469

இரண்டாம் திருமுறை (திருஞானசம்பந்தர் )

1331

மூன்றாம் திருமுறை (திருஞானசம்பந்தர் )

1346

1,2,3ம் திருமுறைகள் - திருக்கடைக்காப்பு.

திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட தேவாரப் பாடல்கள் (திருக்கடைக்காப்பு ) மொத்தம் எண்ணிக்கை.

4146

நான்காம் திருமுறை-திருநாவுக்கரசு

1069

ஐந்தாம் திருமுறை-திருநாவுக்கரசு

1015

ஆறாம் திருமுறை-திருநாவுக்கரசு

980

4, 5, 6ம் திருமுறைகள் - தேவாரம்.

திருநாவுக்கரசரால் பாடப்பட்ட தேவார(ம்)ப் பாடல்கள் மொத்த எண்ணிக்கை.

3064

7ம் திருமுறை - திருப்பாட்டு.

சுந்தரரால் பாடப்பட்ட பாடல்கள்.

1026

8ம் திருமுறை மாணிக்கவாசகரால் பாடப்பட்ட திருவாசகப் பாடல்கள்

656

 

8ம் திருமுறை மாணிக்கவாசகரால் பாடப்பட்ட திருக்கோவையார் பாடல்கள்

400

8ம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார்   

மாணிக்கவாசகரால் பாடப்பட்ட பாடல்கள் மொத்த எண்ணிக்கை.

1056

9ம் திருமுறை - திருவிசைப்பா, திருப்பல்லாண்டு.

இத்திருமுறையில், திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருஷோத்தம நம்பி, சேதிராயர், சேந்தனார் ஆகியோர் பாடிய பாடல்களின் தொகுப்பு அடங்கியுள்ளது.

301

10ம் திருமுறை - திருமந்திரம்.

திருமூலரால் பாடப்பட்ட திருமந்திரம். பாடல்கள் மொத்த எண்ணிக்கை.

3047

11ம் திருமுறை - பிரபந்தம்

திருமுறையில் திருவாலவாய் உடையார்(ஈசன்), காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன், சேரமான் பெருமான், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி ஆகியோர் பாடிய பாடல்களின் தொகுப்பு அடங்கியுள்ளது.

1385

12ம் திருமுறை - பெரிய புராணம்
 சேக்கிழாரால் பாடப்பட்ட திருத்தொண்டர் புராணம் பாடல்கள் மொத்த எண்ணிக்கை.

4286

12 திருமுறைகள்,27 திருஅருளாளர்கள், 76 நூல்கள்.

மொத்த பாடல்கள் எண்ணிக்கை.

18326


கலியுகத்தில் நமக்கு ஊழ்வினையால் ஏற்படும் துன்பங்களுக்கும்,வாழ்வில் நாம் சந்திக்கும் அனைத்து துன்பங்களுக்கும், பிறவி என்னும் மிகப்பெரியபிணிக்கும், மருந்தாக அமைந்து நம்மைக் காத்து அருள்வது பன்னிரு திருமுறைகள் எனப்படும் சிவ ஆகமங்களாகும். மிகவும் பெருமைமிக்கது, அளப்பரியது, ஆற்றல்மிக்கது. வேத ஆகமங்கள் மற்றும் சைவ சித்தாந்தத்தின் பிழிந்த சாறாக, நமக்கு இன்பம் தரும் நமது தமிழ் மொழியில், அருளாளர்கள் வழியாக இறைவனால் நமக்கு அருளப்பட்டது, பன்னிரு திருமுறை என்னும் தமிழ் வேதம். நம்முடைய துன்பங்கள் அனைத்திற்க்கும் மூல காரணமாக விளங்குவது நம் அறியாமை. அந்த அறியாமையிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு திருமுறை வாக்குகள் பெரிதும் உதவுகின்றன. வினை வயப்பட்டுத் துன்புறும் நாம் திருந்தி உய்யும் பொருட்டு, இறைவன் அருளாளர்களை இப்பூமிக்கு அனுப்பி அவர்கள் வாயிலாக நமக்கு இந்த திருமுறைகளை அருளிச் செய்துள்ளான். திருமுறைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மிகுந்த மந்திர ஆற்றல் உடையவை.
 
திருமுறைகளை நாம் பாராயணம் செய்து ஓதுவித்தால், அதில் உள்ள மந்திர ஆற்றல், நம் உயிரில் கலந்து நமது அறியாமையைப் போக்கும். யாராலும் மாற்றியமைக்க முடியாத நம் விதியை, இறைவனின் கருணையினால் மட்டுமே மாற்றியமைக்க முடியும். விதியை மதியால் வெல்வது என்பது திருமுறைகளை ஓதுவித்து, இறைவன் அருள்பெற்று, நம் விதியை மாற்றுவதேயாகும்.
 
பன்னிரு திருமுறைகளால் நம் ஆன்மீக பூமியில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் சில: பாண்டிய மன்னன் வெப்பு நோய் தீர்ந்து, கூன் நிமிர்ந்தது. வேதங்களால் பூட்டப்பட்ட திருக்கதவு திறந்து, பின் தாளிட்டது. பாலை நிலம் நெய்தல் ஆனது. தேவார ஏடுகள் தீயில் கருகாமல் பச்சையாக இருந்தது, வைகை ஆற்று வெள்ளத்தில் எதிரே நீந்தியது. ஆண் பனை பெண் பனையாயிற்று. எலும்பு பெண்ணாகியது. விடத்தினால் இறந்த செட்டி உயிர் பெற்றார். ஆற்றில் போட்டது குளத்தில் கிடைத்தது. சுண்ணாம்பு காளவாயில் 7 நாட்கள் உயிரோடு இருந்தது. மதயானையை வணங்கச் செய்தது. கல்லில் கட்டி கடலில் வீசியவர் தெப்பமாக மிதந்து கரை சேர்ந்தது. நரி குதிரையாகியது. முதலை விழுங்கிய பிள்ளை 3 ஆண்டுகள் கழித்து மீண்டது. பிறவி ஊமை பேசியது. சிவபெருமானே தம் கைப்பட எழுதியது நூலானது. இன்னும் பல எண்ணற்ற அற்புதங்களை செய்துள்ளது பன்னிரு திருமுறை. திருமுறையே சைவநெறிக் கருவூலம், செந்தமிழ் வேதம்.
 
பன்னிரு திருமுறைகள், 27 ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டது. திருஞானசம்பந்தரால் பாடிய திருக்கடைக்காப்பு 1,2,3 ஆம் திருமுறை. திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் 4,5,6 ஆம் திருமுறை. சுந்தரர் பாடிய திருப்பாட்டு 7 ஆம் திருமுறை. மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், திருக்கோவையார் 8 ஆம் திருமுறை. 9 ஆசிரியர்கள் பாடிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு 9 ஆம் திருமுறை. திருமூலர் அருளிய திருமந்திரம் 10 ஆம் திருமுறை.காரைக்கால் அம்மையார் முதலிய 11 ஆசிரியர்கள் அருளிய பிரபந்தம் 11 ஆம் திருமுறை. திருத்தொண்டர் 63 நாயன்மார்கள் வரலாறு பாடும் சேக்கிழார் அருளிய பெரியபுராணம் 12 ஆம் திருமுறையாகும். மொத்தம் 18,326 பாடல்களைக் கொண்டது பன்னிரு திருமுறை.
 
பிறப்பு இறப்பு, ஆதி அந்தம் இல்லாத சிவபெருமான் ஒருவரே முழுமுதற்கடவுள். பன்னிரு திருமுறை சிவபெருமானின் மந்திர வடிவமாகும். திருமுறை சிவாலயங்களில் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பெற்று சிவபெருமானாகவே வழிபடப் பெற்று வருவது. பன்னிரு திருமுறைகளை ஓதினாலும், ஓதுவதைக் கேட்டாலும், அத்தனை தீய சக்திகளும் அவ்விடத்திலிருந்து விலகி நல்ல மந்திர சக்தியால் அந்த இடம் சூழ்ந்து நல்லதே நடக்கும். ஆகையால் திருமுறை அறிவோம். தினமும் திருமுறை ஓதுவோம்.

ஒம்!
ஒம்! ஒம்!
ஒம் நமசிவாய!
திருச்சிற்றம்பலம்.
செம்பொன்னம்பலம்!
 திருவம்பலம்!
 திருச்சிற்றம்பலம்!

 
மேற்கோள் கொள்வதற்கு அருளிய அணைத்து இணையதள(ப்  பதிவாளர்க) ங்களுக்கும்  நன்றி.பிழைகள் இருப்பின் இத்தொண்டனை மன்னித்து திருத்த அருளவும்.

ஒம்!
ஒம்!ஒம்!
ஒம்!ஒம்!ஒம்!
 சர்வம் சிவமயம்!
ஒம் நமசிவாய!
தென்னாடுடைய சிவனே போற்றி! 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! 
அண்ணாமலை எம் அண்ணா போற்றி! 
கண்ணாரமுதக் கடலே போற்றி! 
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
பராய்த்துறை மேவிய பரனே போற்றி! 
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி! 
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி! 
சீரார் திருவையாறா போற்றி! 
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி!
பாகம் பெணுரு ஆனாய் போற்றி! 
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி! 
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி! 
குவளைக் கண்ணி கூறன் காண்க! 
அவளுந் தானும் உடனே காண்க! 
காவாய் கனகத் திரளே போற்றி! 
கயிலை மலையானே போற்றி போற்றி!
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்! 
இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை!  
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்து உருகி 
நில்லாப் பிழையும் நினையாப்பிழையும் நின் அஞ்செழுத்தைச் 
சொல்லாப்பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும் 
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் 
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும் 
இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால் 
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே. 
வையம் நீடுக மாமழை மன்னுக
மெய் விரும்பிய அன்பர் விளங்குக
சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக
தெய்வ வெண்திரு நீறு சிறக்கவே.
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்.
மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்
பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம்
நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஓங்கிப்
புல்குக உயிர்கட் கெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க!.

இவ்விணையத்தை பயன்படுத்தும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் சிவபெருமான் தான் எழுந்தருளியுள்ள தன்மையினை
உணர்த்தவும், யாவற்றிலும் தன்னையே காணும்; பேதமற்ற பரிபக்குவ நிலையை அளித்தருளவும் முக்கண் முதல்வர்
திருவுள்ளம் கொள்வோனாக!

சித்தமெல்லாம் சிவமாக, என்றும் அவன் நாமம் போற்றி  ,அவன் அருளாலே அவன் தாள் வணங்கி , அலையும் மனதினை அலையவிடாமல் அவன் வசம் திருப்பி  மகா இருப்பாகிய அவனைப்பற்றிய எண்ணங்களை  அசைபோட்டிருந்தபடி   எழுத்துக்கள் மூலம் உங்களிடம் பகிர்ந்து, இணைந்து, இணை  இருக்கும்.

அன்பன், 
சிவத்தொண்டரடிஅடிமை.
ஓம் நமசிவாய!
சிவாய நம!
திருச்சிற்றம்பலம்! 

சிவபெருமான் தேவார சிவத் திருத்தொண்டரடியவர்கள் திருக்குழு

https://tevaaram.blogspot.com 

(No AdSense /Advertisement ) வில் இணைந்து இணையவழி பங்களிப்பை அளித்து  சிவத் தொண்டு புரிய விருப்பமுள்ளவர்கள்

தங்கள் மின்னஞ்சல் முகவரியையும் , whatsup தொலைபேசி  எண்ணையும் கீழே

 உள்ள 

தொடர்பு படிவம் 

முலம் பகிரவும்...

(அத்தகவல் இந்த மின்னஞ்சளுக்கு 

thevaarams@gmail.com வந்தடையும். ).

இணைய வழித் தேவார சிவபெருமான் சிவத்  தொண்டரடியவர்கள் திருக்குழுவுடன் இணைந்து சிவத் தொண்டு புரிய வாருங்கள்…

        சிவபெருமான் தேவார சிவத்

திருத் தொண்டரடியவர்கள் திருக்குழு

 https://tevaaram.blogspot.com 
(No AdSense /Advertisement ) வில்
இணைந்து இணையவழி பங்களிப்பை அளித்து  சிவத் தொண்டு புரிய விருப்பமுள்ளவர்கள்
தங்கள் மின்னஞ்சல் முகவரியையும் , whatsup        தொலைபேசி  எண்ணையும் கீழே  உள்ள 
தொடர்பு படிவம் 
முலம் பகிரவும்.(அத்தகவல் இந்த மின்னஞ்சளுக்கு 
thevaarams@gmail.com வந்தடையும். )
இணைய வழித் தேவார சிவபெருமான் சிவத்  தொண்டரடியவர்கள் திருக்குழுவுடன் இணைந்து 
சிவத் தொண்டு புரிய வாருங்கள்…





                                                                                                        






No comments:

Post a Comment

தொடர்பு படிவம்

Name

Email *

Message *