பழந்தமிழ் திருமுறைப் பதிகங்களைப் படிக்க, பாட வேண்டும் என்னும் ஆர்வத்துடன் முயல்பவர்கள் , அதன் முதல் வரியைக் கூடப் படித்து, எல்லோராலும் பொருள் உணர்ந்துகொள்ள முடிவதில்லை. அசை - சீர் முறையில் உள்ள செய்யுள் வரிகளை, படிக்கும் முறை தெரியாமல் மேலும் தொடர மனமில்லாமல் இடையிலேயே நிறுத்திவிட வாய்ப்பு அமைகிறது.
அசை - சீர்களை, சொற்களாகப் பிரித்துப் படிக்க முடிந்தால்தான் ஒரு செய்யுளை, இன்னொரு முறை படித்து ஓரளவு புரிந்துகொள்ளும் விருப்பம் ஏற்படும். பொருள் தெரியாத வார்த்தைகளுக்கு அகரமுதலி பார்த்துப் பொருள் தெரிந்து கொள்ளலாம் என்னும் எண்ணம் ஏற்படும். ஆனால், சொற்களாகப் பிரித்து படிக்கத் தெரியாததால், பழைய தமிழ் இலக்கியச் செய்யுள் நூல்களைத் தொட நாம் அஞ்சுகிறோம். பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் செய்யுள் வடிவமே. அதிலும் பெரும்பாலானவை பக்தி இலக்கியங்களே.
“திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்” ,பொருளவுணர்ந்து படித்தாலல்லவோ வாய் மணக்கும் . “திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்”, அதனில் உள்கலந்து படித்தாலல்லவோ உள்ளம் உருகும், மனம் கரையும், உள்ளேவுள்ள சிவம் வெளியாகி எங்கும் வியாபித்து நிற்க்கும்.
இதனைக் கருத்தில் கொண்டு முடிந்தளவு இவ்வலைதளப் பதிப்பில் உள்ள ஒவ்வொரு பதிகமும், திருமுறைப்பாடல்களும் முதலில், அசை - சீர் வரிசை பிரித்து பொருள் உணரும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. அடுத்து அதே செய்யுள் சொல் பிரிக்கப்பட்டு எளிதாகப் படிக்கும் முறையில் உள்ளது. அதற்கு முழு சொற்பொருள் விளக்கமும் அதனருகிலேயேக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், ஒவ்வொரு பதிக்கத்தையும் ஆர்வத்துடன் படித்துப் பொருள் புரிந்து கொண்டு ,கருத்துகளை,சிவ மகா மகிமையை எளிதில் நினைவில் நிறுத்திக் கொண்டு, தன் பெருமை தானறியா மதுரமொழியினனை, அம்மையப்பனை, ஆதிமுதல்வனை, உள்ளும் புறமும் இருப்பவனை,உட்கலந்த ஜோதியை, உள்ளத் தூய்மையாலும் , நாவார, சளைக்காமல் அனுதினமும் பாடித்துதித்து அவனுள் மகிழ்ந்து இருப்போமாக!.
எடுத்துக்காட்டாக: பாடல்
தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே!.
சீர் பிரித்த பின்
தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடிக்
காடு உடைய சுட லைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் உன்னை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!.
(பொருள்)
தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச் சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!.
பழந்தமிழ்ச் திருமுறை பக்தி இலக்கிய பாடல்கள் யாவற்றையும் இந்த முறையிலேயே இனி பதிப்பிக்க முன்வர வேண்டும். இதன்மூலம் தேவாரப்பாடல் படிக்க முயல்வோரின் நேரமும், முயற்சியும் வீணாகாது. தமிழ் திருமுறைப் படிக்க விரும்பும் ஒவ்வொருவரும் பாடலை முழுமையாகப் படித்துப் பயன்பெறமுடியும்.
No comments:
Post a Comment